பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள்

பதுளை மாவட்டத்தில் தற்போது தோட்ட மக்கள் குடியிருப்புகளுக்கும் காணிகளுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பசறை, கோனகலை தோட்டத்தில் மிக நீண்ட காலமாக மூன்று குடும்பங்கள் குடியிருக்கும் காணிகளில் அரச அலுவலகம் நிர்மாணிக்க தேவையென பசறை பிரதேச செயலாளரால் கேட்கப்பட்டுள்ளதுடன் அக்காணி அரசாங்கத்திற்கு உரியது என்ற அறிவித்தல்களும் வீடுகளிலும் ஏனைய இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. இதே தோட்ட கீழ்ப் பிரிவில் பல தொழிலாள குடும்பங்கள் நீண்ட காலமாக வசிக்கும் குடியிருப்புகளுக்கும் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. தெமோதர தோட்டத்தில் பாதை ஒன்று அமைக்க தொழிலாளர்கள் குடியிருக்கும் லயத்தை இடிக்க எல்ல பிரதேச செயலாளரால் பண்டாரவளை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1972ம் ஆண்டு அரசு பொறுப்பெடுத்துள்ள ஹப்புத்தளை நீட்வுட் தோட்டப் பாடசாலை காணியிலும் பிரச்சினைகள் தோன்றியுள்ளன.  

தனியாருக்கு உரித்தான காணியிலோ அல்லது வீட்டிலோ பத்து வருடங்கள் குடியிருந்தால் அவருக்கு அந்த காணியோ அல்லது வீடோ உரித்தாகக்கூடிய சட்டப்பொறிமுறைகள் உள்ளன. 2015ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பிரச்சாரக் கூட்டங்களில் ரணில் விக்ரமசிங்க பத்து வருடங்கள் குடியிருப்பவர்களுக்கு அந்த வீடு உரித்தாக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் அக்கட்சியின் நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்விடயம் சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.  

தொழிலாளர் இலங்கைப் பிரஜைகளாக இருந்தாலும் இதுவரைக்கும் ஏனைய சமூகங்களைப்போல் நமது நாட்டில் கிராமங்களோ அல்லது தமக்கென்று உரித்தான வீடோ அல்லது காணியோ இல்லாமல் தோட்ட லய அறைகளிலேயே நான்கு ஐந்து பரம்பரையாக தொடர்ந்து வாழ்கின்றனர். இதனால் இவர்களுக்கு வேலைத்தளமும் குடியிருப்புகளும் தொழில்செய்யும் தோட்டமேயாகும். தோட்டத்தை விட்டு வெளியில் செல்லாமலிருக்க வழிபாட்டுத் தளம், பாடசாலை, வைத்தியசாலை, பிள்ளை பாராமரிப்பு நிலையம், சலவை சலூன் வசதிகள், தபால் விநியோகம், பிறப்பு இறப்பு பதிவுகள் போன்றவைகளும் தோட்டங்களிலேயே மேற்கொள்ளப்பட்டன. பிரித்தானிய காலத்தில் உருவாக்கப்பட்ட விதி முறைகளின் எச்சசொச்சங்கள் இன்றும் வலுவாகவே உள்ளன. 

தோட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தருக்கு குடியிருக்க வீடுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தொழிலுக்கு இணையும்போது வழங்கப்படும் நியமனக் கடிதங்களில் வேலை நீக்கம் அல்லது வேலையை விட்டு விலகும்போது வீடு மற்றும் நிருவாகத்தால் வழங்கப்பட்ட தளபாடங்கள் போன்றவைகளை நிருவாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால், தொழிலாளர்களுக்கு நியமனக் கடிதமோ அல்லது வேறெந்த ஆவணங்களோ வழங்கப்படுவதில்லை,இவர்கள் வேலைக்குச் சென்று நிருவாகத்தால் வழங்கப்படுகின்ற தொழிலைச் செய்தால் சம்பளம், வேலைக்குச் செல்லாவிட்டால் சம்பளமில்லை. 

ஆகக்குறைந்தது தொழிலாளர்கள் வேலை செய்யும் நாட்களையும் அதற்குரிய சம்பள விபரங்களையும் தெரிந்துகொள்ள பண்டாரவளை, நயபெத்த தோட்ட, சென்ட் கத்தரின் டிவிசன் தொழிலாளர் சார்பாக 1973களில் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினால் நடாத்திய போராட்டத்தினால், இப்பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது, அதன் பின்னர் நீதிமன்றத் தீர்ப்பின்படி மேற்குறிப்பிட்ட விபரங்கள் சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுகின்றன. 1971ம் ஆண்டுக்கு முன்பு வேலை நீக்கம் செய்யப்பட்டால் அத்துமீறி குடியிருப்பதாகக் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டு லய அறையிலிருந்து அப்புறப்படுத்தப்படும் முறை 1971ம் ஆண்டின் 2ம் இலக்க தோட்டக் குடியிருப்பு சட்டத்தினால் நீக்கப்பட்டது.  

நீண்டகால தொழிற்சங்க கோரிக்கை மற்றும் போராட்டங்களினால் குடியுரிமை, கல்வி, வைத்தியசாலை, இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்பு போன்றவைகளில் பல முன்னேற்றங்கள் எற்பட்டவன்னமுள்ளன.எனினும்சுமார் 80வீதமானவர்கள் அதாவது தொழிலாளர், வயோதிபர், அரச ஊழியர், சாரதிகள், வாகன திருத்துனர், சுயதொழிலாளர், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோரும் தோட்ட லயன் அறைகளிலும் சிலர் தாங்களாகவே அமைத்துள்ள வீடுகளிலும் வாழ்கின்றனர். இந்த வீடுகளுக்கு எவ்வித காணி உறுதியோ அல்லது ஆவணங்களோ இல்லாமையால் அரச சலுகைகள் பெறுவதில் பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 2019ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தோட்டக் குடியிருப்புகளிலுள்ள கணிசமானவர்கள் போட்டியிட்டனர். அந்த அபேட்சகர்களின் தேர்தல் பிரசார காரியாலயத்திற்காக அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் அமைத்துக்கொள்ள கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர், உதவி தேர்தல் அதிகாரி, பொலிஸ் அதிகாரி ஆகியோர் அனுமதி வழங்கியும் தோட்ட அதிகாரியால் குடியிருப்புகள் தோட்டத்திற்கு சொந்தமானதால் வழங்கப்பட முடியாதென தெரிவித்து விட்டனர். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை ஒரு லயன் அறையிலிருந்து வேறொரு லயன் அறைக்கோ அல்லது வேறு தோட்டங்களுக்கோ மாற்றலாக்கிய சம்பவங்களும் உண்டு. 

தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் லயன் அறைகள் பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்டு சுமார் இரு நூற்றாண்டுகளாகின்றபோதும் அப்படிப்பட்ட அதிகமான லயங்கள் உடைந்து உருக்குலைந்து இருப்பதை இப்போதும் காணலாம்.

காணி சீர்திருத்தச்சட்டத்தின் பிரகாரம் தோட்டத்துறை அரசமயமாக்கப்பட்டப்பின் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் அரசாங்கம் பொறுப்பேற்ற தோட்ட நிர்வாகப் பொறுப்பு போன்றவைகளால் நிருவகிக்கப்பட்டன.

சுகாதார வசதி குறைபாடுகளுடனும் வறுமைக் கோட்டின் கீழும் வாழ்பவர்களில் அதிகமானோர் தோட்டமக்கள் என்பதால் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தால் தொழிலாளர் மற்றும் குடியிருப்பாளர் அனைவருக்கும் சுகாதாரம், தாய்-சேய் நலன், குடி நீர் விநியோகம், கழிப்பறை வசதிகள் தொழிலாளர் குடியிருப்பு போன்றவைகளின் அபிவிருத்திக்காக சமூக அபிவிருத்தி பிரிவு 1978ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீட்சியே பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு ஆகும்.   இந்த நிருவனத்தால் 1993களிலும் அதன் பிறகும் சுயமுயற்சி வீடமைப்புத் திட்டத்தால் ஏழு பேர்ச் காணியில் வீடொன்று அமைக்க 40ஆயிரம் ரூபா 15வருட தவணையில் செலுத்தும் கடனும் மற்றும் 45,200ரூபா நிவாரணமாகவும் வழங்கப்பட்டன. ஆனால்இப்படிப்பட்ட வீடுகளுக்கு உறுதி சம்பந்தமாக பல வேண்டுகோள்கள் முன்வைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காயின. 

இதைபோல் இ.தொ.காவின் லயன்களை சொந்தமாக்கும் திட்டத்தின் கீழ் 1994பெப்ரவரி 28என திகதியிடப்பட்ட தோட்டத் தொழிலாளர் லயங்களை சொந்தமாக்கும்; உரிமைச் சான்றிதழ் நுவரெலியாவில் 1994ஜூலை 17ம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன. இந்த உரிமைச் சான்றிதழ் அரச பெருந் தோட்ட யாக்கத்தின் தலைவரும் மக்கள் தோட்டஅபிவிருதிச் சபை பணிப்பாளர் ஆகியோரின் கையொப்பத்துடன் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் கலந்துகொண்டார். இச்சான்றிதழில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது   தோட்டத்தொழிலாளர் வீடமைப்புக் கூட்டுறவுச் சங்கத்துக்கு முகாமையாலும் தோட்டத் தொழிலாளர் வீடமைப்புக் கூட்டுறவாலும் இணைத்து மேற்கொள்ளப்படும் முறைப்படியான பருமட்ட செலவைப் பார்த்தல், வீடமைப்பு இருப்பு எடுத்தல் என்பவற்றுக்கும் அத்தகைய மாற்றுமியன்ற உத்தேசத்தை ஒழுங்குபடுத்தியதற்கும் அமைய, அவற்றோடு தொடர்புடைய அளவீடு மதிப்பீடு நடைமுறைகள் என்பவற்றை முடிவுறுத்தியதும் மாற்றிக்கொடுப்பதை இத்தால் பிரகடனப்படுத்துகின்றேன்.   

இதை அடுத்து, 2015ல் சம்பிரதாய முறைப்படி ஹட்டன் மற்றும் பண்டாரவளை நகரங்களில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில் 'பசுமை பூமி' என்ற சட்டரீதியான காணி உரிமை வழங்குவதற்கான பத்திரம் அரச பெருந்தோட்டத் தலைவர் நிகால் ரத்வத்தையின் கையொப்பத்துடன் குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டன. இந்த ஆவணத்தின் இரண்டாவது அட்டவனையில் 5ம் பந்தியில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.  

5. குறிப்பிட்ட காணிப்பகுதி தோட்டப் பணியாளர் இல்லம் கூட்டுறவு சங்கத்திடம் மட்டும் மாற்றப்பட முடியும். 

இந்திய அரசின் நிதியுதவியால் மத்தியமற்றும் ஊவா மாகாணத் தோட்டங்களில் நிர்மாணித்த வீடுகளும் பெருந்தோட்ட மனிதவள அமைப்பு, பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர் வீடமைப்புக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவைகளின் கூட்டு முயற்சியால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இந்திய-இலங்கை நட்புறவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி காலத்தில் வழங்கப்பட்ட உறுதிகளும் முறையானதாக இல்லை. 

தோட்டத் தொழிலாளர் வீடமைப்பு கூட்டுறவு சங்கம் 1993ஆண்டு நிறுவப்பட்டது. இது கூட்டுறவு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

வீடு மற்றும் அங்கத்துவம் சம்பந்தமாக கூட்டுறவு சங்க விதிகளில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:- 

நமது நாட்டில் தோட்டத் தொழிலாளர்களுக்காக அமைக்;கும் வீடுகளுக்கு மாத்திரம் கூட்டுறவு சங்கம் நிர்வகிப்பதாக தெரிவிக்கும்காரணம் என்ன என்பது புரியாத புதிராகும்.  

பலாத்காரமாக காணிகளைக் கைப்பற்றி வீடுகள் நிர்மாணித்தவர்களுக்கு வைபவ ரீதியாக உறுதிகள் வழங்கப்பட்டுகின்றன. நமது நாட்டில் கடந்த காலங்களில் கல்லோயா, மகாவலி, ஒரு இலட்சம், பத்து இலட்சம், பதிணைந்து இலட்சம், மாதிரி கிராமங்கள், எழுச்சிக் கிராமங்கள், கம்முதாவ, செவன போன்ற திட்டங்களில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிகள் போல் தோட்டத் தொழிலாளர்களுக்காக நிர்மாணித்த / நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளுக்கு உறுதிகள் வழங்கப்படுபதில்லை.  

சுமார் 30வருடங்களுக்கு மேலாக நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு சிரிமா-சாஸ்திரி ஒப்பந்தம் போன்றவைகள் மூலமாக குடியுரிமை கிடைக்கப்பெற்றதால் 1977ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட முடிந்தது. அதன்பின் 45வருடங்களாக பலர் தொடர்ந்து பலம் பொருந்திய அமைச்சர்களாகவும் அங்கத்தவர்களாகவும் இருந்தும் லய முறை ஒழிக்கப்பட்டு ஏனைய சமூகங்களைப்போல் வாழவைக்க முன்வராதது கவலைக்கிடமான விடயமாகும்.  

ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் மூலமாக தகவல்களை பெற்றுக் கொண்டது. 1994ம் ஆண்டிலிருந்து 2021.10.12மட்டும் 20,792வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு மற்;றும் கட்டுமானம் பூர்த்தியடையாத நிலையில் 1549வீடுகள் உள்ளதாகவும் இந்திய நிதி உதவியுடன் 3820வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிந்தது. இதன்படி மேற்குறிப்பிட்ட அமைச்சின் அறிக்கை மூலமாக 24,612வீடுகளே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த விபரங்களின் பிரகாரம் தோட்டமக்களின் வீட்டுப் பிரச்சினை தீர்விற்கு இன்னும் ஆகக்குறைந்தது 200வருடங்களாவது தேவை.

ஆ.முத்துலிங்கம்
ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்    

Comments