நெருக்கடிக்கு துரிதமான தீர்வு காண அதிரடி நடவடிக்கைகள்! | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கடிக்கு துரிதமான தீர்வு காண அதிரடி நடவடிக்கைகள்!

டொலர் நெருக்கடிஉள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நாடு பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருக்கும் இன்றைய நிலையில், ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையானது மக்கள் மத்தியில் பெரிதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

‘நாடு முகங்கொடுத்துள்ள இடர்பாடுகளிலிருந்து மீட்சி பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என அவர் கோரிக்கைவிடுத்திருந்தார். அவருடைய உரை குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும், ஜனாதிபதி தனது உரையில் நாட்டின் தற்போதையை நிலையை மறைப்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

இன்றைய இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளுக்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பை ஜனாதிபதி கோரியிருந்தார்.

இதுபோன்ற தருணங்கள் தொடர் நெருக்கடிகள் ஏற்படும் போது, சில விடயங்கள் எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவையாகக் காணப்படுகின்றன. இலங்கை ரூபாவின் பெறுமதியை மிதக்க விடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்றவற்றை இதற்கான உதாரணங்களாகக் கூறலாம்.

இருந்தபோதும் தற்போதைய பொருளாதார சூழலில் இவை தவிர்க்க முடியாதவை. உண்மையில், மக்கள் அனுபவிக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வு காண கடுமையான தீர்மானங்களை விரைவாக எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும், தனது நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்பதாகவும் ஜனாதிபதி தனது உரையில் தெளிவாகக் கூறியிருந்தார்.

ஜனாதிபதி சுட்டிக்காட்டியபடி, நமது தற்போதைய பிரச்சினைகளுக்கு கொவிட்-19மாத்திரமே காரணமாக இல்லாவிட்டாலும், அதுவே அடிப்படைக் காரணம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். தடுப்பூசிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவற்றுக்காக 1000பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் அரசுக்குச் செலவாகியுள்ளது.

இந்தத் தொற்றுநோய் நிலைமை அரசாங்கத்துக்குக் கிடைக்க வேண்டிய நிதி வருமானங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சில வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது நாம் கொவிட்டை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளோம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

 'உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அதேபோன்று, எரிபொருள் தட்டுப்பாடு. மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன். அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்.

நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். பொதுமக்கள் அனுபவிக்கும் ஒரு சில சிக்கலான வாழ்க்கை முறைகளுக்கு தீர்வு காண இன்று நான் கடுமையான முடிவுகளை எடுக்க உறுதி பூண்டுள்ளேன். அதற்கு உதவ தேசிய பொருளாதார சபையையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஒரு ஆலோசனைக் குழுவையும் நியமித்தேன். இதன் மூலம், நான் எடுக்கும் முடிவுகள் செயற்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுப்பேன். எனவே, மக்களுக்காக நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்குமாறு நான் உங்களை முதலில் கேட்டுக் கொள்கிறேன்' என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கும் அப்பால் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இருந்தபோதும் இது விடயத்தில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமலிருந்து வந்தது.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படவிருப்பதாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். நிலைமைகள் மோசமடைந்த பின்னர் இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், நாட்டை சரியான பாதைக்குக் கொண்டு செல்ல இத்தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியதாகும்.

இது மாத்திரமன்றி, ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை அமைச்சர்களைக் கொண்ட பொருளாதார கவுன்சில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதற்கு ஆலோசனை வழங்குவதற்காக 16துறைசார் விற்பன்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான கூட்டு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

அதேநேரம், இலங்கைக்கு வரும் சிக்கல்களின் போது உடனடியாகக் கைகொடுக்கும் உற்ற நண்பனாக விளங்கும் இந்தியா மீண்டும் ஒருமுறை எமக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியத் தரப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு அமைய 1பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை இந்தியா வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் திறைசேரியின் செயலாளர் ஆர்ட்டிக்கல கைச்சாத்திட்டிருந்தார். எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே இந்தியா கடனை வழங்கியிருந்த நிலையில், தற்பொழுது அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் கொள்வனவுக்கு இந்தக் கடன்தொகையை வழங்கியுள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் காணப்படும் உறவுகளை வலுப்படுத்தும் மற்றுமொரு சந்தர்ப்பமாக இது அமைகிறது.

கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியா எமக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. குறிப்பாக எல்.ரி.ரி.ஈயினருக்கு எதிரான இறுதி யுத்தம், சுனாமி அனர்த்தம், கொவிட் தொற்றுநோய் சூழல் எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு முதன் முதலில் உதவிகளைச் செய்த நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த வரிசையில் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கும் அரசாங்கத்தின் முயற்சிகளைப் பலப்படுத்தவும் இந்தியா தற்பொழுது முன்வந்துள்ளது.

நாட்டை சரிவிலிருந்து மீட்பதற்கு உறுதியான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருக்கும் அதேநேரம், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலகட்டமாகவும் இது அமைந்துள்ளது. விலைவாசி அதிகரிப்புக் காரணமாக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே.

இருந்தபோதும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் சுயலாப அரசியல் செய்யக் கூடாது. நாடு மிகவும் மோசமான நிலைக்குச் செல்வதைத் தடுக்க கட்சி பேதங்களை மறந்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்பொழுது இருக்கும் நிலையில் ஆட்சி அதிகாரத்தில் ஏற்படக் கூடிய மாற்றம் பிரச்சினைகளைத் தீர்க்காது என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பி.ஹர்ஷன்

Comments