நெருக்கடிகள் காரணமாக தோட்டங்களில் இருந்து வெளியேறுவது எமது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும்! | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கடிகள் காரணமாக தோட்டங்களில் இருந்து வெளியேறுவது எமது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும்!

ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில், மாப்பிள்ளை இவருதான். ஆனால்போட்டிருக்கிற உடுப்பு என்னுடையது என்று சொல்வார்.  அதுபோலவே இந்திய வீடுகள் மலையக மக்களுடையவைதான். ஆனால் அவை அமைந்துள்ள காணி  அவர்களுடையது அல்ல.  காணியுடன் வீடும் சொந்தமாக அளிக்கப்பட்டால் தான் அது  குடியுரிமையின்அடையாளமும், அந்தஸ்தும்  அதிகாரமாகவும் அமையும்

இங்கு ஆளணிக்கான பாரிய வெற்றிடம் ஏற்படுவது திண்ணம். இது விரும்பத்தக்க  ஒன்றல்ல. இந்நிலை தொடருமானால் மலையகம் என்னும் அடையாளம் சிறுகச்சிறுக  சிதைவடைந்து போவதைத் தடுக்கவே இயலாது. இதுவே இனவாதிகளின் எதிர்பார்ப்பு.  எற்கனவே 7பேர்ச் காணி சொந்தமாகக்கப்படுவதைக் கண்டித்த சக்திகள் இவை.  தலைமுறை தலைமுறையாக வந்தேறு குடிகளாக இச்சமூகம் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் ஆசை

எந்தவொரு இனத்தினதும் சமூக அடையாளங்களாக கலை, கலாசார, மொழியியல் வெளிப்பாடும் அதன் பின்புலமாக நிலமும் நிலம் சார்ந்த வதிவிடமும் விளங்குவது இன்றியமையாதது. அதில் நிலவுடைமை என்பது தேசிய அந்தஸ்துக்கான அளவுகோல் என்று பதிவிடுகின்றார் எழுத்தாளர் மு.சிவலிங்கம்.

இன்று தினக்கூலி சமூகமாகவும் மண்ணுரிமை முகவரியற்ற மக்கள் கூட்டமாகவும் வாழும் மலையக மக்கள் இந்த அளவுகோலின் அடிப்படை அம்சத்தைக்கூட தக்கவைக்க முடியாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

இன்று பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி என்பது பாரிய வீழ்ச்சி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தேயிலை தரத்திலும் சரிவு. இதனால் சர்வதேச தேயிலைச் சந்தையில் சவாலுக்கு மேல் சவால்கள். இதற்குக் காரணம் தோட்டத் தொழிலாளர்கள் அல்ல என்பது மட்டும் நிச்சயம். 23தனியார் கம்பனிகளும் அரசு தரப்பின் கீழ் நிர்வாகம் செய்யும் அமைப்புகளும் சகட்டுமேனிக்கு இத்துறையை அல்லோல கல்லோலப்படுத்திக் கொண்டிருக்கின்றன. முறையான பராமரிப்பு இன்றி தேயிலைக் காணிகள் காடுகளாகி வருகின்றன. அடுத்துவரும் தலைமுறை இத்துறையை அண்டிவிடாதபடி அதன் செயற்பாடுகள் இருக்கின்றன. 

உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. பாதுகாப்பு நடைமுறைகள் எதுவும் கையாளப்படுவது இல்லை. மேலதிக வருமானம் தேடிக்கொள்ள மாற்று வழிமுறைகள் ஏதும் இனம் காணப்படவில்லை. விவசாயம் செய்யலாம் என்றால் நிலவசதி இல்லை. இது 200வருடகால வரலாறு கற்பித்துக் கொண்டிருக்கும் யதார்த்தம். இதில் மாற்றம் காண எதுவுமே செய்ய லாயக்கில்லாத தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் சுய கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன. கரிசனை காட்ட வேண்டிய ஆட்சிக்கு வரும் அனைத்துத் தரப்பும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தான் நடந்து கொள்கின்றன. 

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மீது காட்டப்படும் பச்சாதாபம் பரம்பரை பரம்பரையாக பாடுபடும் பாட்டாளி சமூகத்தின் பால் காட்டப்படுவது இல்லை. இன்றைய நிலையில் குறுந்தேயிலை விவசாயிகள் உற்பத்தியில் சாதனை படைப்பது என்னவோ உண்மைதான். அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டியதும் சரிதான். அதேநேரம் உற்பத்திக்கு ஆதாரமாக இருப்பவர்களை அலட்சியப்படுத்துவது என்ன நியாயம்? 

1973களிலேயே சிறுநில தேயிலை உற்பத்தியாளர்கள் என்னும் பிரிவு உதயமானது. தேசியமயம் என்ற பெயரில் தனியார் வசமிருந்த அனைத்துத் தோட்டங்களையும் அரசாங்கமே சுவீகாரம் செய்தது. இதில் ஆங்கிலேயருக்கும் தமிழருக்கும் சொந்தமான தோட்டங்களும் அடக்கம். இது உள்நோக்கம் கொண்ட செயற்பாடாகவே இன்னும் கருதப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் நலன் கருதி ஆயிரக்கணக்கான ஹெக்டெயர் நிலப்பரப்பு துண்டாடப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் மூலம் தோற்றம் பெற்றவர்களே சிறுதோட்ட உரிமையாளர். 

இதர சமூகத்துக்குக் காணிப்பகிர்வு இடம்பெற்றபோது அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக மக்கள் குறித்து மருந்துக்கும் யாருமே கவலைப்படவில்லை, கவனமெடுக்கவும் இல்லை. இவ்வாறு பெருந்தொட்டக் காணிகள் கையகப்படுத்துவதை எதிர்த்து மக்கள் நடவடிக்கைகளில் ஈடுபடவே செய்தார்கள். இதன் முதலாவது பதிவு 1942களில் கேகாலை மாவட்டம் புளத்கொஹூபிட்டிய தோட்டத்திலேயே இடம்பெற்றது. 500ஏக்கர் தேயிலைக் காணியை அபகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி. காணி கபளீகரத்தை எதிர்த்து 1970களில் நுவரெலியா மாவட்டம் டெவன் தோட்டத்தைச் சேர்ந்த சிவனு இலட்சுமணன் உயிர்த்தியாகம் செய்தமை உச்சத்தைத் தொட்டது. 

ஆனால் அவ்வப்போது ஆட்சிபீடம் ஏறுபவர்கள் பார்வை என்னவோ பெருந்தோட்டக் காணிகளைப் பறித்து எடுப்பதிலேயே விழுகின்றன. இதேநேரம் பெருந்தோட்ட மக்களுக்கு குறைந்த பட்சம் 20பேர்ச் காணியைப் பெறும் உரிமை இருக்கின்றது என்பதே ஆய்வாளர்களின் கருத்து. இதற்காக காணி சீர்திருத்தச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ் வாய்ப்பு இருக்கின்றது. நகரசபை, பிரதேச சபை விதிகளுக்கமையவும் காணி விநியோகம் செய்ய இடமிருக்கின்றது. ஆனால் மனம்தான் இல்லை. இதனால் வாய்ப்புகள் மறுதலிக்கப்படுகின்றன. எனவேதான் தமது இருப்பிடங்களை தக்கவைத்துக் கொள்ளக்கூட போராட வேண்டிய இக்கட்டான நிலையில் இம்மக்கள் காணப்படுகின்றார்கள். 

இன்று இம்மக்களின் தனிவீட்டுத் திட்டத்துக்காக தலா 7பேர்ச் நிலம் மட்டுமே ஒதுக்கப்படுகின்றது. கம்பனி தரப்பின் இறுக்கமான போக்கால் ஏராளமான இடையூறுகள். தவிர ஒரு தரப்பை பிறிதொரு தரப்பு குறைசொல்லும் போக்கே காணப்படுகின்றது. குடுமிப்பிடி சண்டைகள் வேறு. முன்னைய ஆட்சி மலையக மக்களின் தனிவீட்டுத் திட்டத்துக்காக 7பேர்ச் காணி என்று அறிவித்தபோது இது எம்மாத்திரம் என்று ஏளனம் செய்தது இ.தொ.கா. அன்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் இருந்தார். இன்று அவர் மகன் ஜீவன் தொண்டமான் இருக்கிறார். அவரும் 7பேர்ச் காணி எந்த மூலைக்கு என்று எள்ளி நகையாடுகிறார். எனவே அவர் தனி வீட்டுத் திட்டத்துக்காக 20பேர்ச் காணியைப் பெறுவதோடு அதை உரிமையாக்கியும் தருவாரா?  

உண்மையில் 7பேர்ச் காணி என்பது போதுமானதல்ல என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. இதைவிட அதிகமான நிலப்பரப்பில் இம்மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். ஏற்கனவே கம்பனி நிர்வாகங்கள் இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தவே செய்கின்றன. 7பேர்ச் மட்டுமே இவர்களுக்குச் சொந்தமென்றானால் மக்கள் பயன்படுத்தும் விவசாய காணிகளை மீள ஒப்படைக்குமாறு கம்பனி தரப்பு கோரினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

இதேவேளை அரசாங்க காணியிலோ பெருந்தோட்டக் கம்பனிகள் கைவசமுள்ள காணியிலோ வீடுகள் அமைக்கப்பட்டால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. காணியும் வீடும் சட்டப்படி சொந்தமாக்கப்படல் வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே நிலவுடைமை என்ற கனவு மெய்ப்படுத்தும். சமூக ஆய்வாளர் மு. சிவலிங்கம் கூறுவதுபோல தேசிய அந்தஸ்துக்கான அளவுகோல் ஸ்திரப்படும். 

இளம் தலைமுறையினர் தோட்டத் தொழில் மீது ஈடுபாடு காட்ட விரும்பவில்லை. இதனிடையே வகை தொகையின்றி பலர் வெளியிடங்களை நோக்கி வேலைதேடி ஓட வேண்டிய நிர்ப்பந்தம். இங்கு ஆளணிக்கான பாரிய வெற்றிடம் ஏற்படுவது திண்ணம். இது விரும்பத்தக்க ஒன்றல்ல. இந்நிலை தொடருமானால் மலையகம் என்னும் அடையாளம் சிறுகச்சிறுக சிதைவடைந்து போவதைத் தடுக்கவே இயலாது. இதுவே இனவாதிகளின் எதிர்பார்ப்பு. எற்கனவே 7பேர்ச் காணி சொந்தமாகக்கப்படுவதைக் கண்டித்த சக்திகள் இவை. தலைமுறை தலைமுறையாக வந்தேறு குடிகளாக இச்சமூகம் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் ஆசை. 

இந்தியாவை நம்பி நம்பியே நாசமாகிப்போனது மலையக மக்களின் எதிர்காலம். இந்தியாவிலிருந்து அன்று அடிமைத் தொழிலாளர்களாக பல நாடுகளுக்கும் ஆங்கிலேயரால் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் தலைமுறையினருக்கு ஏதாவது இடையூறு என்றால் தட்டிக்கேட்கத் தயங்காத இந்தியா, இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் நலன் குறித்து  கிஞ்சித்தும் கரிசனை காட்டியதே இல்லை. இன்று 14ஆயிரம் வீடுகளை அமைக்க நிதி உதவி வழங்கும் இந்திய நாடு அதற்கான நிலம் உரித்தாக்கப்படுவது பற்றி பேசியதே இல்லை. ஒரு திரைப்படத்தில் ரஜினி சொல்லுவார் மாப்பிள்ளை இவருதான், ஆனால் அவர் போட்டிருக்கிற உடுப்பு என்னோடது என்று. இதேபோலவே வீடமைப்பு விவகாரமும். வீடு உங்களுடையது ஆனால் அது அமைந்திருக்கும் நிலம் எங்களுடையது என்னும் நிலை. 

நிலமும் வதிவிடமும் சட்டப்படி உரித்தாக்கப்பட வேண்டும். இதுவே புத்திஜீவிகளின் வலியுறுத்தல். இதனை உறுதி செய்வதற்கு உந்துசக்தியாக பெருந்தோட்ட மக்களின் வெளியேற்றம் தடுத்து நிறுத்தப்படுவது முக்கியம். இத்துடன் பெருந்தோட்டப் பிரதேசங்களை மையமாகக் கொண்டு தொழில் பேட்டைகளை அமைப்பதால் இளைஞர் சமூகத்தை எளிதாக ஈர்த்துக்கொள்ள இயலும். இடப்பெயர்வுகளையும் கட்டுப்படுத்தலாம். சமூக மாற்றத்தின் அடையாளம் தோட்டங்களை விட்டு வெளியிடங்களுக்கு புலம் பெயர்தலாக இருக்கவே முடியாது. இதனை மலையக இளைஞர்கள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் தேவை.   

பன். பாலா

Comments