ஈழத்துப் பத்திரிகை உலகின் தனி நாயகம் எஸ்.டி.சிவநாயகம் | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்துப் பத்திரிகை உலகின் தனி நாயகம் எஸ்.டி.சிவநாயகம்

இலங்கைப் பத்திரிகையாசிரியர்களில் ஐம்பது ஆண்டுகால பத்திரிகைப் பணியில் தன்னிகரற்ற தனிநாயகமாகத் திகழ்ந்தவர் அமரர் எஸ்.டி.சிவநாயகம் ஆவார்.

ஆங்கிலப் பத்திரிகாசிரியராக ஐம்பது ஆண்டுகால வரலாற்றைக்கொண்டிருந்த எஸ்.சிவநாயகம் Saturday Review, Hotspring ஆகிய பத்திரிகைகளுக்கூடாகவும்  The pen and the gun,  Sri Lanka: Witness to History(2005) என்ற நூல்களுக்கூடாகவும் நன்கு அறியப்பட்டவரே. ஆயினும் சிவநாயகம் என்றதும் எஸ்.டி.சிவநாயகத்தையே பெரும்பாலானோர் நினைவில் கொண்டிருந்தனர். லண்டனில் மிகப்பல சந்தர்ப்பங்களில் இவர்கள் இருவரும் வெவ்வேறு பத்திராதிபர்கள் என்று நான் விளக்க நேர்ந்திருக்கிறது.

இலங்கைப் பத்திராதிபர்களில் அமரர் எஸ்.டி.சிவநாயகம்​ை தனி நட்சத்திரமாகச் சுடர்விடுகிறார். 'சுதந்திரன்' பத்திரிகையில் பத்திராதிபராக அவர் ஆற்றிய பணிக்கு எதுவும் நிகராகாது. ஒரு பத்திராதிபர் எத்தகைய பூரண நோக்கைக் கொண்டிருக்கவேண்டும் (holisitic approach) என்பதற்கு எஸ்.டி.சிவநாயகம் ஓர் இலக்கணமாக அமைந்தார் என்பது மிகையாகச் சொல்வதாக அமையாது.

சுதந்திரன் ஒரு கட்சிப்பத்திரிகையாக இருந்தாலும், வெறும் கட்சிப்பிரசாரப் பத்திரிகையாக அது அமையவில்லை. தமிழ் மக்களின் உரிமைக்குரலாக அப்பத்திரிகையை வார்த்தெடுத்ததில் எஸ்.டி.சிவநாயகம் தனது பேராற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.எஸ்.டி.சிவநாயகம் வெளியேறியபின் சுதந்திரன் பத்திரிகை வெறும் கட்சிப்பத்திரிகையாகவே தேய்ந்தது.

கவிபுனையும் ஆற்றலோடு  பத்திரிகையின் ஆசிரிய இருக்கையில் ஒருவர் அமர்வதென்பது அசாதாரணமான அம்சமாகும். சுதந்திரன் ஈழத்துக் கவிஞர்களின் அத்தாணி மண்டபமாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது. மஹாகவி, நீலாவணன், இராஜபாரதி, தமிழோவியன், பரமஹம்சதாசன்,  வலுத்தூர் ஒளியேந்தி டி.ஆர்.பெரியசாமி,  ஈரவானன் ஈழகுமார்  என்று ஒரு கவிஞர் பட்டாளமே சுதந்திரனில் உலா வந்திருக்கிறது.

மலையகத்தின் மூத்த கவிஞர் அமரர் தமிழோவியனுக்கு எஸ்.டி.சிவநாயகம் 14.06.1984இல் எழுதிய கடிதத்திலே பின்வ ருமாறு எழுதுகிறார்:

' அந்தக்காலத்திலிருந்தே தாங்கள் ஒரு பாரதிதாசன் பக்தர் என்பதை நான் அறிவேன். பாரதிதாசனை முதன்முதலாக இலங்கை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவன் நான்தான் என்ற வகையில் எனக்குப்பெரும் மனநிறைவு உண்டு. பாரதிதாசனுடைய கவிதைநலன் பற்றிய எனது கட்டுரைகள் 1944ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தன. அதற்கு முன்பதாக யாரும் பாரதிதாசனைப்பற்றி இலங்கையில் எந்த ஒரு பத்திரிகையிலும் எழுதியதில்லை. எனவேதான் தாங்கள் பாரதிதாசனை ஆதரித்து எழுதிய கருத்துகளை விருப்போடு வெளியிட்டேன். எண்சீர் விருத்தங்களில் பாரதிதாசன் ஒரு மன்னன். அவர் பாணியில் தாங்கள் எழுதிய 'தலைமுடி இழைக்கும் வஞ்சம்' கவிதை அருமையாக அமைந்திருந்தது. கடந்த வாரம் சிந்தாமணியில் அது பிரசுரிக்கப்பட்டது. தங்கள் கவிதையில் மட்டுமின்றி, வசனந டையிலும் ஓர் அழகும் அமைதியும் இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்' (தமிழோவியன் கவிதைகள், 2000)

கவிதையை ரசிக்கும், கவிஞனை மதிக்கும் ஒரு பத்திரிகாசிரியன், அவருக்குத் தனிப்பட  கடிதம் எழுதி, 'தொடர்ந்து எழுதுங்கள்' என்று  ஊக்கம் தரும் புரவலன் -இளகிய மனதினன், நிமிர்ந்துயர்ந்த- எளிதில் யாரையும் அணுகவிடாத இரும்புக் கோட்டையாய்க் காட்சி தருபவரின் நெஞ்சினுள்ளே உறைந்திருக்கிறான் என்பதை இக்கடித வரிகள் கோலம் போட்டுக்காட்டுகின்றன.எனவேதான் அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஈழத்துக் கவிஞர்கள், பிராந்திய வேறுபாடுகளின்றி சுதந்திரன் என்ற பத்திரிகைத் தேரில் அணிவகுத்து நின்றிருக்கிறார்கள்.

ஐம்பதுகளுக்குப் பின்னரான ஈழத்துச் சிறுகதைகளின் வளர்ச்சியில் 'சுதந்திரன்' வீரகேசரி,  தினப்பதி,  சிந்தாமணி ஆகிய பத்திரிகைகள் கணிசமான பங்கினை வகித்திருக்கிறதெனில், அப்பெருமையை அட்டியின்றி எஸ்.டி.சிவநாயகத்திற்கு வழங்குதல் தர்மமாகும். அ.ந.கந்தசாமி, பிரேம்ஜி, சில்லையூர் செல்வராஜன், என்.கே.ரகுநாதன், அகஸ்தியர், டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கன், எஸ்.திருச்செந்தூரன், யாழ்நங்கை> எஸ்.பொன்னுத்துரை, ஈழத்துச் சோமு, மு.தளையசிங்கம், வ.அ.இராசரத்தினம், அ.ஸ. அப்துல்ஸமது, ஏ. பி .வி. கோமஸ், சிற்பி, நாவேந்தன், புதுமைலோலன், தாழையடி சபாரத்தினம், புதுமைப்பிரியை, என்.எஸ்.எம்.ராமையா, தெளிவத்தை ஜோசப்   என்று ஈழத்துச் சிறுகதைக்கு வடிவம் தந்த இலக்கியச் சிற்பிகளுக்கு  எஸ்.டி.சிவநாயகம் தாராளமாக இடம் தந்திருக்கிறார்.அதன் தொடர்ச்சி போன்று தினபதி பத்திரிகையில் 'தினம் ஒரு சிறுகதை' திட்டத்தை ஏற்படுத்தி, புதிய எழுத்தாளர்களுக்கு களம் அமைத்து, ஈழத்து இலக்கிய விளைச்சலுக்கு நாற்றங்கால் அமைத்தவர் அவர்.   

அத்துடன், பிரெஞ்சு, இத்தாலிய, இந்திய, மராத்திய, ஸ்பானிய, ஆங்கிலச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகளையும் தாங்கி 'சுதந்திரன்' வெளிவந்ததெனில், எஸ்.டி.சிவநாயகம் கொண்டிருந்த இலக்கியச் சிந்தனையின் வீச்சை அது வெளிப்படுத்தி நிற்கிறது.

வி.க, கல்கி கிருஷ்ணமூர்த்தி, சுத்தானந்த பாரதி, சாமிசிதம்பரனார், மு.வரதராசன்  ஆகியோரின் எழுத்துகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட  எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் சங்க இலக்கியக் கட்டுரைகளுக்கும் 'சுதந்திரன்' பத்திரிகையில் முக்கிய இடம் கொடுத்திருக்கிறார்.

நல்ல நூல்களைத் தேர்ந்து, 'நூல் விமர்சனம்' என்ற பிரிவில் தரமான விமர்சனங்களை வெளியிட்டிருக்கிறார். இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசியல் பத்திரிகைக்குள் இந்த மனிதர் என்னவெல்லாம் செய்யத் துணிந்திருக்கிறார் என்பதை நினைக்கையில் வியப்பேற்படுகிறது.

வடபுலத்து அரசியலை மையங் கொண்ட அரசியல் பத்திரிகையாக 'சுதந்திரன்' திகழ்ந்தபோதும், வாக்குரிமையும் குடியுரிமையும் பறிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் பிரச்னைகளைத் தலைப்புப்ச் செய்திகளாக, கட்டுரைகளாக  வெளியிட்டிருக்கிறார். வணக்கத்துக்குரிய பாதிரியார்களான டபிள்யு.எம்.பி. ஜெயதுங்க, சி.எச்.ரத்னாயக்க, எரிக் எல். ரொபின்சன் ஆகியோர் 'டைம்ஸ்' பத்திரிகையில் எழுதி வெளியிட்ட ஆங்கிலக் கட்டுரையை 'ராமசாமியின் உரிமைகள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார் என்றால், இந்த பத்திரிகைக்காரனின்  மனித உரிமை கோரும் விசால உள்ளத்தின் தெளிவு  பளிச்சிடுகிறது.

அத்துடன், பிரஜாவுரிமை சம்பந்தமான மேன்முறையீட்டு வழக்கு பிரிT கவுன்சில் விசாரணைக்கு வருகின்ற நிலையில், அந்த வழக்கை  முன்னின்று நடத்திய இலங்கை இந்திய காங்கிரசின் பொதுக்காரியதரிசி  கே.ஜி.எஸ். நாயருக்கு தேவைப்படும் பத்தாயிரத்துக்கும் அதிகமான நிதியினை வழங்கி உதவுமாறு 'நிதி உதவுக' என்று ஆசிரியத்தலையங்கம் தீட்டிய பெருமகன் எஸ்.டி.சிவநாயகம் ஆவார்.

ஒரு கட்சிப்பத்திரிகை இன்னொரு கட்சி நடத்துகிற வழக்கிற்கு நிதி தேடிக்கொடுக்க முன்வந்திருக்கின்றதென்றால், கட்சி வேறுபாடுகளை மேவிய இந்தஉயர் சிந்தனையை அரசியலில் விதைத்த பெருமகனாகவே அமரர் எஸ்.டி.சிவநாயகம் தெரிகிறார்.

வீரகேசரி மலையக எழுத்தாளர்களுக்கென நடத்திய முதலாவது சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழா பதுளையில் 1963இல் நடைபெற்றபோது பரிசளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றிஇ மலையக எழுத்தியக்கத்திற்கான தளத்தைச் செதுக்கிய மாமனிதராகவும் எஸ்.டி.சிவநாயகம் திகழ்கிறார். 

முஸ்லிம் மக்களின் உரிமையை மதித்து, இஸ்லாத்திற்கான இடத்தைத் தனது பத்திரிகையில் தர முன்னின்றவர் அவர்.1987இல் இலங்கையில்  பாடப்புத்தகத்தில்  நபி நாயகம்(ஸல்) அவர்களின் உருவப்படம் சித்திரிக்கப்பட்டிருப்பதை முன்னிறுத்தி, அப்புத்தகங்களை எரியூட்டி அழித்தமைக்கு 'தினபதி' செய்திகள் நிர்ணயமான பங்கினை வழங்கின.

'ஆணித்தரமான அரசியல் செய்திகளையும் துணிச்சலான கருத்துரைகளையும் தருவது தினபதி' என்ற மகுடத்தை எஸ்.டி.எஸ். மட்டுமே பொறித்துவைக்கும் தெம்பு கொண்டவர்.

தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் செய்திகளை எழுதுதல், வடிவமைத்தல் என்று நியமமான செய்திப்பாணியை எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் எவ்வாறு உருவாக்கினார் என்பதை அவருடைய எழுத்துப் பண்ணையில் உருவான ந.வித்தியாதரன் போன்ற பத்திரிகாசிரியர்கள் விரிவாகப் பேசுகிறார்கள். பத்திரிகை எழுத்துப் பாணியை வடிவமைத்து, பத்திரிகை எழுத்தாளர்களின் பேரணியை அவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார்.

அதனால்தான் சிறந்த பத்திரிகை எழுத்து என்பதை எங்காவது மிகமிக அருமையாககாண முடிகிறது.

எஸ்.டி.சிவநாயகம் சுதந்திரன் பத்திரிகையில் அமைத்திருந்த  'மாணவர் மன்றம்' பகுதியில்தான் எனது முதல் எழுத்து அமைந்தது. பல்கலைப்புகுமுக வகுப்புக்காலத்தில்,  எனது 'புதுமைப்பித்தனின் நம்பிக்கை வறட்சி' என்ற கட்டுரையும் , கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப்பச்சை' நாவல் விமர்சனமும் 'சிந்தாமணி'யில் வெளிவந்த கையோடு, ராஜ.அரியரத்தினம் அவர்கள் அவற்றைப் பாராட்டி, தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்து எனக்கு எழுதிய கடிதம் பத்திரிகைப்பணியை இலட்சியமாகவே வரித்துச் செயற்பட்ட இவர்களின் உன்னத நோக்கை வெளிப்படுத்தி நிற்கிறது.    

நாளும் தினமும் எழுத்தே வாழ்வு என்று வாழ்ந்து தீர்த்த பத்திரிகாசிரியர்களின் பணி தமிழர் சமூகத்தில் என்றும் கெளரவிக்கப்பட்டதில்லை. இந்நிலையில் அமரர் எஸ்.டி.சிவநாயகத்தின் நூற்றாண்டை நினவு கூர்ந்து, பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவருமான வே.இராதாகிருஷ்ணன் அவர்களது வழிகாட்டலில் எச்.எச்.விக்கிரமசிங்க அவர்கள் சிவநாயகத்தின் நினைவு முத்திரை வெளியிடும் பொறுப்பை ஏற்று, ஈஸ்வரன் ப்ரதர்ஸ் தெ.முருகேசுவின் அனுசரனையில்  பணியை மேற்கொண்டமை காலத்தால் நினைவு கூரப்படும்.  சோதிடக்கலையில் எஸ்.டி.சிவநாயகத்தின் ஞானம் அபூர்வமானது. பத்திரிகை எழுத்தின், தமிழ் ஒலிபரப்புக்கலையின் முன்னோடியான சோ.சிவபாதசுந்தரமே எனக்குத் தெரிய  நுட்பமான சோதிடக் குறிப்புகள் எழுத வல்லவர். மாலி நடத்திய 'அஞ்சல் ' சஞ்சிகையில் சோ.சி.யே ராசிபலன் எழுதிவந்தார்.

ஆயுர்வேத மருத்துவத்திலும் சிறந்த அறிவும் அனுபவமும் படைத்த எஸ்.டி.சிவநாயகம்  அந்தத் துறைக்கும் தனது பத்திரிகையில் உரிய இடத்தைக் கொடுத்திருக்கிறார்.

கவிதை, அரசியல், இலக்கிய அறிவு, இலக்கணத்தெளிவு, அறிஞர் தொடர்பு, சோதிடம், ஆயுர்வேத அறிவு, அஞ்சாமை, நேர்மை, ஆத்மஞானம், தன்னை முன்னிறுத்தாமை போன்ற அரிய குணங்களும் திறமையும் ஒருசேர ஒருவரிடம் பொதிந்து வருவது எப்போதாவதுதான்

சாத்தியமாவது. சிந்தாமணி பத்திரிகையில் எங்கள் மலைநாடு என்ற பகுதியை அமைத்து மலையக எழுத்தளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தவர். அவர் வீரகேசரியில் இணை ஆசிரியராக பணியாற்றிய 1960களில் முற்பகுதியில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் தோற்றத்திற்கும்இ மலையக சிறுகதை போட்டிகளுக்கும் தன் பெரும் பங்களிப்பை நல்கியவர். மலையத்தின் எழுர்ச்சி நாயகன் இர.சிவலிங்கத்தின் ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு அவரது சொற்பொழிவுகளை விரிவாக பிரசுரித்து மலையகத்தில் ஒரு இளைஞர் பட்டாளத்தை உருவாக்கிய பெரு மகன். 

இத்தகு பெருமைமிக்க சான்றோனின் நூற்றாண்டை நினைவுகூரும் அனைவரும் எதிர்காலத் தலைமுறைக்கு ஒளித்தீபம் ஏற்றி வைக்கும் அரும்பணியைச் செய்தவர்களாவர். 

மு.நித்தியானந்தன் 
லண்டன்

Comments