கலைப் படைப்புக்கள் மூலமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது சாத்தியம் | தினகரன் வாரமஞ்சரி

கலைப் படைப்புக்கள் மூலமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது சாத்தியம்

மக்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை வழங்குவதே எனது நோக்கம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 96 வருட நிறைவை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் அதன் முன்னேற்றம், கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தினகரன் வாசகர்களுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் இது! கலைகளின் மூலமே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும், அதற்கு வானொலி சிறந்த ஊடகமாகும்.

புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு மக்கள் இரசிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட வேண்டும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கிறார் அவர்.

கேள்வி: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 90 வருட வரலாற்றில் நீங்கள் தலைவராக பணிபுரிந்த காலகட்டங்கள் தொடர்பில் தெரிவிப்பீர்களா? உங்கள் காலத்தில் சில முன்னேற்றங்கள்  ஏற்பட்டுள்ளன என்பதையும் அறியமுடிகிறது அது தொடர்பில் தெரிவிப்பீர்களா?

பதில்: தற்போதைய பதவிக்காலத்துடன்  நான் ஐந்தாவது தடவையாக அந்தப் பதவியை வகித்துள்ளேன். நான் ஐக்கிய தேசியக்  கட்சி அரசாங்க காலத்திலும் அந்தப் பதவியை வைத்துள்ளேன். கட்சி, அரசியலுக்கு  இங்கு இடமில்லை. தரமான நிகழ்ச்சிகளை வழங்குவதே எனது நோக்கமாக உள்ளது.

அதனையே இன்றும் மேற்கொள்கிறேன். சில பழைய நாடகங்களை புது மெருகு படுத்தி   வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். புதியவற்றை நேயர்களுக்கு  வழங்க வேண்டும் அதுதான் இப்போதைய தேவை.

யார் என்ன சொன்னாலும் வானொலி தான் மக்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கின்ற ஊடகமாக விளங்குகிறது.
'ட்ரபிக்' லைட்டில் நிற்கும்  பஸ்ஸிலும் வயலில் வேலை செய்கின்ற விவசாயிகளும் கேட்பது வானொலியைத் தான். அதனால் மக்கள் அதனை விரும்பிக் கேட்கும் விதத்தில் நிகழ்ச்சிகள் தரமானதாக ஒலிபரப்ப வேண்டும்.

அண்மையில், ஒரு சிங்கள மொழிப் பாடலோடு தமிழ் மற்றும்  ஹிந்திப் பாடலையும் சேர்த்து வழங்கும் நிகழ்ச்சி யை ஆரம்பித்துள்ளோம்.

தமிழ் பாடல்கள் நாம் எதிர்பார்க்காத அளவு உச்சத்தை அடைந்துள்ளன. தமிழ் பாடல்கள் போன்றே ஹிந்திப் பாடல்களும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. எனினும் இன்னும் எமது நாட்டு பாடல்கள் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதைக் கவலையுடன் தெரிவிக்க வேண்டி உள்ளது. அந்த வித்தியாசம் நன்றாகத் தெரிகிறது.
புதிய தொழில்நுட்பமே மக்களைக் கேட்கத் தூண்டும். நேயர்கள் வித்தியாசமாக எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவில் தமிழ், கன்னடம் ஹிந்தி என பாடல்கள் உருவாக்கப்பட்டு வேறு மொழிகளுக்கும்  மாற்றம் செய்யப்படுகின்றன. திரைப்படங்களும் அவ்வாறுதான். இங்கும் அவ்வாறான நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி: வானொலி நிகழ்ச்சிகள் மூலமாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கின்றீர்களா?

பதில்:  நிச்சயமாக முடியும்!  கலைப்படைப்புகள்  மூலம் மட்டுமே அதனை மேற்கொள்ளவும் முடியும். சிங்களப் பாடல்கள் தமிழ்மொழியில் வர வேண்டும். அப்போதுதான் அதன் மூலம் இன நல்லிணக்கம் வளரும்  என்பது எனது நம்பிக்கை. அவ்வாறான சிறந்த பாடல்கள் உள்ளன. அக்காலத்தில் நான் பிரபாகரனின் பாடகரையும் கலையகத்துக்கு அழைத்து அவரது பாடலை பதிவு செய்துள்ளேன். அவர் மிக இனிமையாகப் பாடக் கூடியவர். நாம் சற்று கடுமையாக முன்னோக்கி நகர வேண்டியுள்ளது.

கேள்வி: புதிய தொழில்நுட்பம், புதிய செயற்பாடுகள் என வரும்போது அதற்கு பெருமளவு நிதியும் தேவைப்படுமே?

பதில்: அந்தளவு பெரும் நிதி தேவைப்படாது. இசையில் மட்டுமே மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இந்தியாவில் அதுபோன்று எத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை பார்க்க வேண்டும்.

இலங்கையில் பத்திரிகைகளை எடுத்துக்கொண்டாலும் ஓரளவு  நல்ல செய்திகள் தமிழ் பத்திரிகைகளில்தான் வருகின்றன. ஏனென்றால் பெரும்பாலான சிங்களப் பத்திரிகைகளில் அந்த நிறுவனங்களின்  உரிமையாளர்களே அந்த பத்திரிகைகளின் ஆசிரியர்களாகவும் செயல்படுகின்றனர். அவர்கள் சிந்திப்பது தான் அந்த பத்திரிகைகளில் வெளிவருகின்றன. இது பத்திரிகைகளை விட தொலைக்காட்சிகளில் மிக அதிகமாகக் காணப்படுகிறது. விடயங்களை தேர்ந்தெடுப்பதும் தயாரிப்பதும் அவர்கள்தான்.

இதனால் மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களால் உண்மையை தெரிந்து கொள்ள முடியாமல் போகின்றது.

கேள்வி: யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒலிபரப்பு நிலையத்தை முன்னேற்றுவதற்கு தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

பதில்: தமிழ்நாட்டில் எம் .ஜி.ராமச்சந்திரன் நடிக்கும் சினிமா திரைப்படத்திற்கு இலங்கை வானொலி மூலம் பிரசாரம் வழங்கப்பட்ட காலமும் உண்டு. இலங்கை மண்ணை இந்திய மக்கள் புனித மண்ணாக வணங்குவதுண்டு. இலங்கை வானொலிக்கு அதுபோன்றதொரு புனிதமான நிலையை அவர்கள் கொடுத்திருந்தனர்.

மீண்டும் இப்போது உள்ளவர்கள் என் அதனை ஆரம்பிக்க கூடாது? நான் அண்மையில்  யாழ்ப்பாணத்திலுள்ள ஒலிபரப்பு நிலையத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். எனினும் அங்கு அவர்கள் கடமை செய்ய விரும்புவதில்லை உடனடியாகவே இடமாற்றம் கேட்கின்றனர். அவ்வாறென்றால் நாம் என்ன செய்ய முடியும்? அதனால் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களையே யாழ்ப்பாணத்திலுள்ள ஒளிபரப்பு நிலையத்திற்கு நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளேன்.

அதிகமான தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திலேயே வாழ்கின்றனர். அங்கு தமிழ் கலாசாரத்தை அதன்மூலம் மேலும் பலப்படுத்த முடியும். அதனை கொழும்புக்கும் கொண்டு வாருங்கள் என்று தான் நான் கேட்கின்றேன். யாழ்ப்பாணத்தில் நன்றாகப் படித்தவர்கள் உள்ளனர். அவர்கள் இத்தகைய பொறுப்புகளை எடுத்துச்  செய்ய வேண்டும்.

கேள்வி: இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் தங்கள் கருத்து என்ன?

பதில்: நாட்டில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி உள்ளார். இந்தியாவை விட ஏன் அமெரிக்க  ஜனாதிபதியையும் விட அதிகாரங்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு உள்ளன. நீதிமன்றத்திற்கு மேலாகவும் அவரால் செயல்பட முடியும். அத்தகைய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி இலங்கையில் மட்டுமே உள்ளார்.அவருக்கு இன்னும் மூன்று வருடங்கள் உள்ளன. இன்றைய ஜனாதிபதி ஒரு அரசியல்வாதி அல்ல.  அவர் ஒரு சிறந்த அரச அதிகாரி.

கொரோனாவோடு உலகில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை நாம் அறிய முடிகிறது. உலக நாடுகள் பல ஸ்தம்பித்துப் போயுள்ளன. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சில நாடுகளில் மக்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்.

எமது ஜனாதிபதி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தடுப்பூசியை கொள்வனவு செய்து நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாத்துள்ளார் என்பதே நாம் பெருமைப்பட வேண்டிய விடயம்.

வேலை செய்ய முடியாத மக்கள் பிரதிநிதிகளே உள்ளனர். அவ்வாறானவர்களை மக்களே தேர்ந்தெடுத்துள்ளனர். சிறந்த சேவை செய்பவர்களைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக மிக மோசமானவர்களை தெரிவு செய்ததன் பிரதிபலனையே மக்கள் தற்போது அனுபவிக்கின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு மூன்று வருட காலங்கள் உள்ளன. அவரால் இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும். அவருக்கு பக்கபலமாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ போன்றோர் உள்ளனர். பெசில் ராஜபக்‌ஷ சில தினங்களுக்கு முன் சிறந்த பல தீர்மானங்களை வெளியிட்டுள்ளார். அது இன்னும் ஒரு வரவுசெலவுத்திட்டம் போன்றே அமைந்துள்ளது. மூவரும் ஒன்றாக இணைந்துள்ளதால் இது போன்ற பலம் சஜித் பிரேமதாசவுக்கோ  அல்லது வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. இவர்களால் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்பும் முடியும்.  காலை வாருவோரிடமிருந்து கவனமாக செயற்பட வேண்டியது அவசியம்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments