50ஆவது நாளை தொட்ட 'மாநாடு' திரைப்படம்! | தினகரன் வாரமஞ்சரி

50ஆவது நாளை தொட்ட 'மாநாடு' திரைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சிலம்பரசன் மீண்டும் திரையுலகில் தான் ஒரு முன்னணி கதாநாயகன் என நிரூபிக்கும் விதமாக கம்பேக் கொடுத்த திரைப்படம் 'மாநாடு'. அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனது. 

பல தடைகளையும் தாண்டி ரசிகர்களை வந்து சேர்ந்த 'மாநாடு' திரைப்படத்தை V ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்தார். மிடுக்கான காவல்துறை அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் S.J.சூர்யா மிரட்ட, மறுபுறம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்தொகுப்பாளர் பிரவீன். KL-ன் படத்தொகுப்பும் மாநாடு படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. 

தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'மாநாடு' திரைப்படம் தற்போது 50நாட்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'மாநாடு' படத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு படக்குழுவினர் ட்விட்டரில் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். 

இதுகுறித்து நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நன்றி, அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு, “அனைத்து ஊடக நண்பர்கள் மற்றும் சினிமா காதலர்கள் மற்றும் சிலம்பரசனின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comments