மறுக்கப்படும் மறுமணமும் சமுதாயத்தின் பிற்போக்குச் சிந்தனையும் | தினகரன் வாரமஞ்சரி

மறுக்கப்படும் மறுமணமும் சமுதாயத்தின் பிற்போக்குச் சிந்தனையும்

ஒவ்வொரு தனிமனிதனும் இணையும்போது அது சமூகமாகிறது. ஆனால் தனி ஒருவன் சிந்திக்கும் தன்மை ஒட்டுமொத்த சமூகத்திலிருந்தும் வேறுபட்டுதான் நிற்கிறது. சில சமயங்களில் தனி ஒருவனாக யோசிக்கும்போது மிகச்சரியாகவும் சமூகத்தோடு ஒத்து யோசிக்கும்போது வேறாகவும் ஆகிவிடுகிறது. இது முரண்பாடுகளுக்கு காரணமாகிறது. பெரும்பான்மையானவர்களின் சிந்தனையே சமூகத்தின் சிந்தனையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் எம்முடைய சிந்தனைகள் அடுத்தவரின் வாழ்க்கையையும் மனநிலையையும் எவ்விதம் பாதிக்கும் என்பதை கணம்கூட சிந்திப்பதில்லை.

இன்றைய சமுதாயம் தன்னை எவ்வாறு செப்பனிட்டுள்ளது என்று நோக்கினால் எவ்வித மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக சமுதாயத்தின் மனோநிலை மற்றும் எண்ணத்தில் எதுவித முன்னேற்றமும் இல்லை. இதற்கு நல்ல உதாரணம் போரிற்குப் பிற்பட்ட காலத்தில் எம்சமூக மனநிலையைச் சொல்லலாம்.

போர்க்கால சூழலில் சிக்குண்ட ஓவ்வொரு மனிதனின் எண்ணம் எல்லாம், எந்தநேரம் உயிர் போய்விடுமோ?, வயிற்றுப்பசிக்கு உணவு கிடைக்குமா?, உயிரைப் பாதுகாக்க ஒரு இடம் கிடைக்குமா?, காலை இழந்தவனும் கையை இழந்தவனும் தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்ளப்போகிறார்கள் என்பதாகவே இருந்தது. தாங்கமுடியாத துயரத்தை கடந்து வந்தும் இன்னமும் சற்றும் பக்குவப்படாத மனோநிலையில் இச்சமூகம் இருப்பதுதான் விசித்திரம். பட்டும் திருந்தாது' என்ற வாக்கு யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ எமது தமிழ்ச்சமூகத்திற்கு சாலப்பொருந்தும். அத்தனை வலிகளை கடந்துவந்த பின்னும் இன்னமும் அடுத்தவனின் வாழ்க்கையை குறிவைத்து தாக்குவதில் இச்சமூகம் முதலிடம் பெறுகிறது.

போர்க்காலச்சூழலின் பின் எம்முடைய சமூகம் இன்றும் மகளிரை வஞ்சித்து வருகிறது. போர்க்காலச்சூழலில் இடம்பெற்ற இளவயது திருமணங்களுக்கு அளவே இல்லை. அதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் திருமணம் செய்து கொண்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் போரின் முடிவில் கணவனை இழந்தும் மனைவியை இழந்தும் ஒற்றை உயிராய் தப்பியநிலை ஜீரணிக்க முடியாத ஒன்று.

கணவனை இழந்த பெண்ணாகட்டும் அல்லது மனைவியை இழந்த ஆணாகட்டும் இருவருக்குமே எதிர்காலம் என்ற ஒன்று உண்டு. தம் மனநிலையைப் பொறுத்து இன்னோர் வாழ்க்கையைத் தேடிக்கொள்ளும் அவர்களின் முடிவில் இன்னமும் தடையாக இருப்பது எம் சமூகம்தான். அதிலும் குறிப்பாக ஒரு பெண் மறுமணம் செய்ய எண்ணும்போதோ அல்லது செய்துகொண்டாலோ அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஏன் இல்லை என்பது விடைகாண வேண்டிய கேள்வி. இளவயதில் திருமணமாகி ஒருசில மாதங்களிலேயே கணவனை இழந்த பெண்கள் இங்கே அதிகம்.

இலங்கையில் நடைபெற்ற போரில் 90ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். கிழக்கில் சுமார் 49ஆயிரம் பெண்களும் வடக்கில் 40ஆயிரம் பெண்களும் போரினால் கணவன்மாரை இழந்துள்ளனர். அவர்களை சமூகம் விதவை என்ற அடையாளத்துடன் ஒருபடி கீழே தள்ளிவைக்கின்றது. இவர்களில் அதிகமானவர்கள் இளவயதில் கணவனை இழந்தவர்கள்.

இவ்வாறான பெண்கள் தனியாக வாழ்ந்தால் அதனை தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் தன்மை இன்னமும் உண்டு. அதேசமயம் மறுமணம் செய்துகொண்டால் அதனையும் தவறாகப் பார்க்கும் தன்மையும்உண்டு. இன்றும் கணவனை இழந்து தனியாக இருக்கும் ஒரு பெண் தன் தொழில் நிமித்தமோ அல்லது சொந்தத் தேவைகளுக்காகவோ சுதந்திரமாக வெளியில் நடமாட முடிவதில்லை. அவ்வாறு திரிந்தால் அவளுக்கு ஒரு பட்டத்தைச்சூட்டி வேடிக்கை பார்க்கும் நிலைதான் இன்றும் பரவிக்கிடக்கின்றது. அதையும் தாண்டி பாலியல் சீண்டல்களை எதிர்நோக்க வேண்டிய இக்கட்டான நிலையும் ஏற்படுகிறது. உதவி செய்வது போன்று வந்து தம் இச்சைக்கு உட்படுத்த எண்ணும் எண்ணம் கொண்டவர்களும் இதில் விதிவிலக்கல்ல.

மனைவியை இழந்த ஒரு ஆண் மறுமணம் செய்துகொண்டால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஒருபெண் மறுமணம் செய்துகொண்டால் ஏற்படுவதில்லை. அதில்கூட பால்நிலை பாரபட்சம். அதற்காக கணவனை இழந்த எல்லாப் பெண்களும் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. அது அவர்களினுடைய தனிபட்ட விருப்பு. அவர்களின் மனநிலையைப் பொறுத்து அவர்களின் முடிவு அமையலாம். மறுமணம் செய்ய முடிவெடுக்கும்போது அதற்கு தடையாய் இருப்பதும் செய்தபின் வஞ்சிப்பதுமே இங்கே பிரச்சினை. சாதாரண பெண்கள் இப்பிரச்சினைக்கு முகங்கொடுப்பதைவிட முன்னாள் பெண் போராளிகள் எதிர்கொள்ளும் வீதம் என்பது சற்றே அதிகம்.அவர்களுக்கு மறுவாழ்வு என்பது ஒருவரம். ஆனால் அந்த வரத்தையும் கெடுத்துவிடுவதில் பலருக்கு ஆத்மதிருப்தி.

இவ்வாறான பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளை மட்டும் செய்தால் போதுமானது என்ற எண்ணம் பலருக்கு உண்டு. வாழ்வாதாரம் வழங்கப்பட வேண்டியது அவசியம்தான். எத்தனையோ நிறுவனங்கள், அமைப்புகள், மதகுழுக்கள், புலம்பெயர்ந்தோர் என பலர் கணவனை இழந்த பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளனர். இன்னமும் வழங்குகின்றனர். ஆனாலும் வாழ்வாதாரம் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது.  உரியமுறையில் கௌரவம் வழங்கப்படும்போதுதான் பெண்களுக்கு முறையான மரியாதை கிடைக்கப்பெறுகிறது. கணவனை இழந்த பெண்ஒருத்தியை சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து தள்ளிவைப்பதில் தொடங்குகிறது அவர்களுக்குச் செய்யப்படும் அவமரியாதை.

சுமங்கலி மட்டும்தான் நல்ல காரியத்தில் முன்நிற்க வேண்டும் என்பது அறியமையின் ஒரு வெளிப்பாடு. நல்ல நிகழ்வுகளிற்கு முன்நிற்பதை விரும்பாத சிலரின் முகங்கோணத்தக்க செயற்பாடுகள் வாழ்தலின் மீதான வெறுப்பை ஏற்படுத்தும் தன்மைகொண்டவை. ஒருபெண் மறுமணம் செய்தபின் பொது இடங்களில் பல்வேறு கேலிப்பேச்சுக்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பார்வையாலே ஏளனம் செய்யும் தன்மையும் அதனை சகித்துக்கொள்ள வேண்டிய நிலையும் மிகவும் கொடுமையானது. இதற்கு நல்ல உதாரணம் அண்மையில் என் நண்பியின் திருமணத்திற்குச் சென்றிருந்தவேளை, என் நண்பியின் அக்கா சடங்குகளில் கலந்துகொள்ளாமலும் முன்னிற்கு வராமலும் ஒதுங்கியே இருந்தார். ஏன் அவ்வாறு என்று கேட்டாதற்கு'அவர் கணவனை இழந்த பெண் அதனால் நல்லகாரியத்துக்கு முன்னால் நிக்ககூடாது'  என்கிறார்கள். அந்த கணம் மனது ரணமாகியது. இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்க வெட்கம்தான் வருகிறது. போரின் பின் 12ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் மாறாத எம்சமுதாயம் தன்னை எல்லா வழிகளிலும் தரப்படுத்திக்கொள்ள வேண்டும் எனில் அடிப்படை விடயங்களில் தன்னை செதுக்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு நடக்க வேண்டுமெனில் ஒவ்வொரு தனிமனிதனிலும் சிந்தனை மாற்றம் நிகழவேண்டும்.

ஒருவரினுடைய வாழ்வின் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு ஆதரவாக இல்லாவிடினும் என்றும் உபத்திரமாக இருக்கக்கூடாது என்பது அடிப்படையில் விதைக்கப்பட வேண்டியது அவசியம். மறுமணம் செய்வதென்பது, செய்யக்கூடாத தப்பை செய்துவிட்டதாக ஒரு தவறான பார்வை சமூகத்தில் உள்ளது. ஒவ்வொருவரும் அந்த நிலையுடன் தன்னைப் பொருத்திப்பார்த்தால் அவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்வது சுலபமாகிவிடும்.

மாற்றத்திற்கான முதல்அடி என்னுடையதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருள்ளும் வந்தாலே சமுதாயத்தின் முன்னேற்றமும் மெல்லமெல்ல தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை.

இ. ஷயனுதா
4ம்வருடம்,
ஊடககற்கைகள்துறை,
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.

Comments