பெருந்தோட்ட காரியாலயங்களுக்கு படித்த தமிழ் இளைஞர் யுவதிகளை நியமிப்பதில் என்ன தடை? | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட காரியாலயங்களுக்கு படித்த தமிழ் இளைஞர் யுவதிகளை நியமிப்பதில் என்ன தடை?

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போதைய நிலைமைகளைப் புரிந்துகொண்டு எதிர்காலத்திற்காக தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக வேண்டியது அவசியம். நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டு இயங்கிவரும் பெருந்தோட்டத் தொழில்துறை அண்மைக்காலமாக வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

ஏனைய தொழில்துறைகளைச் சார்ந்தவர்களை விட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமே தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறமுடியாதவர்களாகவும், காணி உரிமை, வீட்டுரிமை அற்றவர்களாகவும், தாம் வசிக்கும் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமலும்   வாழ்ந்து வருகின்றனர். தோட்ட நிர்வாகம், தோட்ட உத்தியோகத்தர்கள், மலையக அரசியல்வாதிகள் என பல தரப்பினரால் வஞ்சிக்கப்படுபவர்களாக இருக்கும் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் சுய பொருளாதாரத்தில் ஈடுபடுத்திக்கொள்ள தங்களை தயார்படுத்துவது அவசியம்.

உழைப்பாளர்களாகிய அவர்களுக்கு கைத்தொழில் துறைகளில் ஈடுபடுவதற்கேற்ற வழிவகைகளை அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும். தொழிலாளர்களின் கடும் உழைப்பின் மூலம் ஏறத்தாழ அறுபது சதவீதம் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கிறது. கொவிட் 19வைரஸ் தொற்றினால் நாடு முழுமையாக முடங்கியிருந்த காலத்திலும் அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுத்தவர்கள் இந்த தோட்டத் தொழிலாளர்கள்.   இந்த மக்களின் நலன் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாத நிலையே தற்போது காணப்படுகிறது. குட்டக் குட்ட குனிகிறவனும் குனிய குனிய குட்டுகிறவனும் மடையன் என்கிற கதையைத்தான் இங்கே காண்கிறோம்.  தோட்டத் தொழிலாளர்கள் எந்தவொரு தரப்பினராலும் ஏமாற்றப்பட முடியாத வஞ்சிக்கப்பட முடியாத சமூகமாக மாற வேண்டும்.  

தொழிலாளர்களின் கல்வி கற்ற பிள்ளைகளுக்கு தோட்ட  உத்தியோகங்களை பெறுவதற்கான கல்வித் தகமைகள் இருந்தபோதிலும் அவர்களுக்கு தோட்ட அலுவலகங்களிலோ தொழிற்சங்க காரியாலயங்களிலோ தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. 

அநேகமான தோட்ட காரியாலயங்களுக்கு தொலைபேசி அழைப்புகளை எடுத்து தோட்டக் காரியாலய உத்தியோகத்தர்களுடன் ஆங்கில மொழியில் தொடர்புகொண்டால் அவர்கள் ஆங்கில மொழியில் உரையாட முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.  

தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள். ஆனால் தோட்ட அலுவலகங்களில் சிங்கள உத்தியோகத்தர்மாரே அதிகளவில் பணிபுரிகிறார்கள். இந்நிலையில் தொழிலாளர்கள் தோட்டக் காரியாலயங்களுக்கு சென்று தமது பிரச்சினைகளை எடுத்துச்சொன்னால் அவர்கள் புரிந்துகொள்வதில்லை.

 

இதனை தவிர்க்க வேண்டுமானால் பெருந்தோட்ட காரியாலயங்களில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு  படித்த தமிழ் இளைஞர்களை  நியமிக்கலாம். பெருந்தோட்டப் பகுதிகளில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள். இவ்வாறு தொழில்வாய்ப்பு பெறும் இளைஞர் யுவதிகளுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கினால் பெருந்தோட்ட அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள்.  

தோட்ட நிர்வாகங்கள்தான் தொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்துவதில்லை என்றால் அவர்களிடமிருந்து சந்தாப்பணத்தை அறவிடும் தொழிற்சங்கங்களும் அதுபோலவே மலையக அரசியல்வாதிகளும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. இந்த நிலை மாறவேண்டுமானால் படித்த இளைஞர் யுவதிகளுக்கு  தமது எதிர்காலம் பற்றிய சிந்தனையில் மாற்றம் அவசியமாகும். அவர்கள் தங்களை இப்போதே  சொந்தக்காலில் நிற்க தயாராக வேண்டும். தமது கல்வித் தகைமைகளுக்கேற்றதான சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.  

பெருந்தோட்டப்பகுதிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களும் தாம் எத்தனை பிள்ளைகளுக்கு கற்பித்தோம், கற்பிக்கிறோம் என்பதை விடுத்து தாம் கற்பித்த பிள்ளைகளில் எத்தனை பிள்ளைகளின் வாழ்வை கல்வியின் மூலம் பிரகாசிக்கச் செய்திருக்கிறோம் என்பதை மனதில் இருத்தி தமது ஆசிரியப் பணியை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.  

சமூக நிறுவனங்கள், மத நிறுவனங்கள், செல்வந்தர்கள் என்போர்  தொழிலாளர்களின்    வறுமையால் கல்வியைத் தொடரமுடியாதிருக்கும் பிள்ளைகளுக்கு நிதியுதவியை வழங்கி அவர்களை கல்வியில் மேன்மையடையச் செய்ய வேண்டும்.  

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தோட்ட தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களை தோட்ட உரிமையாளர்களாகவும் பல்வேறு துறைகளில் பிரகாசிப்பவர்களாகவும் உருவாக்கியுள்ளன. அதுபோல பெருந்தோட்டங்களில் இருக்கும் படித்த இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும்.  முன்வருவீர்களா?

சி.ப. சீலன்

 

Comments