போதிய படகு சேவையின்றி தவிக்கும் நெடுந்தீவு மக்கள் | தினகரன் வாரமஞ்சரி

போதிய படகு சேவையின்றி தவிக்கும் நெடுந்தீவு மக்கள்

நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய விதத்தில் தொல்லியல் வரலாற்று பாரம்பரியம் கொண்ட இத் தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்களுக்கான வாழ்வாதரமாக கானப்படுகின்றது. 

இப்புகழ் மிக்க நெடுந்தீவின் அமைவிடமானது யாழ்ப்பாணத்திலிருந்து மற்றெல்லா தீவுகளிலிலும் கூடிய தொலைவில் அமைந்துள்ளது. அதாவது, யாழ்பாணத்திலிருந்து 45கிலோ மீற்றர் தொலைவில் தரைத் தொடர்பு கொண்ட புங்குடுதீவு குறிகட்டுவானிலிருந்து ஏறத்தாழ 10கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. 

இத் தீவானது சப்த தீவுகளிலே மிகத்தூரத்தில் அமைந்துள்ள மிகச் சிறப்பான ஒன்றாக விளங்குகின்றது. அதாவது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். 'சப்த' என்னும் சொல் சமஸ்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது. 

சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய ஆறுக்கும் மேற்பட்ட தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட இந்தத் தீவில் தற்போது 1500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4500பேர் வரையில் வசித்து வருகின்றார்கள். இந்த மக்களுக்கான போக்குவரத்து கடல் மார்க்க போக்குவதற்காகவே காணப்படுகின்றது.  

அதாவது சுமார் ஒரு மணிநேரம் படகில் கடல் பயணம் செய்து யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுக்கு செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. 

இந்த நிலையில் இந்த போக்குவரத்து வசதி என்பது ஒரு பாரிய பிரச்சினையாக தொடர்ந்த வண்ணமேயுள்ளது. காலத்துக்கு காலம் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் போது இந்த மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்படும். ஆனால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் காற்றில் பறந்து விடுவதே வழமையாகியுள்ளது. 

எனவே இந்த பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் தொடர்ந்தும் போக்குவரத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் இதே வேளை பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், பிரதேசசபை, பாடசாலைகள், பிரதான தபாலகம் எனப் பல்வேறுபட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிர்வாக கட்டமைப்புகளையும் கொண்டு இயங்குகின்ற ஒரு பிரதேசமாகவும் நெடுந்தீவு காணப்படுகின்றது.  

நெடுந்தீவில் பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள், பிரதேச செயலகத்தின் பணியாளர்கள், வைத்தியசாலை வைத்தியர்மார் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அனைவருமே இந்தப் படகு மூலம் பயணம் செய்தே அந்த மக்களுக்கான சேவையை வழங்க வேண்டிய நிலை கானப்படுகின்றது. 

நெடுந்தீவுக்கான போக்குவரத்துக்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை படகு என்பனவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான படகு மற்றும் தனியார் படகு எனப் பல்வேறுபட்ட படகுச் சேவைகளும் உள்ளன. 

இதில் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை என்பன இலவசமாக போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் குமுதினி படகு முழுமையாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. திருத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் மாவிலித்துறையில் இப் படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தற்போது பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவையில் வடதாரகை மட்டுமே நாளாந்தம் இரண்டு சேவைகளை நடத்தி வருகின்றது. அதாவது காலை 7மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவானுக்கும் பின்னர் காலை 8மணிக்கு குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கும் பிற்பகல் 03.மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் என நாளொன்றுக்கு இரண்டு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

வடதாரகை ஏதாவது பழுதடையுமாக இருந்தால் நெடுந்தீவுக்கான போக்குவரத்துகள் இருக்காது. ஆனால் தனியார் படகுகள் கடந்த காலங்களில் சேவைகளில் ஈடுபட்டு வந்த போதும் இப்போது குறிஞ்சாக் கேணியில் இடம்பெற்ற படகு விபத்துக்கு பின்னர் தனியார் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் நெடுந்தீவுக்கான போக்குவரத்துக்கு வடமாகாண சபையினால் நெடுந்தோகை என்ற படகு கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டிருந்த போதும் மிக குறுகிய காலத்தில் பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.  

வடமாகாண சபையினால் வழங்கப்பட்டு நெடுந்தீவு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த நெடுந்தாரகை பயணிகள் படகு ஒரு தடைவை குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு சென்று வருவதற்கு சுமார் 110லீற்றர் டீசல் தேவை என்பதும் மற்றைய படகுகளைவிட அதிக செலவு ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.  

உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் நெல்சிப் திட்டத்தின் கீழ் 150மில்லியன் ரூபா செலவில் இந்த நெடுந்தாரகை படகு கட்டப்பட்டது. 80பயணிகள் பயணிக்கக்கூடிய போதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இப்படகுக்கான இயந்திரமும் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டு படகினில் பொருத்தப்பட்டுள்ளதுடன் கடந்த 2017ம் ஆண்டு சேவைக்காக விடப்பட்டது. ஆனால் இப்போது பழுதடைந்த நிலையில் நீண்ட நாளாக இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

இதே போல வடமாகான சபையால் வழங்கப்பட்டு யாழ் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறையில் இருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவிற்கான சேவையில் ஈடுபட்டு வந்த எழுதாரகை பயணிகள் படகு சேவையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் தாங்கள்பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் வடமாகாண சபையின் வினைதிறனற்ற செயற்பாடுகளுக்கு இந்த படகு சேவைகள் சான்றாகின்றன என தீவக மக்கள் குறிப்பிடுகின்றனர். 

அதாவது யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவுகளுக்கான கடற்போக்குவரத்துக்கள் தினமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக அல்லது ஆபத்தான பயணங்களாகவே காணப்படுகின்றன.

ஜது பாஸ்கரன்

Comments