தேர்தலொன்றுக்கு செல்வதற்காக அரசுக்குள் கருத்துப் பரிமாற்றங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

தேர்தலொன்றுக்கு செல்வதற்காக அரசுக்குள் கருத்துப் பரிமாற்றங்கள்!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலத்தைமேலும் ஒரு வருடத்துக்கு அரசாங்கம்நீடித்திருக்கும் நிலையில், தேர்தலொன்றுக்குச் செல்வது குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் அரசியல்அரங்கத்தில் இடம்பெற்று வருகின்றன.

இவ்வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படலாம் என அரசியல்  அவதானிகள் எதிர்வுகூறியிருக்கும் நிலையில், இத்தேர்தல்கள் தொடர்பான சட்டரீதியான ஏற்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய கலப்பு முறையின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு கவனம் செலுத்தியுள்ளது.

பல உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தமையால், அவற்றின் பதவிக் காலத்தை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அலுவல்கள் அமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார். இருந்த போதும், தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தல்களை ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தது.

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஆளும் கட்சியின் பேரணியில் விரைவில் தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கத் தயாராகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சிக்கு அறைகூவல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவும் ஆராய்ந்துள்ளது. சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையிலான தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு இது பற்றிக் கலந்துரையாடியிருந்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் போது தொகுதிவாரி முறை மற்றும் விகிதாசார முறையை உள்ளடக்கிய கலப்புமுறைக்குச் செல்வது பற்றி இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு 60வீத உறுப்பினர்களை தொகுதி வாரி முறையின் கீழும், 40வீத உறுப்பினர்களை விகிதாசார முறையின் கீழும் தெரிவு செய்வது தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இது மாத்திரமன்றி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது, அனைத்து அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு அதிக இடத்தை வழங்குவது பற்றியும் இக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு போனஸ் ஆசனத்தைப் பெற்றுக் கொடுப்பது  மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் தற்பொழுது காணப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றியும் இக்குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந்த விடயங்கள் யாவும் இன்னமும் கலந்துரையாடல் மட்டத்தில் இருப்பதுடன், இறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. தொடர்ந்தும் இக்குழு கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.

மறுபக்கத்தில், அரசியல் கட்சிகளும் படிப்படியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்குத் தம்மைத் தயார்படுத்தத் தொடங்கியுள்ளன. இருந்த போதும் கொவிட்-19ஒமிக்ரோன் தொற்று அதிகரித்திருப்பதால் தேர்தல்கள் குறித்து உறுதியாகக் கூற முடியாதுள்ள போதும், தேர்தல்களை நடத்துவதற்கும் தாம் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டிருப்பதால், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னரே தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கும். இதன் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்குத் தாம் தாயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் ஆணைக்குழு சில நாட்களுக்கு முன்னர் சந்தித்திருந்தது. இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது, வட்டார முறையில் நடத்தப்பட்டிருந்தது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொண்டு வரப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு அமைய வட்டார முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதிக மன்றங்களைக் கைப்பற்றியிருந்தது. இருந்த போதும் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்ற விமர்சனங்கள் பல மட்டங்களிலிருந்தும் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையிலேயே தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் முறைமை குறித்தும் கலந்துரையாடி வருகிறது.

தேர்தலைச் சந்திப்பதற்கு எந்நேரத்திலும் தயார் என்று அரசாங்கம் கூறியிருக்கும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலுக்குத் தயாராவதில் தயக்கம் காட்டி வருகிறது என்றே கூற வேண்டும். குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு மற்றும் தலைமைத்துவப் போட்டி காரணமாக பிரதான எதிர்க் கட்சிக்குள் ஒற்றுமையின்மை காணப்படுகிறது. இதனால் அவர்கள் எந்தவொரு தேர்தலையும் அண்மைய காலத்தில் எதிர்கொள்ளத் தயாராக இல்லையென அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேநேரம், டொலர் தட்டுப்பாட்டின் விளைவாகத் தோன்றியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரத் தடை மற்றும் விலைவாசி அதிகரிப்புப் போன்ற பிரச்சினைகளின் மத்தியில் விரைவில் தேர்தலொன்றுக்குச் செல்வது குறித்து ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுவதாகவும், இதனால் தற்போதைக்குத் தேர்தலொன்றை நோக்கிச் செல்ல வேண்டாம் என அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கூறியிருப்பதாகவும் தெரியவருகிறது.

இன்றைய கொவிட் நெருக்கடியின் விளைவான பொருளாதாரப் பாதிப்பு காரணமாக மக்கள் மத்தியில் அதிருப்தியிருப்பதால் தேர்தலொன்றுக்குச் செல்வது அரசாங்கத்துக்குப் பாதகமாக அமையலாம் என்ற நிலைப்பாடு காணப்படும் அதேநேரம், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலொன்றுக்குத் தன்னைத் தயார்ப்படுத்தி வருகின்றது.   இதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கட்சியின் மாநாடொன்று சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சு.கவின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதுவரை காலமும் தமிழ்த் தேசியம் பேசிய கட்சிகளுக்கு அப்பால் தேசிய கட்சிகளின் மீது மக்களின் பார்வை சென்றுள்ளமைக்கு சு.கவின் யாழ் மாநாடு உதாரணமாக அமைந்துள்ளதா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. தேர்தல்கள் வரும் போது மாத்திரம் மக்களின் குறை நிறைகளைத் தேடிச் செல்லும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் மாற்றமொன்றை மக்கள் இப்போது எதிர்பார்க்கின்றனர் என்பது இதன் மூலம் தெரிகின்றது.

தமிழ் தேசிய உணர்வுகளை தூண்டி விட்டு, மக்களை எப்பொழுதும் ஒரு மாயையில் வைத்துக் கொண்டு செயற்படும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மத்தியில் தேசியக் கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளமையை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காண முடிந்தது. யாழ் மாவட்டத்தில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எதிர்வரும் காலத்தில் இந்த நிலைமை மேலும் விஸ்தரிக்கப்படுமாயின் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் மக்களால் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதே தமிழ் மக்களின் கருத்தாக உள்ளது.

சம்யுக்தன்

Comments