உள்ளூராட்சி சபைகளின் நீடிப்பில் உள்ள பின்னணிகள்! | தினகரன் வாரமஞ்சரி

உள்ளூராட்சி சபைகளின் நீடிப்பில் உள்ள பின்னணிகள்!

உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் ஒருவருடம் நீடிக்கப்பட்டுள்ளதை அரசாங்கத்தின் பலவீனமாக அல்லது பயமாகப் பார்ப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இன்றைய நிலைமைகள் சில இவ்வாறு இவர்களை சிந்திக்க வைக்கின்றன. இவ்வாறு ஒருவருடம் நீடிக்கப்பட்டமை இது இரண்டாவது தடவையாகும். 1994இல் ஒருவருடம் இச்சபைகள் நீடிக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்தின்வசம் அதிக சபைகள் இருந்தால், தேர்தலை நடத்த முடியாத நிலை நிலவினால் அல்லது தவணைக்காலங்களில் மக்கள் பணிகளை முன்னெடுக்க முடியாதிருந்தால் இவ்வாறு சபைகள் நீட்டப்படுவது வழமை. இது மாகாண சபைகளுக்கும் பொருந்தும். எந்த அனுமதிகோரலோ, சர்வஜன வாக்கெடுப்போ நடத்தாது ஒத்திவைக்கப்படுவது இவையிரண்டும்தான். இருந்தாலும், மாகாண சபைகள் இவ்வாறு நீடிக்கப்பட்டதில்லை. 

 1987இல் உள்ளூராட்சி சபை அறிமுகப்படுத்தப்பட்டாலும் 1994இல்தான் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. நாடு அன்றிருந்த நிலைமை கருதி ஒருவருடம் நீடிக்கப்பட்ட இந்த உள்ளூராட்சி சபைகளுக்கு, அதற்குப் பின்னர் 2006இல் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது.

கிழக்கை புலிகளின் பிடியிலிருந்து மீட்டதை சர்வதேசமயப்படுத்தவும், சிவில் நிர்வாகத்தில் அரசுக்கும் மக்களுக்கும் இருந்த ஆர்வத்தை வெளிக்காட்டும் நோக்கிலும்தான், இந்த தேர்தல் 2006இல் நடத்தப்பட்டது. வடக்கில் இராணுவ நடவடிக்கை முற்றாக முடிவுறாத சூழலில், அன்றைய அரசு இந்த தேர்தலுக்கு அவசரப்பட்டதிலுள்ள அர்த்தம், ஜனநாயகத்தை மக்களிடம் ஒப்படைத்துள்ளதாகக் காட்டும் ராஜதந்திரம்தான்.

இப்போது, ஏன் இச்சபைகளின் பதவிக்காலங்கள் நீடிக்கப்பட்டன? கொரோனா காலத்தில் இரண்டு வருடங்கள் முடங்கியிருந்த செயற்பாடுகளை முன்னெடுக்கத்தான்.  

 பொருளாதாரம் வீழ்ந்துள்ள சூழலில், 5092உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவதை தவிர்த்து, நிவாரணம் வழங்கலாமே. அரசியற் களத்தில் இப்படியும் சில தர்க்கங்கள்.

எப்படித்தான் பேசினாலும், இச்சபைகள் நீடிக்கப்பட்டதில் சில நியாயங்கள் இருக்கவே செய்கின்றன. மொத்தமாக உள்ள 340உள்ளூராட்சி சபைகளில், 241சபைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியதால், இச் சபைகளை ஒரு வருடமாக நல்லாட்சி அரசாங்கம் கண்டுகொள்ளாதிருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளுக்கும் இந்த சபைகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 2018இல் நடந்த இத்தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியை நினைவூட்டித்தானே உள்ள காலத்தை கடத்த வேண்டும்.

அத்திவாரமும் அடிமட்டமும் உறுதியாக இருப்பதால், அரசாங்கத்தின் கோபுரமும் உறுதியாகத்தானிருக்கும். இதற்காகத்தான் இந்த நீடிப்போ?ஆனாலும், தென்னிலங்கையில் இக்கட்சி வசமுள்ள சபைகள் கவிழ்க்கப்படுவதும் அல்லது உறுப்பினர்கள் விலைபோவதும் அரசாங்கத்தின் பலவீனமா? இல்லை, நல்லாட்சி அரசாங்கம் 2017இல் அறிமுகப்படுத்திய புதிய சட்டங்களின் குறைபாடுகளா? 

 விகிதாசாரம் முப்பது வீதம், வட்டாரத்திலிருந்து எழுபது வீதம், இதற்குள் 25வீதம் பெண் பிரதிநிதித்துவம் என்றெல்லாம், ஜனநாயகத்துக்குள் எண்கணிதத்தை நுழைத்திருப்பதால் வந்தவைதான் இவை.

ஒரு சபையில் இருபது பேரை தேர்ந்தெடுக்க 12பேரை வட்டாரத்திலும், 08பேரை விகிதாசாரத்திலும் தெரிகின்றனர். சிறிய கட்சிகளைப் பலப்படுத்தும் இந்த முறையில், ஜனநாயகம் பலமிழப்பது கண்டுகொள்ளப்படவில்லை.

அதிக வட்டாரங்களை வெல்லும் கட்சிகள் மிகக் குறைந்த ஆசனங்கள் பெறும் நிலையே இதிலுள்ளன. அதுவும், விகிதாசாரத் தேர்வில் வரும் ஆசனங்கள் போனஸ் ஆசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கே, 12500வாக்குகள் பெற்று 12வட்டாரங்களையும் வென்ற கட்சிக்கு ஒரு போனஸ், எந்த வட்டாரத்தையும் வெல்லாத கட்சிகளுக்கு நான்கு மற்றும் மூன்று போனஸ் ஆசனங்கள் செல்கின்றன. விகிதாசார எட்டு ஆசனங்களும் வட்டார ஆசனங்களுடன் சேர்த்து இருப்பதால் (20) வகுக்கப்படுவதுதான் இதிலுள்ள குறைபாடு.  

எனவே, வட்டார வெற்றிக்கேற்ப (12) ஆசனங்களும், வீதாசார வெற்றிக்கிணங்க எட்டு (08) ஆசனங்களும், மொத்த வாக்குகளால் வகுக்கப்படல் அவசியம். அவ்வாறு செய்யின், விகிதாசார எட்டு ஆசனங்களில் ஐந்தை பெரிய கட்சி பெற்று மொத்தமாக (17) ஆசனத்தை கைப்பற்றுமே! இப்போது (13)ஐத்தானே வெல்லக் கிடைக்கிறது.

ஏனைய ஏழும் வெவ்வேறு கட்சிகள் பெறுவதால் அவைதான் தீர்மானிக்கும் சக்தியுமாகின்றன. சிறிய கட்சிகளைப் பலப்படுத்தப் புறப்பட்டு, பெரிய கட்சிகளை பணிய வைத்துள்ளது இவ்விநோத முறைமை.

இதனால், கட்சிகளின் கொள்கைகள் காற்றில் பறந்து, தனிப்பட்ட பழிவாங்கல்கள் படமெடுக்கின்றன. 

 தலைமையை மீறிச் செயற்படல், பணத்துக்கு விலைபோதல் போன்ற செயல்களுக்கும் இது வழிவகுத்துள்ளது. மட்டுமல்ல, வடக்கில் ஒரு பிரதேச சபையை ஒரேயொரு உறுப்பினர் ஆட்டிப்படைக்கிறார். 21 உறுப்பினருள்ள ஒரு சபையில், ஆட்சியமைப்பதற்கு ஒரு அணியை உருவாக்குவதில் மிகச்சிரமப்பட நேரிடுகிறது. இங்கு செல்வாக்கிலுள்ள இரு கட்சிகள் சம அளவில் தலா ஏழு ஆசனங்களை வென்றதால், இரண்டு, ஒன்று என குறைந்த ஆசனங்களை பெற்ற கட்சிகள்தான் ஆட்சியைத் தீர்மானிக்கின்றன. சிலபெரிய கட்சிகள் இதனால் ஆட்சியையும் இழந்து, ஒரேயொரு உறுப்பினருள்ள கட்சிக்கு தவிசாளர் பதவியும் சென்றிருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தை சீரழிக்கிறது.  

சுஐப் எம். காசிம்

Comments