கையேந்தாத பொருளாதாரம் கைகூடுவதற்கு கைசேர்வோம்! | தினகரன் வாரமஞ்சரி

கையேந்தாத பொருளாதாரம் கைகூடுவதற்கு கைசேர்வோம்!

"இல்லையென்போர் இருக்கையிலே,  இருப்பவர்கள் இல்லை என்பார்" இது, சினிமாப்பாடல். தேவைக்காக கையேந்துவோரின்  கையறு நிலைமையையும், கை நிறைய இருந்தும், கடுகளவாவது கொடுக்காதோரின்  கல்நெஞ்சையும் குறித்துக்காட்டும் யதார்த்தங்கள் இவை. ஊழிக்காலம் வரைக்கும்  இந்நிலைமைகள் இருக்கவே போகிறது. இதற்காக யாரையும் குற்றம் சொல்லவும்  முடியாது. இப்படியொரு நிலைமைக்குள்தான், எமது நாடும் இன்றிருக்கிறது.

 

பணமிருக்கிறது  ஆனால், எரிவாயு வாங்க முடியாது. நிதியிருக்கிறது, அதற்கு  எரிபொருள் வாங்க இயலாது. வசதியிருக்கிறது, இருந்துமென்ன? முழுநேரமும்  மின்சாரத்தை நுகர இயலாது, வசதியான வாகனங்களை ஓட இயலாது. உழைக்க இயலுகிறது,  இயன்றாலும், கிடைத்த ஊதியத்துக்கு  ஒருகிளாஸ் அங்கர் குடிக்க முடியாது.  இதைத்தான், "toomuch money chase few goods" என்கிறது பொருளியல். அதிகளவு  பணம் கொஞ்சப் பொருட்களை துரத்துகிறது. இவைகள் எப்படி, ஏன், எப்போது  ஏற்பட்டன. இதற்கான ஆராய்ச்சியில், அரசியல்வாதிகள் ஈடுபடக் கூடாது. அவ்வாறு  ஈடுபட்டாலும் அவர்களது ஆலோசனைகள் அல்லது அறிக்கைகளில்,  சாயம்பூசப்பட்டிருக்க கூடாது.

முழுஅளவில்,பொருளாதார மற்றும்  வியாபார விற்பன்னர்கள் கலந்துரையாடி கண்டறியப்பட வேண்டிய விடயம்தானிது.  தவிர்க்க முடியாமல் அரசியலும் கலப்பதாலோ?என்னவோ? கரை காணாமல் இழுபறியாகிச்  செல்கிறது  இப்பொருளியல். நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை,  அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமலா இருப்பது? மக்கள் பிரச்சினையில் அவர்களது  பிரதிநிதிகளும் பங்கெடுப்பதில்லையா?இந்தச் சிந்தனைகளில்தான், சிலரின் ஆதாய  அரசியலும் நுழைந்துகொள்கிறது. திறந்துவிடப்பட்ட பொருளாதாரக் கொள்கையால்,  உள்நாட்டு உற்பத்தியிலிருந்த கவனங்கள் திசை திருப்பப்பட்டன. அளவுக்கு  அதிகமான நுகர்வுகள், உள்நாட்டு நாணயத்தின் பெறுமதியை ஐதாக்கியது  மட்டுமன்றி, டொலரின் பெறுமதியை உயர்த்தியிருக்கிறது. இவைதான் இந்த  நெருக்கடியில், பிரதான பங்காற்றுகிறது. இதிலிருந்துதான், பிரச்சினைகள்  அணுகப்பட வேண்டும்.

இன்று, எமக்குத் தேவைப்படும் அத்தனையும் எங்கிருந்தோ வரவேண்டியதுதானே! இங்கிருந்தே இவற்றைப் பெற முடியு

 மென்றால், டொலர் தேவைப்பட்டிருக்காது.  வெளிநாட்டினர் இங்கு வருவத லும், எமது நாட்டினர் அங்கிருந்து  அனுப்புவதாலும் கிடைக்கும் அந்நிய ச் செலாவணியால் மீதமாகும் இருப்பு,  சராசரியாக பத்து பில்லியன் அமெரிக்க டொலராகப் பேணப்பட வேண்டும் என்கின்றனர்  பொருளியல் நிபுணர்கள். இந்த இருப்பு, கட்டுப்பாட்டு விலையில் டொலர்  இருக்கும்வரைக்கும்தான். டொலரின் விலை குறைந்தால், சராசரி இருப்பு பத்து  பில்லியனைவிடக் கீழிருந்தாலும் பறவாயில்லை. மாறாக, டொலரின் பெறுமானம் கூடி,  நமது நாணயத்தின் பெறுமதி இறங்குமானால், சராசரி இருப்பு சர்வதேச சந்தைக்கு  ஏற்ப கட்டாயம் உயரவே வேண்டும். இந்த பத்து பில்லியன் அமெரிக்க டொலரில்,  மூன்று வீதம் சுற்றுலாத்துறையாலும், ஏழு வீதம் நம்மவர்களின் வெளிநாட்டு   உழைப்புக்களாலும் கிடைக்கிறதாம். இப்போது, இந்த சராசரி இருப்பு மத்திய  வங்கியில் பேணப்படவில்லை. இதுதான் பிரச்சினை. இப்பிரச்சி  னைக்குள்ளும்,போதியளவு தங்கம் இல்லாமலும் உள்நாட்டில் நாணயம்  அச்சிடப்படுகிறது. பணவீக்கம் ஏற்படுமெனத் தெரிந்தும் நாணயத்தை அச்சிடுவது,  புழக்கத்தை அதிகரிக்கத்தானே! 

ஏன் பேணப்படாமற் போனது? நாட்டில்  நிலவிய சூழல்கள்தான். ஈஸ்டர் தாக்குதலால் வீழ்ந்த சுற்றுலாத்துறை,  கொரோனாவால் ஏற்பட்ட நிர்வாக முடக்கங்களே பிரதான பங்காற்றிகள்.  வளர்ச்சியடைந்த நாடுகளால், இந்த நிலைமைகளிலிருந்து மீண்டெழ முடிகிறது.  வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் திண்டாடியும், திணறியுமே மீள  வேண்டியிருக்கிறது. இதுதான், காரணம் என்பதுமில்லை. அரசியல் நுழைந்து  கொண்டு, விகாரங்களை வெளிப்படுத்துவதும் காரணம்தான். இலக்கை நோக்கிச்  செய்யப்பட்ட அல்லது செய்யப்படும் பாரிய அபிவிருத்திகள் அரசுகள்  மாறுகின்றபோது, மாற்றாந்தாய் மனநிலையால் கைவிடப்படுவதும் இவ்வாறான  நெருக்கடிகளையே ஏற்படுத்தும். அண்மையில் கூட்டப்பட்ட சர்வகட்சி  மாநாட்டிலும் இந்த விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்காகத்தான்,  பொருளாதாரக் கோட்பாட்டிலான திட்டங்களை இம்மாநாடு வலியுறுத்தியுள்ளது.

 ஆட்சிகள் மாறுவதைப்போல, எந்தக்   காலத்திலும் மாறாத பொருளாதாரக் கோட்பாடுகள்தான், வளர்ச்சியடைந்து வரும்  நாடுகளை வலுப்படுத்தும். இந்தியா இன்று இந்த வலுவுக்கு வரக் காரணமும்  இதுதான் என்பதும்  கண்டறியப்பட்டிருக்கிறது. எமது  நாட்டுடன் சேர்ந்துதானே!  இந்தியாவும் மூடிய பொருளாதாரத்தை பின்பற்றியது. இன்று, பாரதம் எங்கே  சென்றிருக்கிறது. ஆனால், நமது நிலை பாவமாகியிருக்கிறது.

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காது  புறக்கணித்த கட்சிகள், எப்போதோ காத்திருந்த ஒரு சந்தர்ப்பத்தை  பயன்படுத்தியிருக்கின்றன. பங்கேற்ற கட்சிகளோ, இதையும் ஒரு சந்தர்ப்பமாகப்  பாவித்திருக்கின்றன. அவ்வளவுதான். எனவே, பதுக்கல் மற்றும் பற்றாக்குறை  ஏற்படுத்தல் இன்னும் கழுத்தறுப்பு வியாபாராங்களை கைவிட்டு மனிதாபிமானம்  பேணிய மனநிலைகளில் வியாபாரிகள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் செயற்பட  வேண்டும்.

சுஐப் எம். காசிம்

Comments