சிறந்த திறனாய்வாளர் சிதம்பரபிள்ளை சிவகுமார் | தினகரன் வாரமஞ்சரி

சிறந்த திறனாய்வாளர் சிதம்பரபிள்ளை சிவகுமார்

சிதம்பரபிள்ளை சிவகுமார் ஈழத்து இலக்கியப் புலத்தில் முக்கியமான ஆளுமை. தொண்ணூறுகளில் ஒலிபரப்பு ஊடகத்தில் இலக்கிய இதத்தைப் பாய்ச்சிய குரல்காரர் சிவகுமார்.

இதய சங்கமமும், கவிதைக் கலசமும் இவரது குரலால் செழுமை பூத்தது. கவிஞர் பலரும் தமது கவிதைகளை இவர் குரல் வாசிப்பில் கேட்க ஆவல் கொண்டிருந்த காலமது. தமிழின் அழகை இவரது உச்சரிப்பு மெருகேற்றியது. கவிதை வாசிப்பு பாணி உயிரூட்டியது. உணர்வு மிகுந்த கவிதைக் கணங்கள் சிவகுமாருடையது. எழுத்தூடகத்தில் அமுது ஊடாக இவரது இலக்கிய ஆளுமை பெரிதும் வெளிப்பட்டது. லாவண்யமான சொல் நேர்த்திக்காரன் சிவகுமார்.

கவிஞராக, ஊடகவியலாளாராக அவர் வெளிப்பட்ட காலத்தில் அவரது தேடல் மிக்க வாசிப்பை வாசகர் பலரும் நுகர்ந்திருந்தனர். சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அறிவுத்தேடலும், தன்னம்பிக்கையும், எளிமையும், நிதானமும், மானுட நேசிப்பும் கொண்டவர்.

நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத உரையாடலாக அவரது பெயர் இருந்தது. அத்துணை சிறப்பாக நூல் குறித்த திறனாய்வை முன் வைக்க வல்லவர். அதிகம் பேசிவிடக்கூடாதென்பதற்காக - உரிய விடயப்பரப்புக்கு மைய இடமளிக்க வேண்டுமென்பதற்காக திறனாய்வுப் பிரதியை எழுதி வாசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். இதனால், மற்ற முன்வைப்பாளர்களிலிருந்து பெரிதும் வேறுபட்டார். அவரது வாசிப்பு முறைமை அழகானது. எளிய ஓசை நயத்துடனும், உணர்வுச்செறிவுடனும், ஆழ்ந்த மொழிக்கையாட்சியுடனும் அவரது பிரதிகள் அமைந்திருக்கும். அதனால,; தேர்ந்த படைப்பாளர் பலரது மேடைகளிலும் அவர் இருந்தார். சிவகுமாரின் குரல் எழுத்துப் பிரதிகள் அழகானவைளூ ஆழமானவை. ஆனாலும், அவரது எந்த எழுத்துக்களும் நூல் வடிவம் பெற்றதாக காணக்கிடைக்காமையும் ஓர் இழப்புத்தான்.

சிவகுமார் - மேஜர் அமீன் என அறியப்பட்ட ஈழத்தின் ஒரு காலகட்டச் செயற்பாட்டாளர். எனினும் அவரது இலக்கிய ஆளுமைதான் அவருக்கான உயர்ந்த அறிமுகத்தைத்தந்தது. மிகச்சாதாரண மனிதனாக வாழ்ந்து அமரத்துவமடைந்த தோழர் சிதம்பரப்பிள்ளை சிவகுமாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

அவர் தனது உரைகள் பலதையும் இப்படி முடிப்பார். எனது இருத்தலுக்கான அழைப்பு கவிதை வெளியீட்டு நிகழ்வு 2003 மேடையிலும் இப்படித்தான் முடித்தார். 'ஒரு ரஷ்யக் கவிஞன் சொன்னான் ஏனெனில் அனைத்தும் மாறவும் சுவடு தெரியாமல் மறையவும் செய்கையில் அன்பு என்ற கதிரவனோ என்றென்றும் அசையாது நிற்கும்.

மறூசால்
முல்லை முஸ்ரிபா

Comments