பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு BIMSTEC வழிவகுக்கும் | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு BIMSTEC வழிவகுக்கும்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘பிம்ஸ்டெக்’ அதாவது ‘வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவுக்கான முன்னெடுப்பின்’ (Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) உச்சிமாநாடு எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

  பிம்ஸ்டெக் அமைப்பின் தற்போதைய தலைமைப் பதவியை வகிக்கும் இலங்கை இம்மாநாட்டை நடத்துகிறது. வங்காள விரிகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாட்டில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 2021ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த 05ஆவது உச்சிமாநாடு உலகளாவிய கொவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக உரிய வேளையில் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், இவ்வருடம் இதனை நடத்த இலங்கை இணக்கம் தெரிவித்திருந்தது.

 இம்மாநாடு கலப்புமுறையில் நடைபெறவுள்ளது. பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சிலர் நேரடியாக வருகை தந்து கலந்து கொள்ளவிருப்பதுடன், சிலர் மெய்நிகர் முறையின் ஊடாக (ZOOM) இணைந்து கொள்ளவுள்ளனர்.

 கடந்த 2021ஏப்ரல் மாதத்தில் இக்குழுவின் வெளிவிவகார அமைச்சர்கள் மெய்நிகர் முறையில் சந்தித்து கலந்துரையாடலை நடத்தியிருந்தனர். பிராந்தியத்தில் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது குறித்து பொதுவான கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுப்பதற்கு இந்த மெய்நிகர் சந்திப்பு உதவியது.

  இவ்வாறான நிலையில், இம்முறை நடைபெறவிருக்கும் ‘பிம்ஸ்டெக்’ உச்சிமாநாடு பௌதிக ரீதியாக உறுப்பினர்களின் நேரடி பங்கேற்புடன் நடத்தப்பட்டால் அனுகூலங்கள் அதிகம் உள்ளன. பிம்ஸ்டெக் அமைப்பு நாடுகளின் பொருளாதாரத்தை கொவிட் தொற்று பாதித்திருக்கும் இந்நிலையில் இலங்கை பிராந்தியத்தில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கு இம்மாநாடு வழிவகுப்பதற்கு இடமுண்டு.

 இருந்தபோதிலும் பிம்ஸ்டெக் அமைப்பு நாடுகள் சிலவற்றின் தலைவர்கள் மெய்நிகர் வழியாக கலந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். நேரடியாக பங்கேற்போர் மற்றும் மெய்நிகர் வழியாக பங்கேற்போர் விபரங்கள் இறுதியிலேயே தெரியவரும்.

 பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் இராஜதந்திர பயிற்சி அல்லது கல்வி நிறுவனங்களுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி, போக்குவரத்து இணைப்புக்கான திட்டம் உள்ளிட்ட ஆவணங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் கைச்சாத்திடப்படவுள்ளன.

  'பிம்ஸ்டெக்-மீள்திறன் கொண்ட பிராந்தியம், வளமான பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான மக்களை நோக்கி' என்பது 5வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்.

 பிம்ஸ்டெக் அல்லது ‘வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு’ என்பது தென்கிழக்கு ஆசியாவிலும் அமைந்துள்ள ஏழு நாடுகளை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இந்த அமைப்பில் இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, மியன்மார்,  தாய்லாந்து, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன. இவை அனைத்தும் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளாகும்.

 14முன்னுரிமைத் துறைகள் இனங்காணப்பட்டு, இவைகளில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க பல நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் வரியில்லா வர்த்தக உடன்பாடு செய்து கொள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்நாடுகளில் தலைமை வகிக்கும் பொறுப்பு அகர வரிசையில் ஒவ்வொரு நாட்டுக்கும் வழங்கப்படும். இதன் நிரந்தர செயலகம் டாக்காவில் அமைந்துள்ளது.

 1997ஆம் ஆண்டு யூன் மாதம் 6ஆம் திகதி பாங்காக் நகரில் (BIMSTEC- வங்காள தேசம், இந்தியா, இலங்கை, தாய்லாந்து பொருளாதாரக் கூட்டுறவு) என்ற துணை பிராந்திய அமைப்பு உருவாக்கப்பட்டது. 1997டிசம்பர் 22இல் மியன்மார் நாடும் இதன் முழு உறுப்பினரானது. முதலில் நேபாளம் ஒரு பார்வையாளர் நாடாக இருந்தது. பின்னர் நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் முழு உறுப்பு நாடுகளாக இணைந்து கொண்டன.

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள நாடுகளிடையே தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரக் கூட்டுறவை மேம்படுத்த 14நோக்கங்கள் வரையறுக்கப்பட்டன. வணிகம், முதலீடு, தொழில் நுட்பம், சுற்றுலா, மனித வள மேம்பாடு, வேளாண்மை, மீன்வளம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு, நெசவு, தோல் உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன. 

  இதனை விடவும், கல்வி, தொழிற்கல்வி, தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி செய்வது மற்றும் பயிற்சியளிப்பது, கூட்டுறவை வளர்ப்பதும் இதன் நோக்கமாகும். இந்த நாடுகளின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு, சமூக, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் ஒவ்வொரு நாடும் மற்றவற்றுக்கு உதவி செய்து எல்லோரும் நன்மையடைய வேண்டும் என்பதும் இதன் நோக்கம்.

  பிம்ஸ்டெக் அமைப்பு, உலக சனத்தொகையில் 22சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்திய போதும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4சதவீதம் மட்டுமே இவ்வமைப்பு பங்களிப்புச் செய்கிறது. எனவே, பிராந்தியத்தின் சவால்களை வெற்றி கொள்வதற்காக, உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை சிறந்த முறையில் பேணவும், பகிர்ந்த முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், உறுப்பு நாடுகளை பலமாக ஊக்குவிப்பதாக இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

  கடந்த காலங்களைப் போலவே, அனைத்து பிம்ஸ்டெக் முயற்சிகளுக்கும் இலங்கை முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும், மக்களுக்காக பகிரப்பட்ட சுபீட்சத்தையும் அமைதியையும் அடைந்து கொள்வதற்கு, அனைத்து பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளும் இணக்கமாகச் செயற்படுவோம் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

 பல்வேறு சவால்களை இலங்கை சந்தித்திருக்கும் சூழ்நிலையில் இந்தியா உதவ முன்வந்துள்ளது. இவ்வாறான காலகட்டத்தில் கொழும்பில் நடைபெறவிருக்கும் பிம்ஸ்டெக் மாநாடு இலங்கைக்கு பல்வேறு வகைகளில் உதவிகளை வழங்குவதாக அமையும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. அதாவது இலங்கைக்கு அனுகூலங்களை இம்மாநாடு ஏற்படுத்தித் தருமென்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

பி.ஹர்ஷன்

Comments