இலங்கைக்கு என்றும் உதவும் 'மூத்த சகோதரன்' இந்தியா! | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைக்கு என்றும் உதவும் 'மூத்த சகோதரன்' இந்தியா!

இலங்கையின் 'மூத்த சகோதரன்' என்றுஇந்தியாவை முன்னொரு காலத்தில் நமது நாட்டவர்கள்பெருமையாகக் கூறுவதுண்டு. அதற்கான காரணம் இல்லாமலில்லை. இலங்கைக்கு எவ்வகையான ஆபத்தும், நெருக்கடியும் நேருகின்ற வேளையிலும் இந்தியா ஓடோடி வந்து கைகொடுத்துஉதவுவது வழக்கம். அதன் காரணமாகவே இலங்கையில் மூத்த சகோதரனாக இந்தியாவை அன்றைய நாட்களில் மக்கள்பெருமையாகக் குறிப்பிட்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான நட்புறவுகள் வரலாற்று ரீதியாக நிலவி வருகின்றன. பண்டைய மன்னராட்சிக் காலம் தொட்டு இந்த நட்புறவு நிலவி வருகின்றது. இலங்கை_ இந்திய மன்னர்களுக்கிடையே பண்டைய காலத்தில் நெருக்கமான நட்புறவுகள் நிலவி வந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலவிய வேளையில் இங்கிருந்த மன்னர்கள் இந்திய மன்னர்களிடம் நட்புரீதியில் உதவிகள் கோரியுள்ளனர். அவ்வேளையில் தென்னிந்திய மன்னர்கள் படைகளை அனுப்பி உதவி புரிந்துள்ளனர்.

அதேபோன்று தென்னிந்திய மன்னர்கள் சிலருக்கு அந்நாளில் இலங்கை அரசர்கள் உணவுத் தேவைக்கான பெருமளவு நெல்லை அனுப்பி  வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. நட்புறவு ரீதியாகவே இந்த உதவிகளை இலங்கை மன்னர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறான நட்புறவு வரலாற்று ரீதியாக தொடர்ந்தபடி வந்துள்ளது. இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் ஜே.வி.பியினர் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு நாட்டைக் கைப்பற்றுவதற்குத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்களது திட்டத்தை முன்கூட்டியே அறிந்து கொண்ட அன்றைய அரசு ஜே.வி.பியினரின் பயங்கரவாதத்தை அடக்கியது.

அன்றைய இந்த நெருக்கடி வேளையில் இலங்கைக்கு உடனடியாகவே கைகொடுத்து உதவ இந்தியா தயாராக இருந்தது. இதே போன்றுதான் இலங்கையில் புலிகள் இயக்கத்தின் தீவிரவாதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் இந்தியா தனது பங்களிப்பை அன்று வழங்கியிருந்தது.

இவையெல்லாம் இந்திய_ இலங்கை நட்புறவின் அடையாளங்களாகும். இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுகின்ற எந்த வேளையிலும் இந்தியா கைகொடுப்பதற்கு தயங்கப் போவதில்லை என்பதையே இந்த வரலாற்று நிகழ்வுகள் எமக்கு உணர்த்துகின்றன. நெருக்கடி வேளையில் தோள்கொடுக்கும் தனது நட்புறவுக் கொள்கையில் இருந்து இந்தியா என்றுமே பின்வாங்கியதில்லை என்பது இன்றைய காலத்திலும் நன்கு புரிகின்றது.

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. உலகளாவிய கொவிட் பெருந்தொற்றினால் எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி இதுவாகும். எரிபொருள் பற்றாக்குறை, மின்சார தயாரிப்புக்கான செலவினம், அன்றாட பாவனைப் பொருட்களின் விலையேற்றம் என்றெல்லாம் இலங்கை பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது.

உள்நாட்டுப் பொருளாதாரத்தை சீரமைத்து முன்னைய நிலைமைக்கு மீண்டு வருவதாயின் இலங்கைக்கு சில காலம் தேவைப்படுமென்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும். ஆனால் அதுவரை இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளித்தபடி சென்று கொண்டிருக்க முடியாது. அவசரமான கடனுதவிகளின் மூலமே இன்றைய நெருக்கடியில் இருந்து இலங்கையினால் விடுபட முடியும்.

தற்போதைய இக்கட்டான நிலைமையில் இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியுள்ளது. இந்தியா இப்போது இலங்கைக்கு வழங்கியுள்ள கடனுதவியை வரலாற்று ரீதியான நட்புறவின் முக்கிய அடையாளமாகவே நாம் கருத வேண்டும். 'பிக் பிரதர்' என்ற மூத்த சகோதரன் நிலைமையில் இருந்து இந்தியா ஒருபோதுமே பின்வாங்கப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை இலங்கைக்கு இந்தியா இப்போது வழங்கியுள்ளது. இலங்கையை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கும், மருந்து, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் இந்தியா இந்த ஒரு பில்லியன் டொலர் கடனை கடந்த வியாழனன்று வழங்கியது.

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவரும் 'வீடியோ கொன்பரன்ஸ்' வாயிலாக கடந்த மாதம் பேச்சு நடத்தியிருந்தனர். இதையடுத்து இலங்கை அரசு எரிபொருள் கொள்முதல் செய்ய 3750கோடி ரூபா(இந்திய நாணயப் பெறுமதி) உதவித் தொகையை அளிக்க இந்திய அரசு அப்போது ஒப்புக் கொண்டிருந்தது.இந்நிலையில் இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கி_ இலங்கை அரசு இடையே கடன் உதவிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்டும் வகையில், இந்தியாவுடன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ புதுடில்லி சென்றிருந்தார். இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ, மத்திய அரசுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதனையடுத்தே இந்திய கடனுதவி கடந்த வியாழனன்று கைச்சாத்தானது.

இந்தியா ஏற்கனவே கடந்த மாதம் இலங்கைக்கு 3,750கோடி ரூபாய் கடனுதவி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தொகையை கொண்டு இந்தியாவிடம் இலங்கை எரிபொருட்களை வாங்கியிருந்தது.

இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்துவரும் சுற்றுலாத் துறை, கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்புறவில் முன்னர் சில காலம் இடைவெளியொன்று நிலவியதுண்டு. ஆனாலும் அந்த இடைவெளியானது சீர்செய்யப்பட்டுள்ளதென்பதையே இந்தியாவின் இன்றைய உதவி தெளிவுபடுத்துவதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

Comments