தெளிவத்தை 88 படைப்பில் ஓய்வின்றி இயங்கும் பிரம்மா | தினகரன் வாரமஞ்சரி

தெளிவத்தை 88 படைப்பில் ஓய்வின்றி இயங்கும் பிரம்மா

"எழுத்தறிவித்தவன் இறைவன்" என்று சொல்வார்கள் இறைவன் நேரில்வந்து எழுதப் பழக்குவது என்பது சாத்தியமான காரியம் அல்ல. ஒரு சமயப் பெரியார் அல்லது அறிஞர் பெருமகன் ஒருவர் ஊடாகவே எழுதப் பழகிக்கொள்ளும் ஒரு சம்பிரதாயம் தமிழ் மக்களது பாரம்பரிய ஒரு நிகழ்வாக அமைந்திருக்கிறது. குடும்பத்தில் ஒரு பிள்ளை கல்வி பயிலும் வயதை அடைந்ததும், பெற்றோர்கள் ஒரு சுபநாளில் அந்தப் பிள்ளைக்கு வித்தியாரம்பம் செய்து வைக்கும் ஒரு வைபவத்தை நடத்திவைக்கிறார்கள். அதனை 'ஏடு தொடக்கல் என்றும் சொல்வதுண்டு. இதுவே குழந்தையின் எழுத்தின் ஆரம்பமாகும்.

அன்றைய சுபநாளில் தொடங்கும் எழுத்து, சிலருக்கு பாடசாலை கல்வி நிறைவடையும் வரை தொடரும், பலருக்கு தொழில்புரியும் காலம்வரை தொடரும். ஒரு சிலருக்கு வாழ்வின் இறுதிக்காலம் வரை தொடரும். அந்தவகையில் அடையாளப்படுத்தக்கூடிய ஒருவராகத் திகழும் பெருமைக்குரியவராக தௌிவத்தை ஜோசப் விளங்குகிறார்.

அன்று தொடங்கிய அவரது எழுத்து இன்றும் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியது.

கலை இலக்கிய உலகத்தின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றுத் திகழும் தெளிவத்தை ஜோசப் இம்மாதம் 16ஆம் திகதியன்று அகவை 88இல் கால் பதித்துள்ளார். என்பது ஒரு நல்ல செய்தியாகும். சாதாரணமாக ஒருவருக்கு பிறந்தநாள் என்றால் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஆனால் இவரது பிறந்த தினம், குடும்பத்தினர், உறவினர்களையும் கடந்து அனைத்து கலை இலக்கிய ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது என்பது விசேஷமானது.

இவர் 1934ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதியன்று பதுளை மாவட்டம் ஊவா கட்டவளை என்ற இடத்தில் சந்தனசாமி பரிபூரணம் தம்பதிகளுக்கு புதல்வனாகப் பிறந்தார். பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து கொண்ட பின்னர் 1950ஆம் ஆண்டில் தெளிவத்தையில் ஆசிரியப் பணியாற்றிவரும்போது எழுத ஆரம்பித்தார். அப்போது தனது பெயருடன்தெளிவத்தை என்பதை இணைத்துக் கொண்டார்.

இவரது முதல் சிறுகதையான "வாழைப்பழத்தோல்" 1950ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'உமா' சஞ்சிகையில் பிரசுரமாகியிருக்கிறது. ஆசிரியப் பணியிலிருந்த ஜோசப் 1964ஆம் ஆண்டிலிருந்து கொழும்புவந்து அன்றைக்கு புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கிய ஸ்டார் பிராண்ட் கொன்பெக்‌ஷனரியில் கணக்காளராக இணைந்து கொண்டார். கொழும்புக்கு வந்த பின், எழுத்துத் துறையில் வேகமாக நடைபயில ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் சிறுகதைகள் மூலம் தனது இலக்கிய முயற்சிகளை தொடக்கிய இவர் 1960ஆம் ஆண்டுக்குப் பின் குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வுக் கட்டுரை, திரைப்படக் கதை வசனம், தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கான நாடகங்கள் எனப் பல தளங்களில் தனது எழுத்து முயற்சிகளை விஸ்தரித்தார். இதனூடாக, மலையக இலக்கியத்துடன் சேர்ந்து ஈழத்து இலக்கியத்தையும் வளப்டுத்தியதுடன், உலகத் தமிழ் இலக்கியத்துக்கும் உரம் சேர்த்தார்.

தெளிவத்தை ஜோசப் பவளவிழாவையொட்டி 2010ஆம் ஆண்டு 'ஞானம்' இலக்கிய சஞ்சிகை காத்திரமான விஷயங்களுடன் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்ததுடன், அதே வருடம் மே மாதம் 16ஆம் திகதியன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் பவளவிழா சிறப்பு நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்து நடத்தியிருந்தது.

தெளிவத்தை ஜோசப் ஈழத்து எழுத்துத் துறையில் முன்னேறிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அதாவது 1974ஆம் ஆண்டு இவர் சந்தித்த ஒரு அதிருப்தியான சம்பவத்தை ஞானம் சஞ்சிகை இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது.

"தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துலகப் பிரவேசத்தின் போது, இவரை ஓரங்கட்ட முனைந்தவர்கள் பலர். இவரது முதலாவது நாவலான 'காலங்கள் சாவதில்லை' 1974இல் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்து, அவ்வாண்டில் சாகித்தியப் பரிசுக்குத் தேர்வாகியது. இது தொடர்பான விமர்சனமும் தமிழகத்தில் தீபம் சஞ்சிகையில் வெளியாகியது.

இருந்தபோதும், அக்கால இலக்கிய சட்டாம்பிள்ளைகளால் திட்டமிட்டு அந்நாளில் பரிசுத் தேர்விலிருந்து நிராகரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இத்தகைய நிலைமை இருந்தபோதும், எதிர்நீச்சலடித்து தன்னை இலக்கிய உலகில் நிலை நிறுத்திக்கொண்டவர் தெளிவத்தை ஜோசப்.

ஞானம் சஞ்சிகை வெளியிட்ட தெளிவத்தை ஜோசப் பவளவிழா மலரில் அதன் ஆசிரியர் தி.ஞானசேகரன், "மலையகம் என்னும் உணர்வுக்குத்தனது எழுத்தாற்றலால் உருவம் கொடுத்தார் ஜோசப் மலையக இலக்கியத்தின் அடையாளத்திற்கும் தனித்துவத்திற்கும் இவரது எழுத்துக்களும் தொகுப்புகளும் ஆய்வுப் பணிகளும் பெரும் பங்காற்றியுள்ளன என்று தனது ஆசிரிய கருத்துரையில் தெரிவித்துள்ளார்.

தெளிவத்தை ஜோசப்பின் ஒவ்வொரு படைப்புகளையும் விரிவாகக் குறிப்பிட்டு தனியாக ஆய்வு செய்யப்படுவது அவசியமாகும். காலங்கள் சாவதில்லை, காதலினால் அல்ல, நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் ஆகிய நாவல்களையும், பாலாயி, ஞாயிறு வந்தது, மனம் வெளுக்க ஆகிய குறுநாவல்களையும், நாமிருக்கும் நாடே என்ற சிறுகதை தொகுதியையும், மலையக சிறுகதை இலக்கிய வரலாறு, என்ற ஆய்வு நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்நூல் இவரை சிறந்த ஆய்வாளராக இனம் காட்டியதாக அந்நாளில் விமர்சனங்கள் வெளியாகியிருந்தன.

இலங்கையில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்நாளில் கே.வி.எஸ். மோகன் வெளியிட்ட கதம்பம் சஞ்சிகையிலும் எழுதியிருக்கின்றார்.

ஈழத்து முன்னோடி எழுத்தாளராகத் திகழ்ந்த பேராசிரியர் எஸ். சிவஞானசுந்தரம்: (நந்தி) இவரைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்.

"ஒரு சிலையை, ஒரு பூமாலையை பார்க்கும் போது பெறப்படும் அனுபவம் ஒரு சிறுகதையை படிக்கும் போது ஏற்படவேண்டும். சிறுகதையில் ஒரு சொல்கூடத் தேவையில்லாது இருக்கக்கூடாது. தெளிவத்தை ஜோசப் கதைகளிலும் சொற்கள் சரியாகி வந்து விழுகின்றன. ஒரு கவிதைப் பண்போடு தனது கதைகளின் வசன நடையைக் கையாண்டிருக்கின்றார். வெற்றியும் அடைகின்றார்."

தமிழ்நாட்டின் சுபமங்களா சஞ்சிகை தேசிய இலக்கியப் பேரவையுடன் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் 'குடைநிழல்' என்ற இவரது குறுநாவலுக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. தமிழ்நாட்டின் கலைமகள் சஞ்சிகையிலும் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

இவரது எழுத்துத் திறமைக்கு சான்று பகரும் வகையில் பல விருதுகளையும் பெற்றுள்ளார். ஊவா மாகாண சாகித்திய விருது, மத்திய மாகாண சாகித்திய விருது, இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது, அரச கலாபூஷணம் விருது, இந்து கலாசார திணைக்களம் வழங்கிய இலக்கியச் செம்மல், பேராதனை பல்கலைக்கழக தமிழ் ஒன்றியத்தின் விசேட விருது, கம்பன் கழகம், யாழ்இலக்கிய வட்டம், மட்டக்களப்பு இலக்கிய மன்றம் என்பன வழங்கிய விருதுகளும் இவருக்கு கிடைத்துள்ளன. இந்தியா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கிய பரிசும் கௌரவமும், கொடகே நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு பெருமை சேர்த்திருப்பதை சிறப்பாகச் சொல்லலாம்.

2014ஆம் ஆண்டு அரசின் சாகித்திய ரத்னா விருது ஜனாதிபதியால் இவருக்கு வழங்கி வைக்கப்பட்டது. தமிழகம் சென்னையில் நடந்த இலக்கிய மாநாடுகள், கனடா நூல் கண்காட்சி, அவுஸ்திரேலியா பிரித்தானியா போன்ற நாடுகளில் நடந்த இலக்கிய நிகழ்வுகள் என்பனவற்றிலும் கலந்து சிறப்பித்திருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஒரு மூத்த எழுத்தாளர் உன்னத படைப்பாளி என்ற நிலையில் கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கும் தெளிவத்தை ஜோசப் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் மாதாந்த வெளியீடான வண்ண வானவில் சஞ்சிகையில் கடந்த பதினைந்து மாதங்களாக 'எஸ்.பொ - ஈழத்து இலக்கியத்தில் ஒரு கலகக்காரன்' என்ற தொடர் கட்டுரையை எழுதிவருவது மிகப் பிந்திய மகிழ்ச்சிகரமான தகவலாகும்.

பிரபல எழுத்தாளர்கள் பலர் வயது முதிர்வு காரணமாக எழுதுவதைக் கைவிட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் தெளிவத்தை ஜோசப் "எழுத்திலே ஓய்வுகாண விரும்பாத ஒருவர்" என்று இவரது இலக்கிய நண்பர்கள் பலர் சொல்வதுண்டு. சாதாரணமாக ஒருவர் பதவியிலிருந்துதான் ஓய்வுபெறவேண்டும். ஆனால், தனது கையில் பேனா இருக்கும்வரை தன்னால் எழுதக்கூடிய ஆற்றலும் உடல்வலுவும் உள்ளவரை எழுதிக்கொண்டிருப்பது என்பது இறைவனின் ஓர் அருட்கொடையாகும் என்றுதான் சொல்லவேண்டும்.

சில மூத்த எழுத்தளர்கள் தமது பேரக் குழந்தைகளை சீராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் சரக்கு தீர்ந்துவிட்டது என்று ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் காலமாகிவிட்டனர். சிலர் வேறு விஷயங்களில் ஈடுபட்டு எழுத்தை மறந்து விட்டனர். அறுபதுகளில் இருந்து இன்றைக்கும் வீரியத்துடன் எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர்தான். அவர்களில் முதன்மையானவர் தெளிவத்தை.

ஒருவருக்கு எழுத்தும் படைப்பும் இயல்பாகத்தான் வரும். எழுத்தாளன் தமிழுக்கும் பேராசிரியர் தமிழுக்கும் இடையே வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றைக்கு எளிதில் புரிந்து கொள்கிறமாதிரி எழுதுவது தெளிவத்தையாருக்கு அன்றைக்கு மாதிரியே இன்றைக்கும் கை வருகிறது. அதற்கு உதாரணமாக அவரது எஸ்.பொ. தொடரைச் சொல்லலாம். எஸ்.பொன்னுத்துரை ஒரு சர்ச்சைக்குரிய படைப்பாளர், அவரைப் பற்றி எழுதும் போது அவரை புகழ்ந்து செல்லாமல் நடுநிலை நின்று எஸ்.பொ. தவறிய இடங்களையும் தெளிவத்தை சுட்டிக்காட்டி செல்லக் குட்டுக்களையும் வைக்கிறார். இந்த துணிச்சல் அனைவருக்கும் கைவராது.

இவர் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்து எதிர்காலத்தில் சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், அதனூடாக காத்திரமான படைப்புகளை கலை இலக்கிய உலகுக்கு வழங்குவதற்கு எல்லாம்வல்ல இறையருள் துணைநிற்கவேண்டும் என கலை இலக்கிய ரசிகர்கள் சார்பாக பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்.

அ. கனகசூரியர்...•

Comments