மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் தொடர்ந்தும் ஸ்திரமான நிலையில் அரசாங்கம்! | தினகரன் வாரமஞ்சரி

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் தொடர்ந்தும் ஸ்திரமான நிலையில் அரசாங்கம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதலைமையிலான அரசாங்கம் கடந்த வாரம்மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தில்தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச மற்றும் பிவித்துரு ஹெல உறுமயவின்தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதானமாகக் கொண்ட அரசாங்கத்தில் பல்வேறு கட்சிகள் பங்காளிகளாக உள்ளன. பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில் கட்சிகளின் தலைவர்கள் இருவருடைய அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இராஜாங்க அமைச்சராகவிருந்த சுசில் பிரேம ஜயந்த அமைச்சுப் பதவியில் இருந்து ஜனாதிபதியினால் அகற்றப்பட்டிருந்தார்.

இது மாத்திரமன்றி, அரசாங்கத்தில் அங்கம் வகித்த தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான ஜயந்த சமரவீர தனது இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அது மாத்திரமன்றி, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயகார அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கெடுக்கப் போவதில்லையென அறிவித்திருந்தார். இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளால் ஆளும் கூட்டணிக்குள் காணப்பட்ட கருத்து முரண்பாடு உச்ச நிலைக்குச் சென்றிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்ட விவகாரம் திடீரென முன்னெடுக்கப்பட்டதொன்றல்ல. கடந்த சில மாதங்களாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களே அரசை விமர்சித்து வந்தனர். குறிப்பாக கெரவலப்பிட்டிய அனல் மின்நிலைய அபிவிருத்தித் திட்டத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்குக் கையளிப்பதற்கு அரசு எடுத்த தீர்மானத்தை விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பகிரங்கமாக விமர்சித்திருந்தனர். அமைச்சரவைக் கூட்டத்திலும் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

அவர்களுக்கிடையில் ஏற்கனவே இருந்து வந்த கருத்து முரண்பாடு இதன் மூலம் பகிரங்கமானது. அன்றிலிருந்து அவர்கள் பொது இடங்களில் அரசாங்கத்தின் சில செயற்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கினர். இதனால் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருந்தனர். குறிப்பாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்களைக் கடுமையாக விமர்சித்து வந்தார். அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு விமர்சிப்பதை விட, பிடிக்கவில்லையெனில் அரசிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும் அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.

சாகர காரியவசம் மாத்திரமன்றி, அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க போன்றவர்களும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இவ்வாறான பின்னணியில் பொதுச் சந்தையொன்றுக்குச் சென்றிருந்த சுசில் பிரேமஜயந்த விலைவாசி அதிகரிப்புத் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அரசின் கொள்கைகளை விமர்சித்திருந்தார். இவர் கருத்துத் தெரிவித்து ஓரிரு தினங்களில் அவர் அமைச்சுப் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஏனையவர்களையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த வரிசையிலேயே கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை.

அதேநேரம், அரசாங்கத்துடன் கருத்து முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கியதிலிருந்து அரசில் அங்கம் வகிக்கும் 11பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பல தடவைகள் கூடிக் கலந்துரையாடியிருந்தனர். இவர்கள் இறுதியாகக் கூடி மாநாடொன்றை நடத்தியதுடன், நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான யோசனைத் திட்டமொன்றையும் முன்மொழிந்திருந்தனர். இதுவே விமல், கம்மன்பில போன்றவர்களுக்கு எதிராக ஜனாதிபதி திடீர் நடவடிக்கை எடுப்பதை துரிதப்படுத்தியிருந்தது.

நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து தமது அமைச்சுப் பதவிகளைப் பறிப்பதில் எவ்வித பயனும் இல்லை. தமது அமைச்சுப் பதவிகளைப் பறித்தமையால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தீரும் என்றால் அது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் செயற்பாடுகளால் தாம் அதிருப்தியடைந்திருப்பதாக அவர்கள் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தனர். அரசு தரப்பு மீது பலவிதமான விமர்சனங்களையும் அவர்கள் முன்வைத்திருந்தார். அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஆதரவான குழுவினருக்கும், அதற்கு எதிரான குழுவினருக்கும் காணப்பட்ட இழுபறி நிலையின் வெளிப்பாடாகவே இது அமைந்துள்ளது என அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுஜன பெரமுன கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றிருந்தது. இதில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களுக்கு தமது ஒத்துழைப்பு வழங்கப்படும் என்பதை பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த காலத்தில் தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நிதி அமைச்சர் வலியுறுத்தியிருந்த போதும், அவர்களுடன் பயணிக்க முடியாவிட்டால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயங்கப் போவதில்லையென்றும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.

அதேநேரம், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளைக் களைந்து ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையில் தற்போதைய அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதற்கு அதிக ஒத்துழைப்பை வழங்கி வரும் கட்சியான சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்திருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட 15அம்சக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருப்பதுடன், சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டுவதற்கு இணக்கம் தெரிவித்ததாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படும் எந்த எண்ணமும் தமக்குக் கிடையாது என விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். அமைச்சுப் பதவிகளை இழந்தமையால் வீரவன்சவுக்கும், உதய கம்மன்பிலவுக்கும் பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டிருந்த முன்வரிசை ஆசனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சாதாரண எம்.பிக்களுக்கான ஆசனங்களில் அமர்ந்திருந்ததையும் காணக் கூடியதாகவிருந்தது.

எதுவாக இருந்தாலும் பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்குக் காணப்படும் பெரும்பான்மையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஒருசிலர் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கம் இன்னமும் காணப்படுகிறது. மறுபக்கத்தில், பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளும் வலுவடைந்து காணப்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகள் தமக்கிடையிலான முரண்பாடுகள் குறித்து அக்கறை செலுத்தியிருக்கும் நிலையில் கொவிட்-19நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் மத்தியில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போதைய நிலையில் அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கமொன்றுக்குச் செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இவை வெறும் வதந்திகள் என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றாக இணைய வேண்டுமே தவிர தேசிய அரசாங்கம் அமைப்பது முக்கியமானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு எந்தவொரு தரப்பினரும் தனித்தனியாக நின்று தீர்வுகளை வழங்க முடியாது என்பதால் அனைவரும் தமது அரசியல் பேதங்களைக் கைவிட்டு ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

சம்யுக்தன்

Comments