இந்திய−ரஷ்ய உறவில் ஏற்பட்டுள்ள நெருக்கம்; இந்தோ-பசுபிக் உபாயத்தை முடிவுக்கு கொண்டுவருமா? | தினகரன் வாரமஞ்சரி

இந்திய−ரஷ்ய உறவில் ஏற்பட்டுள்ள நெருக்கம்; இந்தோ-பசுபிக் உபாயத்தை முடிவுக்கு கொண்டுவருமா?

உக்ரையின்- ரஷ்யப் போர் உலகளாவிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எண்ணப்பாங்கு வலுவடைந்து வருகிறது. உக்ரைனை மையப்படுத்தி எழுந்துள்ள போரில் ரஷ்யா அதிக நெருக்கடியை எதிர் கொள்ள ஆரம்பித்துள்ளது. மேற்குலகமும் ரஷ்யாவை உக்ரைனுக்குள்ளேயே அதன் வலுவை முடிவுக்கு கொண்டுவரலாம் என கணக்குப் போட்டு போரை நடாத்துகிறது. அதில் அமெரிக்கா பிரதான பங்காளியாக விளங்குகிறது. ரஷ்யாவும் அமெரிக்காவும் போரை நீடிக்க விரும்பும் நாடுகளாகவே காணப்படுகின்றன. அதிலும் அமெரிக்கா போரில் ஈடுபடாது போரை நிகழ்த்தும் நாடாக விளங்குகிறது. ஆனால் மறுபக்கத்தில் இந்தியா ரஷ்ய நட்புறவை அதிகம் விமர்சிக்கும் அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து ஆயுத இறக்குமதியை இந்தியா மேற்கொண்டால் பாரிய பொருளாதார தடையை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது. இக்கட்டுரையும் இந்தோ-பசுபிக் உபாயத்தின் பாதுகாப்பு அமைப்பான குவாட்டின் இருப்புப் பற்றிய தேடலாக அமையவுள்ளது.

குவாட் அமைப்பின் பிரதான நாடுகளாக ஜப்பான் இந்தியா அமெரிக்கா அவுஸ்ரேலியா காணப்படுவதோடு தென்குவாட் அமைப்பு நாடுகளாக இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியா அமெரிக்க அணியில் காணப்படுகின்றன. இதில் இந்தியா தொடர்பில் அமெரிக்கா பலதடவை எச்சரிக்ககைகளையும் வலியுறுத்தல்களையும் அதிகம் முதன்மைப்படுத்தி வருகிறது. அதாவது இஸ்ரேல் போன்று ரஷ்யாவுடன் போர்க் காலத்தில் இந்தியா உறவு கொள்ளாத போதும் ஆதரவை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் நீண்ட கால நட்பு நாடு என்ற வகையில் இந்தியா -ரஷ்யா நெருக்கமானவையே. ஆனாலும் இஸ்ரேல் அளவுக்கு இந்தியா ரஷ்யாவுடன் போர்க்கால உறவினைக் கொள்ளவில்லை என்றே கூறலாம். ஆனாலும் இஸ்ரேலை விட்டுவிட்டு ஏன் அமெரிக்கா இந்தியாவை மிரட்டுகிறது என்பதே பிரதான கேள்வியாகவுள்ளது. அதற்கான காரணங்களை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது, இந்தியா ரஷ்யா சீனா அதிகம் கீழைத்தேச நாடுகளாகவே மேற்குலகத்தால் நோக்கப்படுகிறது. ரஷ்யா ஒரு ஈரோசிய நாடாக அமைந்தாலும் அதன் கலாசார ரீதியல் ஆசிய இயல்புகளையே அதிகம் கொண்டுள்ளது என்பதை மேற்கு வெளிப்படுத்துகிறது. அதே நேரம் இம்மூன்று நாடுகளில் இந்தியாவும் சீனாவும் மேற்கின் பிரதான சந்தையாகவே உள்ளன. அதிலும் சீனா அமெரிக்க வர்த்தக முரண்பாடு மேற்கை அதிகம் இந்தியச் சந்தையில் தங்கியிருக்க வழிவகுத்துள்ளது. அதனால் இந்தியாவை மேற்கு இழப்பதென்பது அதன் சந்தையை இழப்பதே முதன்மை விடயமாகும். அதனை தக்கவைக்க அமெரிக்கா இந்தியா மீது மிரட்டலையும் அதே நேரம் விட்டுக் கொடுப்பையும் மாறி மாறிக் கையாண்டு வருகிறது. அதற்கான காரணம் இந்தியாவை இழந்துவிட முடியாது என்பதை வெளிப்படுத்துவதற்கான நகர்வாகவே தெரிகிறது.

இரண்டாவது இலங்கைக்கு அமெரிக்கா தனது இராஜதந்திரிகளை (23.03.2022)அனுப்பி கடல் ரீதியான பாதுகாப்பு விடயங்களில் சில உடன்பாடுகளை எட்டியுள்ளது. அது மட்டுமன்றி இரு நாட்டுக்குமான நான்காவது உயர்மட்ட உரையாடலை ஆரம்பித்துள்ளது. கரையோர கண்காணிப்பு பிரிவுக்கான பயிற்சி மற்றும் கடற்படைக்குரிய விசைப் படகுகள் என இரு நாட்டினது கடல்சார் உறவு பலமாக திட்டமிடப்பட்டதுடன் திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ-, பசுபிக் உபாயத்திற்கான உறவாகவும் இரு நாட்டு தூதுவர்களது இணைந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவும் மன்னார் வளைகுடாவை அண்டிய பகுதியில் தனது கடல் கண்காணிப்பினை அதிகரிக்கும் விதத்தில் உலங்குவானூர்திகளை  இணைத்துள்ளது. ஏறக்குறைய இரு நகர்வுகளும் இந்திய -அமெரிக்க உறவு சார்ந்த நடவடிக்கையாகவே தெரிகிறது.

மூன்றாவது திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ, -பசுபிக் தந்திரேபாயத்தின் இந்துசமுத்திர கடலாதிக்கமுடைய நாடு இந்தியாவே. அது மட்டுமன்றி அத்தகைய இந்தோ, -பசுபிக் உபாயத்தின் முக்கிய நோக்கமும் சீனாவின் விஸ்தரிப்பினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையாகவே உள்ளது. அதாவது இந்து மற்றும் பசுபிக் சமுத்திர நாடுகள் மீதும் சமுத்திரம் மீதும் சீனாவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதத்திலேயே மேற்கு நாடுகளால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவையும் இணைத்து செயல்படுத்தும் திட்டமாக இந்தோ,- பசுபிக் உபாயம் அமைந்திருந்தது. அதன் பாதுகாப்பு அணியாகவே குவாட் காணப்பட்டது. இதில் குவாட் மற்றும் AUKUS  உடன்படிக்கைகள் முதன்மையானவையாகவே உள்ளன. இதில் இந்து சமுத்திரத்தில் பிரதான நாடாக இந்தியா விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தகைய முக்கியத்துவம் உடைய நாடான இந்தியாவை எந்த அடிப்'படையிலும் மேற்கு இழக்க முயலாது. அதனாலேயே சில விட்டுக் கொடுப்புகளையும் நகர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அண்மைய காலத்தில் ஜப்பான் அவுஸ்ரேலியா ஆகிய குவாட் நாடுகள் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தியுள்ளன. அதன் பிரதான நோக்கம் இந்தியா- ரஷ்யா  உறவை தகர்ப்பதற்கான  உத்தியாகவே தெரிகிறது. இந்தியாவை படிப்படியாக நெருக்கடிக்கு உள்ளாக்குவது ஒரு புறம் நிகழ மறுபக்கத்தில் இந்தியாவை திருப்திப்படுத்துவதில் குவாட் நாடுகள் முனைப்பாக செயல்படுகின்றன. பொருளாதா உதவிகளையும் முதலீட்டு முயற்சிகளையும் இந்தியாவுடன் மேற்கொள்வதன் மூலம் இந்திய- ரஷ்ய உறவை பாதிக்கச் செய்யலாம் என்பதே குவாட் நாடுகளின் நகர்வாகும். அதனாலேயே இந்தியாவை மேற்கின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் எதிர்காலத்தில் சீனாவை இந்தியாவுடன் மோதவிடவும் திட்டமிடுகின்றன.

நான்காவது ரஷ்யாவையும் உக்ரையினையும் போரிட வைத்ததன் மூலம் மேற்கு இலாபமடைந்தது போல் எதிர்காலத்தில் சீனாவையும் இந்தியாவையும் மோதவிட்டால் மேற்கு போர் புரியாமலேயே இந்தியாவையும்  சீனாவையும்  ரஷ்யாவையும்  போன்று முடிவுக்கு கொண்டுவந்து விடலாம் எனக் கணக்குப் போடுகின்றன. அதுவே மேற்குலகத்தின் உத்தியாக உள்ளது. எவ்வாறு நேரடியாக போரிடாது மேற்கு ரஷ்யாவின் இராணுவ வலிமையையும் பொருளாதார இருப்பினையும் தகர்க்க முடியுமோ அதே அளவுக்கு இந்தியாவையும் சீனாவை மோதவிட விரும்புகிறது. அதனால் இரு நாட்டினது எழுச்சியையும் மேற்குடனான வல்லரசுப் போட்டியையும் முடிவுக்கு கொண்டுவரலாம் என்பதே மேற்குலகின் திட்டமிடலாகும்.

அதற்கு சவால்விடும் விதத்திலேயே ரஷ்ய -இந்திய நெருக்கம் இந்திய-, சீனா உறவைச் சாத்தியப்படுத்திவிடும் என்பதில் மேற்குலகம் அச்சமடைகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டமிடல்களை ரஷ்ய இந்திய நெருக்கம் தோற்கடித்துவிடும் என்ற குழப்பத்திலேயே  ஜோ பைடனது உரைகளும் எச்சரிக்கைகளும் அமைந்துள்ளன. இந்தியாவை நெருககடிக்குள் தள்ளும் புற நகர்வுகளை ஏற்படுத்தும் வாய்ப்புக்களை உருவாக்கிவருகிறது. ஆனால் இந்தியா பொறுத்து அமெரிக்காவுக்கு பல முன்நகர்வுகள் உண்டு. குறிப்பாக ஈரான் எண்ணெயை அமெரிக்கா தடைவிதித்த போதும் இந்தியா இறக்குமதி செய்வதில் பின்னிக்கவில்லை. அதற்கு எதிராக இந்தியா மீது எந்த நடவடிக்கையும் முழுமையாக அமெரிக்காவால் மேற்கொள்ள முடியாது போனது. அதற்கான அடிப்படை இந்தியாவை இழந்துவிடுதல் என்பது அமெரிக்கா உட்பட மேற்குலகத்தின் வாய்ப்புக்களும் சந்தையும் இழக்கப்படுவது மட்டுமன்றி சுயமான இந்திய வளர்ச்சியை சாத்தியப்படுத்தி விடும் என்பதில் மேற்குலகம் கவனம் கொள்கிறது.      

ஐந்தாவது ரஷ்ய -இந்திய உறவினால் இந்தோ பசுபிக் உபாயம் முடிவுக்கு வருமாயின் சீனாவின் வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்பதே பிரதான குழப்பமாகும். உக்ைரன் மீதான போர் மறைமுகமாக சீனாவுக்கு அதிக இலாபங்களை தந்துள்ளது. அதில் பிரதானமானது மேற்கு கிழக்கு அரசுகளுக்கிடையிலான பிரிநிலை ஒற்றை தோற்றப்பாட்டில் மட்டுமல்லாது நடைமுறையிலும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ரஷ்யா பலவீனமடைந்துள்ளமை மறுபக்கத்தில் சீனாவுக்கு கிழக்கு -முரண்பாட்டை தவிர்க்க உதவப்போகிறது. அதனாலும் சீனா தனது வாய்ப்புக்களை கட்டமைக்க முயலுகிறது. மேலும் பொருளாதார வாய்ப்புக்களை விரிவாக்கவும் இந்திய-, சீன உறவைப் பலப்படுத்தவும் வழியேற்படுத்தியுள்ளது. உக்ரையின் போர் தந்துள்ள பிரதான பாடம் மேற்குலகத்தின் அணுகுமுறை எப்படியான விளைவை தரும் என்பதேயாகும். இது உக்ரைன் போன்ற அரசுகளுக்கும் பொருத்தப்பாடுடையது.

எனவே உக்ரையின்- ரஷ்யப் போர் இரு நாடுகளையும் மட்டுமல்ல அதன் விளைவுகள் குவாட் கட்டமைப்பையும் இந்தோ, -பசுபிக் தந்திரோபாயத்தையும் தகர்த்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் அது ரஷ்யாவுடன் கொண்டுள்ள நெருக்கமும் சீனா சார்ந்த நெருக்கத்தை சாத்தியப்படுத்துமா என்ற சந்தேகத்ரைத தந்துள்ளது. இரு நாட்டுக்குமான உறவில் ரஷ்யாவின் பங்கு எதிர்காலத்தில் எவ்வாறானதாக அமையும் என்பதே தற்போதைய கேள்வியாகும்.

அது எப்போதும் இந்தியாவுக்கும் கீழைத் தேசத்திற்குமானதாக அமையவே வாய்ப்பு அதிகமுண்டு. சீனாவுடன் ரஷ்யா கொண்டுள்ள நெருக்கம் சீனாவின் ஐக்கிய நாடுகள் சபையில் நிகழும் வாக்களிப்புகளில் கண்டு கொள்ள முடிகிறது. எனவே இம்மூன்று நாடுகளதும் நகர்வுகளை பிராந்தியத்திலுள்ள சிறிய  நாடுகளை வைத்து கையாள அமெரிக்காவும் ஏனைய மேற்குலகமும் திட்டமிட ஆரம்பித்துள்ளன.

இத்தகைய அணியைக் குழப்புவது அணிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்துவது மற்றும் அணியில் தங்கியுள்ள நாடுகளை தனிமைப்படுத்தி வெல்வது போன்ற உபாயங்களுடன் நகர மேற்குலகம் ஆரம்பித்துள்ளது. அதனை வலுப்படுத்தும் விதத்திலேயே மேற்கு ஊடகங்களும் நிறுவனக்கட்டமைப்புகளும் நியாதிக்க மன்றங்களும் செயல்பட முனைகின்றன.        

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments