கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

மாதமொன்றின் நான்கு கிழமைகளுள் ஒன்றிலாவது ‘ஆப்கன் கசப்பை’ நான் வழங்கியே ஆகவேண்டிய கட்டாயத்தை அந்த முஸ்லிம் நாடாகி  ஆப்கானிஸ்தான் அளித்தே தீருகிறது.

கசப்புகளை வழங்காமல் இருக்க என் மூத்த பேனையினால் இயலவில்லை. மற்றபடி ‘வேறு சரக்கு எதுவும் கையிருப்பில் இல்லையோ என எண்ணி விடாதீர்கள்.

இப்பொழுது அங்கே திருமண வைபவங்களில் இசை நிகழ்ச்சிகள் எதையும் நேரிடையாக நடத்தி மகிழ முடியாது. தடை!

கடந்த வாரம் ஒரு சம்பவம் பாத்திமா மாகாணத்தில் ஸலாம்’ ஆறாம் என்ற இடத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி ஜோராக நடந்து கொண்டிருந்தது. காரணம் இசை நிகழ்ச்சி!

ஆப்கான் ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் தலிபான்கள் திடீரென உட்புகுந்து இசைக்கலைஞர் ஒருவர் இசைத்துக்கொண்டிருந்த விலை மதிப்பு மிக்க இசைக்கருவியைப் பறித்து நெருப்பு வைத்துக் கொளுத்திக் கும்மாள மிட்டனர்!

கலைஞன் கண்ணீரால் குளித்தான். அவர்களோ இன்னுமின்னும் களிப்பு கொண்டு கருவி சாம்பலாகும் வரையில் எரித்துத் தீர்த்தனர்.

சமூக வலைத்தளங்களில் இந்தக் காட்சி உலக அளவில் பரவிப் போனது. கல்யாண வீட்டிலிருந்த ஓர் ஊடகவியலாளரின் கைங்கரியம் அது! நமது ஆசிரியபீடத்து நண்பர்களும் இங்கே ஒரு படம் வழங்கியுள்ளனர். பாருங்கள்.

இசைக்கும் நாடகத்திற்கும் விரோதிகளாகி விட்டவர்களின் அடுத்த கட்ட அராஜகம் என்னவாக அமையுமோ...?

கசப்பு-2

நம் காலத்து மாமனிதருள் ஒருவர், ‘அஷ்றஃப்” ஆகிய ஆளுமைத் தலைவர் உருவாக்கிய அந்தத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இப்போது பலரின் பேசுபொருள்.

அதுவும் வலைத்தள வம்பர்கள், கொம்பர்கள் வாய்மெல்ல ஒரு கசப்புச் செய்தி!

ஒரு சிரேஷ்ட விரிவுரையாளரின் ‘சைத்தானியம்’ ஒரு முதலாம் ஆண்டு கொழும்பு மாணவி மீது ஏறக்குறைய 5000பேர் உயர்கல்வி கற்கும் இடத்தில் 80விழுக்காடு மாணவியரே!

இந்த நிலையில் சுத்தமான பாலில் விழக்கூடாத அசுத்தம் ஒரு துளி அளவு விழுந்து பலருக்கும் தர்மசங்கடம், தலைகுனிவு,

“பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரால் குற்றச்சாட்டு ஆராயப்படுகிறது. இரண்டு கிழமைகளுக்குள் விசாரணை அறிக்கைக் கிடைக்கும்” என்கிறார் துணைவேந்தர்.

இதற்கிடையில் மாணவி, கற்றுக் கொண்டிருந்ததைக் கைகழுவிவிட்டு கொழும்புக்கே திரும்பி விட்டாராம். உள நலப்பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறாராம்.

நங்கை நல்லாள் நலம்பெற சிருஷ்டி கர்த்தாவிடம் கையேந்து. அதே சமயம் அவருக்கு நியாயம் கிடைக்கவும் இந்த முதிய பேனை முனைந்து நிற்கிறது.

கொழும்புப் பிள்ளைகள் உயர் கல்வியில் பின்தங்கியுள்ளவர்கள். அந்த மாணவி அதனைப் பொய்யாக்க மீண்டும் தென்கிழக்குப் புறப்பட வேண்டும்.

செய்வாரா....?

இனிப்பு-1

தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கசப்பு ஒன்றைப் பகிர்ந்த அதே சமயம் ஓர் இனிப்பை வழங்கவும் வாய்ப்பு!

அந்த இனிப்பு நிகழ்வுள்ளது கடந்த செவ்வாய்க்கிழமை 18ல் கொழும்பு, பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில்.

நம் காலத்தில் இஸ்லாமிய இலக்கியம் பாரம்பரியத்தை தமிழ் இலக்கியப் பண்பாட்டுக் கோலங்களுடன் இணைத்து இமாலய சாதனை புரிந்த ஒரு தென்னிலங்கை (பாணந்துறை) மூதறிஞர் பேராசிரியர் கலாநிதி அல்லாமா ம.மு. உவைஸ்.

அன்னவரது நூற்றாண்டுப்பூர்த்தி நினைவுகளை நெஞ்சின் அலைகளாக ஒலிக்க வைக்க அந்தத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒரு குழுவினர், துணை வேந்தர் பேராசிரியர், கலாநிதி அபூபக்கர் றமீஸ் தலைமையில் தலைநகருக்கு வந்தனர்.

அவர்களுக்கு அல்லாமா உவைஸ் குடும்ப அங்கத்தவர்களும் வரவேற்பு வழங்கி அனைத்து உதவி ஒத்தாசைகளும் புரிந்தனர்.

பிறகென்ன, கொழும்பு -07, பௌத்தாலோக மாவத்தை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அழைப்பினரை வரவேற்று ஒரு நினைவேந்தல் நிகழ்வையும், ஆய்வுக் கருத்தரங்கத்தையும் தென்கிழக்கின் உயர்கல்வித்துறையினர் நிகழ்த்திக் காட்டிவிட்டனர்.பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதியாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சமூகமளித்துச் சிறப்பிக்க, அவரால் அல்லாமா உவைஸ் நினைவு முத்திரை – ரூபாய் 25பெறுமதி வெளியீடும் வாழ்க்கை வரலாற்றுடன் கூடிய நினைவு மலரும் மணம் பரப்பின.

அம்முத்திரையின் ஒரு விஷேடம், அது BAR CODE கொண்டது. ஸ்கேன் செய்தால் அல்லாமா கலாநிதியின் அத்தனை இலக்கியப் பணிகளையும் அறியாதோர் அறிவர்!

இலங்கையில் ஒரு முத்திரை இப்படி ‘ஜாலவித்தை’ புரிவது இதுவு முதல் தடவை எனலாம்.

முக்கிய மற்றுமொரு நிகழ்வு “கருத்தரங்கம்” வர்ணிக்க வார்த்தைகள் போதாது. இந்தப்பத்தி எழுத்தில் இடமும் போதாது.எவ்வாறாயினும் பங்கு பற்றியவர்களால் காலமெல்லாம் பேசக்கூடிய ஒன்று. விவரத்தை அறிய ஏற்பாட்டாளர்களின் நிகழ்ச்சி நிரல் இங்கே அச்சொட்டாக....

கருத்தரங்கம்

தலைமை

பேராசிரியர் எஸ். தில்லைநாதன் (வாழ்நாள் பேராசிரியர்

பேராதனைப் பல்கலைக்கழகம்)

அறிமுக உரை:

பேராசிரியர் றமீஸ் அப்துல்லா (மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)

கருத்துரைகள்

‘தமிழ் இலக்கிய வரலாற்றில் ம.மு. உவைஸின் பணிகள்’

பேராசிரியர் அ. சண்முகதாஸ் (வாழ்நாள் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

‘இஸ்லாமியத் தமிழ் இலக்கிய

வரலாற்று எழுதுகையில்

ம.மு. உவைஸ்:

ஒரு விமர்சனப் பார்வை’

பேராசிரியர் செ. யோகராசா

(முன்னாள் தலைவர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்

‘இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் உவைஸின் படைப்புக்கள்’

பேராசிரியர் வ. மகேஸ்வரன் (முன்னாள் தலைவர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)

என்ன, பார்த்து விட்டீங்களா?

இந்நிரலில் பார்க்கத் தவறக்கூடாத ஒன்று, தமிழ் சமூகத்தின் ஒன்று, மிகப் பிரபல அறிவுஜீவிகள் நால்வரது நாமங்கள்! அத்தனை பேருமே பேராசிரியப் பெருந்தகைகள், அதி உயர் பதவிகளை அலங்கரித்தவர்கள்.

ஒருவர் (பேராசிரியர் தில்லைநாதன்) தலைமை. ஏனைய மூவரும் (பேராசிரியர்கள் சண்முகதாஸ், யோகராசா மகேஸ்வரன் கருத்துரைகள்.

தவிர்க்க இயலா ஒரு சூழ்நிலையில் மகேஸ்வரனின் பங்களிப்பு இடம்பெறாது போனாலும் மூன்று அறிவு ஜீவிகளும் அல்லாமா ஆளுமையை தலைமை உரையிலும், கருத்துரைகளிலும் முத்து முத்தாகப் பரப்பினார்கள்!

முஸ்லிம் சமூக அறிவுஜீவிகளின் பங்களிப்பைத் தவிர்த்து விட்டு, தமிழ் பேராசிரியப் பெருந்தகைகளின் பணிகளைப் பெற்று காரியமாற்றியது. காலத்தைக் கடந்து நிற்கும், பேசும்.

இன்றைய காலச் சூழலில் இதனையே எதிர்பார்த்து நிற்கிறது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகம்.

போற்றுதும்... போற்றுதும்...

இனிப்பு-2

கடந்தாண்டு இறுதிப் பொழுதுகளில் ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பற்றி நிறைய நிறையப் பேசப்பட்டது.

அது ‘ஜெய்பீம்’

கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு, மூன்று தினங்களிலும் தொலைக்காட்சிகளில் மூன்று தடவை மூத்த பேனை பார்த்துப் பார்த்துப் பரிதவித்துப் போனது.

ஏன் பரிதவிப்பு? அது தமிழகக் கடலூர்ப்பகுதியில் 30ஆண்டுகளுக்கு முன்நடந்த உண்மைக்கதை.

ஒடுக்கப்பட்ட இனத்தார் – பழங்குடிகள் சாதி குறைந்தோர் என்றெல்லாம். நெற்றிய பொட்டில் ஒட்டப்பட்ட ஓர் ‘இருளர்’ சமூகத்தின் நடந்த  துயரம். 2022லும் இப்படியொரு மனிதக் கூட்டம் தமிழகக் காடு மேடுகளில் அலைந்து திரிகிறார்களா என்ற ஆதங்கம் யாருக்கும் வரும்.

இந்தக் கூட்டத்து ராஜாக்கண்ணு என்ற வாலிபன் பாம்பும் எலியும் பிடித்து, கட்டுமானங்களுக்கு செங்கற்கள் தூக்கிச் சுமக்கும் தொழிலாளி,ஒரு பொய்க்குற்றச்சாட்டில் பொலிஸ் சித்ரவதைக்குள்ளாகி பிள்ளைத் தாச்சி பெஞ்சாதி செங்கேணியைப் பரிதவிக்க விட்டு பரலோகம் போகிறான் என்ற கற்பனை கலக்காத கதை.

எதிர்காலத்தில் இப்படம் உலகளாவிய ரீதியில் பேசப்படும். கௌரவங்களைப் பெறும் தமிழ்ப்படத்துறையை உச்சிக்குக்கொண்டு போகும் என என் பேனையின் உள் மனம் பேச பலித்துப்போனது.

திரைப்பட வழியில் ஓர் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு சமூகநீதியை முன்னிறுத்தி, மனித சமூகங்களை மேம்படுத்துவதில் உரிய பங்களிப்புச் செய்த ‘ஜெய்பீம்’ தயாரிப்பாளர்கள் சூர்யா – ஜோதிக தம்பதிக்கு அடுத்த மாதம் 19ம் திகதி அமெரிக்காவில் வழங்கப்படுகிறது.

*அமெரிக்க நாடாளுமன்றத்தின் “உலகளாவிய சமுதாய மேம்பாட்டு ஆஸ்கார் விருது” அவர்களுக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெனிகே டேவிஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த நல்ல செய்திக்கு ஆதாரம், தமிழகத் ‘தினத்தந்தி’ நாளேடு – 20/01/2022வியாழக்கிழமை நன்றி!

திரைப்பட ரசிகர்கள் அனைவரும் கைகோர்த்து முக்கியமாக ரஜினி, விஜய், அஜீத், ரசிகர்களும் ‘லட்டு இனிப்பு’ப் பகிர்ந்து கொள்ளலாமே...!

Comments