நீர்வள மேம்பாட்டுக்காக மட்டக்களப்பில் மூன்று புதிய அணைக்கட்டுகள் | தினகரன் வாரமஞ்சரி

நீர்வள மேம்பாட்டுக்காக மட்டக்களப்பில் மூன்று புதிய அணைக்கட்டுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை நீருக்கு பஞ்சமில்லை, எமது நாட்டில் மலைப் பிரதேசங்களிலிருந்து ஒடிவரும் ஆறுகளும் சிற்றோடைகளும் அருவிகளும் இங்கே வந்து இறுதியாக கடலோடு சங்கமிக்கின்றன. இதனால் எமது மாவட்ட மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் ஏற்பட்டதில்லை. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையை நம்பி விவசாயம் செய்வோர் அனேகர் இருக்கிறார்கள். அவர்களின் விவசாய நிலத்திற்குப் பக்கத்திலேயே நீர் நிரம்பிய சிற்றாறுகளும், நீரோடைகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த நீரையும், விவசாயத்தையும் கண்ணுற்ற மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம். இதனை மாற்றியமைக்க எண்ணம் கொண்டது. அதன் விளைவாகவே இந்த கல்வட்டை, புது முன்மாரிச் சோலை, நிகால் அணைக்கட்டு என்பவைகளாகும். நிகால் அணைக்கட்டு கந்தன் குடா ஆற்றிலிருந்தும், கல்வட்டை அணைக்கட்டு நவகிரி ஆற்றிலிருந்தும், புதுமுன்மாரிச்சோலை அணைக்கட்டு சில்லிக்கொடியாற்றிலிருந்தும் நீரைப்பெற்று அவ்வப்பகுதி விவசாயிகளுக்கு நீர் வழங்கி வருக்கின்றன.

இந்த மூன்று ஆறுகளும் வற்றாதவை. இறைவனால் வழங்கப்பட்ட இயற்கைச் சக்திகளை மனிதர்கள் அணைபோட்டு மறிப்பதே மனித மூளை. இங்கு இது பாவிக்கப்பட்டதால் 2000ஏக்கர் நிலங்கள் இருபோக நெற்செய்கைக்கு உள்வாங்கப்பட்டிருக்கின்றன. 600நெற்செய்கை விவசாயக் குடும்பங்கள் நன்மையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட மாடு வளர்ப்பாளர்கள், தோட்டப் பயிர்ச்செய்கையாளர்கள் என்று கூட்டிப்பார்க்கும்போது சுமார் 1000குடும்பங்கள் நன்மையடையும். இவைகளை கட்டி முடிப்பதற்கு முன்னின்று உழைத்தவர் அப்போது பதவிவகித்த நீர்ப்பாசன பொறியிலாளர் பத்மதாஸன். அவர் இப்போது பதவி உயர்வுபெற்று தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றுகிறார்.  

இந்த அணைக்கட்டுக்கள் பாரிய சவால் நிறைந்தவை. அணைகளை கட்டி முடிப்பதற்கு நிர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எந்திரி நிஹால் சிறிவர்த்தனவின் பங்களிப்பு பெருத்த உதவியாக இருந்தது. அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக அணைக்கட்டுக்களில் ஒன்றான கந்தன் குடா அணைக்கட்டுக்கு நிகால் அணைக்கட்டு என்று விவசாயிகளால் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நன்றி மறப்பது நன்றன்று என்ற ஔவையாரின் வாக்கை விவசாயிகள் மறக்கவில்லை 

இவ் அணைக்கட்டு கட்டப்படுவதற்கு முன்னர் இந்த விவசாயிகள் என்ன செய்தார்கள், தங்களது நெல் வயவ்களுக்குத் தேவையான நீரை எப்படி பெற்றார்கள் என்பதை இப்பகுதியின் அகத்தியர் விவசாய அமைப்பைச் சேர்ந்த ரஜனி விவரித்தார்.  

நாங்கள் முன்பு காலபோகம் சிறுபோகம் என்று நெற்செய்கையில் இறங்கினாலும், பாரிய அளவில் செய்வதில்லை. அதற்கான காரணம் நீர் பற்றாக்குறைதான். நெற்செய்கை மற்றைய தோட்டப்பயிர்களை போன்றதல்ல. எமது வயல்களிலுள்ள ஒவ்வொரு வரவையிலும் ஆகக் குறைந்தது 2-3அங்குல உயரத்திற்கான நிரைத் தேக்கி வைத்திருத்தல் வேண்டும். கிருமி நாசினி பாவிக்கும்போது நீரை அகற்ற வேண்டும், அது பாவித்த பிறகு பழையபடி நீரைத்தேக்க வேண்டும். இதனை வைத்துப் பார்க்கும்போது நீர்ப்பாசனம் எங்களது கைக்குள் இருக்க வேண்டும். இதற்காக நாங்கள் இந்த அணைக்கட்டை இந்த ஆற்றில் இருக்கும் மண்ணை எடுத்துக் கட்டுவோம். 

பட்டிருப்பு நீர்பாசனத் திணைக்களத்தின் பிரதம நீர்ப்பாசன பொறியியலாளர் திருமதி கீதா, எமக்குத் தேவையான இயந்திர சாதனங்களை எந்தவித கட்டணமுமின்றி இலவசமாக வழங்குவது ஒரு சாதாரண நடைமுறை. 

அந்த இயந்திர சாதனங்களின் உதவியோடும் எமது விவசாயிகளின் ஒன்றுபடுத்தப்பட்ட உடல் உழைப்போடும் அவை கட்டிமுடிக்கப்பட்டு நீர்ப்பாசனம் இடம்பெறும். நெற்கதிர்கள் முற்றிச் சிவக்கும் தறுவாயில் நாமாக இந்த அணைக்கட்டை உடைத்து விடுவோம். நெற்கதிர்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில், எமது வயல்களுக்கு நீர் தேவைப்படாது. அனேகமாக திடீரென மழை பெய்தாலோ அல்லது ஆற்றில் நீர் மட்டம் கூடினாலோ அணைக்கட்டு உடைப்பொடுத்துவிடும். 

அவ்வாறான சந்தர்ப்பங்களில் அணைக்கட்டை மீண்டும் கட்ட வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலை எம்மால் தவிர்க்க முடியாத ஒன்று. சில சந்தர்ப்பங்களில் இந்த அணைக்கட்டை கட்டவதற்கு காலதாமதமாகினால் எங்களுடைய வேளாண்மைகள்  சாக்காட்டை சந்திக்க வேண்டிவரும். இப்படியான சந்தர்ப்பங்களை நாம் சந்தித்திருக்கிறோம். இவ்வாறான கதைகள் எங்களுக்கு புதியதல்ல. இவ்வணைக்கட்டை மண்ணால் கட்டும் நிகழ்வானது இன்றோ நேற்றோ ஏற்பட்டதல்ல. எங்களது மூதாதையர்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்தவை. இப்போது மண்தோண்டி இயந்திரங்கள், மண் ஏற்றி இறக்கும் இயந்தி சாதனங்கள் என்று எமக்கு மத்தியில் எவ்வளவோ வகையான இயந்திர சாதனங்கள் இருக்கின்றன. அவை எமது உடலுழைப்பை குறைத்துவிட்டன. அந்தக்காலத்திலிருந்த விவசாயிகள் தங்களது உடல் உழைப்பினால்தானே இதனை கட்டி முடித்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்கிறோம். அவர்களின் உடற்பலம், மனோபலம், ஒற்றுமை, புத்திக் கூர்மை என்பன இப்பாரிய இயந்திர சாதனங்களுக்கு இணயானது எனலாம். அணைக்கட்டை கட்டினாலும் அங்கு உயர்ந்து நிற்கும் நீரை வயல்களுக்கு பாய்ச்சுவதற்கு கால்வாய்களும், மதகுகளும் அவசியமானவை. அது பாரிய செலவை ஏற்படுத்தப் போவதில்லை. குறிப்பிட்ட வாய்க்கால்களை அமைப்பதற்கு காணிச் சொந்தக்காரர்கள் தங்களின் காணிகளின் ஒரு துண்டுக் காணியை வாய்க்கால்கள் அமைப்பதற்கு விட்டுக் கொடுக்க வேண்டும். யானையை வாங்கிவிட்டோம் அதனை கட்டி மேய்க்கும் அங்குசத்தை வாங்குவதற்கு தாமதிப்பதா என்ற கேள்வி விவசாயிகளின் மத்தியில் இருக்கிறது.

விவசாயிகள் எல்வோரையும் பொதுநலவாதிகளென்றோ அல்லது புத்திசாலிகளென்றோ நாம் ஒட்டுமொத்தமாக கருதிவிட முடியாது. ஒரு அபிவிருத்தி ஏற்படும்போது, சில விட்டுக் கொடுப்புகள் இருக்கத்தான் வேண்டும்.   காணிச் சொந்தக்காரர்கள் தங்கள் காணியின் ஒருபகுதியை கால்வாய் நிர்மாணத்திற்காக விட்டுக் கொடுக்காதபோது கால்வாய் அமைக்கும் பணி முற்றுப்பெறப் பொவதில்லை. ஆகையால் இந்தப் பெரிய அணைக்கட்டை கட்டி முடித்ததினால் கிடைக்க விருக்கும் நன்மையை விவசாயிகள் அனுபவிக்க முடியாது. நன்மையயை அனுபவிக்க இருக்கும் விவசாயிகள் அந்த நன்மையை பெறுவதற்கு ஒரு சில விட்டுக் கொடுப்புகளை செய்வதில் தவறில்லையென மட்டக்களப்பு மாவட்ட நிர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெட்ணம் தெரிவிக்கிறார். 

நீர்ப்பாசன அணைக்கட்டைத் தவிர நெல்வயல்களுக்கு மத்தியில் இரு வீதிகளை மத்திய அரசின் மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் நிர்மாணித்துக் கொடுத்திருக்கிறது. இதனால் நெற் செய்கையாளர்கள் தங்கள் விளைபொருட்களை நெல் வயலிலிருந்து ஏற்றிச் செல்வதற்கும். அதே போன்று வயல்களுக்கு உள்ளீடுகளை கொண்டு செல்வதற்கும் அவ்வீதிகள் பெரிய வசதிகளை வழங்குகின்றன 

மத்திய நீர்ப்பாசன திணைக்களம் வெல்லாவெளியூடாக மட்டக்களப்பு வாவியில் வந்து சங்கமிக்கும் இந்த ஆறுகளை கட்டி மறித்து இன்னும் அதிகமான நெற்காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்கி அவைகளை இருபோக நெற்செய்கைகளுக்கு உள்வாங்க வேண்டும். இது எமது விவசாயிகளுக்கு செய்கின்ற பாரியளவிலான நன்மையாகும்.

இன்னொரு வகையில் பார்க்கும்போது தேசிய மட்டத்தில் நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்வதாக முடியும். இவ்விடயத்தில் மாவட்டப் பணிப்பாளர் என். நாகரெட்ணம் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வெற்றிகாண வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் பொதுவான கருத்தாக இருக்கின்றது.   

எஸ்.எஸ். தவபாலன்  
படங்கள் :  புளியந்தீவு குறூப் நிருபர் 

Comments