ஆட்சி கவிழ்ந்து விடுமென்ற பகல் கனவில் எதிர்க்கட்சி! | தினகரன் வாரமஞ்சரி

ஆட்சி கவிழ்ந்து விடுமென்ற பகல் கனவில் எதிர்க்கட்சி!

பிரதான கட்சிகளுடன் பல கட்சிகள் இணைந்து கூட்டணி அரசாங்கம் அமைப்பதும், பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கிடையில்இடையிடையே கருத்து மோதல்கள் உருவாவதும் ஜனநாயக அரசியலின் பண்புகளில் ஒன்றாகும். ‘ஆசியாவின் பழைமையான ஜனநாயகம்’ எனக் கருதப்படும் இலங்கையில், இதுபோன்ற கூட்டணி அரசுகள் பல தடவை அமைந்துள்ளன.

குறிப்பாக சுதந்திர இலங்கையில் பல தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன பெரும்பாலும் கூட்டணி உருவாக்கியே மத்தியில் ஆட்சி நடத்தியுள்ளன. இந்த வரிசையில் கடந்த பொதுத் தேர்தலில் முதன் முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் கூட்டணி அமைத்திருந்தது.

குறுகிய காலத்துக்குள் கட்சியை உருவாக்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்துக்கு  வர முடிந்த பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கி வரும் கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றாகும். அண்மைக் காலமாக இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை அவ்வப்போது இடம்பெறுகின்ற கருத்துப் பரிமாற்றங்களின் ஊடாகத் தெரிகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் தேர்தல் பிரசாரங்களில் கூட இரு கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் புலப்பட்டிருந்தன. குறிப்பாக பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை விமர்சிக்கும் வகையில் தேர்தல் பிரசார மேடைகளில் உரையாற்றியிருந்தனர்.

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தவர்கள் கலந்து கொண்ட தேர்தல் பிரசாரங்களில் மக்கள் கூச்சலிட்டு குழப்பங்களை ஏற்படுத்தியிருந்த சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

இவ்வாறான பின்னணியில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவரையும் தேவையற்ற விதத்தில் விமர்சிக்கக் கூடாது என பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் திட்டவட்டமாகக் கூறியிருந்தது. இந்த நிலையில் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதுடன், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14உறுப்பினர்கள் அதாவது தேசியப் பட்டியல் உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளடங்கலானவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்துடன் இருப்பதற்கு சுதந்திரக் கட்சியின் பங்களிப்பும் கணிசமாகக் காணப்படுகிறது.

இருந்த போதும், அமைச்சுப் பதவிகளை வழங்கும் விடயத்தில் சுதந்திரக் கட்சி திருப்தி கொள்ளவில்லை என்பது ஆரம்பத்திலிருந்து தெரியவந்தது. ஒரு சில கபினட் அமைச்சுப் பொறுப்புக்கள் மாத்திரமே சுதந்திரக் கட்சியினருக்கு வழங்கப்பட்டது. ஏனையவர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருந்த போதும், பலர் அவை தொடர்பில் திருப்தி கொண்டிருக்கவில்லை. கடந்த காலங்களில் பலம் பொருந்திய அமைச்சுப் பொறுப்புக்களை வகித்த பலருக்கு இம்முறை அரசாங்கத்தில் எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படாமை அவர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியிருந்தது. இருந்த போதும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கித் தொடர்ந்தும் அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அண்மைக் காலமாக சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. குறிப்பாக சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக அரசாங்கத்தை நேரடியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றார். அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொள்கைத் திட்டங்களைப் பகிரங்கமாக விமர்சித்து வரும் அவர், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் கொண்டிருப்பதற்கு தமது கட்சியின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

சுதந்திரக் கட்சியின் இந்த செயற்பாடுகளினால் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்திருப்பதுடன், சுதந்திரக் கட்சிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக தமது கட்சியின் தலைமைத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர். அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு, அமைச்சுப் பதவிகளை வகித்துக் கொண்டு அரசையே விமர்சிக்காமல் தேவையாயின் வெளியேறிச் செல்ல முடியும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

கூட்டுப் பொறுப்பு உள்ள கூட்டணியின் உறுப்பினர்கள் என்ற வகையில் அரசாங்கத்தின்  கொள்கைத் திட்டங்கள் மற்றும் அரசின் செயற்றிட்டங்களை அரசுக்குள் இருந்து கொண்டே விமர்சிக்க முடியாது. அரசை விமர்சிப்பதாயின் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கருத்துகள் வலுத்து வருகின்றன.

அதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து வந்தாலும் அரசை விட்டு வெளியேறுவது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எவரும் கருத்துகளை முன்வைக்கவில்லை. அரசாங்கம் வீழ்ச்சியுறுவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென்றே அவர்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.

குறிப்பாக சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், தற்போது பொதுஜன பெரமுன உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த அரசை விமர்சித்தமைக்காக இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதியினால் நீக்கப்பட்டிருந்தார். இருந்த போதும் அரசாங்கத்தின் சில செயற்பாடுகளை விமர்சித்த அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயகார மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த அமைச்சர்கள் யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ள போதும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விடயங்களும் சுதந்திரக் கட்சியை அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாகத்  தெரியவருகிறது.

எதுவாக இருந்த போதும், சுதந்திரக் கட்சி கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போதும் ஐ.தே.கவுடன் ஆட்சியமைத்து பின்னர் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்திலேயே பாரிய குழப்பம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியைக் கொண்ட சுதந்திரக் கட்சி மீண்டும் கூட்டணி அரசாங்கத்துக்குள் முரண்பாடுகளைத் தோற்றுவித்திருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சுதந்திரக் கட்சி கூட்டணியிலிருந்து விலகுவதற்கு முடிவு எடுத்தாலும் சில அதன் உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும், பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தக்கவைப்பதற்கு முஸ்லிம் உறுப்பினர்களின் ஒத்துழைப்பை அரசாங்கம் ஏற்கனவே பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், அரசாங்கம் பிளவுபடும் என்ற எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு வெறும் கனவாகவே அமையும்.

அரசு பலமிழந்து விட வேண்டுமென்பதுதான் எதிரணியின் கனவாக இருக்கின்றது. ஆனாலும் அரசு கவிழ்ந்து விடுவதற்கு இடமளிக்கப் போவதில்லையென்ற நிலைப்பாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளதனால் எதிரணியின் கனவானது தொடர்ந்தும் கனவாகவே இருக்கப் போகின்றது என்பதுதான் உண்மை.

பி.ஹர்ஷன்

Comments