'பலதும் பத்தும்'' | தினகரன் வாரமஞ்சரி

'பலதும் பத்தும்''

நான் கலைநேசன் வீடுநோக்கிப் போனேன். போகும்போதே சிந்தனைக் காற்று சுழன்று கொண்டிருந்தது. அவரைப்பற்றி.... அவர் ஒரு சிறுகதை எழுத்தாளர். தேசிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்த வண்ணமுள்ளன. பரிசுகள் விருதுகள் பெற்று பிரபலமாகி வருகிறார்! ஆனாலும் எவருடனும் கனிவாய் பணிவாய் பேசிப் பழகுவார். அவருடைய ஆக்கங்களை நான் வாசித்து இலக்கிய காற்றை சுவாசித்திருக்கிறேன். நமது நாட்டில் தரமான படைப்புக்களை படைக்கும் வெகுசிலரில் அவரும் ஒருவர் என்றுதான் சொல்ல வேண்டும்! அவருடைய எழுத்துக்களில் நான் கண்ட விசேடம் என்னவென்றால், கட்சி இயக்கம் கொள்கை கோட்பாடு பக்கச்சார்பு என்றில்லாமல் எழுதிவருபவர். சமூகத்தில் மானிட வாழ்வில் காணப்படும் குறைகளை சீர்கேடுகளை எடுத்துக்காட்டி, அவற்றிலிருந்து மீழ்வதற்கான ஆலோசனைகளை சொல்லியிருப்பார். கருத்தில்லாமல் ஒரு கதையும் இருக்காது வெறும் கருத்துப் பிரசாரம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் இவரில் உண்டு.... இவருடைய படைப்புக்களைப் படிக்கும்போது எனக்கு ஏற்படும் ஆச்சரியம் என்னவென்றால், பலரின் பலவிதமான வாழ்க்கையின் அந்தரங்கமான சமாசாரங்களை பிரச்சினைகளை எல்லாம் நுணுக்கமாக குறிப்பிட்டு சுவாரஸ்யமாக எழுதிவிடுகிறார்! எப்படி இப்படியெல்லாம் இவரால் எழுதிவிட இயலுகிறது என்று எனக்கும் கனநாளாகவே வியப்பாகவே இருந்தது!

அவர் இல்லம் ஏகியதும் அவர் வெளிக்கிட்டு எனக்காக காத்திருந்தார். நாமிருவரும் துவிச்சக்கரத்தை எடுத்து வெளிக்கிடுகையில் அவர் மனைவி முன்னே வந்து சொன்னா "நீங்கதான் கேடு கெட்டுப் போறீங்கள் என்றால், அந்த மரியாதையான மாஸ்ரரையுமா கெடுக்கப்போறீங்க!" அவர் பதிலாக புன்னகை சிந்திக்கொண்டே என் முன்னால் போனார். நான் பின் தொடர்ந்தேன். சற்று நேரத்தில் சற்று வயதானவர் கலைநேசனை நோக்கி வந்துகொண்டிருந்தார். தலைமயிரும் நன்றாக வளர்ந்திருந்தது. முகத்திலும் வெள்ளையும் கறுப்புமாக மயிர் வளர்ந்திருந்தது. பேருக்கு ஒரு சட்டையும் போட்டு சாறத்தையும் மடித்துக் கட்டியிருந்தார். அழுக்காகியிருந்தன அவை, அவரும்தான் தோய்ந்து தோய்த்துக் கழுவி எத்தனையோ நாளாயிருக்கும் ! சுய கௌரவத்தைப் பற்றி துளியும் அக்கறைப்படாத பிறவிகள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அசடராய் கசடராய்த்தான் இருப்பார்கள் ! ஆனால் இவர் ஒரு அப்பாவி என்று பார்த்தாலே புரிந்துவிட்டது.  

அவர் கலைநேசன் பக்கமாக வந்தமர்ந்தார். கலைநேசனும் அவரை வரவேற்றார். இருவருக்கும் ஏற்கனவே நல்ல பழக்கம் போலும்......" என்னப்பா இப்பதானா வாறாய்?" " ஓமையா, இண்டைக்கு காட்டுக்குப் போய் விறகு கொத்தி பொலிசுக்காரருக்குப் பயந்து கள்ளவழியால் கொண்டுவந்து, ஊருக்குள்ள சைக்கில்ல உழக்கிக்கொண்டு திரிஞ்சி அலைஞ்சி உலைஞ்சி இப்பதான் ஒருமாதிரி வித்து முடிஞ்சிது, இங்கினைக்க வந்து ஒண்டப் பாதிய அடிச்சுப்போட்டு போவம் எண்டுவந்த நான் ஐயா. இதில் கொஞ்சமெண்டாலும் அடிச்சாத்தான் இண்டு முழுக்க சீவியத்துக்காக நான் பட்டபாடுகள் கஷ்டம் கரைச்சல்கள் எல்லாம் பறந்து போகும்'' என்று சொல்லிக்கொண்டே மதுப்புட்டியை ஊற்றிக் குடித்தார்.

''நீர் வழக்கம்போல காட்டுக்குப் போய் விறகுவெட்டி கொண்டுவந்து வீடுகளுக்கும் கடைகளுக்கும் குடுத்து சீவனம் நடத்துற நீர்தானே, இண்டைக்கு அப்பிடி என்ன புதுப் பிரச்சினை?" ''புதுப்பிரச்சினை இல்லை ஐயா இடைக்கிடை இப்பிடி நடக்கிறதுதான் , எங்களுக்கும் பழகிப்போச்சுது! நாங்கள் ஏலுமான மட்டும் பட்ட மரங்களத்தான் விறகாக்குற நாங்கள். பட்டமரங்களும் நெடுகக் கிடைக்குதே? பச்சை மரங்களையும் இடைக்கிடை பதம் பார்க்கிறதுதான்!

ஒளிச்சு மறைச்சுக் கொண்டுவந்தாலும் இந்த வனபரிபாலன அதிகாரிகளாம் பொலிசுப் புள்ளைகளாம் எண்டு நிண்டு மறிச்சு சோதனை போட்டு ஆக்கினைப் படுத்துவாங்கள் ! இனி அவங்கள்ர கைக்கு கொஞ்சம் வைச்சாத்தான் தப்பலாம். இல்லாட்டி கோடு வழக்கெண்டு திரிய வேணும் ! இவையளுக்கும் நெடுகக் குடுக்கேலுமோ? அதுதான் கள்ள வழிகளால் உலைஞ்சு போட்டு வாறன்.... நான் பின்னே திரும்பிப் பார்த்தேன். சைக்கிள் விடும் இடத்தில் அகலக்கரியரில் நாலு பக்கமும் தடி நட்டபடி நின்றது. கோடரியும் தெரிந்தது...... அவர் மேலும் பேசினார்: ''இப்ப ஐயா இந்த கேஸ் அடுப்பு வந்ததால் அனேக வீடுகளில் விறகடுப்பு பாவிக்கிறது நல்லா குறைஞ்சு போச்சுது! எங்க பிழைப்பிலையும் மண் விழுந்து போச்சுது! தெருவெல்லாம் சுத்த வேண்டிக் கிடக்குது! விறகு கொள்ளியில் சமைக்கிற ருசி வருமா ஐயா? இப்ப கேசுக்கு விலையக் கூட்டிக் கொண்டே வாறான். அதாலை இப்ப கொஞ்சம் எங்கள நாடுகினம் !".... அவன் இன்னும் தன் தொழில் பிரச்சினைகளைப் பற்றி குடும்ப சிக்கல்களைப் பற்றியெல்லாம் பேசினான்.

பேசிப்பேசியே ஒரு போத்தலைக் காலியாக்கிவிட்டான்.

வாறன் ஐயா, ஆரும் சேர்ந்தா இன்னுமொரு அரை எடுத்துக்கொண்டு வாறான். நீ என்னப்பா பாடுபட்டு உழைச்ச காசை எல்லாம் குடிச்சுப்போட்டு வீட்டுக்கு என்னத்தக் குடுக்கப்போறாய்? இல்லை ஐயா, நான் ஒன்றரைக்கு மேல் குடிக்கிற இல்ல. மிஞ்சின காச அப்பிடியே என்ர பெண்டாட்டியிட்ட குடுத்துப் போடுவன் என்று சொல்லிக் கொண்டே போனார்.

அவர் போனதும் இன்னொருவர் அந்த ஆசனத்தில் வந்தமர்ந்தார். இவர் சற்று வாட்டசாட்டமாய்த்தான் இருந்தார். நடுத்தர வயதுக்கும் குறைவாகத்தானிருக்கும். முகச்சவரம் செய்து தலையையும் வடிவாக விட்டிருந்தார்.

நீளக்கால் சட்டை போட்டு கம்பீரமாயே வீற்றிருந்தார். ஆனால் முகத்தில் வாட்டம் சோர்வு இருப்பது போலிருந்தது. அவரும் நம்ம ஐயாவுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவர் போலுமிருந்தார். அவர் இவரை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார். தன் மனப்பாரங்களை இறக்கி வைக்க சரியான

ஆள் கிடைத்துவிட்ட திருப்தியில் இருப்பது தெரிந்தது. கலை நேசன் எல்லாக் கதைகளையும் மனமொப்பி காது கொடுத்து கேட்பதால் போலும் அவர்முன் விரும்பிவந்து தங்கள் பாரத்தை இறக்கிவைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் போலுள்ளது.

'' என்னப்பா அரவிந்தா கனநாளா உன்னை இந்தப்பக்கம் காண இல்ல. சிலநேரம் கண்டாலும் முகத்த மற்றவளமாகத் திருப்பிக் கொண்டு போய்விடுவாய்! இண்டைக்கு என்னத்தேடி வந்திருக்கிறாய் முகமும் வாடிச் சோர்ந்திருக்கு முன்னர்மாதிரி பூரிப்பா இல்ல: கலகலப்பாயில்ல! என்ன சங்கதி? '' அதையா என் குடும்பத்தில் பெரிய பிரச்சினை ஒண்டு நடந்துபோச்சுது! அந்த மனக்குழப்பத்திலதான் ஆரோடையும் கதைக்கப் பிடிக்காம மூக்கு முட்டக் குடிச்சுப்போட்டு விழுந்துகிடப்பன்! என்று சொல்லிவிட்டு அங்காலையும் இங்காலையும் பார்த்தார். நீர் ஒண்டுக்கும் யோசிக்காதையும், இவர் நம்ம ஆள்தான் என்னப் போல ஒருவர்தான் நீர் தயங்காம உம்மிட கதையச் சொல்லும்.

''ஐயா, நான் ஒரு பண்ணையில வேல செய்யுற நான் எண்டு உங்களுக்குத் தெரியும்தானே, சம்பளமும் பரவாயில்ல. நல்ல ''ரெஸ்பெக்' ராத்தான் குடும்பம் நடத்தி வந்தன். லீவு நாளையிலதான் பாருக்க வந்து குடிச்சு சல்லாபிச்சுப் போட்டு போவன். உங்களுக்குத் தெரியும்தானே? ஓமோம் நல்லாத் தெரியும். இப்பகொஞ்ச நாளாத்தான் உம்மில் பெரிய மாற்றம் தெரியுது. என்ன நடந்தது என்று சொல்லும்.

அவன் சற்று நேரம் தலையைக் கவிழ்ந்து கொண்டான். திடீரென்று எழுந்து பேசத்தொடங்கினான். ....." எனக்கு சிலநேரம் நைற்" வேலையும் செய்ய வேண்டிவரும். குடும்ப நன்மைக்காக கண்விழிச்சு பாடுபட்டு உழைச்சுவாறன்!...... கொஞ்சநாளா அரசல் புரசலா என்ர காதுக்கு ஒரு கதை எட்டிச்சிது என்ர மனைவியப் பற்றித்தான்!" என்று சொல்லிவிட்டு தலையை மேசையில் வைத்து விம்மினான் .... இதையெல்லாம்

அக்கம் பக்கமாக இருப்போர் கவனிக்கவிலலை. அவர்கள் தங்கள் தங்கள் பிராக்கு

கலைநேசன் எழுந்து அவன் தலையை தடவி ஆசுவாசப்படுத்தினார். அவன் தலை நிமிர்ந்து பேசத் தொடங்கினான். எனக்கு இதக் கேள்விப்பட்டதில் இருந்து ஊண் உறக்கம் இல்ல. இது உண்மைதானா எண்டு அறியவேணும் எண்டு, இரவு வேலைக்குப் போவதாக பாசாங்கு செய்துவிட்டு நள்ளிரவு நெருங்கும் நேரம் முன்வளவில் பூமரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன்........

நான் எதிர்பார்த்தவர் வந்தார் முன்வாயிலைத் திறந்துகொண்டு, அவர் வருகைக்காக கதவு பூட்டாமலே விடப்பட்டிருக்கிறது! அவருக்காக விளக்குகளெல்லாம் அணைக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது! என்றாலும் பக்கத்து தெரு விளக்கு எரிந்துகொண்டிருந்ததால் எனக்கு ஆளை அடையாளம் காட்டிவிட்டது! அவன் எங்கள் தெருவின் பக்கமாக பலசரக்கு கடை வைத்திருக்கிறவன்... அவனைப் பற்றி என் பெண்டாட்டி வர்ணிப்பதும் உண்டு. காசில்லாவிட்டாலும் கடனாக எண்டாலும் கேட்ட சாமான் சக்கட்டுக்கள் எல்லாம் தந்து போடுவார்! கடன் காச குடுக்கப் பிந்தினாலும் தவணை சொன்னாலும் இல்ல குறைச்சித்தான் குடுத்தாலும் ஏச பேச மாட்டார். நல்ல மனிசன். என்னக் கண்டாக் காணும், நல்லா சிரிச்சி அன்பாதரவா கதைக்கும் மனுசன் ! என்பாள். இப்போது புரிகிறதுதானே இந்த நாடகமெல்லாம் யாருக்காக எதுக்காக என்று!.... அவன் வராந்தாக் கதவு அறைக்கதவுகளை எல்லாம் இலேசாக தள்ளித் திறந்துகொண்டே போய்க் கொண்டிருந்தான் அவ்வளவு எதிர்பார்ப்பு வரவேற்பு!... நடுஇரவில் பிள்ளைகளுக்குத் தெரியாமல் நான் பதுங்கிப் பதுங்கிப் போனபோது எத்தனை இரவுகள் என்னை விரட்டியிருக்கிறாள்! நான் அவளுக்கு பிள்ளைகளுக்கு என்ன குறைய விட்டன்? ஏன் எனக்கு இப்பிடித் துரோகம் செய்தாள்? அவன் மேசையில் தலைகவிழ்ந்து குலுங்கி குலுங்கி அழுதான் சத்தம் வெளிவராமல்!

கலைநேசன் அவன் தலை தடவி ஆசுவாசப்படுத்தினார். ''இப்போது எப்படி இருக்கிறது உமது குடும்ப நிலைமை? நீர் வீட்டுக்குப் போவதில்லையா? பிள்ளைகளுக்காக எண்டாலும் போகத்தானே வேணும் ! ''நான் இந்தக் காட்சியக் கண்டதிலிருந்து வீட்டுக்கே போவதில்லை! பண்ணையில் ஒரு மூலையில் இரவைக் கழித்துவிடுவேன். பகலில் பண்ணை வேலையோடு பொழுதுபோகும். மிஞ்சன பொழுது இங்கே போன்ற இடங்களில்த்தான் கழியும்! இந்த இடம்தான் ஆரும் தராத ஆறுதலை ஏன் கடவுளே தராத மன ஆறுதலை தந்துவருகிறது! இது இல்லை என்றால் நான் செத்துத் தொலைந்திருப்பேன்! அவன் உறுதியான குரலில் கத்தினான் !

கலைநேசனும் சிறிதுநேரம் அதிர்ச்சிக்குள்ளாகி என்ன பேசுவது என்று தெரியாமல் ஆடாமல் அசையாமல் இருந்தான். "சரி, இது ஈடுசெய்ய முடியாத பரிகாரம் செய்ய முடியாத பெரிய துரோகம்தான்! ஆனால் உம்முடைய பிள்ளைகளின் நிலைமை என்ன? அவர்களுக்காகவாவது நீர் வீட்டுக்குப் போகத்தானே வேணும்? '' இனியும் என்னால் புருசன் மாதிரி அக்ற் பண்ணிக் கொண்டிருக்க ஏலாதையா! நான் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளை சந்திப்பேன் அவர்கள் வேண்டுவதை கொடுத்து வருகிறேன். அவர்களுக்காக மட்டும் இறைவனிடம் மன்றாடுவேன் " ஆண்டவா, என்பிள்ளைகளுக்கு நல்வழிகாட்டு இந்த நாசக்காரியால் நாசமாகிப்போகாமல் காப்பாற்று!''

சற்று நேர மௌனத்தின் பின் அவனே தொடர்ந்து சொன்னான்: 'இன்னும் கொஞ்சநாளில் எனக்கு கோட்டில் இருந்து அழைப்பாணை வரும். மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் படியளிக்கச் சொல்லி தீர்ப்பு வரும் ! அவள் கள்ளப் புருசன் இவற்றை நிறைவேற்றிக் கொடுப்பதில் கைதேர்ந்தவன்!..... நீதிபதிக்குத் தெரியுமா யார் குற்றவாளி என்று? அவர் சட்டப்படி எனக்கு தண்டனை கொடுப்பார்! அவன் மீண்டும் தலை கவிழ்ந்தான் ! அவனுக்கு என்ன ஆறுதலைச் சொல்வது என்று புரியாமல் கலைநேசனும் மௌனியானார்....... அவன் எழுந்து நின்று சொன்னான்:

"நான் பண்ணையில் ஆடு மாடு கோழியோட பழகி கனவருசமா சீவிச்சு வாறன். அதுக்கள் எல்லாம் கடவுள் படைச்ச மாதிரியே அப்பிடியே வாழ்ந்து வருகுதுகள். துரோக புத்தியே அதுகளுக்குத் தெரியாது. ஆனா பகுத்தறிவு மனிதனுக்குத்தான் துரோக புத்திதான் எப்போதும் முன்னிலை வகிக்கிறது! என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய்விட்டான்.

பக்கத்து வட்டங்களில் இருந்தும் பேச்சுக்குரல்கள் கேட்டன. "நானிப்ப வீட்ட போனனெண்டால் என்ர பொஞ்சாதி வாங்கோ இருங்கோ எண்டு பயந்து நடுங்கிக் கொண்டு வரவேற்பாள் ஓ! சாப்பாடு தந்து, பாயும் தலகாணியும் போட்டு என்ன படுக்கவைச்சி பீடியையும் நெருப்பெட்டியையும் தருவாள் ஓ!..... இதுகள்ள ஒரு சின்ன பிரச்சினை வந்தாலும் பானை சட்டிகள் எல்லாம் உடைஞ்சி சுக்கு நூறாகும் எண்டாலும் இந்தப் பொம்பிளைகள் பாராட்டத்தான் அப்பா வேணும்! எங்களைப் போல குடிக்காம புகைக்காம! புருசன் புள்ளைகளுக்காக ஆனமான சாப்பாடும் இல்லாமை தங்கள் தற்தியாகம் செய்து வாழுதுகள் அப்பா!!!1

எங்கள் வட்டத்திலும் நாங்கள் ஒருவரின் துயரக் கதையில் கவனமெடுத்திருந்த போதும் பலவிதமான சர்சையான விளையாட்டுத்தனமான சிரிப்புக்கிடமான கெட்டிக்காரத்தனமான பேச்சு வாக்குகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. அப்போது கவனமெடுக்கவில்லை, இப்போது காது கொடுத்தேன்...... ஒன்றை முக்கியமாக குறிப்பிடத்தான் வேண்டும்: இங்குவந்து போதை சற்று ஏறியதில் இருந்து இதுவரை கண்டறியாத ஒரு புது உலகில் மிதப்பது போலவும் எல்லாவற்றிலும் இரசனை உள்ளது போலவும் யாவற்றிலும் ஈடுபாடு காட்ட வேண்டும் போலவும் இருந்தது!

அவர்கள் நொடி (விடுகதை) சொல்லி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் இப்படிக் கேட்டார்: 'ஓடும் பாயும் நடக்காது. அது என்ன? ஒருவராலும் பதில் சொல்ல இயலவில்லை . ஒன்றிரெண்டு குரல்கள் பதிலாய் ஒலித்தன. ஏற்கப்படவில்லை . மௌனம் நிலவியது..... எனக்கு ஒரு ஞானம் வந்தது போலிருந்தது. 'ஆறு' என்றேன் ஆனால் பிழை என்றார். அது பிழையாக எனக்குத் தோன்றவில்லை . ஆறு ஓடும் என்பார், பாயும் என்பார் நடப்பதாக சொல்வதில்லையே! சரி நீயே பதிலைச் சொல்லப்பா என்றார்கள். ''கொஞ்சம் தாரும் சொல்லுறன் என்றார். ஊற்றிக் கொடுத்தார்கள். சொன்னார். ''கூரைக்குப் போடுற ஓடும், விரிச்சுப்படுக்கிற பாயும் நடக்காது."... இன்னொருவர் அடுத்த விடுகதை சொன்னார்: ''பாண்டவர் பிறந்தது எப்படி, பசுவில் பால் கறப்பது எப்படி?" இரண்டுக்கும் ஒரு சொல்த்தான் பதில் என்றும் சொன்னார். எல்லோரும் கண்களை அகலவிரித்து தலையைச் சொறிந்து யோசித்தார்களே அல்லாமல் ஒருவரும் ஒரு பதிலும் சொல்லவில்லை. கலைநேசனின் குரல் ஒலித்தது 'குந்தி' என்றார். சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவரே விளக்கமிளத்தார். பாண்டவர் பிறந்தது குந்தி (தேவி)யாலதான், பசுவில் பால் கறப்பதும் குந்தி (யிருந்து) தான் என்றார்.

பக்கத்து வட்டப்பக்கமிருந்து ஒருவர் குரல் கொடுத்து கைகாட்டி அழைத்தார் கலைநேசனை. அவர் உத்தியோகத்தர் போல் தோற்றம் காட்டினார். அங்கிருப்பவர்களும் அவ்வாறே காட்சியளித்தனர்.

கலைநேசன் அந்தப்பக்கம் என்னையும் கூட்டிக்கொண்டு போனார். போயமர்ந்தோம். எங்களை அழைத்தவர் புன்னகையோடு வீற்றிருந்தார். அவர் நெற்றியில் திருநீறு பூசியிருந்தார். நான் வியப்போடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கலைநேசன் காதோடு சொன்னார். ''இவர் ஒரு சிவபக்தர் இந்து சமயத்தத்துவங்களை எல்லாம் நல்லா விளக்கிச் சொல்வார். வெள்ளிக்கிழமை தவிர்ந்த நாள்களில் இங்கே வந்து போவார். அதிகம் மெனக்கெட மாட்டார்'' என்றார்'  

"நேரமாகிறது போவோம் எழுந்துவர மனமில்லை போலிருக்கிறது!'' என்றார். நான் பிரிய மனமில்லாமல்தான் எழுந்தேன்! ''இவை எல்லாம் சிற்றின்பம் என்பார். என்றாலும் சிற்றின்பத்துள் இது பேரின்பமானதுதான்! உண்மையான பேரின்பத்தைக் காண்பதென்றால் குடும்பத்தை விட்டு சன்னியாசியாகவல்லோ திரிய வேண்டும்!'' என்றார். "மீண்டும் சந்திப்போம்'' என்று எனக்குள் சொல்லிக்கொண்டே வெளியேறினேன்.

சூசை எட்வேட்

  

Comments