நீர் ஆதாரங்கள் இல்லாமல் வரட்சியில் வாடும் பெருந்தோட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி

நீர் ஆதாரங்கள் இல்லாமல் வரட்சியில் வாடும் பெருந்தோட்டங்கள்

'நீரை சேகரிப்பதற்காக தொழிலுக்கு செல்லாமலும் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாதும் இருந்து நீரை சேகரிக்க வேண்டியுள்ளது'

பிரதேச சபைகள் நீர் வசதியை ஏற்படுத்தித் தரலாமே!

மத்திய மலை நாட்டில் என்றும் இல்லாத அளவில் இன்று கடும் வரட்சி நிலவுகிறது. குடிநீர் மட்டுமல்ல; ஏனைய அடிப்படைத் தேவைகளுக்கும் நீர் இல்லாது மக்கள் சிரமப்படுகின்றனர். ஏனெனில் பெருந்தோட்டப் பகுதிகளில் பெரும்பாலும் நீர் விநியோக கட்டமைப்புகள் இல்லை. ஊற்றுகளை மறித்து அவரவர் குழாய்களை பதிந்து தண்ணீரை பெற்றுக் கொள்கின்றனர்.

ஒருகாலகட்டத்தில் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கான நீர் விநியோகத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்து வந்தன. உள்நாட்டு, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களும் மலையக தோட்டப்பகுதிகளுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தந்தன.

இவ்வாறான நீர் விநியோக திட்டங்களின் கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாமலும் புதுபிக்கப்படாததாலும் இந்த குடிநீர்த் திட்டங்கள் சீரழிந்து அல்லது கைவிடப்பட்ட நிலைக்குப் போய்விட்டன.

மழைக்காலத்தில் வீட்டு வாசல் வரையில் நீர் பெருக்கெடுத்து ஓடும். அக்காலப்பகுதியில் இந்த மக்களுக்கு நீர் பிரச்சினை ஒன்று இருப்பது ஞாபகம் இருக்காது.

ஓடைகள், அருவிகள், ஊற்றுக்களில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒன்று சேர்ந்து அல்லது தனியாக தம்மால் முடிந்த வகையில் குழாய் மூலமாக தமது குளியலறை வரையில் நீரை கொண்டுவந்து தாராளமாக நீரை பயன்படுத்துவர்.

வரட்சிக் காலம் வந்தால் ஓடைகள், ஊற்றுகள், அருவிகள் வற்றிப் போய்விடும். நீர் விநியோக குழாய்கள் இருந்த இடம் கூடத் தெரியாது போய்விடும். தூர இடங்களில் இருந்து நீரை சுமந்து வருவர் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி அதில் தண்ணீர் கொண்டுவரத் தொடங்குவார்கள். பெருந்தோட்ட நீர் வசதி இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

வீடுகளுக்கு தனித்தனியாக நீரைபெற்றுக்கொள்ள சுயமாக நீர் விநியோக குழாய்களை சிலர் பொருத்தியுள்ள போதும் பெரும்பாலும் இவற்றில் காற்றுதான் வரும். முன்னர் நீரேந்து பகுதிகளில் மரங்கள் நட்டு முட்கம்பியால் வேலியமைத்து ஏக்கர் கணக்கில் இப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டன. இன்று இந்நிலைமை இல்லை.

தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டதுடன் இலாபத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட தோட்டக் கம்பனிகள் மரங்களை தரிப்பதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். முதலீடு பராமரிப்பு செலவுகள் அவசியமில்லை என்பதால் மரம் தரிப்பதன் மூலமாக கொள்ளை இலாபமடைகின்றனர்.

ஆரம்பத்தில் தோட்டப் பகுதியில் உள்ள சிறுகாட்டு பகுதிகளில் மரங்களை வெட்டுவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பைக்காட்டி ஆர்ப்பாட்டங்களையும் செய்தனர்.

பின் மரம் தரிப்பதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு சிறுபகுதியை தோட்டத் தொழிலாளர்களுக்கு தருவதாக தோட்ட நிர்வாகம் கூற மகுடி பாம்பாக மாறிப்போனார்கள் மலையக தோட்டத் தொழிலாளர்கள். தொழிற்சங்கங்கள் இதனை கண்டு கொள்ளவில்லை.

சுற்றளவில் பெருத்து வைரம் ஏறிய மரங்கள் நீரேந்தும் பகுதியில் இருந்தன. இவற்றையும் விட்டு வைக்கவில்லை தோட்ட நிர்வாகங்கள். எமது பாட்டன் பூட்டன் காலத்தைச் சேர்ந்த பல ஆயிரக் கணக்கான பலா மரங்கள் வெட்டப்பட்டு விட்டன.

இவற்றுக்கு மேலாக விஷமிகளும் பெருந்தோட்டக் காடுகளுக்கு தொடர்ச்சியாக தீமூட்டி அழித்து வருகின்றனர். நீரேந்தும் பகுதிகள் தொடர்ச்சியாக தீக்கிரையாகி வருகின்றன.

இதனால் நீர் ஊற்றுகள் வற்றி வருகின்றன. தோட்டங்கள் தோறும் இதே நிலைதான்.

கண்டி மாவட்டம் கம்பளை உடபலாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட நீவ்பீக்கொக் தோட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இங்கு சுமார் 400கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் குடிப்பதற்கும் ஏனைய அடிப்படைத் தேவைகளுக்கும் நீரின்றி அல்லலுறுகின்றனர்.

உயரமான பகுதியில் உள்ள ஓடை நீரையும் ஊற்றுகளில் உள்ள நீரையும் குழாய் மூலம் நேரடியாகக் கொண்டு வந்து தமது நீர் தேவையை பூர்த்தி செய்கின்றனர்.

மழைக் காலத்தில் நீர் போதியளவு கிடைத்த போதும் கோடையில் சேரும் சகதியுமாக இருக்கும். எந்த வகையிலும் சுத்திகரிக்க படாத, அந்த அசுத்த நீரையே பருகுகின்றனர்.

வெயில் காலத்தில் இதுவும் இல்லை. ஓடைகள் குட்டைகளில் நீர் வற்றி தேங்கியிருக்கும் . நீரை ஆடைகள் கழுவுவதற்கும் நீராடுவதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துவதால் பல்வேறுபட்ட தொற்று நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

நீரை சேகரிப்பதற்காக தொழிலுக்கு செல்லாமலும் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாதும் இருந்து நீரை சேகரிக்க வேண்டியுள்ளது.

கதை கதையாக கதைக்கும் மலையக அரசியல்வாதிகளே, தமக்கு சந்தாப் பணத்தையும், வாக்களிப்பின் ஊடாக அதிகாரமும் வழங்கும் அப்பாவி தோட்ட மக்களுக்கு குடிக்க கொஞ்சம் சுத்தமான நீர் கிடைக்க வழி பன்னுங்க.

கொரானாவின் பின் கொழும்பு போன்ற பகுதிகளில் தொழில் புரிந்த நியூபீகொக் தோட்ட இளைஞர்கள் தோட்டத்துக்கு திரும்பி வந்து விவசாயத்தை நம்பியே தமது வாழ்க்ைகயை அமைத்துக் கொண்டுள்ளனர். ஓடைகள், அருவிகள், ஊற்றுகள் வற்றியுள்ளதனால். விவசாயத்தை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைவிட்டுள்ளனர். மலையகத்தில் ஊற்றெடுத்து பிற ஊர்களுக்கு பயன்படும் நீரை தமக்கும் அளிக்கும்படி அதற்கு வழிசெய்யுமாறு கோருகின்றனர்.

நீரைத் தேக்கி வடிகான்கள் மூலம் தோட்டப் பகுதி விவசாயத்திற்கு நீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். பெருந்தோட்டங்களில் சேவை செய்வதற்கு தற்போது பிரதேச சபைகளுக்கு அதிகாரம் உண்டு. ஏன் பிரதேச சபைகள் தோட்ட நீர் விநியோகத்தில் தலையிடக்கூடாது?

ஆர். நவராஜா...

Comments