போதைப்பொருளுக்காக பெண்ணைக் கொலை செய்த 22 வயது இளைஞன் | தினகரன் வாரமஞ்சரி

போதைப்பொருளுக்காக பெண்ணைக் கொலை செய்த 22 வயது இளைஞன்

கிளிநொச்சியில் கடந்த டிசம்பர் மாதம் 26ம், 27ம் திகதிகளில் இரண்டு கொலைச் சம்பவங்களும் கடந்த புத்தாண்டு தினத்தில் ஒரு கொலைச் சம்பவமும் என ஒரு வாரத்துக்குள் மூன்று கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதாவது பூநகரி கெளதாரிமுனைப் பகுதியில் உள்ள சுற்றுலா தளத்தில் ஞாயிறு விடுமுறையை கழிப்பதற்காக வந்த இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது கத்தியால் குத்தி இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதே நேரம் அன்றைய தினத்தில் இலண்டனிலிருந்து இலங்கைக்கு வந்து கிளிநொச்சி உதய நகரில் வசித்து வந்த 67வயதுடைய மூதாட்டி ஒருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டு அவரது சடலம் சுமார் 18கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் கொண்டு சென்று ஆற்றில் போடப்பட்டிருந்தது.  

புத்தாண்டு தினமான ஜனவரி முதலாம் திகதி இரவு 7-30மணிக்கு அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பரந்தன் சந்திப் பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்த கொலை சம்பவங்கள் கிளிநொச்சியில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதா? அல்லது போதைப் பொருள் பாவனைகளின் அதிகரிப்புக்கள் தான் கொலைகளுக்கு காரணமா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளதுடன் மக்கள் மத்தியில் அச்சத்ததையும் பயப்பீதியையும் ஏற்படுத்தி இருக்கின்றது.  

இந்தக் கொலைகளின் பின்னணியில் கூடுதலான மதுபாவனை அல்லது போதைப்பொருள் பாவனை என்பனவே காரணமாக இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து உணரமுடிகின்றது. இதில் இரண்டு கொலைச் சம்பவங்கள் வாய்த்தர்க்கம் முற்றி கொலையாக மாறியது. மாறாக இலண்டனில் இருந்து வந்த 67வயது மூதாட்டியின் கொலை தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் கொலையாளி கொலைக் குற்றத்தை மறைப்பதற்கு அடுத்தடுத்து மேற்கொண்ட செயற்பாடுகளும் எல்லோரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இலண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது- 67) என்ற பெண் இலங்கைக்கு திரும்பி வந்த நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடொன்றை எடுத்து தங்கியிருந்துள்ளார். தனியாக வசித்து வந்திருந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், அதன் பின்னர் அன்று பி.பகல் 3.00மணி முதல் 6.00மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார். குறித்த பெண் இவ்வாறு காணாமல் போயுள்ள விடயம் மாலை 7.20மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. குறித்த பெண் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரிமையாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.  

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது இப்பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறைகள் காணப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இப்பெண்ணுக்கு வேலைகளை செய்து கொடுப்பவராகவும் அன்று வங்கிக்கு சென்று திரும்பியதாக தெரிவிக்கப்படும் அம்பாள்குளம் பகுதியியை சேர்ந்த 22வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவம் தொடர்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.அவரது வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து சுமார் 18கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஸ்கந்தபுரம் ஆற்றின் மரப்பாலத்தடியில் பொதி செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது.  

இந்த ஆற்றுப்பகுதியில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமையால் முதலைப்பாலம் என்றும் அந்தப்பகுதி குறிப்பிடப்படுகின்றது. விலங்குகளின் கழிவுகள் கொட்டப்படுவதால் அதிகளவான முதலைகள் இந்த ஆற்றில் காணப்படுகின்றன. பெண்ணின் சடலத்தை  அழித்து விடலாம் என்ற எண்ணத்தில் இந்த ஆற்றில் சடலம் வீசப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அண்மைக் காலமாக இப்பகுதியில் வீதி புனரமைப்பு இடம் பெற்றதன் காரணமாகவும் கனரக வாகனங்களின் மூலம் வீதி செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கும் போது ஏற்பட்ட நில அதிர்வுகள் காரணமாக இந்தப் பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் குறைந்துள்ளன.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் பணத்திற்காகவே வயோதிப பெண்ணை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒட்டுத்துண்டுகளை துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் மேற்கெண்டதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து 2சோடி காப்புக்கள், தங்க சங்கிலி உட்பட்ட ஆபரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சடலத்தை கொண்டு சென்று ஆற்றில் வீசுவதற்கு துணைபுரிந்த அவரது மனைவியும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி இரு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்ப்பட்டுள்ளனர்.  

சம்பவ தினத்தில் வங்கிக்குச் சென்று திரும்பிய பெண் வீட்டில் தனிமையில்  இருந்தபோது ஓட்டுத் துண்டுகளையும் கற்களையும் துணியில் சுற்றி கடுமையாக  தாக்கி அவரை கொலை செய்திருக்கிறார். அவரிடமிருந்த பொருட்களையும்  கொள்ளையிட்ட பின்னர் பெண்ணினுடைய சடலத்தை பார்சலாக கட்டி மனைவியின்  உதவியுடன் அதனை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று ஆற்றில்  போட்டிருக்கிறார் இவர்.  

சந்தேக நபர் அண்மையிலேயே திருமணம் செய்திருக்கிறார். அவரது  மனைவியும் கொலைக்குற்றத்தை மறைப்பதற்கு துணையாக இருந்து இருக்கின்றார் என்ற  குற்றத்திலும் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.   போதைப் பொருளுக்கு அடிமையாகும் போது ஒரு மனித உயிரையே காவு  கொள்ளும் அளவிற்கு இன்றைய சமூகம் மாறி இருப்பது வேதனைக்குரியதாகும்.  ஒரு விலைமதிப்பற்ற மனித உயிரை படுகொலை செய்து போதைப் பொருளை வாங்க  வேண்டும் என்ற மன நிலைக்கு 22வயதுடைய இந்த நபர் தள்ளப்பட்டுள்ளார் என்பது  ஒரு அதிர்ச்சி அளிக்கக்கூடிய சமிக்​ைஞ.  

ஜது பாஸ்கரன் 
படங்கள்: பரந்தன் குறூப் நிருபர் 

Comments