இருண்மை | தினகரன் வாரமஞ்சரி

இருண்மை

உணர்வுகள் யாவும் குபுகுபுக்கக் குபுகுபுக்க ஓடி முடித்தாயிற்று. 

அதிகாலை, ரம்மியமான அமைதி.

பனி ஈரத்தைக் கிழித்த படியான வெளிச்சக்கீற்று.

உறக்கம் விழிகளைப் பிரிந்து நீண்டநேரம் ஆயிற்று.

நினைவுகள் மனதைக் கிளறத் தொடங்கி விட்டன.

போனவள், போனவள்தான்.

திரும்பிப் பார்க்கவேயில்லை.

பெற்றவளைப் பற்றி ஒருசொட்டும் அக்கறையில்லாமல், அவள் நோயில் விழுந்தாளா...? உண்டாளா...? உறங்கினாளா...? என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமலா ஒருத்தி இருப்பாள்.

இது அவளுடைய காலமா...?

இவளுக்கு எல்லாமே முடிந்து போயிற்றா...?

அப்படி என்றால், இந்தக் காலை வேளையில் அரைஉறக்கம் கலைந்து கொட்டக்கொட்ட முழித்திருக்க வைப்பது எது?

ஒற்றையாய் ஒருதாயும், மகளுமாய் இத்தனை நாள் இந்த ஊரை எதிர்த்து வாழ்ந்தாயிற்று

அவளுக்காகவே பார்த்துப் பார்த்துச்சேர்த்து, அவளுக்காகவே உதிரம் பிழிந்து வியர்வையாக்கி அத்தனையையும் ஒருகணத்தில் மறந்துபோனாளா...?

புருஷன் என்று ஒருவன் வரும்போது எல்லாமுமா மறந்துபோகும்?

அயலில் கேலி செய்வார்கள், அம்மாவும், மகளுமாய் இணைபிரியாத தோழிகள் போல் எங்கும் போகிறபோது.

"இப்பிடியே நெடுகலும் திரிய ஏலுமே? மரிபண்ணிப் போகேக்க அம்மாவை விட்டிட்டுத்தானை போகோணும்..."  

"அப்பிடி ஒண்டுமில்லை. நான் அம்மாவோடதான் இருப்பன்..."

"இப்பிடியே சொல்லிக் கொண்டிருந்தால் எல்லாக் கலியாணமும் குழம்பித்தான் போகும்..."

ஏரம்பு வாத்தியார் சாதகங்களைப் பிரித்துவைத்துக் கொண்டிருக்கிற தருணங்களில் உரத்துச் சொல்வார்.

"அப்பிடிக் குழம்புறதெண்டால் குழம்பட்டுமன், எனக்கொரு வில்லங்கமுமில்லை"

ஒரு வில்லங்கமும் இல்லை என்றவள் இப்படி ஒரு நொடியில் அறுத்துக்கொண்டு போவானேன்?

"அம்மா..." இந்த வார்த்தையின் நீட்சியில் எத்தனை அர்த்தங்கள் அவளுக்கு.

எவ்வளவு போராட்டங்களின் காயங்கள் உள்ளங்கைகளில் இன்னும் பொருமிக் கொண்டிருக்கின்றன.

"கொஞ்சமாய் எல்லாத்தையும் விளங்கிக் கொள்ளப்பாரம்மா"

எத்தனை பிரச்சினைகள்? எத்தனை இழுக்குகள்?

"உன்னை மாதிரியே நானும் இருந்தால் கொஞ்ச நாளிலேயே நானும் 'டிவோஸ்' வாங்கவேண்டியதுதான்."

எவ்வளவு இலகுவாக அவள் அந்த ஊசியை ஏற்றிவிட்டாள்.

என்னதான் நொந்தாலும், போகிறபோக்கில் அவளை உதறிவிட முடியுமா...?

அவளே, அவளென்று இருந்த உலகம் ஒருநொடியில் சுருங்கிவிட்டது.

இருவராயிருந்த வாழ்க்கை. எவ்வளவு நாட்களுக்கு இருவராகவே இருந்த இதம், திடுமென்று ஒருநாள் ஒப்பற்ற மகிழ்வைப் பரிசளிப்பதுபோல மூவராகியது. மூவரான பிறகு மூர்க்கமாக இவளை இழுத்து வெளியே தள்ளியது போல.

சின்ன இடைவெளி பெருகிப்பெருகிப் பாறையாகி...

இப்போது மனஅழுத்தம் சற்று அதிகமாகி விடுகிறது. தூங்க நினைத்தால் தூங்கமுடிவதில்லை. எதிர்பாராத நேரங்களில் இருந்த இடத்தில் தூக்கம் வந்துவிடுகிறது. மின்குமிழ்கள் ஒளிர, ஒளிரத் தூங்கிவிட்டு சாமத்தில் திடுக்கிட்டெழுந்து விளக்குகளை அணைக்க வேண்டியிருக்கிறது. தனிமையின் கிரணங்கள் உடலைப் பற்றிப் பீடித்து எரியவைக்கின்றன.

கொல்கின்ற அமைதி.

இளமை கூடஇருந்தபோது துணிச்சலும் நிறைய.

இப்போது உடல்சோர்வுக்கு வந்தபின் எதுவும் முடியாது போலிருக்கிறது.

ஆண்துணை இல்லாதிருப்பது, அதொன்றும் இவ்வளவு காலத்திலும் கடினமான ஒன்றாய் இருந்திருக்கவில்லை.

ஏதுமொரு விஷஜந்து இரவின் இடுக்குகளில் புகுந்து, உறக்கத்தை அருட்டி விழிக்கவைக்கும் தருணங்களில்தான், ஆணின் தேவை அவர்கள் இருவருக்குமே வேண்டும் போலிருக்கும். இவளால் ஒருபோதுமே அவற்றைக் கொல்ல இயலுவதில்லை. அவளுக்கென்றால் ஒரேபயம். இவள் பின்னால் ஒடுங்குவாள், சிறுவயதிலிருந்து, வளர்ந்து பருவமடைவது வரையிலும்.

இப்போதுதான் அவள்கூட இல்லையே.

வயதும், பருவமும்தான் உயிர்களை எப்படித் தம்வசப்படுத்துகின்றன என்று இவளுக்கு இப்போதும் பேராச்சரியமாய் இருந்தது.

அதைவிடக் காலம், கிரகங்கள் என்று ஏதேதோ சொல்கிறார்கள். இவள் காலத்தில் இவள் அவனைப் பிரிந்தபோது அவர்கள் சொன்னதையெல்லாம் அவள் நம்பவில்லை. ஆனால், இப்போது அவள் பிரிந்தபோது, ஏனோ இதையெல்லாம் நம்பவேண்டும் போல்தானிருக்கிறது.

திடீரென்று இவளுக்கு அவன் ஞாபகம் வந்தது. எங்கே இருப்பான்? பெற்ற பிள்ளையைப் பற்றி ஒருசிறிதும் எண்ணாமல் புறப்பட்டுப் போனவன், அவனுடைய வாரிசுதானே அவள். அவளும் அவன் செய்ததைத்தானே செய்வாள்.

எல்லாரும் எல்லார் வழியிலும் போய் விட்டார்கள். இனி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதைத் தவிர வேறுவழி...?

அவள் செய்தது தவறு என்று யார் சொல்லமுடியும்? அவளுடைய இயல்பிலிருந்து அவள் எப்படி வழுவ முடியும்?

உலகம் இப்படித்தான் இயங்குகிறது. இப்படித்தான் இயங்கும். இனி அவள் மற்றவளின் வாழ்க்கையில் தலையிட முடியாது.

"தன்ரை வாழ்க்கையை அழிச்சது போதாதெண்டு பிள்ளையின்ரை வாழ்க்கையையும் அழிக்க வெளிக்கிட்டாள்."

ஊர் சொல்லும். ஊர் என்ன மகளே சொல்கிறாள்.

"உன்னை மாதிரி என்னையும் தனிச்சிருக்கச் சொல்லுறியோ...?"

வாய்விட்டு அவளே சொல்லியாயிற்று.

நினைத்தால் அப்படியும் தோன்று கிறது.

தான் வாழாத வெப்பிசாரம் மகள் வாழ்க்கையையும் ஒரு பிசாசாக உண்டுவிடத் தருணம் பார்க்கிறதோ?

"ஏன் பிள்ளை இப்பிடிச் செய்யிறாய்...?"

அவள் ஒரு அளவுக்கு மிஞ்சி மகளை வழிநடத்தக் கூடாதோ...?

இன்னும் சிறுகை பற்றி நடக்கும் மதலையென அவள் மகளை நினைத்திருக்கக் கூடாதோ?

அவளுக்கு வயது வளர்ந்துகொண்டே போகிறது. அவள் வெறும் பிஞ்சல்ல. காயாகி, கனியாவாள்.

"இப்பிடித்தான் நீ அப்பாவையும் கலைச்சிருப்பாய்"

வார்த்தைகளில் அவள் ஊசியை வைத்துத் தைத்தாள்.

உலுப்பப்பட்ட கொப்பிலிருந்து பழங்கள் உதிர்வதுபோல அவள் நெஞ்சிலிருந்த உயிர்ப்பெல்லாம் வடிந்து சொட்டியது.

ஒரு வரன்முறை, ஒழுங்கு அதற்குக் கட்டுப்படாவிட்டால் இவளுக்குக் கோபம் வந்து விடுகிறது.

"ஒரு பொருளை எடுத்தால் அந்த இடத்தில வைக்கோணும்."

"தேத்தண்ணி குடிச்சா கோப்பை கழுவிவைக்கத் தெரியாதோ..?."

"மரக்கறி நூற்று அறுபது ரூபாவெண்டால் மிச்சம் நாப்பது ரூபா எங்கை?

அவன் கட்டுக்கடங்காமல் சுற்றித்திரிந்தவன். அவனை யாரும் இதுவரைக்கும் கேள்வி கேட்டதில்லை. அப்படிப்பட்டவனுக்கு இவளோடு வாழ்ந்த வாழ்க்கை தித்திக்கவில்லை.

இவளுடைய சட்டதிட்டங்களுக்கு அவனால் கட்டுப்பட முடியாமல் போகவே அவளிடம் சொல்லிக்கொள்ளாமலே அவன் ஊரை விட்டுப் போய்விட்டான். இப்போது இருக்கிறானோ, இல்லையோ அதுவும் தெரியாது.

அவன் போனவீச்சு இவளுக்கொரு ஓர்மத்தைக் கொடுத்தது. வயிற்றில் தங்கியதன் வம்சத்தைப் பற்றிக்கூட நினைத்துப் பார்க்காமல் போனவன் இல்லாமலே வாழ்ந்து காட்டவேண்டுமென்று நினைத்தாள். அவனது குணத்தை உரித்து வைத்தே பிறந்திருந்த மகளுக்கு விளையும் பயிரிலேயே பாடம் புரிய வைத்தாள். அவளுக்கு அம்மாவைத் தவிர வேறு உலகம் இல்லை. அம்மா சொல்வதுதான் சரி. வேறெதையும் பின்பற்றுவதற்கான தெரிவுகள் அவளிடம் இருந்திருக்கவில்லை.

இப்போது, அவளுக்கென்றொரு வாழ்க்கை.

அவளுக்கே உரித்தான பிரத்தியேக குணங்களை வரவேற்கத் தயாராயிருக்கிற கணவன்.

இறுக்கமும், கட்டுப்பாடுமாய் வாழ்ந்தவள் அந்த இறுக்கத்துக்கு வெளியே வீசுகின்ற தென்றலை நுகர்கிறாள்.

அவன் அந்த சாளரங்களைத் திறந்து விடுகிறான்.

அம்மா பாவம், இருளுக்குள்ளேயே வாழ்ந்து விட்டாள்.

இந்தச் சட்டதிட்டங்களுக்கு அப்பாலான இயல்புநிலையை அவள் மனம் எப்போது நுகரப்போகிறதோ...?

"அம்மா, இவ்வளவுநாள் எனக்காகவே தேஞ்சு, தேஞ்சு உழைச்சனீங்கள், இனியாவது ரெஸ்ட் எடுங்கோ, எங்கையாவது வெளியை போய்வருவம் அம்மா...?"என்பாள் அவள்.

"சும்மா காசைக்கரியாக்கக் கூடாது, இப்ப என்ன அவசரம் ஆறுதலாய்ப் போவம்..."

என்பாள் இவள்.

அவளது கணவன் வீட்டுத் தேவைக்கான பொருள்களை மொத்தமாய் வாங்கி வந்து போடுவான்.

"அவர் என்ன இப்பிடிச் சாமானுகளைக் கொண்டந்து கொட்டுறார். கொஞ்சம் சிக்கனமா இருக்கச் சொல்லு பிள்ளை."

"ஏன் அம்மா, அவர் தானே உழைக்கிறார், அவரிண்டை விருப்பத்துக்கு அவர் கொஞ்சம் சிலவழிக்கட்டுமன்..."

இவளின் முகம் சுண்டிப்போனது. இனி இவளது உழைப்புத் தேவை இல்லை என்கிறாளா?

இருக்கும் பயன்போய் வெறும் செல்லாக்காசாகி விட்டாளா அவள்?

"நானும் உப்பிடிச் சிலவழிச்சிருந்தால் உனக்கு உப்பிடி ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்காது..."

"அது சரி அம்மா. ஆனா, அவருக்கும் சில விருப்பங்கள் இருக்கும் தானே.."

"அந்த விருப்பங்களுக்கெல்லாம் இப்ப இடம் குடுத்தால் பிறகு பிள்ளை குட்டி எண்டு வரேக்கை நீ தான் கஷ்டப்பட வேண்டி இருக்கும்...."

"அதுக்கென்ன அம்மா அவருக்காக கொஞ்சம் கஷ்டப்பட்டுப் போறன்...."

அவள் அவனுக்காகக் கஷ்டத்தை ஏற்றுக் கொள்வதாய்ச் சொன்னது இவளுக்குப் பிடிக்கவில்லை. .அவளுக்கு கஷ்டம் வரக்கூடாது என இவள் பார்த்துப் பார்த்துச் செய்ய, அவள் எங்கிருந்தோ வந்த ஒருவனைக் கொண்டாடிக் கொண்டிருப்பது இவளுள் அனலை ஊற்றியது.

"நீங்கள் நினைச்சதத்தான் செய்து கொண்டிருக்கப் போறீங்களேண்டால் பிறகெதுக்கு இஞ்சை இருக்க வேணும்...? எங்கையெண்டாலும் போய் நீங்கள் நினைச்ச மாதிரி இருங்கோவன்...?”

அவள் இந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை. நடுங்கிப் போய் விட்டாள். அவள் பொறுத்துக் கொண்டாலும், கட்டிய கணவனுக்கு முன் இந்தச் சொற்களைத் தடுத்து நிறுத்த அவளுக்குத் தெரியாமல் போயிற்று. ரோஷக்காரனான அவன் உடனேயே புறப்பட்டு விட்டான்.அவனுக்குப் பின்னால் அவளும் போய் விட்டாள்..

ஓர்மத்தோடு வாழ்ந்து பழகிப்பழகி வாயில் வருகின்ற வார்த்தைகள் எல்லாமே கறாராக வருவதை இவளால் உணரமுடிந்தது. எழுந்து வெளியே வந்தாள். வாசற்படியில் அப்படியே சரிந்து உட்கார்ந்தாள். என்ன செய்வதென்று தெரியவில்லை. இதுகாலவரைக்கும் ஒரு குறிக்கோள் இருந்தது. அவளை ஒருவனுக்கு கட்டிக்கொடுக்க வேண்டுமென்று. இப்போது அதுவும் முடிந்தது. இனி எதுவுமில்லை. சமையல், சாப்பாடு எதைச் செய்து என்ன ஆகப்போகிறது...? வாழ்க்கையில் என்னத்தைச் சாதித்தோம் என்று புரியவில்லை.

இவளுக்கு அவள் கணவனின் ஞாபகம் வந்தது.

எண்ணி ஒருவருஷம் தான் கூடவாழ்ந்தான்.

அவன் ஒரு பிள்ளைப் பூச்சியாகத்தான் இருந்தான். அவனை நினைத்தால் அவன் எந்த விதத்தில் மோசமாக இருந்தான் என்று தெரியவில்லை.

அவன் தான் வாழ்ந்த வாழ்க்கையைத்தான் இங்கே வாழ்ந்தான். வாழமுடியாத விடத்துக் கிளம்பிவிட்டான்.

ஆனால் அவள்...? இங்கே பிறந்து இங்கே வாழ்ந்த வாழ்வையேயல்லவா உதறிவிட்டுப் போய்விட்டாள்...?

ஆக, தவறு எங்கே இருக்கிறது? இவளிடத்தில்தானா...?

அவன் சிரித்துக் கொண்டிருப்பதுபோல இவளுக்குத் தோன்றியது.

அவசர அவசரமாக உள்ளே போனாள்.

தனது உடைகள் சிலதை எடுத்துப் பிரயாணப்பைக்குள் அடுக்கினாள்.

பக்கத்து வீட்டில் திறப்பைக் கொடுத்துவிட்டுச் சொன்னாள்.

"ஒருவேளை பிள்ளை வந்தால் திறப்பைக் குடுங்கோ...?'

"தூரப்பயணம் போலை..."

"ஓமோம், நான் வன்னிக்குப் போறன். அவரைக் கண்டுபிடிச்சுக் கூட்டிவாறதாய் முடிவெடுத்திட்டன்..."

மனதிலிருந்த இருண்மை கொஞ்சம் விலகினாற் போலிருந்து.

தாட்சாயணி

Comments