ஷம்ஸின் எழுத்துக்கள் சமூக உணர்வும் தீட்சண்யமான பார்வையும் கொண்டவை | தினகரன் வாரமஞ்சரி

ஷம்ஸின் எழுத்துக்கள் சமூக உணர்வும் தீட்சண்யமான பார்வையும் கொண்டவை

பிரபல  எழுத்தாளரும் கவிஞருமான   எம்.எச்.எம். ஷம்ஸின் 82ஆவது பிறந்ததினத்தையொட்டி (17.03.1940 -  17.03.2022) இக்கட்டுரை பிரசுரமாகிறது.

எழுத்தாளர்  என்ற கருத்தின் எல்லாப் பரிமாணங்களுக்கும் வாழும் அர்த்தமாக எம். எச்.  எம். ஷம்ஸ் விளங்கினார். எழுத்து அவரது வாழ்க்கையும் நம்பிக்கையுமாகும்.  அதை அவர் தனக்காக மட்டுமன்றி சக மக்கள் பிரிவினரோடு பகிர்ந்து கொள்ளவும்  பல்துறை எழுத்தாற்றல் உள்ளவர்களை உருவாக்கவும் தனது நேரத்தை செலவிட்டார்.  இளைய தலைமுறை எழுத்தார்வம் உள்ளவர்களை அவர் களது எழுத்துத் துறை எதைச்  சார்ந்த தாக இருந்தாலும் அதை வளர்த்து மக்கள் மன்றத்திற்கு கொண்டு வரும்  வரை அவர்களுக்கான ஆலோசனை களையும் உதவிகளையும் வழங்குவதில் தொடர்ச்சியாகச்  செயல்பட்டார்.

எம். எச். எம். ஷம்ஸின் அகால மரணத்தினால் எழுத்துலக  மற்றும் பத்திரிகை உலக செயற்பாடுகள் ஸ்தம்பித்தது போன்ற ஒரு உணர்வு பரவியதை  ஷம்ஸை அறிந்தவர்கள் பெற்றனர்.

ஷம்ஸ் எப்போதுமே ஒரு வேறுபட்ட  தனித்துவமான எழுத்தாளராக மிளர்ந்தார். பயமோ தயக்கமோ அவரது எழுத்துக்களில்  என்றுமே இருந்ததில்லை.அவரது எழுத்துக்கள் அந்தளவு சமூக உணர்வும்  தீட்சண்யமான பார்வையும் எதிரிகளின் சலசலப்புக்கு அஞ்சாத மனநிலையும்  கொண்டவையாக இருந்தன.

ஷம்ஸைப் போன்ற ஒரு எழுத்தாளரை சமூகம் மிக நீண்ட  கால இடைவெளிக்குப் பின்னர்தான் பெற முடியும். அவர் வாழ்ந்திருந்ததை விட  அவரது முக்கியத்துவத்தையும் தேவையையும் அவரது இழப்பு பன்மடங்காக்கி உள்ளது.

சிங்கள  – தமிழ் மக்களிடையே புகழ்பெற்ற வெண்புறாவே பாடலும் அவரது சமாதானப்பற்று  மற்றும் போர் எதிர்ப்புப் பாடல்கள் கொண்ட ‘மானுட கீதம்’ (2004) நூலும்  அவரின் மானுட நேசத்தின் மிகப் பெரும் நினைவுகளாக அவரது பெயரை மறையாது  பாதுகாக்கும்.

ஷம்ஸின் எழுத்து முயற்சிகள் 1950களில் ‘தென்மதி’ என்ற  கையெழுத்துச் சஞ்சிகையில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. இக்காலப் பகுதி அவரை  எழுத்துத் துறைக்குத் தூண்டியது மட்டுமன்றி இக்காலப் பகுதியின் உள்நாட்டு  வெளிநாட்டு அரசியல் நிகழ்வுகளும் அவற்றின் தாக்கங்களும் அவரை வெகுவாகப்  பாதித்திருந்தன. குறிப்பாக 1956ஐ அண்மித்த காலப் பகுதி இளைஞர் ஷம்ஸின்  எதிர்காலத்திற்கான சிந்தனை ஓட்டங்களுக்குக் கால்கோள் இடுவதாக அமைந்தது.  மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எகிப்தில் நடந்த நாசரின் எழுச்சி,  வியட்னாமிற்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆசிய ஆபிரிக்க நாடுகளின்  காலனித்துவ ஆதிக்கம், அந்த நாடுகளின் விடுதலை வேட்கை, சோவியத் நாட்டினதும்  சீனாவினதும் கியூபாவினதும் சோஷலிச கொள்கைகள், பலஸ்தீனப் பிரச்சினை,  மார்க்சிய சிந்தனைகள் என்று அவரது எதிர்காலத்திற்கான சிந்தனைத் தளங்கள்  பதிவு பெற்றன.

ஷம்ஸ் ஒரு பத்திரிகையாளராக இருந்ததும் தேசியப்  பத்திரிகைகளில் அவருக்கு இருந்த தொடர்புகளும் அவரது செல்வாக்கிற்கும்  மக்கள் தொடர்பிற்கும் பக்கபலமாக விளங்கின. குறிப்பாக தினகரனில் 1997ல்  ஆரம்பமாகி பல வருடங்கள் இளைஞர்களின் இலக்கிய வளர்ச்சிக் காக அவர் நடத்திய  ‘புதுப்புனல்’ அவரது புகழுக்கும் இலக்கிய பரப்புகைக்கும் உறுதுணையாக  அமைந்திருந்தது. அதை அவர் எவ்வளவு பெரிய இலட்சியத்துடனும் வெறியுடனும்  நடத்தினார் என்பதற்கு அதனால் பலன் அடைந்த நூற்றுக் கணக்கான இளைஞர்கள்  அதற்குச் சாட்சி பகர்வார்கள். ஷம்ஸ் எழுதியவை கவிதையானாலும்  சிறுகதையானாலும் நாவல்களானாலும் அதில் சமூக யதார்த்தம், சமூக மாற்றம்,  சாதாரண மனிதனின் அவலத்தின் வெளிப்பாடு என்பனதான் பிரதான பண்புகளாக  அமைந்திருந்தன. 1965களில் வெளிவந்த ஏ. ஏ. லத்தீபின் ‘இன்ஸான்’ பல முஸ்லிம்  எழுத்தாளர்களின் இலக்கிய பட்டறையாக மட்டுமல்ல சமூக யதார்த்தம் சமதர்ம  சிந்தனை மனித நேயம் என்பவற்றின் அடிப்படையில் இருந்து இலக்கியம் படைக்கும்  புது அலைப் படைப்பாளிகள் பலரை அது தோற்றுவித்தது. அதன் மூலமும் அதே காலப்  பிரிவிலும் எழுதிய அநேக இளம் முஸ்லிம் எழுத்தாளர்களின் இலக்கிய பிரவேசம்  முஸ்லிம் இலக்கிய பாரம்பரியத்திற்கும் ஒரு பொது நோக்கில் தமிழ் பேசும்  இலக்கிய உலகிற்கும் புது இரத்தம் பாய்ச்சுவதாக அமைந்தது.

1972இல்  வெளிவந்த வை. அகமதின் ‘புதிய தலைமுறைகள்’ போன்ற சில நல்ல நாவல்கள்  வரிசையில் ஷம்ஸின் கிராமத்துக் கனவுகளுக்கும் முக்கிய இடமுண்டு. அது தான்  வாழும் தென் பிரதேசத்தின் மண் வாசனையோடும் இயல்பாக மக்கள் வாழ்வில் எழும்  பிரச்சினைகள் மோதல்கள் என்பவற் றோடும் அதேவேளை செல்வந்தர்கள் வறியவர்கள்  அல்லது அடித்தட்டு மக்கள் என்ற வர்க்க மோதல்களுக் கிடையிலும் சமய ரீதியான  கருத்து மோதல்களுக்கிடையிலும் பிரச்சினை களைச் சந்தித்த ஒரு கிராமத்தின்  வாழ்வு ஷம்ஸின் நாவலில் பதிவு செய்யப்பட்டது.

ஷம்ஸ் தனது தென் மாகாண  முஸ்லிம் கிராமங்களின் கடந்த தலைமுறையினரின் வாழ்வை சமூக யதார்த்தப்  பார்வையோடு சித்தரித்து அது பற்றிய உண்மையான பதிவுகளை நம்முன் நாவலாக  படைத்துள்ளார். ஒரு எழுத்தாளனிடம் இருந்து ஒரு சமூகமும் இலக்கிய உலகும்  எதிர்பார்க்கும் ஒரு உயர்ந்த பணியை தனது ‘கிராமத்துக் கனவுகள்’ மூலம் ஷம்ஸ்  நிறைவேற்றினார்.

எம். எச். எம். ஷம்ஸ் எந்தளவு இலக்கியவாதியாக  இருந்தாரோ அதேயளவு சமூக சீர்த்திருத்த மற்றும் புரட்சிகர உணர்வுகளின்  சொந்தக்காரராகவும் இருந்தார். அவரை முழுமையாகப் பார்ப்பது அவ்வளவு  இலகுவானதல்ல. அவர் பற்றிய விரிவான தகவல் சேகரிப்பும் அவரது எழுத்துக்கள்  பற்றிய விரிவான மதிப்பீடும் சாத்தியமாகும் போது அவரைப் பற்றிய பல்பரிமாண  அளவீடு சான்றுகளுடன் முன்வைக் கப்படும் நிலை உருவாகும் என  எதிர்பார்க்கலாம்.

பேராசிரியர்
எம்.எஸ்.எம். அனஸ்
(நாச்சியாதீவு பர்வீனின் நூல்வெளியீட்டு விழாவொன்றில்  ஆற்றிய உரையிலிருந்து)

Comments