இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு உலகில் பெருமளவு நாடுகள் ஆதரவு | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு உலகில் பெருமளவு நாடுகள் ஆதரவு

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள்பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்த கலந்துரையாடல்கள்முடிவடைந்துள்ளன. இக்கலந்துரையாடல்களில் இருதரப்புகளின் கருத்துகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கை குறித்த கலந்துரையாடல்களில் தமக்கு வெற்றி கிடைத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கை பற்றிய கலந்துரையாடல்களில் கலந்து கொண்டிருந்த 45நாடுகளில், 31நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நேரடியாக ஏற்றுக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். மனித உரிமை விடயம் மற்றும் நல்லிணக்க செயற்பாடு உள்ளிட்டவற்றில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து சர்வதேசத்துக்கு முன்வைத்த விளக்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது. இதனை பெரும்பாலானவர்கள் அங்கீகரித்திருப்பதாக அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டார்.

சட்டச் சீர்திருத்தங்கள் உட்பட தேசிய செயன்முறைகளின் மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் கொவிட்-19தொடர்பான சவால்களைப் பொருட்படுத்தாமல் இந்த விடயத்தில் இலங்கை அடைந்து கொண்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றை உலகளாவிய அரசுகள் பாராட்டியுள்ளன.

தன்னார்வ தேசிய செயல்முறைகளை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச சமூகம் பாரபட்சமற்ற தன்மை, தேர்ந்தெடுக்காத தன்மை மற்றும் அரசியல்மயமாக்காமை போன்ற அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கிடைத்திருக்கும் இந்த வெற்றிக்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டமையே காரணம் என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். குறிப்பாக தன்னுடன் சென்ற இலங்கைப் பிரதிநிதிகள், ஜெனீவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திரகள் என அனைவரும் ஒன்றிணைந்த நிலைப்பாட்டில் செயற்பட்டமையால் சர்வதேச அரங்கில் எமது நாட்டுக்கான ஆதரவைப் பெற முடிந்தது என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை குறித்த அறிக்கை மீதான ஊடாடும் கலந்துரையாடல் கடந்த நான்காம் திகதி நடைபெற்றது. 46/1தீர்மானத்தை இலங்கை நிராகரிக்கின்ற போதும் மனித உரிமைகள் குறித்த சர்வதேச பணிப்பொறுப்புக்களைத் தன்னார்வத்துடன் நிறைவேற்றுவதற்கு சர்வதேசத்துடன் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக இங்கு உரையாற்றிய அமைச்சர் பீரிஸ் சுட்டிக் காட்டியிருந்தார்.

மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் முன்வைத்த அறிக்கையானது பலவீனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்த பேராசிரியர் பீரிஸ், அதன் ஊடுருவும் தன்மை சகிக்க முடியாதது எனச் சுட்டிக் காட்டியிருந்தார். ஆணையாளரினால் பயன்படுத்தப்படும் தரநிலைகளின் சீரான தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவை ஐக்கிய நாடுகளின் சகோதரத்துவத்தின் அனைத்து உறுப்பினர்களின் இறையாண்மை சமத்துவம் தொடர்பான அத்தியாவசியக் கொள்கையுடன் இறுதியான இணக்கமும் இந்த அறிக்கையில் உள்ள பல பகுதிகளில் குறைகண்டுபிடிக்கும் தன்மையில் அத்துமீறப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் உண்மையாக நடந்தவற்றின் சிக்கலான தன்மையை உணராமல், மேலெழுந்தவாரியான முடிவுகள் பல இந்த அறிக்கையில் இடம்பெற்றிருப்பது வருத்தத்துக்கு உரியது எனவும் இலங்கை, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு விளக்கிக் கூறியுள்ளது.

இலங்கை தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறியிருந்த நிலையில் சவுதி அரேபியா, சீனா, மாலைதீவு, ஜப்பான், ஈரான், பங்களாதேஷ், மாலைதீவு பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 31நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகத் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளன. கடந்த கால அமர்வுகளிலும் ஒரு சில மேலைத்தேய நாடுகள் இலங்கைக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் இலங்கையின் நட்பு நாடுகள் கரம் கொடுத்திருந்தன. இவ்வாறான பின்னணியில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல்கள் மனித உரிமைகள் பேரவையில் விசேட கவனம் செலுத்தப்படும் விடயமாக இருக்கின்ற நிலையில், இலங்கையின் விவகாரமும் ஓரளவுக்கு அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்பதே உண்மையாகும்.

மேலைத்தேய நாடுகள் தமக்கு சாதகமான ஆட்சியாளர்கள் அமையாத நாடுகளில் எப்பொழுதும் நெருக்கடிகளைக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்த வரிசையிலேயே இலங்கை மீதான அழுத்தத்தையும் பார்க்க முடியும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இலங்கை மீது சர்வதேசத்தின் நிலைப்பாட்டிலும், தற்போதைய நிலைநாட்டிலும் வித்தியாசம் இருப்பதைக் காண முடியும்.

இது இவ்விதமிருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்த அதிருப்தி தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் விளக்கிக் கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அடிப்படைவாதக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என ஆரம்பத்தில் கருதிய போதும், இத்தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் ரீதியான திட்டம் இருப்பது தற்பொழுது புலப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். விசாரணை நடவடிக்கைகள் திருப்தி தரும் வகையில் இல்லையென்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நீதமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கடூழியற் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் குரல் கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாந்து மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஜெனீவா சென்று இதற்காகக் குரல் கொடுத்து வருகின்றனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் ஹரீன் பெர்னாந்து தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார். ராமநாயக்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குரல் எழுப்பியிருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரீன், நாணயக்கார ஆகியோரின் ஜெனீவா சந்திப்புக்கள் இலங்கை தொடர்பான சர்வதேசத்தின் பார்வையில் தாக்கத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

பி.ஹர்ஷன்

Comments