நூல் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

நூல் அறிமுகம்

நூல்:- மலையகக் கவிதைகளும் மக்களும் 

நூலாசிரியர் : கலாநிதி ஸாதியா பௌஸார் 

பக்கங்கள்: 210 

விலை 850 

மலையக கவிதை இலக்கிய ஆய்வுத் துறையில் கலாநிதி ஸாதியா பௌஸர் எழுதிய 'மலையகக் கவிதைகளும் மக்களும்' எனும் ஆய்வு நூலின் வரவின் மூலம் துறைசார்ந்த சாதனையாளராகவும் தமது புலமைத் தடத்தினை ஆழப்பதித்த பெருமைக்குரியவர்.  

தான் பிறந்த மலையக மண்ணின் மீது கொண்டுள்ள பாசமும் அறிவு அனுபவங்களுடன் மலையத்தில் துன்பப்படும் மக்கள் மீது பரிவுடன் தமது பார்வையை செலுத்தி அம்மக்கள்பற்றி பாடுபொருளாகக் கொண்டு படைத்த கவிஞர்களுடைய பாடல் வரிகளையும் வலிகளையும் எடுத்தாய்வு செய்து மலையக கவிதை இலக்கியத்திற்கென ஒரு காத்திரமான நூலை வெளிக்கொணர்ந்துள்ளார் கலாநிதி ஸாதியா பௌஸர். இதன் பயனாக இதுவரையிலும் கிடைக்கப்பெறாத மலையகப் படைப்பாளிகளுக்கு முக்கியத்துவமும் அங்கீகாரமும் வழங்கப்படுகின்ற ஆரோக்கியமான சூழல் இன்று எழுந்துள்ளது. 

தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித் துறைத் தலைவி கலாநிதி ஸாதியா பௌஸர் அவர்கள் மலையகம் பற்றி ஆய்வு மேற்கொண்டு வெளியிட்ட இந்நூலானது மலையகக் கவிஞர்கள் மனித குலத்தை நேசிக்கும் பண்பையும் மக்கள் படும் துயரத்தையும் அவர்களது வாழ்க்கை கோலத்தையும் பல கோணங்களில் ஆராய்ந்து மலையக மக்கள் பற்றிய கூர்மையான மதிப்பீடொன்றை திறன்படச் செய்துள்ளார். இதற்கும் மேலாக தமிழ் இலக்கியத் துறையில் பல்வேறு ஆற்றல் படைத்த ஒரு சிறந்த ஆய்வாளர் என்பது நாமறிந்ததே!  

இந்நூலாசிரியர் தமது முன்னுரையில் 'தமிழ் இலக்கியத்தை யாழ்ப்பாணம் தமிழ் இலக்கியம், கிழக்கிழங்கை தமிழ் இலக்கியம், தென்னிலங்கைத் தமிழ் இலக்கியம் என்பது போல், பிரதேச ரீதியிலான இலக்கியமாக நோக்குவதை விட அடக்கப்பட்ட சமூகத்தின் குரலாக நோக்குவதே பொருந்தும். இவ்வாய்வில் மலையக மக்கள் மலையக மலையக இலக்கியம் முதலிய பதங்கள், பிரதேச அடிப்படையிலின்றி, இந்தியாவில் இருந்து பெருந்தோட்டச் செய்கைக்காக அழைத்து வரப்பட்ட மக்களையும் அவர்களது பிரச்சினைகளைப் பிரதிபலிப்பனவாக அமைந்த இலக்கியங்களையுமே குறித்து நிற்கின்றன. மலையகத்தைச் சேர்ந்தவர்களால் அவர்களது பிரச்சினைகள், வாழ்வியல் அம்சங்கள் முதலியவற்றைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகள், மலையகம் சார்ந்தோரால் மலையகம் தொடர்பாக எழுதப்பட்ட கவிதைகள் ஆகிய இரண்டையும் மலையக கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன' என்று நூல் பற்றிக் குறிப்பிடுகிறார். 

கலாநிதி ஸாதியா பௌஸர் இவர் தனது தமிழ் சிறப்புக் கலைமாணி, முதகலைமாணி, முதுத்தத்தவமாணி, கலாநிதிப் பட்டங்களைப் பேராதனைப் கல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டவர். பல்வேறு நூல்களினதும் சஞ்சிகைகளினதும் ஆசிரியரான இவர் தமிழ் இலக்கியம், மலையக தமிழ் இலக்கியம், தொடர்பான பல்வேறு கட்டுரைகள் அவ்வப்போது எழுதி வருகிறார். இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளராகவும் கடமையாற்றுகின்றார். 

மலையக கவிஞர்களுடைய எதிர்கால எழுத்துத் துறைக்கு இந்நூல் பயனுள்ளதாக அமையும். மலையக மக்களுடைய சமூக, அரசியல், அன்றாட வாழ்க்கை, தொழில், கல்வி, சுகாதாரம் போன்ற இன்னோரன்ன எல்லா விடயங்களையும் அலசி ஆராய்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது முயற்சி பாரட்டத்தக்கது.  

இக்பால் அலி 

Comments