முன்னுதாரணமாக திகழ்ந்த அமரர் எஸ்.டி.சிவநாயகம் | தினகரன் வாரமஞ்சரி

முன்னுதாரணமாக திகழ்ந்த அமரர் எஸ்.டி.சிவநாயகம்

இலங்கையில் ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாக பத்திரிகைத் துறையில் ஜாம்பவானாக வலம் வந்து, முத்திரை பதித்த அமரர் எஸ்.டி.சிவநாயகத்துக்கு ஞாபகார்த்த முத்தி ரையொன்றை வெளியிடுவது சாலப் பொருத்தமானதாகும். இதற்கான அனுமதியை வழங்கி, அமரரின் 50ஆண்டுகால ஊடகப் பணியை கௌரவிக்கும் முகமாகவும் 25வருட காலமாக சத்திய சாய்பாபா நிலையத்தின் ஸ்தாபகத் தலைவராக இருந்து அதை வழிநடத்தியமைக்காகவும் அரசாங்க ரீதியாக அங்கிகாரத்தை வழங்கிய ஊடகத் துறை அமைச்சர் டலஸ் அலகப்பெருமவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இம் முத்திரை வெளியீட்டு முயற்சியில் முன்னின்று உழைத்தவர்கள் இருவர். ஒருவர் முன்னால் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன். மற்றவர் மூத்த ஊடகவியலாளரான எச்.எச்.விக்கிரமசிங்க . வெளியீட்டு நிகழ்வை அதிகாரபூர்வமாக    நடத்தி வைக்க இன்று வந்திருப்பவர் அஞ்சல் திணைக்கள மேல்மாகாண பிரதி பணிப்பாளர் நாயகம் திஸாநாயக்காவுக்ககும் அவருடைய சக அதிகாரிகளுக்கும் எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

மூத்த பத்திரிகையாளராக நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகத் துறைகளில் பெரும் பணியாற்றியவர் அமரர் சிவநாயகம். பத்திரிகைத்துறையில் ஏனைய இளம் பத்திரிகையாளருக்கு ஒரு குருவாக, ஞானியாக விளங்கியவர் என்ற பாராட்டு அவருக்கு உண்டு. தரவு, தகவல், அறிவு, ஞானம் என்ற அறிவின் படிமுறை வரிசையில் உச்ச கட்டத்தில் இருப்பது ஞானம். பத்திரிகைத்துறையில் அனைத்தையும் உணர்ந்தவர்களுக்கு கிட்டுவது ஞானம். இதனால் அமரர் அவர்கள் பத்திரிகைத்துறை ஞானி என்ற பாராட்டைப் பெறுகின்றார்.

தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்தவர் அமரர் ஆர். சிவகுருநாதன் மூத்த பத்திரிகையாளர் டாக்டர் ஜின்னா செரிப்புத்தீன் காப்பியக்கோ பட்டம் பெற்றவர்,  பல்காப்பி யங்களை படைத்தவர். இவ்விருவருமே தமக்கு எழுத்துதுறை ஞான குருவாக அமரர் சிவநாயகத்தை வரித்துக் கொண்டவர்கள். நுணுகி நோக்கினால் இப்பட்டியல் மிக நீண்டது.

பத்திரிகை அச்சுத்து றையின் வரலாற்றில் மூன்று கட்டங்கள் பற்றிக் குறிப்பிடுவர். அச்சுக்களை கோர்த்தல், லினோ வகை அச்சு, கணினி Offset  அச்சு எனப்படும். மூன்று காலகட்டங்களிலும், பத்திரிகை துறையில் பணியாற்றி வரலாறு படைத்த ஒரு சிலருள் பிரதானமானவர் அமரர் எஸ்.டி.சிவநாயகம்.

அமரரின் பிள்ளைகள் எவரும் பத்திரிகைத் துறையை நாடவில்லை. பல பத்திரிகையாளர்கள் அமரரிடம் இதற்கான காரணத்தை கேட்ட போது 'சகல பத்திரிகையாளர்களுமே எனது பிள்ளைகளே' என அவர் பதில் வழங்கினார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இலங்கைப் பத்திரிகை வரலாற்றில் சுதந்திரமாக எழுத முற்பட்ட பல பத்திரிகையாளர்கள் மீது சக்திவாய்ந்தவர்கள் பாய்ந்த சந்தர்ப்பங்கள் உண்டு. அப்போதெல்லாம் அமரர் சிவநாயகம் துணிந்து நின்று அவர்களைப் பாதுகாத்தவர் என நாம் அறிந்ததுண்டு. பத்திரிகைகளில் உயர்ந்த பண்புத் தரத்தையும் நேர்மைத் திறனையும் உயர்ந்த கோட்பாடுகளையும் பேணி, முன்னுதாரணமாக திகழ்ந்தவர் ஆவார்.

தமிழரசுக் கட்சியின் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த காலத்தில், பரந்த தொலைநோக்குடன் தமிழ் மக்கள் மற்றும் விழிப்பு நிலை மக்களுக்காக குரல் கொடுத்தார். சிந்தாமணியிலும் தினபதியிலும் பணியாற்றிய காலத்தில் அவருடைய பத்திரிகைப் பாசறையில் வளரும் வாய்ப்பு பலருக்கு கிட்டியது.

சத்திய சாயிபாபா எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலிக்கும் இந்த புனித தலத்தில் இந்த முத்திரை நிகழ்வு நடைபெறுவது அவருக்கு கிடைக்கும் அதிகபட்ச கௌரவமாகும். இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பித்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசனுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

பத்திரிகைத் துறையோடு மக்களின் ஆன்மீக நலன் கருதி ஸ்ரீ சத்யசாயிபாபாவின் ஆசியுடன், கொழும்பு சாயிபாபா நிலையத்தை நிறுவி பல தசாப்தங்களாக மக்களுக்கு நல்வழி காட்டிய பெருமை பெற்ற பெருமகனாவார் அமரர் சிவநாயகம் அவர்கள்.

தொகுப்பு
சிவா ராஜஜோதி
உபதலைவர் சாய் மத்திய
நிலையம் - கொழும்பு

Comments