மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அரசினால் நிச்சயமாக நிறைவேற்றப்படும் | தினகரன் வாரமஞ்சரி

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அரசினால் நிச்சயமாக நிறைவேற்றப்படும்

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சவால்களுக்கு மத்தியில் நிச்சயம் நிறைவேற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

மாவதகமவில் நிர்மாணிக்கப்பட்ட நீர்விநியோக செயற்றிட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,..அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை  தொடர்ந்து செயற்படுத்தும். முழு உலகினையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் அனைத்து சவால்களையும் சமாளிக்க நேரிட்டுள்ளது.அரசாங்கம் என்ற ரீதியில் சிறந்த முறையில் முன்னேறி செல்வோம்.

மாவதகம பகுதியில் வாழும் மக்கள் நீரின் அருமையினை நன்கு அறிவார்கள். இந்த நீர்வழங்கல் செயற்திட்டத்தை முன்னதாகவே மக்களிடம் கையளித்திருக்க வேண்டும்  ஏனெனில் அந்தளவிற்கு இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் செயற்திட்டம் 2025ஆம் ஆண்டு காலப்பகுதியில் பூரணமடையும்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற்திட்ட பணிகளை நல்லாட்சி அரசாங்கம் இடை நிறுத்தியது. அதன் தாக்கத்தை நாட்டு மக்கள் எதிர்க்கொண்டார்கள். அரசியல் நோக்கிற்காக செய்த தவறை தற்போது திருத்திக் கொண்டுள்ளோம்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது தேர்தல் ஏதும் இடம்பெறவுள்ளதா என ஒரு தரப்பினர் வினவுகிறார்கள். தேர்தலை இலக்காக கொண்டு மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவில்லை. சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ளும் இம்மக்கள் எந்த கட்சிக்கு ஆதரவு வழங்கினார்கள் என்பதை நாம் ஆராயவில்லை.மக்கள் எதிர்க்கொண்டுள்ள சிரமங்களை அரசாங்கத்தினால் நன்கு உணர முடிகிறது.அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அதனால் தான் மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானித்துள்ளோம்.

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு எதிர்தரப்பினர்  அதிருப்தியடைந்துள்ளார்கள். அதற்கும் ஏதாவது குறிப்பிடுகிறார்கள். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை அரசாங்கம் கொண்டு வந்தது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு எதிர்தரப்பினர் கருத்துரைக்கிறார்கள்.

அரசாங்கம் முன்னெடுத்த சிறந்த நடவடிக்கைகளினால் கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டு மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் எதிர்தரப்பினர் கருத்துரைப்பதில்லை. சிறந்த முறையில் முன்னோக்கி செல்வோம். சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என்றார்.

Comments