முருகு ஐயா | தினகரன் வாரமஞ்சரி

முருகு ஐயா

ன்ன  பவளம் செலவுக்கு இன்றைக்கு காசுக்கு இருக்குதா” இது முருகு ஐயாவின்  கேள்வி. சத்தம் வந்த திசையை பார்த்து பவளம்  “என்னப்பா செலவுக்கு காசு  எண்டு கேட்கிறீங்களே. நேற்றைக்கு ஐயாயிரம்ரூபாய் இருந்தது. உவன் இரண்டாவது  பொடி ஏதோ அவசர தேவை எண்டு சொல்லி அம்மா ஐயாயிரம் ரூபா தா என்றான்.  எடுத்துக் கொடுத்துட்டேன். இன்றைக்கு இருக்குற சாமான்களை வச்சித்தான்  சமாளிக்க வேண்டும்.” என்று கூறினாள்.

முருகு ஐயா கடற்தொழில் செய்பவர்.  அவரது மனைவி பெயர் பவளம் முருகு ஐயா ஒரு தடித்த மனுஷன் வட்டமான முகம் பொது  நிறம்.கிழமையிலை  ஒரு நாளைக்கு சேவெடுப்பார்.  மற்ற நாளெல்லாம் முகம்  வெள்ளை மயிர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இப்ப அவருக்கு வயது  ஐம்பத்திரண்டு ஆகுது. அவருக்கு  அவருடைய வயது தெரியாது கண்டியளே. ஆரேன்  என்ன மனிசி பவளம்  நினைவு படுத்தினால்தான் வயசு தெரியும்.  பள்ளிக்கூடத்துக்கு இரண்டாம் வகுப்போடை கட்டடிச்சிட்டார்.  காரணம் அவருக்கு  படிப்பு மண்டையில ஏறேல்லை கண்டியளே.  அவற்றை அப்புவும்  கடற்றொழில் தான்  செய்தவர். அம்மா வாய் பேச மாட்டா. ஆனா அவவுக்கு எழுதத் தெரியும்.  கைப்பாசையாலயே கதைப்பா.

 சின்ன வயசில்முருகு ஐயா நல்ல ஸ்மார்ட்டான  பெடியன்.  பெடியன் முருகு பத்து வயதிருக்கும்போது ஒரு நாள் கடற்கரைக்கு  தனியாக போனான். கட்டு மரத்திலையும், போட்டிலையும் கொண்டுவந்த மீன்களை அப்ப  கடற்கரையில் குவித்து வைப்பினம். பிறகு பெரிய பெரிய பெட்டியளுக்கை  ஒவ்வொரு  குவியல் மீனிலயும் தெரிஞ்சு தெரிஞ்சு போட வேண்டும். சிறுவன் முருகு அந்த  நேரம் ஒரு முதலாளியிடம்“நான் ஏதாவது வேலை செய்யறேன். சம்பளம் தாறியளே”எண்டு  கேட்டான்.

முதலாளி சொன்னார்,”நீ இந்த குவியலிலிருந்து மீன்களை தவத்தி தவத்தி பெட்டியளுக்கை  போட வேண்டும். உனக்கு மீனும் இருபது ரூபாய்  காசும் தாரேன்” என்று சொன்னார். சிறுவன் முருகு மிகவும் சந்தோஷமடைந்தான்.  ஆனால் வேலைதான் அவன்ட வயசுக்கு மிஞ்சியது. காலமை எட்டு மணிக்கு தொடங்கி  பின்னேரம் அஞ்சு மணி வரை நின்ற நிலையில் செய்யுற வேலை. ஒரு மாதிரி வேலை  முடிச்சிட்டான். முதலாளி சொன்ன மாதிரி கொஞ்ச மீனும் இருபது ரூபாய் காசும்  கொடுத்தார். இருபது ரூபாய் எண்டது சின்ன காசில்லை கண்டியளே. அந்தக்  காலத்திலே அதுக்கு ஒரு நாளைக்கு வீட்டில நாலுபேர் சமைச்சு சாப்பிடுகிற  அளவுக்கு சாமானுகள் வாங்கலாம்.

 சிறுவன் முருகுகாசை பொக்கற்றுக்  கைவச்சுக் கொண்டு மீனைக் கொண்டு ஓடுறான். ஆத்தாட்டை குடுக்கிறதுக்காக.  ஆத்தா எண்டது அம்மாதான். ஆத்தா முருகுவின்ரை கையில காச கண்டதும் பரவசம்  அடைஞ்சிட்டா. அவவின்ரை மகிழ்ச்சியை சொல்லி வேலை இல்லை. தன்ரை மகன் சின்னவன்  எண்டாலும் சம்பாதிக்க தெரிந்து கொண்டான் என்று நினைத்து அவர்  மகிழ்ச்சி  அடைந்தார்.

அண்டைக்கு விதம்விதமான சாப்பாடு எல்லாம் செய்து  பிள்ளைகளுக்கு கொடுத்தா. முருகுவுக்கு ஆத்தாவின் ஆரவாரமான மகிழ்ச்சியை  கண்டு மிகப்பெரிய சந்தோசம் ஏற்பட்டது:

 சிறுவன் முருகு அன்று ஆத்தா  அடைந்த சந்தோஷத்துக்கு பின்னர் ஒன்றை உணர்ந்து கொண்டான். அதாவது தனது  உதவியினால் மற்றவர்களை மகிழ்ச்சியடைய செய்யலாம் என்பதே அதுவாகும். இதன்  பின்னர் தனக்குவேலை கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேலைக்கு போய்  தனது செலவுக்கு என சிறு தொகையை எடுத்துக்கொண்டு மிகுதியை ஆத்தாவிடம்  கொடுத்து வந்தான். ஆத்தாவுக்கு மட்டுமில்லாமல்  தன்னிடம் பணம்  இருக்கும்போது கேட்பவர்கள் அனைவருக்கும் உதவி செய்து வந்தான். அவனது வயது  அதிகரிக்க அதிகரிக்க அவனது வருமானமும் அதிகரித்தது.

 அவனது நடுத்தர  வயதில் அவனுக்கு ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. அப்பெண் தான் பவளம்.  முருகுவின் சினேகிதன் ஆனந்தனின் தங்கை. முருகு தனது வேலை விடயமாக ஆனந்தனின்  வீட்டுக்கு செல்லுவான். அப்பொழுது பவளத்தை கண்டான். ஆரம்பத்தில் முருகுவை  கண்டதும் பவளம் நாணத்தினால் ஓடி ஒளிந்து கொள்வாள். ஆனந்தன் வீட்டில் இல்லாத  சமயத்தில் முருகு அங்கு சென்றாலும் அவள் வெளியே வருவதில்லை. ஆனந்தனின்  தாய் தந்தையரே முருகுவை ஏன் வந்ததென்று விசாரித்து ஆனந்தன் வெளியில்  சென்றமை பற்றி கூறுவர்.

 ஆனால் முருகு ஆனந்தனின் வீட்டுக்கு சென்ற முதல்  நாளிலேயே பவளத்தை கண்டவுடன் அவனது மனம் அலைபாய தொடங்கியது. இதுதான் விதி  என்பதா? அன்று தொடக்கம் பவளத்துடன் கதைக்க வேண்டும் என்று அவன் மனதார  விரும்பினான்.

 ஆனால் பவளம் நெடுநாளாக முருகுவை காண்பதை தவிர்த்து  வந்தாள். அவனை கண்டாலும் காணாதவள் போல சென்றுவிடுவாள். பவளத்தின் இந்த  செயற்பாடு முருகுவிற்கு மேலும் மேலும் பவளத்தின் மீது ஈர்ப்பை  ஏற்படுத்தியது.

இளைஞனான முருகு பொது நிறமானவன். அவனது  முகம் வட்டமானது. தலைமயிர் சுருள் சுருளாக இருக்கும். பார்ப்பவர் கண்களை  வசீகரிக்கும் தோற்றம் கொண்டிருந்தான். அவனது வேலை நேரங்களில் அவன்  வேலைக்குரிய ஆடை அணிந்திருக்கும்போது அவனது அழகு முழுமையாக தெரிவதில்லை.  அவன் வேலை முடிந்து குளித்து அலங்காரம் செய்து நல்ல ஆடைகளுடன்செல்லும்போது,  அவனது அழகு பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும்.

முருகுவைக்  குறிவைத்து  எத்தனையோ பெண்களும் பெற்றோரும் அவனை வளைக்க முனைந்தனர். அவன் யாரிடமும் பிடி  கொடாது விலகி நடந்து கொண்டு வந்தான். இதனால் முருகுவின் மீது சிலர் பொறாமை  கொண்டு அவன்மீது வீண் பழியை சுமத்தவும் முனைந்தனர்.

 ஆனால் முருகுவின்  மனம் ஏனோ பவளத்தை பார்க்க வேண்டும். அவளுடன் பேச வேண்டும். என்று  துடிதுடித்தது. இதேவேளை  பவளமும் நாணத்தினால் முருகுவை பார்க்காதது போல்  நடந்து கொண்டாலும், அவளது உள்மனதில் முருகு மீது தீவிரமான காதல்  நிறைந்திருந்தது.

முருகு தனது வீட்டுக்கு வரும்போது மறைந்திருந்து  முருகுவின் செயற்பாடுகளை அவதானித்து மகிழ்ச்சி அடைவாள்.

இருவரது மனமும் ஒன்றையே விரும்பியதால் பிரபஞ்ச சக்தி அவர்களை ஒன்றிணைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியது.

 ஒரு  நாள் அண்மையில் இருந்த டவுனுக்கு சென்ற பவளம் தனது பேர்சை தோளில் கொழுவிய  படி வீதியால் சென்றாள். அப்போது போதைக்கு  அடிமையான இளைஞன் ஒருவன் அவளது  பேர்சை  பிடுங்கிக் கொண்டு ஓடினான். அப்போது பிரபஞ்ச சக்தி முருகுவை அவ்விடம்   கொண்டு வந்தது.

 இங்கு பிரபஞ்ச சக்தி பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.  பிரபஞ்ச சக்தி என்பது நாம் எல்லோரும் நம்புகின்ற தெய்வீக சக்திதான். எமது  ஆன்மீக ஞானிகள் எல்லோரும் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளான் என்று  கூறியுள்ளனர். இதுவே பிரகலாதன் கதையிலும் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த இறை  சக்தியே பூவுலகில் எல்லா இடங்களிலும்  பரந்துள்ளது இதற்கமைய பிரபஞ்ச சக்தி  என்பதும் உலகில் பரந்துள்ள மகா சக்தியே. ஒரே சக்தி இங்கு வெவ்வேறு  உருவங்களுக்குள் மறைந்து செயல்படுகிறது.  இதனால் எல்லாவற்றுக்கும்  இடையிலிருந்து நமது கண்களுக்கு தெரியாத ஒரு சக்தி எல்லாவற்றையும்  இணைக்கின்றது. அதுவே நாம் நினைப்பது மட்டுமல்லாது, நினைக்க போவதையும்  சரியாக அறிந்து குறிப்பிட்ட சூழ்நிலையை உருவாக்குகின்றது. இது பல  அறிஞர்களின் கருத்தாகும்.

 இந்த பிரபஞ்ச சக்தியே பவளத்துக்கு உதவி செய்ய  அந்த இடத்திற்கு முருகுவை அழைத்து வந்திருந்தது. பவளம் தனது பேர்ஸ்  பறிக்கப்பட்டபோது, இப்போது முருகு இருந்திருந்தால் தன்னுடைய பேர்சை மீட்டுத்  தருவான் என்று நினைத்தாள். ஆனால் ஏற்கனவே பிரபஞ்ச சக்தி முருகுவை  அவ்விடத்திற்கு கொண்டு வந்து விட்டது.

முருகு எந்த தீர்மானமும் இன்றி  தனக்கு தேவையான ஆடை ஒன்றை வாங்குவதற்காக டவுனுக்கு சைக்கிளில் வந்து  கொண்டிருந்தான். அப்போது பவளம் செல்வதையும் அவளது பேர்ஸை பறித்துக்கொண்டு  ஒருவன் ஓடுவதையும் கண்டான். முருகுவின் உடல் உழைப்பினால் முறுக்கேறி  இருந்தது. அவன் சடாரென்று சைக்கிளை போட்டுவிட்டு குறித்த இளைஞனே துரத்திக்  கொண்டு சென்றான். பேதையினால் நலிவடைந்து இருந்த குறித்த இளைஞனால் வேகமாக ஓட  முடியவில்லை. முருகு  இளைஞனை பாய்ந்து பிடிப்பதற்கு முயன்றபோது பீதியடைந்த  இளைஞன் பேர்சை போட்டுவிட்டு ஓடினான். முருகு  நினைத்திருந்தால் அடுத்த  பாய்ச்சலில் அவனை பிடித்துச் சாத்தி இருப்பான். ஆனால் அவனது இளகிய மனம் பேர்சை  எடுத்துக்கொண்டு பவளத்தை  தேடி திரும்பி பார்த்தது.

 பவளம் பேர்சை  பறிகொடுத்து தவித்த நிலையில் கடவுளே என்று கத்திக்கொண்டு திரும்பி திருடனை  பார்த்தாள். அவளது கண்களால் கண்டதை அவளால் நம்ப முடியவில்லை. தான் காணுவது  கனவா என்று நினைத்து தனது கையை கிள்ளிப் பார்த்தாள். முருகு சைக்கிளை  போட்டுவிட்டு திருடனை பின் தொடர்ந்து ஓடுவதை கண்டாள்.

உடனடியாக அவளது மனம்  முருகுவின் சைக்கிளை பாதுகாக்க வேண்டும் என்று துடித்தது. உடனடியாக  ஓடிவந்து முருகுவின் சைக்கிளை  நிமித்தி வைத்துக்கொண்டு நின்றாள்.

பேர்சை  மீட்டுக்கொண்டு வந்த முருகு  இராஜேந்திர சோழன் பாண்டியனின் மணிமூடியை  இலங்கையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தது போன்ற சந்தோஷத்துடன் பேர்சை  பவளத்திடம் கொடுத்தான்.

 அந்த நாள் முருகுவுக்கும் பவளத்திற்கும்  பொன்னான நாள் ஆகியது. அதன்பின் உலகை மறந்து இருவரும் காதலித்தனர்.

முருகு  தனது தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்தான். அதன் பின்னர் தனது  திருமணத்தைப் பற்றி பெற்றோர் சகோதர சகோதரிகளுடன் சொன்னபோது அவர்கள்  சம்மதிக்கவில்லை. பவளத்தின் வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை.

இதனால்  முருகுவும் பவளமும் இணைந்து தீர்மானித்து இருவரும் இரவோடிரவாக  நீர்கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு ஓடிப் போயினர். திருகோணமலையில்  திருமணத்தை முடித்துக்கொண்டு அங்கு நண்பர்களின் உதவியுடன் முருகு  கடற்தொழில் செய்தான். அவர்களுக்கு மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும்   பிறந்தனர்.

அப்போது முருகுவின் நண்பன் ஒருவரின் திடீர் மறைவினால் நாலு  பிள்ளைகள் அனாதைகளாய் இருந்தனர். முருகு அந்த பெண் பிள்ளைகளையும் தங்களுடைய  பிள்ளைகளுடன் சேர்த்து பாதுகாப்போமா என்று மனைவி பவளத்திடம் கேட்டான்.  அவளும் அதற்கு சம்மதம் தெரிவித்து தலையை ஆட்டினாள். அதன்பின் அந்த நான்கு  பெண் பிள்ளைகளும் முருகுவின் வீட்டிலேயே வளந்தனர். முருகு தனது கடும்  உழைப்பினால் சேமித்த பணத்தைக் கொண்டு மீன் பிடிப் படகு  ஒன்றை  வாங்கினான்.

 இப்பொழுது முருகுவின் பெற்ற பிள்ளைகள், வளர்த்த பிள்ளைகள்  எல்லோரும் திருமணம் செய்து விட்டனர். இப்போது முருகு, முருகுஐயா என்ற  பெயருடன் மனைவி பவளத்துடன் முதுமையில் அன்புடன் இணைந்து வாழ்கின்றார்.

முருகுஐயா  முதுமை அடைந்த நிலையிலும்  தற்போது அவரது வீட்டுக்கு அண்மையில் இருந்த  பூங்காவுக்கு சென்று, அங்கிருந்த சீமெந்து பெஞ்சுகளை துப்பரவாக்குகிறார்.  முருகு ஐயா சம்பளம் இல்லாது சுத்தம் செய்யும் வேலையை மன நிறைவுடன்  செய்கிறார்.

அந்த பூங்காவிற்கு வரும் காதல் ஜோடிகளும், மற்றவர்களும்  அருவருப்பின்றி அந்த பெஞ்சுகளில் அமருவதற்கு வசதியாக அது அமைந்திருந்து.  அவர்கள் அப்பெஞ்சுகளிலிருந்து உரையாடுவதை கண்டு முருகு ஐயாவின் மனம்  நிறைவடைகிறது.

முருகு ஐயா சுத்தம் செய்த பின் ஒரு பெஞ்சில் ஓய்வாக  அமர்ந்திருப்பார். அப்போது அங்கு வரும் கண்ணியமான இளைஞன் ஒருவன்  முருகுஐயாவுடன் உரையாடுவான். ஒரு நாள் முருகுஐயா தன்னுடைய வாழ்வின் மகத்தான  கதையை அந்த இளைஞனுக்கு சொல்லிக் கொண்டிருந்தார். குறித்த இளைஞன் அவரது  தியாகத்தை எண்ணி மிகுந்த வியப்பை அடைந்தான். அவன் முருகு ஐயாவை வாழ்த்தியது  மட்டுமல்லாமல் தானும் அவ்வாறு வாழ வேண்டும் என தீர்மானித்தான். இப்போது  முருகு ஐயா புதிய வழிகாட்டியாக மக்கள் மனதில் விளங்குகிறார்.(யாவும் கற்பனையே)

குப்பிளான்
ஆ.மோகனசுந்தரம்

Comments