மலையக மக்கள் வாழ்வில் சின்னம் சிறு அம்சங்களையும் நுணுக்கமாக நோக்கியவர் தெளிவத்தை ஜோசப் | தினகரன் வாரமஞ்சரி

மலையக மக்கள் வாழ்வில் சின்னம் சிறு அம்சங்களையும் நுணுக்கமாக நோக்கியவர் தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை ஜோசப்பும் நானும் பதுளையைச் சேர்ந்தவர்கள். சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப், பதுளையை விட்டுவிட்டு தான் வாழ்ந்த தோட்டத்தை தன் பெயரில் சேர்த்துக் கொண்டவர். இவ்வகையில் தெளிவத்தை தோட்டத்தை நாமும் சர்வதேசமும் அறியும் வகையில், அரிய சிறுகதைகளையும், நாவல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் படைத்தவர்.

அவருடைய நாவல் சிறுகதைத் தொகுப்புகளுக்கு பல சாகித்திய மண்டலப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன. அதன் உச்ச கட்டமாக அவருக்கு 'இலங்கை அரசாங்கத்தின் 'சாகித்திய ரத்னா' என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருது, கரிகாற்சோழன் விருது, கனடாவின் தமிழியல் விருது என்பனவற்றையும் அவர் பெற்றுக் கொண்டவர். இவர் இதுவரை பெற்ற விருதுகள் அனைத்துமே உயர் மட்ட இலக்கிய மதிப்பீட்டுக் குழுவினரின் ஆழாமான பரிசீலனையின் பின்னர் வழங்கப்பட்டவை ஆகும். அவருடைய இலக்கியச் சாதனைகள் பற்றிய தகுதி விதிகளுக்கெல்லாம் தெளிவத்தை ஜோசப்பின் இலக்கியப் படைப்புகள் நின்று பிடித்து வெற்றி கண்டன என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அவர் பெற்ற விருதுகள் அனைத்தும் மலையகத்துக்கும் தெளிவத்தை பெருந்தோட்டத்துக்கும் மட்டுமன்றி முழு இலங்கை வாழ் தமிழர்களுக்கும் கௌரவத்தை வழங்கிய விருதுகளாகும்.

தற்போது லண்டனில் வாழும் பதுளை மு.நித்தியானந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொருளியல் விரிவுரையாளராக   பணியாற்றிய   காலகட்டத்தில் தெளிவத்தை ஜோசப்பின் 'நாமிருக்கும் நாடே' என்.எஸ்.எம். ராமையாவின் ஒரு கூடைக் கொழுந்து என்ற சிறுகதைத் தொகுதிகளையும், சி.வி. வேலுப்பிள்ளையின் வீடற்றவன் என்ற நாவலையும் தன் வைகறைப் பதிப்பகத்தினூடாக தனது சொந்த செலவில் வெளியிட்டு மலையக இலக்கியத்திற்கு பெரும் வளம் சேர்த்தவர். எனினும் தெளிவத்தையின் நாமிருக்கும் நாடே என்ற சிறுகதைத் தொகுதியை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைத்து தெளிவத்தை ஜோசப்பை பெருமை படுத்தியவர். தற்போது கூட தெளிவத்தையின் சகல சிறுகதைகளையும் தொகுத்து முழு தொகுதியாக வெளியிட மு.நித்தியானந்தனும், எச்.எச்.விக்கிரமசிங்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை, பண்பாடு, கலை, கலாசாரங்கள், அவலங்கள், சிரமங்கள் என்பவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட ஜோசப்பின் கதைகள், வெளிநிலைப் படைப்பாளிகளின் அவதானமாக அன்றி, ஒரு பங்கேற்பு ஆய்வாளர்களின் யதார்த்தமான தீர்க்கமான அவதானமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மலையக மக்கள் வாழ்க்கையின் சின்னஞ்சிறு அம்சங்களையும் நுணுக்கமாக நோக்கி, நேர்த்தியான பாத்திர வார்ப்புகளால் கதை சொல்லும் ஆற்றல் படைத்தவராக ஜோசப் தனது சிறுகதைகளை எமக்கு வழங்கியுள்ளார்.

1960களில் பதுளை தெளிவத்தை தோட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய ஜோசப், தனது கதைகளின் கருப்பொருள் காரணமாகத் தோட்ட நிர்வாகிகள் உட்பட பலரின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேர்ந்தது. அந்த கசப்பான அனுபவங்கள் காரணமாக அவர் கொழும்புக்கு இடம் மாறிவர நேர்ந்தது. இவ்வாறு இலக்கிய முயற்சி காரணமாக இடம்பெயர நேர்ந்த படைப்பிலக்கியக்காரர்கள் பற்றிப் பொதுவாக நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் தெளிவத்தை ஜோசப் 1960களில் முற்பகுதியில் கொழும்புக்கு இடம்பெயர்ந்தார்.

'இலக்கியத்தைப் படைப்பதற்கு ஒரு சத்திய வேட்கை இருக்க வேண்டும்' என்ற சிந்தனையைத் தமது இலக்கிய வழிக்காட்டல் தத்துவமாகக் கொண்டு எழுத்துப் பணியில் ஈடுபட்டவர் தெளிவத்தை ஜோசப். உழைப்பவர்களுக்குத்தான் முதலிடம். உழைப்பே செல்வத்தின் உருவாக்கத்தின் அடிப்படை என்பது மார்க்சியத்துவம். ஜோசப்பை ஒரு இடத்தில் 'உழைப்பாளிக்குத்தான் முதல் உதை' என்று எழுதியுள்ளார்.  உழைப்பவர் தான் நாட்டின் மூச்சு என்பார்கள். ஜோசப் 'இங்கே அவர்கள் மூச்சே விடக்கூடாது' என்று தமது சிறுகதையொன்றில் எழுதி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜோசப் போன்ற இலக்கியப் படைப்பாளிகளுக்கு உலகளாவிய தமிழ்கூறும் சமூகம் வழங்கும் கௌரவம் பற்றி சில வார்த்தைகள். சமூகம் முடியுடை வேந்தர்களை, ராஜராஜ சோழனை, கங்கை கொண்ட கடாரம் வென்றவர்களை நினைவில் இருத்தவில்லை. சங்ககால அரசர்களை சேர, சோழ, பாண்டியர்களை நினைவு கூறுகின்றதோ தெரியவில்லை. ஆனால் இலக்கியம் படைத்த புலவர்கள் இன்றும் நினைவு கூரப்படுகின்றார்கள். திருவள்ளுவர், கம்பன், பாரதி பற்றிய ஏராளமான நூல்கள் உண்டு. அவர்களது பெயர்களில் பல மன்றங்களும் உண்டு.

அவர்களுடைய சிந்தனைகள் பற்றி மாநாடுகள் நடைபெறுகின்றன. இவ்வகையில், காலந்தோறும் ஆராயப்பட வேண்டிய, நினைவு கூரப்படவேண்டிய ஈழத்தின் இலக்கிய படைப்பாளியாக விளங்குபவர் தெளிவத்தை ஜோசப். இந்த குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் ஜோசப் அவர்களுக்கு மூத்தவர்களான செங்கரும்பு ஏ.எஸ். வடிவேலு, அல்லஸ்மத் மற்றும் தெளிவத்தை ஜோசப்பின் குடும்பத்தார் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

மலையக மக்களுடைய வாழ்வியல் பற்றிய ஏராளமான ஆய்வு நூல்கள் இலங்கையர்களாலும் வெளிநாட்டவர்களாலும் எழுதப்பட்டுள்ளன. அந்நூல்கள் பற்றிய விபரப் பட்டியல் ஒன்றை நானும், கலாநிதி இரா.ரமேசும் சேர்ந்து தொகுத்து வெளியிட்டோம். அந்த ஆய்வு நூல்களுக்கு அப்பால், தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்கள் மலையக மக்களின் வாழ்வியல் பற்றி உயிரோட்டமாகவும், கலைநேர்த்தியுடனும் விளங்குகின்றன. இவ்வகையில் சமகால வாசகர்களுக்கும் எதிர்கால ஆய்வாளர்களுக்கும் பயன்படன்கூடிய வரலாற்றுப் பதிவுகளாக தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகளை சொல்ல முடியும்.

இப் பிறந்தநாள் நிகழ்வை சிறப்புடன் ஏற்பாடு செய்துள்ள மூத்த ஊடகவியலாளர் எச்.எச். விக்கிரமசிங்க, லட்சுமணன் வேலு, பெரியசாமி ஞானி ஜோதி, சுதாகரன் கே.பிள்ளை ஆகிய நால்வருக்கும் எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

பேராசிரியர் சே.சந்திரசேகரம் ஆற்றிய உரையில் ஒரு பகுதி

 

 

Comments