பொலித்தீன் அற்ற சூழலை உருவாக்குவோம்! | தினகரன் வாரமஞ்சரி

பொலித்தீன் அற்ற சூழலை உருவாக்குவோம்!

உலகளாவிய ரீதியில் சூழலியலாளர்களும் இயற்கையை நேசிப்போரும் பொலித்தீன் பாவனையால் இந்த உலகுக்கு ஏற்படும் தீமைகளைப்பற்றி உரக்கக் குரல் கொடுத்து வருகின்றனர்.  

பிளாஸ்ரிக் பாவனை கடந்த அரை நூற்றாண்டு காலமாக மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள நிலையில் தற்போது அது மனித வாழ்வுக்கும் ஏனைய உயிரினங்களின் இருப்புக்கும் இயற்கைக்கும் கேடாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது.  

பிளாஸ்ரிக்கும் பொலித்தீனும் உக்கி அழிவதில்லை. இதனால் சூழலுக்கும் காலநிலைக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்ரிக், பொலித்தீன் கழிவுகள் நிலத்திற்கும், நிலத்தடி நீருக்கும், ஆறு, குளம், வாவி, ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளுக்கும் வளி மண்டலத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. மனிதர்கள் மாத்திரமன்றி விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள், தாவரங்கள் போன்றவற்றிற்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது.  

பிளாஸ்ரிக், பொலித்தீன் என்பனவற்றால் ஏற்படுகின்ற மிக முக்கிய நோய் புற்றுநோயாகும். பிளாஸ்ரிக் துகள்கள் கருவிலுள்ள குழந்தைகள் குறைபாட்டுடன் பிறப்பதற்கும் காரணமாகின்றது என மருத்துவத்துறை கூறுகின்றது.  

புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம், வௌ்ளப்பெருக்கு, மண்சரிவு, நீர் வழிந்தோடாமை சூழலில் கிருமிகளினதும் காவிகளினதும் பெருக்கம், நுளம்பு, ஈ பெருக்கம் என்பவற்றிற்கும் பொலித்தீன் பிளாஸ்ரிக் போன்றவற்றின் ஆக்கிரமிப்பு காரணமாக அமைந்துள்ளது. இலகுவில் உக்கும் தன்மையற்ற பொலித்தீன், பிளாஸ்ரிக் போன்றவற்றின் இயல்பு காரணமாக குளப் படுக்ைககளிலும் ஏனைய நீரேந்துப் பகுதிகளிலும், வடிகான்களிலும் சேரும் பிளாஸ்ரிக் பொலித்தீன் பொருட்கள் மண்ணினுள் ஒரு படையாக உருப்பெறுவதால் வெள்ளநீர் மண்ணுள் வடிந்து செல்லமுடியாத தன்மை ஏற்படுகின்றது.  

இதன் காரணமாக நிலக்கீழ் நீர்வளம் குறைவதாகவும் வடிந்து செல்ல முடியாத நீர் நிலத்தின் மேற்பரப்பில் தங்கி வெள்ளப் பெருக்குகள் ஏற்பட வழிவகுப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன.  

கடந்தாண்டு இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் ஏற்பட்ட மோசமான வௌ்ளப் பெருக்கிற்கு இது ஒரு காரணமாக ஆராயப்பட்டுள்ளது.  

மேலும் பயிர்ச் செய்கை நிலங்களின் உயிர்த் தன்மையும் உயிர்வகைகளின் பல்வகைத் தன்மையும் ஆபத்துக்குள்ளாக்கப்படுவதாக சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். விலங்குகளால் உண்ணப்படும் பொலித்தீன்கள் அவற்றின் கடலினுள் சிக்குண்டு அடைப்புகளை ஏற்படுத்தி அவை சடுதியாக இறக்கவும் காரணமாய் அமைந்திருக்கின்றன.  

நாளாந்தம் நம் நாட்டில் 400தொடக்கம் 500தொன் பொலித்தீன் கழிவுகளாக வீசப்படுவதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.  

எனவே, இந்த பூமிப் பந்திற்கு அழிவை ஏற்படுத்தும் பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையைத் தவிர்த்து இயற்கையோடு இணைந்த புது உலகைப் படைப்போம்!  

ஏ.எச். அப்துல் அலீம்,  
தரம் 08சி,  
அலிகார் தேசியக்கல்லூரி,  
ஏறாவூர்.  

Comments