கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

'பணக்காரர்' எனப் பெயர் பெற்றிருப்பவரை பணம் படைத்தவர் என்றோ, 'ஏழை' எனப் பெயர் எடுத்திருப்பவரை ஏழை என்றோ எண்ணிவிட இயலாத ஒரு காலம் இது.  

பணக்காரப் பேர் வழியை மோப்பம் பிடித்தால் பயங்கரக் கடனாளி அல்லது அன்றாடம் காய்ச்சியாக இருப்பதைக் கண்டு பிடிக்கலாம்.  

அதே போல் ஏழை ஆசாமி ஒருவரைத் துப்பறிந்தால் அவர் வெளியில் தான் ஏழை! மற்றபடி கொழுத்த பணக்காரன்!  

பரம ஏழைபோல பாட்டுப்பாடி பஸ் பயணத்தில் யாசகம் கேட்பவனையோ, தெருவில் நின்று பிச்சை கேட்பவனையோ அல்லது வீட்டிற்கே வந்து கதவைத் தட்டுகிற ஆசாமியையோ பாவம் பார்த்து ஏதோ கொடுத்து அனுப்புகிறோம்.  

பெரிய ஏமாளிகள் நாம் என்பது இப்பொழுது அடிக்கடி ஊர்ஜிதம்!  

கடந்த மாதப் பிற்பகுதியில் தென்னிலங்கையில் ஒரு சம்பவம்.  

மாத்தறை மாநகரின் ஹக்மனைப் பிரதேசம். அங்கே பலகாலங்களாக யாசகம் கேட்டுப் பெற்று வாழ்நாளைப் போக்கிக் கொண்டிருந்த ஒரு மனிதன். திருமணமே செய்யாத தனிக்கட்டை. அவனுக்கும் அவனைப் படைத்தவனிடமிருந்து ஒரு நாள் அழைப்பு. அது, 2022பெப்ரவரி 12, அப்பொழுது ஆசாமிக்கு அகவை அறுபத்தைந்து தான் நெடுங்காலமாக வசித்த சிறிய குடிலுக்கு வெளியிலேயே வீழ்ந்து செத்துக் கிடந்தவனை யாரும் பொறுப்பெடுக்கவோ உரிமைகோரவோ இல்லாத நிலையில் அரசு காவலர்கள் (பொலிஸார்) பாரம் எடுத்து சேர்க்க வேண்டிய இடத்திற்குக் கொண்டு சேர்த்தனர்.  

பொது, மருத்துவ மனையின் பிரேத அறை  

அப்புறம் சட்டப்படி நடக்க வேண்டிய உடல் பரிசோதனை.  

உடைகளைக் களைந்தார்கள்.  

இரு புறத்து கால் சட்டைப் பைகளிலிருந்தும் வெளியில் வந்து வீழ்ந்தன பண நோட்டுகள்! பண நோட்டுகள்!  

நூறு இருநூறு இல்லை. ஆயிரம் ஆயிரமாக மொத்தம் மூன்றே முக்கால் இலட்சங்களுக்கு மேல்! (3,84860)  

ஏற்கெனவே இந்தச் சங்கதி தெரியாமல் போனதில் அக்கம் பக்கத்தாருக்குக் கை சேதம்.  

அப்படியும் அரச செலவில் தான் பிரேதம் மண்ணுக்குள் போனது! அவன் சேர்த்த பணம் உதவவில்லை. உதவ முடியாது. சட்டம் அப்படி!  

ஆசாமி சேர்த்த லட்சங்கள் அரச கருவூலத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் என்று நம்புவோம்!  

இந்த நிகழ்வின் பேரதிசயம் ஒன்றுண்டு:  

'ஏழை' - 'பிச்சைக்காரன்' 'யாசகன்' என்ற பெயர்களில் ஒரு லட்சாதிபதி 65வயது வரை வாழ்ந்து வீதியோரத்தில் செத்துக் கிடந்தது!  

இனிப்பு-1

ஒன்பதே மாதங்கள் பூர்த்தியான புதிய தமிழ்நாட்டு ஆட்சிபீடத்தில் முதல் அமைச்சராக வீற்றிருக்கும் கலைஞரின் மகனாரின் நிகழ்வுகள் ஒவ்வொன்னுறும் இனிப்பே!  

கிருமித் தொந்தரவுகள் எதிர்க்கட்சியினரின் ஏடா கூடங்கள், இந்திய ஆட்சியின் தலைமைப்பீடம் அளிக்க வேண்டிய ஆதரவில் தேக்கங்கள் என எல்லாவற்றையும் எதிர்கொண்டிருக்கிற ஒரு மனிதர் எழுத்தாளராய், நூலாசிரியராய் பரிணமித்தது எப்படி? எப்படி?  

நடந்து விட்டது 'கடந்த திங்கட் கிழமை' 28ல்!  

இதற்கு பத்து நாட்களுக்கு முன்பு நடந்த உள்ளூராட்சி நகராட்சித் தேர்தலில் வெற்றிக்கனி பறித்துச் சுவைத்தவாறு 'நான் உங்களில் ஒருவன்" எனக் கூறாமல் கூறி, அதே தலைப்பில், தனது 23ஆண்டுகால வாழ்க்ைக வரலாற்றை வழங்கி அதிசயப்படச் செய்திருக்கிறார் அவர்,  

முதல் பிரதி வெளியிட்டு, அதிதி உரையாற்ற விசேட விமானத்தில் ராஜீவ் சோனியா அருமந்தப் புதல்வர் ராகுல் காந்தி பறந்து வருகிறார். சிறப்புப் பிரதிகள் பெற்று நல்லாசிகள் வழங்க மலையாளக் கரையோரம் (கேரளம்) முதலமைச்சர் பினராயி விஜயன், ஏழில் கொஞ்சம் காஷ்மீரின் மேனாள் முதல்வர் ஃபாறூக் அப்துல்லா, பீகாரின் துணை முதல்வராக இருந்த தேஜஸ்வி யாதவ் என்றெல்லாம் பல பிரமுகர்களை சென்னை கண்டு களிப்புற்று திக்குமுக்கா.

ராகுல் காந்தி உதித்த உரையில் தமிழ்நாடு என்பது வெறும் 2வார்த்தைகள் இல்லை. 3ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. தமிழக மக்களிடம் அன்போடு பேசினால் நீங்கள் எதை வேண்டுமானாலும்   பெறலாம். கடந்த 3ஆயிரம் ஆண்டுகளாக யாராலும் எதையும் தமிழகத்தில் திணிக்க முடியவில்லை" என்ற பொழுது மெய்சிலிர்ப்பு. விழாவின் நிறைவாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்திபேசிய போது -  

"எத்தனை உயர் பொறுப்புக்கு வந்தாலும் நான் உங்களில் ஒருவன் தான். கருணா நிதிபோல் எனக்கு எழுதவும், பேசவும் தெரியாது.

அவரை போல எழுதும் முயற்சியில் ஒன்றுதான் என் சுயசரிதை புத்தகம். இந்தி ஆதிக்கத்தை தற்போதும் எதிர்த்து கொண்டு தான் இருக்கிறோம். கருணாநிதி அமர்ந்த நாற்காலியின் அமர்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.  

அரசியல் என்பது எனது இரத்தத்தில் கலந்தது. எனது சிந்தனை. செயல் அனைத்துமே கட்சிதான் என்பது என் சுயசரிதையை வாசித்தால் தெரியும்.  

திராவிட ஆட்சி முறைதான் எங்களது கோட்பாடு திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் எடுத்து செல்ல வேண்டும்.  

இவ்வாறு அவர் பேசினார்.  

ஒரு நூல் வைபவம் வரலாறு காணாத நிகழ்வாக நடந்து முடிந்ததற்கு மறுதினம் (மார்ச் -01) அந்த முதலமைச்சர் தன்னை பாராட்டி வாழ்த்துச் சொன்ன அத்தனை பேருக்கும்! இனிப்புகளை அள்ளி வழங்கினார்!  

அதற்குக் காரணம் உண்டு. 'அவரது 69ஆம் அகவை கொண்டாட்டம்! (1953 - மார்ச் -01).  

இந்த 69இல், 23ஆண்டுகால வாழ்க்கையில் அடைந்த இன்பதுன்பங்களை'யே "நான் உங்களில் ஒருவன்" எனப் பிறந்த நாள் கதம்பமாகச் சுவைக்கக் கொடுத்திருக்கிறார்.  

அவரைப் பாராட்டி வாழ்த்துகள் வழங்கி மகிழ்கிறது மூத்த பேனா. ஒரு முக்கிய அடிக்குறிப்பு;  

இருவாரங்களுக்குமுன் நடந்த தமிழக நகர்ப்புற, மாநகராட்சி, உள்ளாட்சித் தேர்தலில் நடந்த ஒரு பேரதிசயத்தை இன்றைய இனிப்பில் வழங்குவதாக இருந்தேன். இருப்பினும் கடந்த 04ம் திகதி நடந்த மேயர், துணைமேயர் 'மறைமுகத் தேர்வு'களிலும், சில அதிசயங்கள்! இரண்டையும் அடுத்த இனிப்பில்தர பொறுமை காக்க வேண்டும் அபிமானிகள் நன்றி .

Comments