ரணில் ஒன்றும் 'சுப்பர் மேன்' இல்லை | தினகரன் வாரமஞ்சரி

ரணில் ஒன்றும் 'சுப்பர் மேன்' இல்லை

ரணில் விக்கிரமசிங்க 'சுப்பர்மேன் இல்லை ஆட்சியமைக்க. ரணில் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்கின்றார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய செவ்வி பின்வருமாறு.

கே: தமிழ் தேசிய கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே, உண்மையா?

பதில்-: தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு சங்கடமான  பாதகமான நிலைமைகளை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இந்த முரண்பாடுகளினால்,  அரசாங்கம் தன்னை தப்பித்து வைத்துக்கொள்வதற்கான வசதியையும், வழி வகைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. நன்றாக அரசியலைப் புரிந்தவர்கள்,  ஆகக்குறைந்தது தலைவர்களாக இருக்கின்றவர்கள், சரியான பாதையில் கொண்டு செல்ல  வேண்டும். எமக்குள் இருக்கும் பகைமை முரண்பாடுகள் அரசாங்கத்திற்கு  லாபகரமானதாக மாறிவிடக்கூடாதென்பதில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இது  இன்று முதல் இல்லை, மிக நீண்டகாலமாக நடந்து வருகின்றது. இதை இல்லாமல்  செய்வதற்கு தொடர்ந்தும் பலர் கதைக்கின்றார்கள் ஆனால், எந்தவிதமான  பெறுபேறுகளையும், பிரியோசனங்களையும் கொடுக்கவில்லை என்று தான்  நினைக்கின்றேன்.

கே: 13வது திருத்தத்தை நீக்குவதற்கான நடவடி க்கைகள் முன்னெடுக்கப் படுவதாகவும், இந்திய அரசு இனப்பிரச்சினை விடயத்தில் மௌனம்  காப்பது போன்று 13வது திருத்தததை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்  மக்களின் தேவைகளை நிறைவேற்றுமென நம்புகிறீர்களா?

பதில்:- 13வது  திருத்தம் தொடர்பான சர்ச்சைகள், அது ஏதோ ஒற்றையாட்சிக்குள் கொண்டு  வருவதற்கு, இந்தியாவிற்கு வழங்கிய கடிதத்தில் இருந்ததாகவும் அதற்குத் தான்  கையொப்பமிட்டதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியினர்,  மிகத் தீவிரமாக, அதற்கெதிராக செயற்பட்டார்கள். ஆனால், கையெழுத்திட்ட  கட்சிகள் இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்திட்ட காலத்தில் இருந்தே அதனுடன்  நேரடியாக தொடர்புபட்டவர்கள். நாங்கள் அனைவரும் 13வது திருத்தம் முடிந்த  முடிவாகவோ, தமிழ் மக்களுடைய அபிலாசைகளை தீர்க்கக்கூடிய தீர்வாகவோ,  ஏற்றுக்கொள்ளவில்லை. 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென்று  உரியவர்களை கேட்டுக்கொண்டதற்கான அடிப்படை கார ணம் இலங்கை அரசு 13வது  திருத்தத்தை இல்லாமல் செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை  எடுத்துக்கொண்டிருக்கின்றது.

அதைத் தடுக்க வேண்டும். எங்களுடைய அரசியல்  அமைப்பில்  அதிகாரப் பரவல் என்ற  பெயரில் அற்ப சொற்பமாக ஏதோ  இருக்கின்றது. அதைக் கூட இல்லாமல் செய்துவிடக்கூடாது. இல்லாமல் செய்து  விட்டால் அடுத்தது என்ன என்ற கேள்வி இருக்கின்றது. இந்தியாவிற்கு தார்மீக  கடமையும் இருக்கின்றது. எங்களுக்கு அவர்கள் ஏற்கனவே கூறியும்  இருக்கின்றார்கள். ஆகவே, அவர்களுக்கு 13வது திருத்தத்தை இல்லாமல் செய்வதை  தடுப்பதற்கான தார்மீக கடமை இருக்கின்றது. அதனால் தான் நாங்கள் அதைக்  கேட்டிருக்கின்றோம். 13வது திருத்தத்துக்கு எதிராக  கதைத்தவர்கள்  இதுவரை காலமும்  ஒரு தீர்வு சம்பந்தமாக, இதை எப்படி அடையப் போகின்றோம் என்று சொன்னதில்லை.  தொடர்ந்தும், குறை சொன்னதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

எங்களைப்  பொறுத்தவரையில் இருப்பதையாவது காப்போம். கட்டி எழுப்பலாம் என்று தான்  நாங்கள் அதைச் செய்தோம். இந்தியா மிக நீண்டகாலமாக எமது பிரச்சினையில்  இருந்து விலகி இருக்கின்றது. இதன் மூலமாவது இந்தியாவை எமது பிரச்சினையில்  தலையிட வைக்க வேண்டும் என்ற எண்ணமும் எங்களுக்கு இருந்தது. ஏனென்றால்,  இன்று இருக்கின்ற நிலைமையில், சர்வதேச அழுத்தங்கள்  இந்த நாட்டிற்கு  இல்லாவிட்டால், பிரச்சினைகள் நிச்சயமாக தீர்க்கப்படமாட்டாது. ஆகவே, இந்தியா  மட்டுமே அக்கறை காட்டும். இந்தியா ஒன்றைத் தான் மற்ற நாடுகளும்  விட்டுவிடுவார்கள். இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கின்றதோ அதை நாங்கள்  ஆதரிப்போம் என்று அமெரிக்கா பல தடவைகள் சொல்லியிருக்கின்றது. அதனால்தான் நாங்கள் இந்தியாவிடம் கேட்டோம்.

கே: இன்றைய  சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவை நம்புவது தமிழ் மக்களை  அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் என பலதரப்புக்கள்  குற்றஞ்சாட்டுகின்றன. நீங்கள் இந்தியாவை மேலும் நம்புவது ஆரோக்கியமானதா?

பதில்:- உறுதிபட  சொல்லவில்லை. ஏதோ ஒரு நாடு பின்னால் இருக்கின்றது. இன்று  இருக்கின்ற உலக  அரசியல் சூழ்நிலையில், ஏதோ ஒரு நாடு பின்னணியில் நிற்கின்றபோது தான்  நாங்கள் பலமாக ஏதாவது செய்ய முடியும். அதை இந்தியா ஒன்று தான் செய்ய  முடியும். வேறு எந்த நாடும் செய்ய முடியாது. இந்தியா பல காலமாக மௌனமாகவே  இருந்திருக்கின்றது. ஏனென்றால் நாங்களும் கேட்கவில்லை. விடுதலைப் புலிகளின்  போராட்ட காலத்தில் எவருமே இந்த 13பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் ஒரு  இலக்கு வைத்துப் போராடிக்கொண்டிருந்தார்கள். அந்த இலக்கை மீறி வேறு ஒன்றைக்  கேட்க வேண்டும் என்ற தேவை தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை. விடுதலைப்  புலிகள் மௌனித்த பின்னர், அரசியல் தீர்வு வரும் என்ற ஏற்பாடுகள்  நடைபெற்றுக்கொண்டிருந்த படியால், இந்த ஏற்பாடுகளில் கவனம்  செலுத்திக்கொண்டிருந்த தமிழ் கட்சிகள், அதுவும் நடைபெறாது போன பின்னர், ஏதோ  ஒரு விதத்தில் இந்த 13வது திருத்தத்தை சரி காப்பாற்றி வைத்துக்கொள்வோம்  என்ற எண்ணத்தில் தான் இதைக் கேட்டிருக்கின்றார்கள். இதை விடுத்து, எவரையும்  எதையும் கேட்க கூடாதென்றால்,இதை எப்படி அடைவது என்ற கேள்வி இருக்கின்றது.  இன்று வரை இந்தியா தாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என சொல்லவில்லை.  எங்களைப் பொறுத்தவரை, இந்த முயற்சியை எடுத்தோம். இதை வேறு நல்ல முயற்சியை  வேறு யாராவது எடுக்கப் போகின்றார்கள் என்றால், அது வரவேற்கத்தக்கது.  வெறுமனவே, குறை சொல்லிக்கொண்டிருப்பதில் பிரச்சினைகள் தீரப் போவதில்லை.  ஆகவே, அதை அவர்கள் செய்ய வேண்டும்.

கே: பங்கரவாத தடைச்சட்ட   சீர்திருத்தத்திற்கு  எதிராக பாராளுமன்ற   உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனினால் தலைமை தாங்கப்பட்ட கையெழுத்து நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு சார்பாக  பெறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகின்றதே, உண்மையா?

பதில்:- இந்த  குற்றச்சாட்டை நானும் அறிந்தேன். இதில் என்ன அரசாங்கத்திற்கு சார்பாக  இருக்கின்றது. எந்த வகையில் அரசாங்கத்திற்கு சார்பாக இருக்கின்றது. கடந்த காலத்திலும் செய்யப்பட்ட விடயம். இலங்கையில் அனைத்து இன மக்களும் கையொப்பமிடுகின்றார்கள். உடனடியாக, பாரியதொரு தாக்கத்ததை அரசு மேல்  ஏற்படுத்தாது விட்டாலும், மிக அதிக எண்ணிக்ைக யான மக்கள் இதைக் கேட்கின்றார்கள் என  உலகிற்கு காட்டுவது நல்ல விடயமாகவே பார்க்க முடியும்.

கே: இலங்கை சீனாவை கைவிட்டு,  இந்தியாவுடன் நேசக்கரம்  நீட்டுவதை எவ்வாறு  பார்க்கின்றீர்கள்?

பதில்:-  பொருளாதார நெருக்கடியில், இவ்வாறான நடவடிக்கைகள் எடுத்தால், கடைசியாக  பாதகத்தில் முடியும். ஆனால், நடுநிலையான கொள்கைகள் எடுத்து, எந்த நாடுகளும்  எமது நாட்டில் ஆதிக்கம் செலுத்தாமல், அரசாங்கம் நடக்குமாக இருந்தால், அது  நல்ல விடயம். சீனாவின் ஆதிக்கம் மிக அதிகமாக வந்துகொண்டிருந்தது. இப்போது  அது குறைக்கப்பட்டிருக்கி;ன்றது. அந்தஅடிப்படையில், அரசாங்கம் இந்தியாவுடன்  நேசக்கரம் பிடித்தால், அது ஒரு நல்ல விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

கே: ஐ.நா தீர்மானங்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டில் உள்ளது?

பதில்:-  ஐ.நா உட்பட இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் தொடர்பில் நாங்கள் கதைக்கின்ற  போது, அவர்கள் 100வீதம் ஏதோ செய்கின்றார்கள், செய்யப் போகின்றார்கள்  என்பதைக் காட்டிலும், அவர்களின் அழுத்தங்கள் இந்த அரசாங்கம் மீது  வரவேண்டும் என்ற ஒரு நோக்கம். ஆகவே, அவர்களை முழுமையாக நம்பி இருந்து  ஏமாறுகின்றோம் என்று அர்த்தமும் அல்ல. சர்வதேச அழுத்தங்கள் இந்த நாட்டின்  மேல் வர வேண்டுமென்றால், இது தான் ஒரு வழி. அதற்காக அதை செய்யாமல் விடவும்  ஏலாது. அதை நம்பி இருந்து ஏமாறுகின்றோம் என்றல்ல அர்த்தம். அதை நாங்கள்  தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்க வேண்டும். சில விடயங்கள் குறைவாக  இருக்கும். கூடுதலாக இருக்கும். அது அந்த நாடுகளையும், அந்த நாட்டில்  இருக்கக்கூடிய தேவைகளைப் பொறுத்ததும், இலங்கை மிகச்சிறிய நாடு. ஐ.நா  கூட்டத்தொடர் ரஷ்யாவுடனேயே போய்க்கொண்டிருக்கின்றது. நாங்கள் இவ்வாறான  சம்பவம் நடக்குமென்று எதிர்பார்க்கவும் இல்லை. இம்முறை மிக இறுக்கமான  அறிக்கையை ஐ.நா ஆணையாளர் கொடுத்திருக்கின்றார். இம்முறை தீர்மானங்களாக  வராது. அடுத்த செப்டெம்பரில் தான் தீர்மானங்களாக வரும். தீர்மானம்  எடுக்கின்ற போது தான் எமது செயற்பாடுகளை கவனமாக செய்து, இங்குள்ள  நிலவரங்களின் தகவல்களையும், சரியான தரவுகளையும் கொடுத்தால், அவர்கள் அதை  இறுக்கமாக எடுப்பார்கள். ஐக்கிய நாடுகள் சபைக்கு நடைமுறைப்படுத்துகின்ற  அதிகாரம் கிடையாது. ஐ.நா சபைக்கு மட்டுமே உண்டு. அவ்வாறு ஐ.நா பொதுச் சபை  மற்றும் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை எடுக்க  வேண்டும். தொடர்ந்தும் முயற்சிகளை முன்னெடுக்கின்ற போது, ஒரு நாள்  கட்டாயமாக பயனளிக்கும்.

கே: விரைவில் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்களா?

பதில்:-  வருகின்றபோது சந்திப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை தருவார் என  நம்புகின்றேன். அவ்வாறு சந்தித்தால், தற்போதுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்து ரையாடவுள்ளதுடன், இந்த நாட்டில் பிரச்சினைக்கு பஞ்சமில்லை. அந்தப்  பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் மிகத் தெளிவாக கதைப்போம். முக்கியமாக எமது  தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைக்கவும், தீர்வு விடயம்  தொடர்பாகவும் எடுத்துரைப்போம்.

கே: ரணில் விக்கிரமசிங்க தலைமையில்  ஆட்சி அமையும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு ஆட்சி  உருவாகுமா? அவ்வாறு உருவாகினால், ஆதரவு  கொடுப்பீர்களா?

பதில்:- அவ்வாறு  ஆட்சி உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் மிக மிக அரிது. என்னைப்  பொறுத்தவரையில், என்னுடைய தனிப்பட்ட கருத்து. அப்படியான ஒரு ஆட்சி  உருவாகுமென்று நான் அதை நம்பவில்லை. மற்ற எல்லாவற்றையும் விட ரணில் ஒன்றும்  சுப்பர் மான் இல்லை. ரணில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.

சுமித்தி தங்கராசா

Comments