மலையக பல்கலைக்கழகம்; ஜீவனின் சூளுரை வாகை சூடுமா? | தினகரன் வாரமஞ்சரி

மலையக பல்கலைக்கழகம்; ஜீவனின் சூளுரை வாகை சூடுமா?

2015ஆம் ஆண்டு பாரளுமன்றத்தில் கல்வி அமைச்சு மீதான வரவு செலவு திட்ட விவாதத்தின் போது அப்போதைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மலையக சமூகம் பல்கலைக் கழகம் ஒன்றைப் பெற வேண்டிய அவசியம் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விளாசித் தள்ளியிருந்தார். அவர் வெறும் வாய் வீச்சுக் காட்டவில்லை. ஆதாரங்ளோடு பேசினார்.  

அதில் அவர் முக்கிய விடயம் ஒன்றினைச் சுட்டிக் காட்டியிருந்தார். அதுதான் பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை. அப்போது பல்கலைக் கழகமா? பல்கலை கழக கல்லூரியா? என்று எதிர் அணியினர் எள்ளி நகையாடவே செய்தனர். ஆனால் பல்கலைக்கழக கல்Âரி பின்னர் பல்கலைக் கழகமாக மாற்றமடைந்த வரலாறு குறித்து திலகராஜ் சுட்டிக் காட்டியிருந்தார். அதுவும் ஒரு மருத்துவ கல்லூரி எப்படி இப்படி பல்கலைக் கழகமானது என்னும் விபரம் அவர் சொல்லியே பலருக்கும் தெரிந்தது. அதுவரை இவ்விடயம் பெரிய விடயமாக காணப்படவில்லை.  

1870களில் ஆங்கிலேய அரசாங்கம் மருத்துவ துறைசார் பாடசாலையாகவே இதனை ஆரம்பித்தது.1881இல் மருத்துவ கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டது. இங்கு கற்றவர்கள் பிரித்தானியாவில் பயிற்சிப் பெற தகுதி கண்டார்கள். 1913ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சி ஒரு பல்கலைக் கழக கல்லூரியை ஸ்தாபிக்க முடிவெடுத்தது. அதன் படி இம் மருத்துவ பாடசாலை கல்லூரியாக மாற்றப்பட்டது.1942ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக் கழகம் என்று அந்தஸ்து உயர்வு கண்டது. இது பற்றி சபையில் பிரஸ்தாபித்த திலகராஜ் இலங்கையில் முதலாவது பல்கலைக் கழக கனவு ஒரு தமிழராலேயே தோற்றம் பெற்றது. அந்த தமிழர் தான் சேர் பொன்னம்பலம் இராமநாதன் என்று கூறி வைத்தார்.  

கடந்த நல்லாட்சிக் காலத்தில் இது சம்பந்தமான நகர்வுகள் இடம் பெறுவது போல ஒரு தோற்றப்பாடு இருக்கவே செய்தது. பல்கலைக்கழக கல்லூரி அமைப்பதற்கான பொருத்தமான இடம் தேடப்படுவதாக கூறப்பட்டது. அமைச்சர்கள் பல இடங்களைப் பார்வையிடவும் செய்தார்கள். ஆனால் எதுவுமே ஆரம்பிக்கப்படவில்லை என்பதுதான் அபத்தம். இதே போது பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை,,வளக்குறைவு,போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் கூட முற்றாக களையப்படவில்லை என்பதையும் திலகராஜ் அப்போது கோடிட்டுக் காட்டியிருந்தார்.  

நாடு 1948இல் சுதந்திரம் அடைந்தது.. அரை நூற்றாண்டுகளைக் கடந்து பிற சமூக மாணவர்கள் இலவச கல்வியைப் பெற்று வருகின்றனர். ஆனால் காலம் தாழ்த்தி தான் மலையக மாணர்வர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலானது.1972களில் அனைத்து தோட்ட பாடசாலைகளும் அரசுடைமை ஆக்கப்பட்டதினால் இச் சந்தர்ப்பம் கிட்டியது. பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான தனிப் பிரிவு ஒன்று இயங்கி வருகின்றது. எனினும் தேசிய ரீதியாக வளங்கள் பெற்றுக் கொடுக்கும் போது விகிதாசார முறைமைப் பின்பற்றப்படுவது கிடையாது. உதாரணமாக ஒரு கல்வி வலயத்தில் 75சத வீதமான தமிழ்ப் பாடசாலைகளும் 25சத வீதாமான சிங்கள பாடசாலைகளும் இயங்கும் பட்சத்தில் வளப்பகிர்வின் போது 25சத வீதமான சிங்கள பாடசாலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதே நடைமுறையில் உள்ளது.  

இத்தனைக்கும் பெருந்தோட்டக் கல்வி வரலாறு நீண்ட பதிவுகளைக் கொண்டிருக்கின்றது. 1820களிலே இங்கு கட்டாயக் கல்விச் சட்டம் நடைமுறையில் இருந்தது.1839ஆம் ஆம் ஆண்டு தோட்டப் பாடசாலைகளின் பாடத்திட்டம் சுதேச கல்விக்கு அப்பாலும் விரிவுபடுத்தப்பட்டது.1947இல் கூட மலையக கல்வி மேம்பாடு சம்பந்தமான ஒரு சட்டம் கொண்டு வரப்படலானது. இதன்படி தோட்டத் தொழிலாளரது பிள்ளைகள் கல்வி கற்பதற்காக தரமான கட்டிடம் வழங்கல், தலைமை ஆசிரியருக்கான விடுதி, பாடசாலை தோட்டத்துக்குத் தேவையான இடம், விளையாட்டு மைதானத்துக்காக ஒரு ஏக்கருக்கும் குறையாத காணி ஒதுக்கிடல் போன்ற அம்சங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. எனினும் இதனை நடைமுறைப்படுத்த தோட்டத் துரைமார் சங்கம் மறுத்துவிட்டது. இதே போன்றதொரு இடைத் தடை நிலைமையே இப்போதும் கூட மலையக கல்வி அபிவிருத்தி சந்தித்துக் கொண்டிருக்கின்றது.  

பௌதீக வளம் பூரணப்படுத்தாமை, ஆசிரியர் பற்றாக்குறை என்பன கற்றல் ,கற்பித்தல் நடவடிக்கைகளில் குந்தகம் ஏற்படுத்துகின்றது. தவிர உளவியல் ரீதியிலான தாக்கங்களையும் உற்பவிக்கின்றது. இதன் காரணமாகவே ஒப்பீட்டளவுவில் பிற சமூக இன மாணவர்கள் பெறும் கல்வி தேர்ச்சி மட்டத்தை அடைய முடியாத படி தடை ஏற்படுகின்றது. இன்றும் கூட மலையக பாடசாலைகளை தோட்டப் பாடசாலைகளாகவே எடைபோடும் கல்வி துறைசார் அதிகாரிகள் சிலர் இருக்கவே செய்கின்றார்கள்.  

மலையகத்தில் அரசியல் செயற்பாடுகள் ஆரம்பமாகி வருடங்கள் பல ஆகின்றன. தேர்தல் காலத்தில் பேரம் பேசும் அரசியல் தலைமைகள் இருக்கின்றன. மலையக கல்வி குறித்து போதிய அக்கறையின்றி காணப்படும் அரசியல் பிரமுகர்கள் தான்தோன்றித்தனமாக இயங்குவதால் அரசாங்கத்தில் அரசியல் அதிகாரம் பெறும் நிலையிலும் கையாலாகாதவர்களாகவே காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். உயர் கல்விக்கான ஒரு நிறுவனத்தின் தேவையை அரசியல் மயப்படுத்தி ஆதாயம் காண எத்தனிக்கின்றார்கள்.  

மலையகததுக்கு ஒரு பல்கலைக் கழகம் அவசியம் என்பதில் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இ.தொ.காவுக்கும் இடையில் ஏகோபித்த கருத்தே இருக்கின்றது. எனினும் எங்கே அமைப்பது என்னும் இடத் தெரிவில் அரசியல் ஊசலாடுகின்றுது. முன்னைய ஆட்சியில் முடியாமற் போனமை இந்த ஆட்சியில் இதுவரை மௌனம் காத்தமை எல்லாம் ஏமாற்றத்தை தரவே செய்தது.  

அதனை ஆசுவாசப்படுத்துவது போல இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் குரல் பதிவிட்டுள்ளார். மலையகத்துக்கு தனியான பல்கலைக் கழகம் அமைப்பதற்குப் பொருத்தமான காணியைத் தேடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் நினைத்திருந்தால் எங்காவது கட்டிடத்தை, பல்கலைக் கழகத்தை அமைத்திருக்கலாம். ஆனால் எமது நோக்கம் அதுவல்ல. அனைத்து வசதிகளையும் கொண்ட பல்கலைக் கழகத்தை அமைப்பதே எமது நோக்கம். அதனை நிறைவேற்றியே தீருவோம். மலையகத்துக்குப் பல்கலைக்கழகம் வரும். அது இ.தொ.காவினாலேயே உருவாக்கப்படும். அதனைத் தடுக்க முடியாது என்று கூறியிருந்தார் ஜீவன் தொண்டமான்.  

இது சாத்தியமாகும் பட்சத்தில் எவருக்கும் தடுக்க வேண்டிய தேவை இருக்காது. ஏனெனில் மலையக சமூகத்தின் ஆய்வுக்குரிய உயர் கல்வி நிறுவனமாக பல்கலைக் கழகம் அவசியம் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்திய அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் இப்போதைய மலையக அரசியல் அரங்க தலைமை ஒருங்கிணைப்பாளருமான எம். திலகராஜ் முதலில் பல்கலைக்கழக கல்லூரியிலிருந்தாவது அந்த வாய்;ப்பைப் பெற்றுத் தாருங்கள் என பவ்வியமாகவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.  

மனம் இருந்தால் இடம் ஒரு பிரச்சினையாக இருக்க முடியாது. இதேவேளை மலையக பாடசாலைகளில் அபிவிருத்திக்கு ஆப்பு வைக்கும் சமாச்சாரங்களை களைய ஆவன செய்ய வேண்டியது மலையக பிரதிநிதிகளின் கடப்பாடு. ஒரு சிலரைத் தவிர பல பிரதிநிதிகள் மௌன விரதிகளாகவே பாராளுமன்ற நேரத்தைச் செலவிடுகின்றார்கள். மாகாண தமிழ் கல்வி அமைச்சுகளை மத்திய மாகணத்திலும் ஊவா மாகாணத்திலும் ஏற்படுத்தி மலையகக் கல்வி நிலையை உயர்த்தும் வாய்ப்புகள் முன்னர் கிடைத்திருந்தன.  

1988ஆம் ஆண்டு முதல் மாகண சபை நிர்வாகத்தின் கீழ் மத்திய, ஊவா, சப்பரகமுவ மாகாணங்களின் தமிழ் மொழி மூல பாடசாலைகள் மாகாண தமிழ் கல்வி அமைச்சு என்றொரு தனிப்பிரிவின் மூலமே இயங்கி வந்தன. ஆனால் அண்மைக் காலங்களில் அந்த வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.  

இவ்வாறான பின்புலத்திலேயே மலையக பல்கலைக்கழக கனவு இன்னும் நனவாகாமலேயே இருந்து வருகின்றது. உடனடியாக ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்குவதில் சிரமங்கள் இருக்குமாயின் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் யோசனைப்படி ஒரு பல்கலைக்கழக கல்லூரியையாவது அமைத்து தர ஆவன செய்வாரா ஜீவன் தொண்டமான்? காரணத்தைக் கற்பித்துக் காலத்தைக் கடத்துவதை விட கிடைத்ததை வாங்கி வளர்ச்சியை நோக்கி வீறு நடை போடலாமே! அல்லது முழுமையான ஒரு பல்கலைக் கழகத்தை முறையாக பெற்றுத் தந்து அரசியலில் வெற்றி வாகை சூடலாமே!  

பந்து என்னவோ ஜீவன் பக்கம். பார்ப்போம் பொறுத்திருந்து ஆட்டநாயகன் அவரா என்று!    

பன். பாலா     

Comments