மலையகத்தில் மாண்பு பெறாத பெருந்தோட்டப் பெண்கள் | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தில் மாண்பு பெறாத பெருந்தோட்டப் பெண்கள்

உயர்தரம், சாதாரணதரம் கற்ற பெண்கள் கூட கொழுந்துபறிக்கும் தொழிலுக்குத் தள்ளப்படும் சூழ்நிலை குறித்து எவருமே கவலைப்படுவது கிடையாது. இங்கு சமூக எழுச்சிக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன

நாளை மறு நாள் (8ஆம் திகதி) சர்வதேச மகளிர் தினம். இதன் பின்புலமும், தாற்பரியமும், சிந்திய வியர்வை சொல்லும் சங்கதிகள் பாரில் பலருக்கும் தெரியாது. நமது நாட்டிலும் அதுதான் நிலைமை.  

15ஆம் நூற்றாண்டு முதல் இற்றைவரை சர்வதேசம் தழுவிய பெண்ணெழுச்சிப் போராட்டங்கள், தியாகங்கள், குருதிச் சிதறல்கள் யாவும் சேர்ந்து உறுதிமிக்க நெஞ்சோடு அமைப்பு ரீதியாக ஒன்று கூடும் அவகாசத்தை மகளிர் தினம் உருவாக்கித் தருகின்றது. அது சரி. வருடந் தோறும் மார்ச் 8ஆம் திகதியை மகளிருக்கான தினமாக ஏன்; தெரிவு செய்தார்களாம்? 

சுமார் 10இலட்சம் பெண்கள் அமைப்பு ரீதியாக ஒன்றுகூடி நடாத்திய போராட்டத்தினதும் உயர்த்தியாகத்தினதும் அடையாளமாகவே மார்ச் 8ஆம் திகதி மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 1911ஆம் ஆண்டு கொப்பன்ஹேகன் ஏற்பாடு என்று அழைக்கப்படும் உடன்படிக்கையின் பிரகாரம் டென்மார்க், ஜெர்மனி, ஒஸ்ரியா, சுவிஸ்லாந்து ஆகிய நாட்டுப் பெண்கள் ஒன்று திரண்டு நடத்திய எழுச்சிப் போராட்டம் ஆணாதிக்கவாதிகளின் கண்களில் மிரட்சியை ஏற்படுத்தியது. இதுவே சர்வதேச ரீதியில் மகளிர் மகத்துவம் பற்றிய புதிய பார்வையை உருவாக்கியது.  

இதன் ஆரம்பமாக 1700ஆண்டு காலக்கட்டத்தைச் சொல்லலாம். பெண் இனத்திற்கு எதிரான அடக்கு முறைகள் அரசோச்சிய 1789களில் பொறுமை இழந்து போன பெண்கள் பாரிஸ் நகரத்தில் ஒன்று கூடினார்கள.; ஆண்களுக்கு நிகராக சமத்துவம், தொழில் உரிமை, வாழ்வியல் உரிமையை வலியுறுத்தி 8மணி நேர வேலை நிறுத்தம் எனனும் தொனியில் போராட்டம் நடத்தினார்கள்.  

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற எண்ணம் முழு உலகிலும் பரவுவதற்கு இப் பிரெஞ்சுப் போராட்டம் களமமைத்தது. பெண்களின் சீற்றத்தை உள்ளபடியே உள்வாங்கிக் கொண்ட பிரெஞ்சு மன்னன் 14ஆம் லூயி 1878ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி பெண்களுக்கு வாக்குரிமையும் அரசு ஆலோசனை சபைக் குழுக்களில் அங்கத்துவமும் வழங்கி வைத்தான். இதுவே பின்னாளில் மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்த அடிப்படையாக அமைந்தது.  

இக்காலப் பகுதியில் மேரி வோர்ஸ்ட்ன் கிரராப்ட் (1759 - 1797) என்ற பெண்மணி பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண் கல்வி, பெண்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு சட்டம், பெண் வாக்குரிமை, மகளிருக்கான தேவைகளை வலியுறுத்தியதும் எழுத்துப் புரட்சியை செய்தார். மகளிருக்கு இவரது சிந்தனைகள் மனோதிடத்தை ஏற்படுத்தின. 1848ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் செனக்காபோல்ஸ் என்ற இடத்தில் மாபெரும் மாதர் மாநாடு ஒன்று நடைபெற்றது. இக்கால பகுதியிலேயே நியூயோர்க் நகர ஆடைத் தொழிற்சாலையில் கடமை புரிந்த 40ஆயிரம் பெண்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.  குறைந்த வேதனம், கூடிய வேலை, கடினமான வேலை நிபந்தனைகள் என்பவற்றுக்கு எதிரான போராட்டம் இது. பல நாடுகளுக்கும் பரவிய இப்போராட்ட அலை ஒட்டு மொத்த உழைக்கும் பெண்களின் உத்வேகத்தைக் கிளப்பியது. இதே போன்றதொரு போராட்டம் அதே நியூயோர்க் நகரில் 20ஆயிரம் பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்ட தொடர் வேலை நிறுத்தமாக மாறியது.  

ஆடைத் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் தொழில் உரிமைக் கோரி உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டார்கள். முள் மனம் கொண்ட முதலாளித்துவ சக்தி சதிசெய்தது. ஆலைக்கு தீ வைத்தது. அதில் 120பெண்கள் வெந்து கருகி சாம்பலாகிப் போனார்கள்;. 

இச்சோக நிகழ்வு வேகமாக பரவி முழு உலகத்தையும் துயரத்தில் மூழ்கடித்ததது. உலக நாடுகள் பலவும் உற்றுப் பார்க்கச் செய்த இச்சம்பவம் பெண்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய உரிமைகள் பற்றி உணர்வுபூர்வமாக சிந்திக்கத் தூண்டியது. இதன் நினைவேந்தலாகவே மார்ச் 8ஆம் திகதி அனைத்துலக பெண்கள் தினமாக பிரகடனம் செய்யப்படலானது. இதுவே மகளிர் தின வரலாற்றுச் சுருக்கம். பல போராட்ட நிகழ்வுகளை பதிவாகக் கொண்டதன் இறுக்கமாவே இத்தினம் கனம் பெறுகிறது. 

இதன் பின்னணியில் மகத்துவப்படுத்த வேண்டிய பெருந்தோட்டப் பெண்களின் யாதார்த்த நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிஞ்சுவது வருத்தம் மட்டுமே. வேலைக்கேற்ற கூலி, 6மணி நேர வேலை உத்தரவாதம் தொழில் பாதுகாப்பு கவசங்கள், சீருடை, தகைமைக்கேற்ற தொழில் வாய்ப்புகள், மேலதிக வருமான ஈட்டலுக்கான வசதி, சொந்தமாக காணி, வீடு, கௌரவமான அங்கீகாரம் கிடைக்கின்றதா? ஊஹும். பெருமூச்சு மட்டும்தான் எஞ்சுகிறது! 

இந்தப் பெண் தொழிலாளர்களின் நிலைமையை விட மிக மோசமான நிலைமையிலேயே பெருந்தோட்டப் பெண்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பெருந்தோட்டத் துறையில் 50சதவீத பங்களிப்பைக் கொண்டிருக்கின்றனர். இதில் குடும்ப வருமானம் கூட இவர்களின் உழைப்பை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயமாவது விசேட அம்சம். ஆனால் இந்த அர்பணிப்புக்கான கௌரவம் இவர்களுக்கு கிடைக்கிறதா என்பதே கேள்வி.  

இன்று, இலங்கை மகளிருக்காக அரசியலில் இட ஒதுக்கீடு, சிறப்பு சட்டங்கள் எல்லாம் நடைமுறையில் இருக்கின்றன. சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மத்தியில் விடுதலைக்கான அறைகூவல்களிலேயே இப்பெண் சமூகத்தின் தலைமுறைகள் கரைந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளிலும் தெற்காசிய நாடுகளிலும் பெண்களுக்கு அரசியல் சமஉரிமை மீதான நசுக்கல்கள் இடம்பெறும் நிலையில், இங்கு மலையகப் பெண்கள் சகல துறைகளிலும் அடக்கியொடுக்கப்படும் பெருந்தோட்ட கட்டமைப்புக்குள் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இந்த வட்டத்துகுள்ளேயே சுழல வேண்டிய கட்டாயத்தில் சமூக நிலை காணப்படுகிறது. 

இவர்களை தன்னம்பிக்கைமிக்க சமூகமாக மாற்ற வேண்டிய தேவை இருந்தும் அதை முன்னெடுக்க இங்கு யாரும் தயாரில்லை. இது மரபு ரீதியிலான பெண்ணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு. இங்கு மலையகப் பெண்களுக்கு சம உரிமை, அரசியலில் இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுவோர் இவர்களின் அடிப்படைத் தேவைகளே ஆட்டம் கண்டிருப்பதை கவனத்தில் கொள்வது இல்லை. வேலைத்தள வன்முறைகள், வீட்டு வன்முறைகள் இவர்களில் உளவியல் ரீதியாக ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை இவர்கள் புரிந்து கொள்வது இல்லை. 

உயர்தரம், சாதாரணதரம் கற்ற பெண்கள் கூட கொழுந்து பறிக்கும் தொழிலுக்குத் தள்ளப்படும் சூழ்நிலை குறித்து எவருமே கவலைப்படுவது கிடையாது. இங்கு சமூக எழுச்சிக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. தவிர மலையகத்தில் தாராளமாக அனுமதிக்கப்படடுள்ள மது பாவனைக்கான வசதிகள் சமூக, பொருளாதார சீர்கேட்டினை உருவாக்குவதன் அழுத்தங்களினால் முற்று முழுதாக ஆக்கிரமிக்குள்ளாவது மலையகப் பெண்களே. 

பிற மகளிர் தாம் வாழ்ந்து கொண்டே வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கும்போது மலையக பெண்கள் வாழ்வியலை சவாலாக எதிர்நோக்க வேண்டியுள்ளது. குடும்ப மட்டத்தில், சமுதாய ரீதியில் ஓரங்கட்டப்படும் போக்கே நிலவுகின்றது. பாரம்பரியம், கலாசார மரபு போன்ற அலங்கார வார்த்தைகளால் இவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவது உண்மை. இவர்களது உணர்வுகளுக்கு மதிப்பே இல்லை. 

இதுபற்றி அக்கறையின்றி வருடம் ஒருமுறை வரும் மகளிர் தினத்தில் மட்டுமே இவர்களை மாண்புபடுத்திப் பேசுவதும் ஆக்ரோஷமாக கோஷம் எழுப்புவதும் வழக்கமாகும். இவர்களை ஏமாற்றவே இந்த நாடகங்கள். நாளாந்த தொழில் ரீதியிலான பிரசினைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வாக்குகளுக்காக இவர்களைப் பயன்படுத்தும் தொழிற்சங்க அரசியல் சுரண்டல்கள் நிறுத்தப்படுவது முக்கியம். தமது சக்தியை உணர வேண்டியது கட்டாயம்.   

பன். பாலா

 

Comments