கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

‘பிலவ’ என்றழைக்கப்படும் இப்போதைய நிகழ் தமிழ் ஆண்டில் ‘மார்கழி’ கழிந்து தானே ‘தை’ பிறக்கும்? தைப் பொங்கல் வரும்?

நமது அரசுத்திணைக்களம் ஒன்று மார்கழியை மறந்து போனதே...!?

“பொங்கும் மங்களம் எங்கும் தங்கும்” என வாழ்த்து வழங்க ‘தையலாள்’ ஆங்கில ஜனவரி 14ல் வருகை தர முன்பே ‘கை தக்காதை’ என்று ‘தை’யை வரவேற்று, உத்தியோக பூர்வ அறிக்கை ஒன்றி்ல் பதிந்துவிட்டது!

என்றாலும், தமிழ் பேசும் அரசு ஓய்வூதியக்காரர்கள் மட்டுமே இதை அறிந்திருப்பார்கள்.

ஏனையோர் இந்தப் பத்தி எழுத்தில் புரிந்து புருவம் உயர்த்திடுக.

அரசு ஓய்வூதியத் திணைக்களம் இவ்வாண்டு முழுமைக்குமான ஓய்வூதியக் கொடுப்பனவு தினங்களை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அந்தத் திணைக்களத்தின் தமிழ் அறிவித்தல் இப்படிப் பதியப்பட்டிருக்கிறது.

* தை 07ஆம் திகதி                                                

   வெள்ளிக்கிழமை.

* மாசி 10ஆம் திகதி

    வியாழக்கிழமை.

* பங்குனி 10ஆம் திகதி

    வியாழக்கிழமை.

* சித்திரை 08ஆம் திகதி

    வெள்ளிக்கிழமை.

இப்படியே எஞ்சியுள்ள எட்டுமாதங்களின் திகதிப் பட்டியல்களும்.

07வெள்ளி, 10வியாழன், 10வியாழன், 08வெள்ளி என்றெல்லாம் பதியப்பட்டிருப்பது, முறையே ஜனவரி 07, பெப்ரவரி 10, மார்ச் 10, ஏப்ரல் 08என ஆங்கில மாதப் பெயர்களையும் திகதிகளையுமே குறிக்கும்.

இதற்குச் சரியான தமிழ் மாதப் பெயர்களும் திகதிகளும் முறையே, மார்கழி 23, தை 28, மாசி 26, பங்குனி -25என்றே, அனைத்துத் தமிழ் நாட் திகதி அட்டவணைகளில் பதியப்பட்டிருக்க-

முதல் ஓய்வூதியக் கொடுப்பனவு, ஜனவரி 07லில் வரும் மார்கழி 23தை அன்று என்பது அடியோடு மறந்து போனது மார்கழி மழையாலும் குளிராலுமா என்று கேட்கத் தோன்றுகிறது!

ஒரு ‘மார்கழிப் பாவை’ யை (ஆண்டாள்) பார்க்கத் தவறிப்போய், குழறுபடி நடந்திருப்பதால் ஓய்வூதியத் திணைக்களத்தின் இறுதி மாதக் (டிசம்பர்) கொடுப்பனவு அவர்கள் பட்டியலிட்டிருப்பது போல் மார்கழி 09ல் வராது,

கார்த்திகை 23! மூத்தத் தமிழ் ஓய்வூதியர் கவனத்திற்கொள்க.

இனிப்பு

கிழக்கிலங்கைத் தேனகத்தில் காத்தநகர் (காத்தான்குடி) கல்முனை மருதமுனை, மருதூர் (சாய்ந்தமருது) நிந்தவூர் இலக்கிய வாசம் நகரந்து மேலும் பயணித்தால் பாலமுனை!

அங்கே பாலங்கள் உண்டா, முனைகள் எங்கெங்கே என்றெல்லாம் கள ஆய்வு செய்யாமல் ஒரு ‘பாவேந்த’லின் அமைதியான, அழகான, அருள் நிறை இல்லத்தில், கால் பதிப்பவர்கள் பல பரப்பரப்புக் காட்சிகளைப் பார்ப்பார்கள் இன்றைய ஞாயிறு இளம் காலைப்பொழுதில்!

இன்னும் ஏழே நாட்களில் அந்தப் பாலமுனை மண்ணிலேயே அந்தப் பாவேந்தலுக்குப் பொன்விழாக் கொண்டாட்டங்கள் கலை இலக்கிய ஆர்வலர்களால்!

அவர் தம் மரபு – புதுக்கவிதை, குறும்பு(பா) ஆளுமைகளில் ஈர்க்கப்பட்டவர்கள் எடுக்கும் பொன்விழா!

இந்த இடத்தில் என்னைப் பற்றிய உண்மையை வெளிச்சமிட்டு விடுகிறேன்.

எனக்குக் கவிதை வராது! வந்தாலும் எழுத மாட்டேன். குருநாதர் ‘கல்கண்டு’ தமிழ்வாணன் கட்டளை!

எவ்வாறாயினும், புரட்சிக்கமாலின் ‘பாரதி யார்?’ தமிழக ‘மணிவிளக்கு’ சஞ்சிகையில் பார்த்தவன் கிண்ணியா ‘அண்ணல்’ சாலிஹ் ஆசிரியருடன் பழகி அவர் கவிதையில் லயித்தவன்.

கல்முனை பஸீல் காரியப்பர் என் ‘லைட் ரீடிங்’கில் சொக்கி கொழும்பில் ஒட்டி உறவாடிய பொழுது, ‘அழகான இரு சோடிக்கண்கள், கொம்பனித்தெரு, அல் இக்பால் வித்தியாலய ஆசிரியர் ஓய்வறையில் உருப்பெறுகையில் நேரில் கண்டு ரசித்தவன்.

அப்புறம், பொத்துவில் ‘யுவன்’ எம்.ஏ. கபூர் என்பானின் மரபுக் கவிதைகளில் களிப்புற்று. ஒரு பொழுது’ அழாதே சிரி’ கவிதை நாடகமொன்றை வானொலிக்காக வீட்டிலேயே சிறை வைத்து எழுதச் செய்து ஒலிபரப்புக்கு ஏற்பாடு செய்தவன்.

இப்படி இன்னும் சிலர், அனைவருமே கிழக்கிலங்கை தான். ஒருவர் மட்டும் வடபுல சில்லாலை “தான் தோன்றிக் கவிராயர்”

இந்த வகையில் ‘தினபதி’ துவங்கிய காலத்தில் “ஒரு பாறூக்” தலையெடு’ ப்பதைக் கண்டவன். ஆனால் என்னைப் போன்றே நாடக ஆர்வமிக்கவராக, நடிக சிகாமணியாகத் திகழ்ந்தவாறு ‘தினபதி’ வழிக்கவிஞராகிக் கொண்டிருக்கிறார் என்பதை எல்லாம் அறியாதவனாகப் பழையதையும் (மரபு) புதியதையும் ரசித்தேன்.

காலங்கள் பல கால் பந்தாட்டம் ஆடிய பிறகு, 2011ல், தமிழகத்தில் ஓர் இஸ்லாமிய இலக்கியமாநாடு இஸ்லாம் வளர்ந்த காயல்பட்டினத்தில் அம்மாநாட்டு அரங்கிலே அவர் ஆளுமை கண்டு அதிசயப்பட்ட பிறவி நான்!

அப்புறம்...? அப்புறம்..?

அதே 2011ல் பொக்கைவாய் முத்துப் புன்னகைப் பூத்து ஒரு தோட்டப்பாய் மூத்தம்மா(2011) என் அருகில்! அழைத்து வந்து வரும் ‘பாவேந்த’லே!

‘வாப்பா, கொழும்பூர் மானா. இந்த உயரமான என் மகனை உன் நல்ல மனம் வாழ்த்தணும். நீ சீதேவியா இருப்பே” எனக் கொஞ்சல்! (கெஞ்சல் அன்று)

என்னையும் விடமூத்த மூதாட்டியும். தான் சார்ந்த சமூகத்தின் யதார்த்தங்களையும் சிக்கல்களையும் தேங்காய்ப் புட்டுப் போல் பிட்டுப் பிட்டுவைக்கும் அனுபவசாலியுமான உம்மா எங்கே, நான் எங்கே?

கூனிக் குறுகிப் போகிறேன். மூத்தம்மா கையில் இரு புத்தகங்கள். படிக்கத் தெரிந்த மனுசியா?

“வாப்பா மானா, நான் படியா தற்குறி! என் கையால் ஒனக்குத் தரணுமாம்! பாறூச் சொல்லுறான் இந்தா புடி”

அதுவரையில் அந்த உயரமான இலங்கை வங்கி உத்தியோகத்தரின் எந்தப் படைப்பையும் தொட்டிராத நான் அந்தருமை மூதாட்டியின் பொற்கரங்களிலிருந்து பெற்றுக் கொள்கிறேன்.

* எஞ்சியிருந்த பிரார்த்தனைகளோடு’ -2012

* பாலமுனை குறும்பாக்கள்'- 2013இந்தக் ‘கொழும்பானுக்கு மேற்படி முதல் நூல் என்ன சொல்கிறது?

கிழக்கில் ஏற்பட்டுப்போன இன விரிசலைப் புடம் போட்டு அதிரவைக்கிறது. கடந்த மூன்று தசாப்தகாலத்தில் முற்றும் முழுதாக மாறிப் போன் தமிழ் - முஸ்லிம் உறவுகள் குறித்த மனஉளைச்சலை உள்ளது உள்ளபடி உரைத்து வைத்துப் பெரும் கவலை கொள்ளச் செய்கிறது.

இரண்டாவதில் ‘ஒரு நூறு குறும்புகள்’ குறும்பாவடிவில் அதிலொன்றை என் ‘லைட் ரீடிங்’ பக்கத்தில் தினகரன் வாரமஞ்சரியில் வெளியிடவும் செய்கிறேன். அது. இப்பொழுது மீண்டும். காரணம், இன்றைக்கும் என்றைக்கும் பொருந்தும்.

‘முகநூலில் படம் போட்டவேளை முகம் பதித்துப் ‘பிரண்டு’ ஆனாள் வாலை

இஸ்கைப்பில் கதைவளர்ந்து

இவளணைந்தாள் நேரில்

சுகம் பெற்றான்,

போனான் அக்காளை!’

2013ல் பார்க்க வைத்த பாலமுனையே!

2020லும் பார்ப்பது கட்டாயமாகி

விட்டதே பாவேந்தலே! பல்லாண்டு பல்லாண்டு வாழ்வீர் பவள விழா காண! பிரார்த்தனைகள்.

 

Comments