கொரோனாவின் பின்னர் மலையக பெருந்தோட்டங்கள் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

கொரோனாவின் பின்னர் மலையக பெருந்தோட்டங்கள்

நுவரெலியா மாவட்டத்தில் தோட்டங்களுக்கு வெளியே வேலை செய்து குடும்பத்தைக்  காப்பாற்றிய சுமார்  11ஆயிரம் வரையிலான தொழிலாளர்கள்   இன்று வேலை  வாய்ப்பை இழந்து அல்லாடுகிறார்கள்.

2022ஆம் ஆண்டும் பிறந்துவிட்டது. இன்னும் சில தினங்களில் தைப்பொங்கல் தரிசனம் தரப்போகிறது. பெருந்தொற்றால் பெரும் தொல்லையாகிப் போன நெருக்கடி நிலைமை இன்னும் மாற்றமடைந்தபாடில்லை. அந்நியச் செலாவணி பற்றாக்குறை பல வழிகளிலும் பாதிப்பை உண்டுபண்ணி விட்டது. அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கத் தவறவில்லை. தேற்றம் பெற வழியின்றி பொதுமக்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.  இந்தப் பின்னணியில்தான் அரசாங்கம் சில நிவாரண ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. அந்த நிவாரண அறிவிப்புகள் பெருந்தோட்ட சமூகத்தை எந்தளவு சென்றடைப் போகிறது என்பதே பிரச்சினை. 

முழு நாடுமே முடக்கப்பட்ட நிலையில் பெருந்தோட்டத்துறை மட்டும் இயங்கிக் கொண்டிருந்தமையை யாரும் மறந்துவிட முடியாது. உரிய பாதுகாப்பு வழிமுறைகள் ஏதுமின்றி தமது உயிரைப் பணயம் வைத்தே பெருந்தோட்ட மக்கள் தொழில்புரிகிறார்கள். இதன் பயனாக தேயிலை விவசாயம் தொய்வின்றி நடந்தது. சவால்களுக்கு மத்தியில் தேயிலை ஏற்றுமதியும் இடம்பெற்றது. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற அந்நியச் செலாவணி நாட்டுக்குக் கைகொடுக்கத் தவறவில்லை. 

எனினும் இத்துறைசார் மக்களின் வாழ்வியல் இன்னும் வரலாற்றுத் தவறுகளை உளவாங்கிக் கொண்ட  துன்பியல் தொடராகவே இருக்கிறது. தினக்கூலி வாழ்க்கை. அன்றாடம் தொழிலுக்குப் போனால் மட்டுமே வேதனம். தோட்டத் துறையைத் தவிர்ந்த இலட்சக் கணக்கானோர்  நிலையும் இதுதான். ஆனால் அவர்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கின்றன. தேவையான சுகாதார வசதிகள் கிட்டுகின்றன. கடன் பெறுவதற்கான வழிவகைகள் காணப்படுகின்றன. எனினும் இதில் எந்தவொரு ஏற்பாடுகளையும் பெருந்தோட்ட மக்கள் அனுபவிக்க முடிவதில்லை. 

கொரோனா கால நிவாரணத் தொகையாக வழங்கப்பட்ட 5000ரூபா கொடுப்பனவு தோட்ட மக்களை சென்றடையவில்லை. ஏனெனில் சமூர்த்தி கொடுப்பனவு பெறுவோர்  தோட்டப் பிரதேசங்களில் மிகக்குறைவு. இதனால் இம்மக்கள் அன்றாடம் வேலைக்குப் போவதன் மூலமே கடன் வாங்கக்கூடிய தெம்பினைப் பெறுகிறார்கள். வட்டிக்குப் பணத்தை வாங்கி வயிற்றுப் பாட்டினை கவனிக்க வேண்டிய நி​ைலமை. நுவரெலியா மாவட்டத்தில் தோட்டங்களுக்கு வெளியே வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிய சுமார்  11ஆயிரம் வரையிலான தொழிலாளர்கள்   இன்று வேலை வாய்ப்பை இழந்து அல்லாடுகிறார்கள். இவர்கள் அனைவரும் விவசாய காணிகளிலேயே தொழில்செய்து வந்தார்கள்.   உரப்பற்றாக்குறை காரணமாக நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மரக்கறிச் செய்கை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி குறைந்து விலையேறி விழிபிதுங்கச் செய்கின்றது. 

தோட்டத்தொழிலை மட்டுமே நம்பி சுமார் ஒன்றரை இலட்சம்  பேர் இங்கு வாழ்கிறார்கள். இங்கு சுயதொழில் செய்வதற்கான பின்புலம் தாராளமாகவே காணப்படுகின்றது. தரிசு நிலங்களையும் கைவிடப்பட்டு வரும் காணிகளையும் விவசாயம் செய்வதற்காக பயன்படுத்தலாம். கொரோனா முதலாவது அலை ஆர்ப்பரித்தபோது அதிகமான மலையக இளைஞர்கள் தோட்டங்களுக்கே திரும்பி வரவேண்டி  நேர்ந்தது.   இவர்கள் தோட்டத் தொழிலை புறக்கணித்துப் போனவர்கள். வெளியிடங்களுக்கு வேலைதேடி ஓடியவர்கள். மீண்டும் தோட்டப் பகுதிகளிலேயே விவசாயம் அல்லது சுயதொழில் ஏதாவது செய்து வாழலாம் என்னும் எதிர்பார்ப்பில் வந்தவர்கள். 

ஏற்கனவே பெருந்தோட்ட இளைஞர்கள் சுயதொழில் செய்யக்கூடிய நிலைமையை உருவாக்கப் போவதாக அறிவிப்புகள் வந்தன. காணிகள் பகிர்ந்தளிக்கப்படுமென செய்திகள் வெளியாகின. இதனை நம்பிக்கூட இந்த இளைஞர்கள் தோட்டங்களுக்குத் திரும்பி இருக்கலாம். ஆனால் இந்த எதிர்பார்ப்புகள்  எதுவுமே இதுவரை ஈடேறியபாடில்லை.              

இதனால் விரக்தியே மேலோங்கி நிற்கின்றது.

ஏலவே வெளியிடங்களுக்குப் போனவர்கள் இன்று வருமானத்தை இழந்து    பரிதவிக்கின்றார்கள். சிலர்  பெற்றோரிடம் பணம் எதிர்பார்க்கும்  பரிதாபநிலை.  இதனால் குடும்ப அமைதி குலைகின்றது. அரசாங்க உதவியோ நிவாரண கொடுப்பனவுகளோ கிடைக்க வழியே இல்லை.

இன்றைய விலைவாசி உயர்வினால்  பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக பெருந்தோட்ட மக்களே காணப்படுகின்றார்கள். இதுதான் யதார்த்தம். ஆனால் வர்த்தகர்களோ கொள்ளை இலாபம் அடிக்கின்றார்கள்.  பணப்புழக்கமும் குறைந்து போயுள்ளது. பொருட்களை அடகு வைத்தும் விற்றும் வட்டிக்குப் பணம் வாங்கியும் அன்றாட    ஜீவியத்தை நடாத்த வேண்டிய கட்டாயம். சொல்லப் போனால் தற்போதைய நிலவரங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. சுய பொருளாதார ஈட்டலுக்கான வழிவகைகளை உருவாக்க வேண்டும்.   இங்கு தரிசு நிலங்கள் கைவிடப்பட்டுவரும் காணிகள் நிறைய காணப்படுகின்றன. இவற்றை பெருந்தோட்ட மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்குப் பகிர்ந்தளிக்கலாம். சொந்தமாக்கலாம். விவசாய முயற்சிகளை ஊக்குவிக்கலாம். தமது கையை மட்டும் நம்பி வாழும் மனோதிடத்தை ஏற்படுத்தலாம். இதற்காக தொழில்சார் பயிற்சி, அதற்கான உபகரணங்கள், கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி இவர்களுக்கு கிடைக்க வேண்டியது முக்கியம். இது அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியமாகும்.   இதன் மூலம் பெருந்தோட்ட மக்களின் இடப்பெயர்வுகளை தடுக்கலாம். இடர்கள் ஏற்படுமிடத்து உளவியல் ரீதியிலான அமூத்தங்கள் ஆக்கினைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளலாம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் தன்னம்பிக்கை கொண்ட ஒரு சமூகத்தை கட்டி எழுப்பலாம் என்பதை வலியுறுத்துகிறோம்.

இன்று தேயிலைப் பயிர்ச்செய்கை தேக்கம் கண்டு வருகின்றது. உரிய பராமரிப்பு இன்மையால் விளை நிலங்களும் வனாந்தரமாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் ஆண்களுக்கான வேலை வாய்ப்புகள் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டன. பெண்களை மட்டுமே உள்வாங்கக்கூடியதாக பெருந்தோட்டக் கட்டமைப்பு மாற்றம் கண்டு நெடுநாளாயிற்று. இத்துறையை மீளவும் கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடு அரசாங்கத்தைச் சார்ந்திருக்கிறது. 

அத்துடன் சுகாதார மேம்பாடு குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. இன்று பெருந்தோட்ட முகாமைத்துவமும் ட்ரஸ்ட் நிறுவனமுமே மலையக சுகாதார சேவைகளை கையாண்டு வருகின்றது. இது திருப்திகரமானதாக இல்லை. எனவே பெருந்தோட்டச் சுகாதார சேவைகள் முழுமையாக அரசாங்கத்தின் பொறுப்பின் கீழேயே வரவேண்டியள்ளது. பொது சுகாதார சேவை முறைமை என்பது இங்கு அவசரமானதும் அவசியமானதும் கூட. இதற்கான ஏற்பாடுகளை துரிதகதியில் மேற்கொள்ள இனியாவது மலையக தொழிற்சங்கங்கள் முன்வரவேண்டும்.   இன்று பெருந்தோட்ட மக்களுக்கு மா 1கிலோ 80ரூபா விலையில் 15கிலோ மாதாந்தம் வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

இது வரவேற்கக்கூடியது. அதேநேரம் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகைக் கிடைக்குமென்றும் கூறப்படுகின்றது. இதனால் ஓய்வூதியம் பெற்றுள்ள பல்லாயிரக்கணக்கான முன்னாள் தொழிலாளர்கள் ஒரங்கட்டப்படுவார்கள். 

நாலைந்து அங்கத்தினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தில் சராசரியாக ஒருவர் மட்டுமே தோட்டத்தில் வேலை செய்யக் கூடியவராக இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. எனவே நிவாரணங்களால் மட்டும் நடைமுறை சிக்கல்களிலிருந்து மக்களை விடுவிக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் நிரந்தர த்தீர்வே மாற்றங்களை ஏற்படுத்தும். இதுவே இன்றைய பெருந்தோட்டச் சமூகத்துக்குத் தேவையாக உள்ளது. 

பன். பாலா  

Comments