திகனை புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தின் செழுமைமிகு வரலாறு | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

திகனை புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தின் செழுமைமிகு வரலாறு

ஒல்லாந்தர் காலத்தில் பல கத்தோலிக்க மக்கள் தாங்கள் வாழ்ந்து வந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து, அமைதியும் பாதுகாப்பும் உள்ள வேறு இடங்களைத் தேடிச் சென்றனர். சிங்கள          மன்னர்கள் ஆட்சி செய்த கண்டி இராச்சியத்தின் மீது ஒல்லாந்தருக்கு எவ்வித ஆதிக்கமும் இல்லாதிருந்தமையால் இலங்கையில் குடியேறியிருந்த போர்த்துக்கேயரும் உள்ளுர்வாசிகளான பல கத்தோலிக்கர்களும் ஒல்லாந்தரின் துன்புறுத்தல்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக கண்டி இராச்சியத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே குடியேறி வாழ்ந்தனர். இவர்களில் சிலர் குண்டசாலை பகுதிகளிலும் குடியேறியதாக வரலாறு கூறுகின்றது. கண்டி இராச்சியத்தில் புனித யோசேப் வாஸ் அடிகளாரின் மகத்தான இறைபணியின் காரணமாக தழைத்தோங்கிய கத்தோலிக்க விசுவாசிகளுக்கு இறைபணியாற்ற மேலைத்தேய கத்தோலிக்க துறவிகள் இங்குவந்தனர்.

1815ஆம் ஆண்டு கண்டி இராட்சியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் மலையகமெங்கும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கோலோச்சியது. 1867ஆம் ஆண்டில் தேயிலை பயிர்ச்செய்கை ஆரம்பமானதும் பெருமளவிலான தொழிலாளிகள் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள்.                                      

மலையக வரலாற்றில் கண்டி மாவட்டத்தின் தனிச் சிறப்புமிக்கதாக பல்லேகலை பெருந்தோட்டத்தை குறிப்பிடலாம் பெருந்தோட்டபயிர்கள் அனைத்தும் இந்த தோட்டங்களில் பயிரிடப்பட்டதே இதற்கான காரணம். அம்பாள் கோட்டை (அம்பாக்கோட்டை) புதுதோட்டம் (அலுத்வத்த) இரஜவல்லை, மாபேரிதென்னை போன்ற தோட்டங்களே இவை. இத்தோட்டங்களில் குடியமர்த்தப்பட்ட மக்கள் அனைவரும் இந்து, கத்தோலிக்க மதங்களை பின்பற்றுகிறவர்களாகவும் தமிழ் கலாசாரங்களை அனுசரிப்பவர்களாகவும் காணப்பட்டன.

சுகாதார மருத்துவ வசதிகள் குறைவாக காணப்பட்ட இக்காலத்தில் இவர்கள் தமக்கு ஏற்படும் துன்ப துயரங்கள், தொற்று நோய்களில் இருந்தும், விஷ பாம்புகள், காட்டு விலங்குகளில் இருந்தும் தம்மை பாதுகாத்துக் கொள்ள தமது தெய்வங்களை நாடினார்கள் ஆனால் தமது மத அனுட்டானங்களில் ஈடுபடவோ, வழிபாடுகள் நடாத்தவோ அவர்களுக்கு ஓர் இடம் இருக்கவில்லை. இந்து மக்கள் பெரிய மரங்களுக்கு அடியில் சூலம், நடுகல் நட்டு தமது தெய்வங்களை வழிபடத் தொடங்கினர்.

கத்தோலிக்க மக்களும் மலைப்பகுதிகளில் திறந்த வெளியில் ஒரு பீடம் அமைத்து அதில் ஒரு திருச் சிலுவையை வைத்து வனங்கினர். இதனை குருசடி என அழைப்பர்.

தோட்டங்களில் வாழ்ந்த கத்தேலிக்க மக்களுக்கும் கத்தேலிக்க துறவிகளுக்கும்; தொடர்புகள் ஏற்பட குருசடிகளில் திருப்பலிகள் ஒப்புக்கொக்கப்பட்டதுடன் திருவருட்சாதனங்களும் வழங்கப்பட்டன. இவர்கள் காடுகளிலும் மலைகளிலும் தொழில் புரிந்ததால் மக்கள் தொழிலுக்கு செல்லும் போது புனித வனத்து சின்னப்பரிடம் பாதுகாப்பையும், துணையையும் வேண்டி மன்றாடிச் செல்லுமாறு சொல்லப்பட்டது. இவ்வாறாக கத்தேலிக்க விசுவாசிகள் இத்தோட்டங்களில் பல்கிப்பெருகினர்.

தேவாலய கட்டுமான பணிகள்

தேவாலயம் ஒன்றின் தேவையை உணர்ந்த மக்கள் ஆலயம் கட்டுவதற்கு உரிய இடம் ஒன்றைத்  தேடிக்கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் வணிகம் மற்றும் ஏனைய தொழில்களுக்கு வந்தவர்களும் இப்பகுதிகளில் நிலங்களை வாங்கி குடியேறினர்.

கொழும்பு உயர் மறைமாவட்டத்தில் இருந்து கண்டி மறைகோட்டத்தின் இப்பகுதி தும்பர மிஷன்  

(Dumbara Mission )  என்ற பரிபாலன பிரிவாக இறை மக்களுக்கான ஆன்மீக பணிகள் இடம்பெற்றதுடன், அதன் பின்னர் தென் இந்தியாவில் இருந்து வருகை தந்த கணிசமாக கத்தோலிக்க மக்களுக்கு சேவைகள் புரிவதற்காக பன்வில பகுதி தெரிவு செய்யப்பட்டது. 1838ஆம் ஆண்டு ( Panvila Mission ) ஊடாக பணிகள் ஆரம்பமாயின. புனித. ஆசீர்வாதப்பர் சயையை சேர்ந்த துறவிகளே பெரும்பாலும் கண்டி பிரதேசத்தில் சேவைகள் செய்தது வந்தனர் இவர்களில் ஒருவரான அருட். தந்தை. போல் பெரேரா O.S.B இப்பகுதி மக்களுக்கு தமது சேவைகளை தொடர்கையில், ஜோகிம் சந்தனம் கங்காணி என்று அழைக்கப்பட்ட அன்றைய செல்வந்தர் இரஜவெல்ல தோட்டத்திற்கு  அருகாமையில் தமக்கு சொந்தமான காணியை ஆலயம் கட்டுவதற்காக வழங்கினார். 1886ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி இதற்கான ஆவணங்கள் கண்டி ஆயருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை அடுத்து புனித. வனத்து சின்னப்பர் தேவாலயத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கொழும்பு உயர் மறைமாவட்டத்தில் இருந்து கண்டி மறைமாவட்டம் தனி ஒரு மறைமாவட்டமாக 1887ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பின்னர் கண்டி மறைமாவட்டத்தின் முதல் ஆயராக அதி. மேதகு ஆயர் கிலமன் பஞ்சானி ஆண்டகை அவர்கள் நியமனம் பெற்றார். ஆயர் அவர்கள் இத் தேவாலயம் கட்டி எழுப்பப்பட உதவிகள் புரிந்து, இவ்வாலயதை கட்டுவதற்காக காணியை வழங்கிய ஜோகிம் சந்தனம் கங்காணி அவர்களக்கு தமது ஆசீரையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கையொப்பம் இட்டு அனுப்பப்பட் சான்றிதழில் 1897ஆம் அண்டு அக்டோபர் மாதம் 5ம் திகதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புனித வனத்து சின்னப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத் தேவாலயமானது கற்கள், களிமண் என்பனவற்றைக் கொண்டு; கட்டப்பட்டுள்ளது. பெரும்பான்மையான விசுவாசிகள் தோட்டத்       தொழிலாளர்கள் என்பதால் அவர்கள் தொழிலுக்கு சென்றுவந்து மாலைநேரங்களில் ஆலயம் கட்டும் பணியில் ஈடுப்பட்டதுடன், செபத்திலும் கடின உழைப்பிலும்; சிறியவர், முதியவர்   அனைவரும் சேர்ந்து மிக பக்தியுடன் ஆலயத்தை கட்டி முடித்தார்கள். அன்றைய காலகட்டத்தில் கட்டப்பட்ட ஆலயங்களில் கண்டி மறைமாவட்டத்தில் கட்டப்பட்ட பெரியதொரு ஆலயமாக இது காணப்பட்டது.

தேவாலய பரிபாலனமும், பங்குத் தந்தையர்களும்

இத் தேவாலயத்தை கட்டிமுடிக்க அயராது பாடுபட்டுழைத்த அருட் தந்தை. போல் பெரேரா O.S.B அவர்கள் 1886ஆம் ஆண்டு முதல்  இங்கு பணிபுரிந்ததுடன்  1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி நித்திய இளைபாற்றியை அடைந்தார். அவரது உடல் இத்தேவாலயத்தின் உள்ளே அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. அதன் அடையாளமாக ‘Of Your Charity, Pray For The Soul Of Rev. Fr. D. Paul Perera O.S.B என்று எழுதப்பட்டிருப்பதையும் இங்குகாணமுடியும்.

1920ஆம் ஆண்டின் பின்னர் ஆலயத்தின் பராமரிப்பு மற்றும் மக்களுக்கான ஆன்மீக பணிகள்  அனைத்தும் பன்வில பங்கின் கீழ் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, பன்வில பங்கின் பிரதான      உப ஆலயமாக இத் தேவாலயம் காணப்பட்டது. இதன் காரணமாக பன்விலை, மடுல்களை,       தொடாங்கொல்ல, ரங்கலை, உண்ணாஸ்கிரிய, தெல்தெனிய, மாபேரிதென்னை, திகனை, இரஜவெல்ல, அம்பாக்கோட்டை, பல்லேகலை போன்ற இடங்களில் இருந்து மக்கள் வருகைத்தந்ததுடன் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக விழாக்களை கொண்டாடினார்கள்.

கண்டி மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக பணிகளை பொறுபேற்ற அதி. மேதகு. ஆயர். பீட் பேக்மேயர் அவர்களின் காலத்தில் இப்பிரதேசத்தில் உள்ள பிள்ளைகள் கல்விகற்க 1924ஆம் ஆண்டில் இத் தேவாலயத்தில் பாடசாலை ஒன்றை ஆரம்பித்தார்.

இப்பிரதேசத்தில் உள்ள பிள்ளைகளுக்கு பெரும் வரப்பிரசாதகமாக அமைந்த  இப்பாடசாலை பல கல்விமான்களையும். உருவாக்கியது. 1924ஆம் ஆண்டு முதல் தனியார்                        பாடசாலையாக இயங்கிய இப்பாடசாலையை 1977ம் ஆண்டு ஜுன் மதம் 17ம் திகதி  இலங்கை  அரசு பொறுப்பேற்றது.

1947ஆம் ஆண்டு இவ்வாலயத்தின் 50வது பொன் விழா கொண்டாடப்பட்டது. 1948ஆம் ஆண்டு     மெதமஹாநுவர தொடங்கொல்ல தோட்டத்தில் புனித. அந்தோனியார் தேவாலயம் அருட். தந்தை. ஹென்றி பொன்னுச்சாமி அவர்களினால் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

1964ஆம் ஆண்டு திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரு பகுதி மலையக மக்கள் இங்கிருந்து அவர்கள் விருப்பத்திற்கு மாறாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் இதன்        காரணமாக எமது கத்தோலிக்க விசுவாசிகள் சிலரும் இங்கிருந்து இந்தியாவிற்கு திரும்பிச் சென்றார்கள். இது மலையகவாழ் மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

பன்விலை பங்குக்கு உட்பட்டிருந்த இத் தேவாலயம் 1961ஆம் ஆண்டின் பின்னர் சில காலம் அருட். தந்தை. D.B.கொடிபிலி. அவர்களினால் வத்தேகம தேவாலயத்தில் இருந்து பரிபால செய்யப்பட்டது. பன்விலை பங்கில் இருந்து பிரிந்து 1966ஆம் ஆண்டு படிவத்தை பங்கு உதயமாகியதையடுத்து அதன் கீழ் உப ஆலயமாக இத் தேவாலயத்தின் பரிபாலனம் ஆரம்பமானது.

1972ஆம் ஆண்டு திகனை புனித. வனத்து சின்னப்பர் ஆலயத்தின் 75வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. 1973ஆம் ஆண்டு மாபேரியதெண்ன புனித. அந்தோனியார் தேவாலயம்         அருட். தந்தை. டொன் ஹில்டர்பிரன்ட் O.S.B காலத்தில் கட்டப்பட்டது.

பல்லேகலை பெருந்தோட்ட (Rajawella Produce Company) முகாமைத்துவ மாற்றமும், கம்பனி காணிகளை அரசாங்கம் பொறுப்பேற்றதின் பின் அவைகள் கவனிப்பார் அற்ற நிலையில் கைவிடப்பட்டன. 1977ஆம் ஆண்டு தோட்டங்கள் கொலனிமயமாக்கல் எனும் பெயரில் பகிர்ந்தளிக்கும் திட்டம் ஆரம்பமானது. அதையடுத்து தோட்ட காணிகள் குடியேற்றங்களாக்கப்பட்டன.

1983ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத கருப்பு ஜூலை கலவரத்தின் காரணமாக இரஜவெல்ல தோட்ட குடியிருப்புகள் விஷமிகளினால் தீக்கிரையாக்கப்பட்டன. அங்கு வசித்து வந்த மக்கள் அனைவரும் வீடுவாசல் சொத்துகளை இழந்தனர். நிர்கதிகளாய் நின்ற இவர்களை நேசக்கரம் நீட்டி அழைத்த கட்டுகஸ்தொட்டை புனித. அந்தோனியார் கல்லூரியின் அன்றைய அதிபர் அருட். தந்தை. ஸ்டீவன் ஆபிரகாம் O.S.B அடிகளார் இம்மக்களை பாதுகாத்தார். பின்னர் அவர்களை அரசாங்கத்தின் உதவியுடன் அம்பாக்கோட்டை தோட்டத்தில் குடியேற வழிவகுத்தார். அம்பாக்கோட்டை தோட்டத்தில் வசித்த கத்தோலிக்க மக்களுடன் இரஜவெல்ல தோட்டத்தில் வாழ்ந்த              நூற்றுக்கணக்கான கத்தோலிக்க மக்களுமாக இணைந்ததால் அம்பாக்கோட்டை தோட்டத்தில் கத்தோலிக்க சமூகம் வளர்ச்சி கண்டது. இதனால் திகனை. புனித வனத்து சின்னப்பர் தேவாலயத்தில் இரஜவெல்ல தோட்ட தமிழ் மக்களின் பங்களிப்பு என்பது இல்லாமல் போனது.

துரித மஹாவலித் திட்டதில் விக்டோரியா நீர்தேக்கம் அமைக்கப்பட்டதால் திகனை நகரம் அபிவிருத்தி செய்யப்பட்டது. இதன் போது விக்டோரியா நீர்தேக்க கட்டுமான பணிகளைசெய்ய வருகைத்தந்த    பிரித்தானிய நாட்டு பொறியியலாளர் மற்றும் தொழில் புரிகின்றவர்கள் தங்குவதற்காக திகனை கிராமம் அமைக்கப்பட்து. இது தற்போது உத்தியோகஸ்தர் கிராமம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் உள்ளே இரஜவெல்ல தோட்டத்தில் வாழ்ந்த கத்தோலிக்க மக்கள் வழிபாடு செய்த புனித சிலுவை குருசடி இன்றும் கம்பிரமாக காணப்படுகின்றது.

திகனை இந்து ஆலயத்திற்கு அருகில் புனித. செபஸ்தியார் குருசடியும் கவனிப்பார் அற்றநிலையில் காணப்படுகின்றது. மக்கள் இந்த இடத்தில் செபஸ்தியாருக்கு பொங்கல் வைத்து திருப்பலி  கொண்டாடிய வரலாறும் உள்ளது. 

படிவத்தை பங்கு தந்தையாக பணியாற்றிய இன்றைய கண்டி மறைமாவட்ட ஆயர் அதி. மேதகு. வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை அவர்கள் பங்கில் அனைத்து மக்களுடனும் அன்பாய் பழகி சேவைகள் புரிந்தார்.

அருட் தந்தை. நந்தன மனத்துங்க அடிகளார் பங்கு தந்தையாக பணியாற்றிய காலத்தில் பங்கில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பெரிய சேவைகள் புரிந்தார். அம்பாக்கேட்டை வாழ் கத்தோலிக்க மக்களுக்கு தேவாலயம் ஒன்று இல்லாததினால் அங்கு திரு இருதயநாதர் ஆலயத்தை கட்டுவித்தார்.

படிவத்தை பங்குத் தந்தையாக பணியாற்றிய அருட். தந்தை. பாலா இரஜேந்திரம் அடிகளாரின் பணிக்காலத்தில் 1997ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி எமது திகனை புனித வனத்து சின்னப்பர் தேவாலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம் பெற்றதுடன், நூற்றாண்டு விழா திருப்பலி அதி. மேதகு ஆயர். ஜோசப் வியானி பெர்ணன்டோ ஆண்டகை  அவர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டு, நூற்றாண்டுவிழா சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

பல சந்தர்ப்பங்களில் செப வழிபாடுகள் இடம்பெறும் வீடுகளுக்கே சென்று இறை மக்களை வழிபாடுகளில் பங்குபெறுவதற்கு அருட் தந்தை அவர்கள் உற்சாக மூட்டினார்.

1987ஆம் ஆண்டு நூற்றாண்டுவிழா சிறப்பிக்க உழைத்த எமது ஆலயத்தின் விசுவாசிகள் பலர் இன்று எம்மத்தியில் இல்லை அவர்ளின் ஆன்ம இளைப்பாற்றிகாக மன்றாடுவோம்.

அருட். தந்தை. ஜோசப் மிராண்டா                                           படிவத்தை பங்குத் தந்தையாக பொறுப்பேற்றதனை அடுத்து திகனை        ஆலயத்தின் அபிவிருத்தி பணிகளை ஆவலுடன் ஆரம்பித்தார். மண் சுவர்களைக் கொண்ட பழமை வாய்ந்த இத் தேவாலயத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளில் இரவும் பகலும் பாடுபட்டு பங்கு மக்களின் ஆதரவையும், உதவிகளையும் பெற்று, அதனை செய்து முடித்தார்.

மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

அருட். தந்தை. மில்ரோய் பொன்சேகா                                       

அருட் தந்தை  திகனை மக்களுடன் அன்பாக, சுமுகமாகப் பழகியவர். பொது நிலையினர் திருப்பலிக்கான திருவழிப்பாடுகளை ஏற்பாடு செய்யவும், அதில் பங்குபற்றவும் உற்சாகமூட்டினார்.

அருட். தந்தை. கொல்வின் பெர்ணன்டோ புள்ளே                                

திருப்பலிகள், தூய வார வழிபாடுகள், நத்தார் நிகழ்ச்சிகள் அனைத்தும் தங்கு தடையின்றி          இடம்பெறவும், விசேட நாட்களில் ஆலய திருவிழாவின்போது குருமட அருட் சகோதரர்களை        வரவழைத்து பாடல் பயிற்சிகள், திருவழிபாடுகளில் அவர்களின் உதவிகளை பெற்றுத்தந்தார்.        

அருட். தந்தை. எல்வின் பீற்றர் பெர்ணன்டோ                                     

அருட். தந்தை எல்வின் பீற்றர் பெர்ணன்டோ, படிவத்தை பங்குத் தந்தையாக பணிபுரிய வந்த நாள் முதல் ஆலயத்தின் உள்ளே இடவசதி குறைவும், மழைக்காலங்களில் மறை   பாடசாலை மணவர்கள் படும் கஸ்டங்களையும் கண்ட அவர் ஆலயத்தின் பின்புறத்தில் விரிவாக்கள் செய்ய நினைத்தார்.       

திகனை ஆலயம் எதிர்காலத்தில் ஒரு பங்காக மாற வேண்டும் என்பதால்  ஆலயத்தின் பின்னால் இருந்த வெற்றுக் காணியை விலை கொடுத்து வாங்கும் யோசனையை ஆயர் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல, ஆயர் அதை ஏற்றுக் கொண்டார்.  2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலயம் ஆயரினால் திறந்து வைக்கப்பட்டது.             

திகனை ஆலயம் மட்டுமல்லாமல் தொடாங்கொல்ல புனித அந்தோனியார் ஆலயமும் இடிக்கப்பட்டு புதிதாக ஆலயம் கட்டப்பட்டது. மாபேரிதென்னை புனித அந்தோனியார் ஆலயம்       சீர்திருத்தம் செய்யப்பட்து. திகனையில் பங்கு மனை கட்டப்பட்டு 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி ஆயர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. திகனை ஒரு பங்காக உருமாற அனைத்து        அடிப்படை வசதிகளும் அருட்தந்தை அவர்களால் செய்து முடிக்கப்பட்டது.

அருட். தந்தை. திமோத்தி ஞனபிரகாசம்                                        

அருட் தந்தை திமோத்தி ஞனபிரகாசம் பாலத்துவ சபையை பங்கிலே மீள் உருவாக்கம் செய்து பல ஊக்குவிப்பாளர்களை பயிற்றுவித்து பங்கிலே அனைவரோடும் அன்பாய் பழகி மக்களை ஆன்மிகத்தில் வழிநடத்தி  சிறப்பாக பணிசெய்தார்.

2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி திகனை புனித வனத்து சின்னப்பர் ஆலய வரலாற்றிலே ஒரு மறுமலர்ச்சி உதயமாகியது. படிவத்தை பங்கில் இருந்து தனி ஒரு பங்காக திகனை ஆலயம் இயங்க ஆரம்பித்தது. பங்கின் முதல் பங்கு தந்தையாக அருட். தந்தை. து. கிறிஸ்டி போல் அடிகளார் நியமனம் பெற்றார்.

2022ஆம் ஆண்டிலே 125வது ஜுபிலிவிழாவை கொண்டாடும் நாங்கள் எம் மூதாதையர் முதல் கொண்டு எங்களை பாதுகாத்து வழிநடத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் கூறிடுவோம். இத்தனை ஆண்டுகள் எம்மை எல்லா விதமான இயற்கை அழிவுகள், தொற்று  நோய்கள், ஆபத்துகளிலும்       பாதுகாத்த எமது பாதுகாவலராம் புனித. வனத்து சின்னப்பரிடம் தொடர்ந்தும் எமக்காக பரிந்து பேச வேண்டிடுவோம்.

இந்த நூற்றாண்டு விழா சிறப்பு மலரை எமது ஆயர் அதி. மேதகு. ஜோசப் வியாணி பெர்ணன்டோ ஆண்டகையிடம் சமர்ப்பிக்கும் நாங்கள் எமது ஆயர் அவர்கள் கடந்த 39வருடகாலம்       எமக்குசெய்து வரும் அளப்பெரிய சேவையை ஆயர் அவர்களின்         பார்வையில் திகனை புனித வனத்துச் சின்னப்பர் தேவாலயமும், மக்களும் ஆயனின் அன்பார்ந்த    மந்தைகளாக என்றும் திகழ்கின்றனர். புனித வனத்துச் சின்னப்பர் தேவாலயம் இன்று ஒரு பங்காக உருவாக வியாணி பெர்ணன்டோ ஆண்டகைக்கு பங்கு மக்கள் என்றுமே நன்றி கடன் பட்டவர்களே!    ஒரு ஆயராக இல்லாமல் ஒரு தந்தையாக எங்களுக்கு நல்வழிகளை காட்டி, மறை மாவட்டம் முழுவதும் புனித. யோசேவாஸ் அடிகள் விட்டுச்சென்ற மறைபறப்பு பணியினை        அடிகளாரின் மறுரூபனாய் வந்து மகத்தான பணிகள் புரிந்திருக்கிறார். அவருக்கு

தமது வரங்களையும், ஆசீர்வாதங்களையும் பொழிந்து நீடூழி வாழச்செய்ய இறைவனை வேண்டுகிறோம்.

திகனை புனித வனத்து சின்னப்பர் தேவாலயத்தின் வரலாற்ரையும், அதன் வளர்ச்சியையும் பற்றிய இந்த பதிவினை தொகுத்து வழங்க உற்சாகமூட்டிய எமது பங்குத் தந்தை. அருட் திரு. து. கிறிஸ்டி போல், உதவிகள் புரிந்த அருட். தந்தையர்கள் பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் எனது இதய பூர்வ நன்றிகளையும்,  ஆலயத்தின் 125வது நூற்றாண்டு விழா          நல்வாழ்த்துக்களையும், தெரிவித்துக் கொள்கின்றேன்.                                                                             

தொகுப்பு:
எந்தனி பெனடிக் மொரிஸ்

Comments