இந்திய வம்சாவளித் தமிழர் மலேசியாவிலும் இலங்கையிலும் | தினகரன் வாரமஞ்சரி

இந்திய வம்சாவளித் தமிழர் மலேசியாவிலும் இலங்கையிலும்

1820களுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து தொழில் நிமித்தம் புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் சுமாா் 3கோடிக்கும் அதிகமாக உலகெங்கும் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இலங்கையைத் தவிர இதர நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமது வாழ்வியலை காலத்துக்கேற்ப புதிய கோணத்தில் வடிவமைத்துக் கொண்டுள்ளார்கள். அநேகமாக தென் கிழக்காசிய நாடுகளில் வாழ்வோர் பெருமைப்படத்தக்க முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றார்கள்.

மலேசியா போன்ற நாடுகளில் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய வம்சாவளித் தமிழர்களின் பங்களிப்பு அதிகம். இலங்கையிலும் கூட அதே தேசிய பொருளாதரத்தில் இவர்களின் பங்களிப்பு கணிசமானது. ஆனால் மலையக மக்கள் இங்கு பெற்றுள்ள சில உரிமை வாய்ப்புகள் மலேசியாவில் காணப்படவில்லை. முக்கியமாக ஓய்வுபெற்ற ஒரு தொழிலாளி தொடர்ந்தும் தமக்கான குடியிருப்பில் வாழக்கூடிய வாய்ப்பு இங்கு உண்டு. இது மலேசிய தொழிலாளர்களுக்கு இல்லை. ஒரு தொழிலாளி ஓய்வுபெறும் பட்சத்தில் அவாின் ஒட்டுமொத்தக் குடும்பமும் குடியிருப்பினைக் காலி செய்துவிட வேண்டும்.

இதனால் இன்று ஒவ்வொரு தோட்டங்களிலும் பத்து அல்லது பதினைந்து தமிழ்க் குடும்பங்களையே காணமுடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலக்கட்டத்தில் 80வீதத்துக்கும் அதிகமாக பெருந்தோட்டங்களில் பணிபுரிவோர் தொகை இன்று 30வீதமாக குறைவடைந்து போயுள்ளது. தவிர முன்னர் இறப்பர் தோட்டங்களாக இருந்தவை தற்போது செம்பனை (முள்ளுத் தெங்காய்) தோட்டங்களாக மாற்றம் பெற்றுள்ளன.

ஆனால் தொழிற்றுறை இதனால் பாதிப்படைவில்லை. தொழிலாளர் புலம் பெயர்வினால் ஆளணி வளம் குன்றிவிடவில்லை என்பது இங்கு அவதானத்துக்கு உரியது. இறப்பருக்கு மாற்றுப்பயிராக செம்பனை இனங்காணப்பட்டு பெருந்தோட்டத் துறை கட்டமைப்பு அப்படியே காக்கப்படுகின்றது.

ஆளணி வளம் குறைவடைந்து செல்வதைச் சமன் செய்ய பங்களாதேஷ், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனா.் இதனால் மலேசிய பெருந்தோட்டப் பயிா்ச் செய்கை தொடர்ச்சியாக பேணப்படும் பின்புலம் காணப்படுகின்றது.

அத்துடன் இங்கிருந்து வெளியேறும் தொழிலாளர் சமூகம் தமது கல்வித் தகுதியின் அடிப்படையில் வேறு தொழில்களில் ஈடுபட முடிகின்றது. இளைய தலை முறையினர் தமது பெற்றோர் செய்துவந்த வேலையைத் தாமும் செய்ய வேண்டும் என்னும் போக்கை உதறித் தள்ளிவிட்டு வேறு தொழில்களில் கவனம் செலுத்துவதால் சமூகரீதியில் புதிய பரிமாணம் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க முடிகின்றது.

இங்கும் பரம்பரைத் தொழிலைக் கைவிடும் மனோபாவம் உக்கிரமடைந்து வருவதால் வேறு தொழில்களைத் தேடி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இடப்பெயர்வு நடக்கவே செய்கின்றது. ஆனால் அதன் மூலம் புதிய வாழ்வியல் மாற்றத்துக்கான அத்திவாரம் இடப்படுகின்றதா என்றால் அதுதான் இல்லை. காரணம் கல்வியறிவில் பிற்பட்டிருப்பதால் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கக் கூடியதான தொழில்களைப் பெற முடிவது இல்லை.

கொழும்பு போன்ற நகரங்களில் கடின உழைப்பும் கைநிறையாத வேதனமும் பெற்று வாழும் ஒரு வேதனை வாழ்க்கை. இதனால் தொடர்ச்சியாகவே விரக்தி. தொழில் பாதுகாப்போ உத்தரவாதமோ கிடையாது. தொழில்சார் உரிமைகள் மறுதலிக்கப்படுகின்றன. பெருந்தோட்டக் கட்டமைப்பைப் போன்றே தினக்கூலி முறைமை.

இதனால் தோட்டங்கள் காடுகளாகிக் கொண்டிருக்கின்றன. நல்ல விளைச்சல் நிலங்கள் கூட வீணாக விடப்படுகின்றன. எஞ்சி நிற்கும் தொழிலாளர்கள் (அநேகமானோர் பெண்கள்) தொழில் பாதுகாப்பின்றி அச்சத்துடனேயே வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலைமையே நீடிக்கின்றது. இதனால் தினந்தோறும் குளவிக் கொட்டு, தேனி, சிறுத்தை தாக்கு, பாம்புக்கடி என்று பலவேறு அனர்த்தங்கள் நிகழ்கின்றன. இதன் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மொத்தத்தில் இங்கு வேலை செய்வது என்பது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத விஷயம். கம்பனி தரப்பு இப்பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையைக் கட்டிக் காப்பதை விட்டு வேறு வழிகளில் தமது வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதிலேயே பெரிதும் நாட்டம் காட்டுகின்றன.

தேயிலைத் துறையைப் பொறுத்தவரை பெருந்தோட்ட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என்னும் இரு பிரிவுகள் முதன்மை பெறுகின்றன. ஆனால் இவ்விரண்டு பிரிவுகளிலும் இன்று அரசியல் ஆதிக்கம் அதிகரித்துச் செல்வதே இத்துறையின் தற்போதைய வீழ்ச்சிக்கு அடிப்படை என்போரும் உளர். இத்தரப்பினர் ஒட்டு மொத்தமாக அரச துறைசார் அத்து மீறல்கள் காரணமாகவே பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை தள்ளாட்டம் கண்டு வருவதாக கவலைத் தெரிவிக்கின்றனர். பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை எப்படி தனியார் கம்பனி கரங்களில் சிக்கி தத்தளிக்கின்றதோ அதே போலவே ஏற்றுமதியும் தனியார் நிறுவனங்கள் மூலமே கையாளப்படுகின்றது.

இதனால் அரசின் பங்களிப்பு என்பது ஓரங்கட்டப்படுகின்றது. அரசினால் மானியங்கள் வழங்கப்படுவது கிடையாது. நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெறுவது இல்லை என்பது ஏற்றுமதியாளர் சங்கத்தின் ஏக்கம்.

இதேவேளை சிறு தோட்ட உற்பத்தியாளர் நலன் பற்றியே அரசு அவதானம் கொள்கிறது. இன்று தேயிலை உற்பத்தியில் 70வீதமானவை சிறு தோட்டங்கள் மூலமே கிடைக்கின்றன. இத்துறைக்கு அரசு அபரிமிதமான சலுகைகளை அள்ளி வழங்குகின்றது. இந்தக் கரிசனையில் இம்மியளவாவது பெருந்தோட்டப்பயிர்ச் செய்கையில் காட்டப்படுவது இல்லை.

காலநிலை சார்ந்த ஓர் உற்பத்தி தன்மையை கொண்டிருக்கும் தேயிலை துறை நிலையான வருமானத்தைக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதம் தான். இதேநேரம் தேயிலை ஏலத்தில் விடப்படும்போது விலை நிர்ணயம் உள்ளிட்ட முறைகோடுகளும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தரமற்ற தேயிலை ஏற்றுமதி சந்தைப் படுத்தப்படும்போது நாட்டிற்கு அது அவப்பெயரையே தேடித்தரும்.

இதுபற்றிக் கவனம் செலுத்தப்படுவது அவசியம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெருந்தோட்டத்துறையை நவீன தொழில் நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டுள்ள தொழில் நிறுவனமாக மாற்றப் போவதாக தமது தோ்தல்கால வாக்குறுதியில் கூறி இருந்தார். பாரம்பரிய தேயிலை உற்பத்தி முறைமை நவீனப்படுத்தப்படுவதன் மூலம் அதன் வீழ்ச்சியை தடுக்க முடியும் என்றே பலரும் நம்புகிறார்கள். குறிப்பாக ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றுவது ஆரோக்கியமாக அமையலாம்.

இன்றைய நிலையில் பெருந்தோட்டத்துறை மூவிதமான சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. முதலாவது வீழ்ச்சியடைந்து செல்லும் நிலைமை. அடுத்தது ஆளணி இழப்பு, மூன்றாவது தரமான தேயிலை ஏற்றுமதியும் சர்வதேச சந்தையில் பெறக்கூடிய (தக்கவைக்கக் கூடிய) நம்பிக்கையும.்

கொழும்பில் இடம்பெறும் ஏல விற்பனையில் மேற்கொள்ளப்படும் மோசடியால் பாரிய இழப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது என்பது ஆய்வுத்தகவல். ஏனெனில் தரமற்ற தேயிலை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுவதால் சர்வதேச ரீதியிலான புறக்கணிப்புக்கு ஆளாகும் நிலை தோன்றுகிறது. பாவனையாளர்களது நுகர்விற்கு ஏற்றது அல்ல என்று கண்டறியப்பட்டு நிராகரிக்கப்படும் தேயிலையைக் கூட தூய தேயிலை என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படும் முறைகேடு நிகழ இடமுண்டு. இது தவிர்க்கப்பட வேண்டியது முக்கியம்.

உண்மையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் வீழ்ச்சியில் இத்துறைசார் தொழிலாளர்களுக்கு எந்தவித தொடர்புகளும் இல்லையென்பது உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. ஆனால் முழுப்பழியும் தொழிலாளர் மீது சுமத்திவிட்டு கம்பனி தரப்பு நாடகமாடுகின்றது. இதனால் இத்துறையின் எதிர்காலம் நிச்சயமற்றதாக காணப்படுகிறது என்னவோ நிஜம்.

எனவே தேயிலைத் துறையை நவீனப்படுத்துவதன் மூலம் அத்துறைசார் தொழிலாளர்களது வாழ்வியலில் மாற்றத்தைக் கொண்டு வருவதே உசிதமானது. இதேபோன்று மலேசியா போன்ற பிற நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களைப் போல இங்குள்ளவர்களும் சிந்தித்து செயற்படுவதே புத்திசாலித்தனமானது.

பன். பாலா.

Comments