அரசுடன் இணைந்திருக்க முடியாவிடின் சு.கவினர் தனியாகச் செல்ல முடியும்! | தினகரன் வாரமஞ்சரி

அரசுடன் இணைந்திருக்க முடியாவிடின் சு.கவினர் தனியாகச் செல்ல முடியும்!

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல அனைவரும் ஒரு குழுவாகச் செயற்பட வேண்டும். சுதந்திரக் கட்சியினரால் அரசாங்கத்துக்குள் இருக்க முடியாவிட்டால் அவர்கள் தனியாகச் செல்ல முடியும் என விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ.சானக்க தெரிவித்தார். 'நாடு சரியான பாதையில் பயணித்து வருகிறது. இன்னும் ஓராண்டு காலத்துக்குள் நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பி விடும்' என்றும் அவர் குறிப்பிட்டார். எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கே: நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வலியுறுத்தியிருந்தார். இது பற்றி உங்கள் கருத்து யாது?

பதில்: உண்மையில், இது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகளும் இணைந்து செயற்பட வேண்டும். ஒரு அரசாங்கம் அமைந்தவுடன் அதற்கு முழு நாடும் ஆதரவளிக்க வேண்டும். அரசாங்கம் கொள்கைகளை வகுத்தே அமைச்சுக்களின் செயற்பாடுகளை கையாளுகிறது. இந்த முடிவைப் பொறுத்தே மக்களுக்கு நல்லது, கெட்டது நடக்கும். எனவே, அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினருடன் நாடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதன் ஊடாகவே நல்ல பலன்களை பெற்று வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும். இரண்டு ஆண்டுகளாக கொவிட்-19தொற்றுநோயையும், அதன் விளைவாக பொருளாதார நெருக்கடியையும் சந்தித்து வருகிறோம். நாம் இப்போது சரியான பாதையில் செல்கிறோம் என்று நினைக்கிறேன். குறைந்த பட்சம் இன்னும் ஒரு வருடத்திற்குள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். நாங்கள் தொடர்ந்து உள்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் ஓராண்டுக்குள் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்புமென நம்புகிறோம். ஒரு குழுவாகவே நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமே தவிர, தனியாகச் செல்ல முடியாது. ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவது அவசியம். அபிவிருத்தி தொடர்பானது என்றால் குறைந்தது ஆறு, ஏழு அமைச்சுக்கள் ஒன்றுகூடி இணைந்து செயற்பட வேண்டும். கூட்டுப் பொறுப்புடன் குழுவாகச் செயல்பட வேண்டும். அதைத்தான் ஜனாதிபதியும் அண்மையில் வலியுறுத்தினார்.

யாராக இருந்தாலும் இணைந்து பணியாற்ற விரும்பாதவர்கள், அரசாங்கத்தில் இருந்து விலகி, நாட்டின் முன்னேற்றத்திற்காக மற்றவர்களை ஒற்றுமையாகச் செயல்பட வைப்பதற்கு இதுவே நல்ல தருணம்.

கே: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறி புதிய அரசியல் கூட்டணியாக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக சுதந்திரக் கட்சி சூட்சுமமாகத் தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சி விலகினால் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு சவால் ஏற்படுமா?

பதில்: உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட்டது. எவ்வாறாயினும், எங்களின் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ இல்லாமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்று பலவற்றில் அதிகாரத்தை உறுதிப்படுத்த எங்களால் முடிந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தனித்து போட்டியிட்ட போதிலும் அவர்களால் 10,000வாக்குகளையோ அல்லது ஒரு பாராளுமன்ற உறுப்பினரையோ கூட பெற முடியவில்லை. அதுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான நிலைமை. எங்களுடன் இணைந்து போட்டியிட்டமையாலேயே அவர்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்களைப் பெற முடிந்தது. தனித்துப் போக வேண்டும் என்றால் அது அவர்களைப் பொறுத்தது. அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்முடன் இணைந்து போட்டியிட்டாலும் இல்லாவிட்டாலும் அது எமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கே: சுதந்திரக் கட்சியின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள் கட்சித் தலைமைத்துவத்திடம் வலியுறுத்தியிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி உங்கள் பார்வை என்ன?

பதில்: நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, எமது முன்னேற்றம் ஒரு குழு முயற்சியாக இருக்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக இருந்தால் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அப்படியல்லாமல் எதிர்க்கட்சி வேடம் போடுகின்றார்களாயின் ஆட்சியிலிருப்பதை விட எதிர்க்கட்சியில் இருப்பதே சிறந்தது. நல்லாட்சி எனக் கூறிக் கொண்ட கடந்த அரசாங்கத்துக்கும் இதுவே நடந்தது.

அவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் மற்றும் ஏனைய சலுகைகள் கிடைத்துள்ளன. இருந்தபோதும் அரசாங்கத்தைத் தொடர்ந்தும் விமர்சிக்கின்றனர். அரசாங்கம் செய்யும் அனைத்து நல்ல செயல்களுக்கும் அவர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர், ஏதாவது கெட்டது நடந்தால் உடனடியாக எம்மீது விமர்சனத்தை முன்வைக்கின்றனர். அவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருந்தால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு சில அமைச்சுப் பதவிகளை வழங்கி, இணைந்து செயற்படுகின்றோம். ஆனால் அவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என்றால், அரசாங்கத்தில் இருக்கும் போது விமர்சிப்பதை விட அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

கே: பொதுஜன பெரமுனவின் அதிருப்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பதவியில் இருந்து நீக்குவது ஊடாக மாத்திரம் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: சில அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குழுப்பணி என்றால் என்ன என்று தெரியவில்லையா? அதேசமயம் பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால், அரசாங்கத்தின் பாராளுமன்றக் குழுக் கூட்டம், அமைச்சரவைக் கூட்டம் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சந்திப்புகள் உள்ளன. இங்கு எது பற்றியும் கதைக்காமல் ஊடகங்கள் ஒலிவாங்கியைக் கொடுத்ததும் சிலரை மகிழ்விப்பதற்கு அரசை விமர்சிக்கின்றனர்.

குழுக் கூட்டங்களில் அந்தப் பிரச்சினைகளை எழுப்பி, அனைவரும் கேட்கும் வகையில் செய்ய வேண்டிய மாற்றங்களைச் சுட்டிக் காட்டியிருக்கலாம். அரசாங்கக் கூட்டங்களில் சில உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? வெளியே வந்து வேறு ஏதாவது பேசுவதைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் அரசாங்கம் தொடர்பில் பல விமர்சனங்கள் வந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நடவடிக்கை எடுக்காததால் எங்களை விமர்சிக்கின்றனர்.

கே: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தாதது அரசாங்கத்தின் மீதான முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். அரசாங்கத்தின் பங்குதாரராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதால் அரசாங்கத்தின் மீது இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னரும், முன்னாள் நல்லாட்சி அரசாங்கம் எட்டு மாதங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களும் அந்த அரசில் இருந்தனர். விசாரணையின் சில தகவல்கள் காணாமல் போயுள்ளன. தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தாடர்பான விசாரணைகள் துல்லியமான முறையில் நடத்தப்படுகின்றன. சில நீதிமன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன, மேலும் சில குற்றவாளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 50சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விசாரணைகள் சுமுகமாக நடந்து வருகின்றன. வெகுவிரைவில் முடிவுகளை மக்கள் பார்ப்பார்கள். மிகவும் சுதந்திரமான விசாரணைகள் நடந்து வருவதால் உண்மையில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் அரசாங்கத்தில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்கள் முடிவுகளை வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

அர்ஜூன்

Comments