நுவரெலியாவில் புதிய பிரதேச செயலகங்களை நிறுவுக; கையெழுத்து வேட்டையில் மலையக அரசியல் அரங்கம் | தினகரன் வாரமஞ்சரி

நுவரெலியாவில் புதிய பிரதேச செயலகங்களை நிறுவுக; கையெழுத்து வேட்டையில் மலையக அரசியல் அரங்கம்

நுவரெலிய மாவட்டத்தில் ஐந்து பிரதேச புதிய செயலகங்களை உருவாக்குவதற்கு பிரகடனம் செய்யப்பட்ட அதே வர்த்தமானியில் தான் காலி மாவட்ட மூன்று புதிய பிரதேச செயலகங்களுக்கான அறிவி்த்தலும் வெளியானது. 

ஆம் மூன்று முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் நுவரெலியாவில் அது மறுக்கப்பட்டு ஒரு உபபிரதேச செயலகம் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளது. எனவே வர்த்தமானியில் பிரகடனம் செய்தவாறு 5புதிய பிரதேச செயலகங்களையும் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மலையக அரசியல் அரங்கம் பொதுமக்கள் மனுவில் கையொப்பமிடும் இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. 

கடந்த டிசம்பர் 29ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற மலையக அரசியல் அரங்கத்தின் தலைநகர் செயற்பாடுகளுக்கான அங்குரார்ப்பண கூட்டத்தில் முன்னாள் நுவரெலிய மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் உள்ளிட்ட அரங்கத்தின் தலைநகர் செயற்பாட்டாளர்கள் மக்கள் மனுவில் கையொப்பமிட்டு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தனர்.  

நுவரெலிய மாவட்டத்திற்கு என வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்ட ஐந்து புதிய பிரதேச செயலகங்களை அமைப்பதற்கான பொது மக்கள் மனு  

எனும் இந்த கையெழுத்து இயக்கமானது நுவரெலிய மாவட்டம் முழுவதும் வாழும் சகல சமூக ஆர்வலர்களிடம் கொண்டு செல்லப்படுவதுடன், நுவரெலிய மாவட்டத்துக்கு வெளியே வாழும் ஆர்வலர்களின் ஒருமைப்பாட்டை பெறும் பொருட்டு இலத்திரனியல் மனு வடிவிலும் தமிழ் - சிங்களம் - ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் விநியோகம் செய்யப்பட்டு கையொப்பங்கள் பெறப்பட உள்ளன. 

மனுவின் பிரதிகள் தேவைப்படுவோர் அரங்கத்தின் பிரதான அமைப்பாளர் ஆர். செந்தூரனைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் கையொப்பத்தை இட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இலத்திரனியல் மனுவை செயலாளர் நா. கிருஷ்ணகுமாரைத் தொடர்புகொண்டு மின்னஞ்சல் வழியாக பெற முடியும.் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜ் இத் தகவலை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.  

மக்கள் மனுவின் உள்ளடக்கம் பின்வருமாறு : 

2016ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றில் இந்தக் கோரிக்கையை அப்போதைய நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக முன்வைத்ததை அடுத்து, பிரேரணைக்கு பதில் அளித்த அப்போதைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன நுவரெலிய மாவட்ட பிரதேச செயலகங்களை ஐந்தில் இருந்து பத்தாக உயர்த்துவதற்கு உறுதியளித்தார்.  

2018ஆம் ஆண்டு நுவரெலிய மாவட்ட அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்களை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்த அமைச்சர் வஜிர அபேவர்தன ஐந்து புதிய பிரதேச செயலகங்களை அமைப்பதற்கு உத்தரவாதம் அளித்ததுடன் அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பித்து அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டார்.

அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் நுவரெலியாவுக்கு மேலதிகமாக காலி மாவட்டத்திலும் (அமைச்சரின் மாவட்டம்) மேலதிக மூன்று பிரதேச செயலகங்களை அமைக்க அனுமதி பெறப்பட்டு இருந்தது. 

2019ஒக்டோபர் 30ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் நுவரெலிய மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்களும், காலி மாவட்டத்தில் புதிய மூன்று பிரதேச செயலகங்களும் உருவாக்கப்படுவதற்கான பிரகடனம் வெளியானது.  

2020மார்ச் முதலாம் திகதி முதல் நுவரெலிய மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்களை திறப்பதற்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆகும்போது காலி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று பிரதேச செயலகங்கள் பத்தேகம இரண்டாகப் பிரிக்கப்பட்டு வந்துரம்ப என்ற புதிய பிரதேச செயலகமும், ஹிக்கடுவை பிரதேச செயலகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மேலதிகமாக ரத்கம, மாதம்பாகம ஆகிய புதிய பிரதேச செயலகங்களும் அமைக்கப்படுள்ளன. ஆனால் அதே வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்ட நுவரெலிய மாவட்டத்தின் (அம்பகமுவ) நோர்வுூட், (நுவரெலிய) தலவாக்கலை, (வலப்பன) ராகலை, (கொத்மலை) திஸ்பனை, (ஹங்குரங்கெத்த) மத்துரட்ட புதிய ஐந்து பிரதேச செயலகஙலகளும் நடைமுறைக்கு வரவில்லை.  

2021நவம்பர் மாதம் நுவரெலிய மாவட்டச் செயலாளர் நந்தன வைச்சந்தித்து கலந்துரையாடி, பாராளுமன்ற பிரேரணையை முன்வைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தனது உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கோரிக்கை மனு ஒன்றையும் கையளித்து இருந்தார்.  

2021 டிசம்பரில் தலவாக்கலை நகரில் புதிய பிரதேச செயலகத்துக்குப் பதிலாக “உப பிரதேச செயலகம்“ ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இது உயர் தீர்மானங்களை எடுக்கும் பாராளுமன்ற உறுதிப்பாட்டுக்கும் அமைச்சரவையின் கூட்டுத் தீர்மானத்துக்கும் வர்த்தமானிப் பிரகடனத்துக்கும் எதிரானது என்பதை வலியுறுத்துகிறோம். காலி மாவட்டத்திற்கும் நுவரெலிய மாவட்டத்திற்கும் பாரபட்சமான முறையில் தீர்மானமெடுத்து செயல்படுவதாகவும் மாவட்ட மக்கள் உணர்கிறார்கள் என்றும் இந்த பாரபட்சத்தை நிவர்த்தி செய்து நாட்டில் ஏனைய மாவட்ட மக்களைப் போன்று நுவரெலிய மாவட்ட மக்களுக்கும் நிர்வாகத்தில் சமவாய்ப்பு வழங்குமாறும் கோருகிறோம் என்றும் இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

Comments