விளையாட்டு உலகம்: சிதிலமடையும் உக்ரேனும் தடைக்குள்ளாகும் ரஷ்யாவும் | தினகரன் வாரமஞ்சரி

விளையாட்டு உலகம்: சிதிலமடையும் உக்ரேனும் தடைக்குள்ளாகும் ரஷ்யாவும்

“குளிர்கால பராலிம்பிக் விளையாட்டு விழா அண்மையில் சீனாவின் பிஜிங் நகரில் முடிவடைந்தது. அதில் பதக்கப்பட்டியலில் போட்டியை நடாத்திய சீனா முதலிடத்தைப் பெற்றுதுடன், இரண்டாவது இடத்தை யுத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் இவ்விழாவில் பங்குபற்றிய உக்ரேன் பிடித்தது. இது தனது இறைமையையும், அபிமானத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்காக அமைந்த ஓர் சந்தர்ப்பமாகும்”

ரஷ்யப் படைகள் உக்ரைனை ஆக்கிரமித்து போர் தொடுத்து வருவதால் ரஷ்ய நாட்டுக்கு அமெரிக்க உட்பட ஐரோப்பிய நாடுகள் பல விதத் தடைகளையும் விதித்துள்ளது. அத்தோடு விளையாட்டு உலகமும் பல தடைகளையும் விதித்துள்ளதால் ரஷ்யா விளையாட்டு உலகிலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் நடைபெற்ற உலகத் தடகள நடைப்பந்தய சம்பியன்ஷிப் போட்டியிலும் ரஷ்யாவுக்கு உலக தடகள சம்மேளனம் தடை விதித்தது. உலகக் கால்பந்தாட்ட சம்மேளனம், உலக ஒலிம்பிக் கமிட்டி, உலக டென்னிஸ் சம்மேளனம் என அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் ரஷ்யாவை தடை செய்துள்ளது. ரஷ்ய தேசிய அணியையும், கழக அணிகளையும் மறு அறிவித்தல் வரை பிபா மற்றும் ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கம் போட்டிகளிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. மேலும் இவ்வருடம் கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் ரஷ்யாவை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் பலம்வாய்ந்த எரிசக்தி நிறுவனமான கெஸ்ப்ரொம் நிறுவனத்துடனான பங்காளித்துவத்தை ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. மேலும் தனிப்பட்ட ரீதியில் சில விளையாட்டு வீரர்களும் ரஷ்யாவுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளதுடன் உக்ரேனில் பாதிக்கப்படட மக்களுக்குப் பல விளையாட்டு வீரர்களும் உதவி வருகின்றனர்.

முன்னணி டென்னிஸ் வீரர் அண்டி மூர்ரே எதிர்ப்புத் தெரிவித்ததோடு, 2022ம் ஆண்டு தான் விளையாடும் தொடர்களின் மூலம் தனக்குக் கிடைக்கும் பரிசுத்தொகையை உக்ரேன் நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட சுமார் 7.5மில்லியன் குழந்தைகளுக்கு யுனிசெப் அமைப்புடன் இணைந்து அவசரகால மருத்துவத்திற்கு தேவைப்படும் மருந்து விநியோகம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் தேவைகளுக்கு உதவும் முகமாக செலவிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் வீராங்கனை எலினா ஸ்விடோவும் அண்மையில் மெக்ஸிகோவில் நடைபெற்ற மன்மெரே மகளிர் டென்னிஸ் போட்டித் தொடரில் பங்குபற்றியுள்ளார். இத்தொடரில் தனக்குக் கிடைக்கும் பரிசுத்தொகையை உக்ரேன் இராணுவத்துக்கு வழங்குவேன் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஒரு மாதகாலமாக ரஷ்யாவின கோரமான தாக்குதலால் சிதிலமடைந்துவரும் உக்ரேனில் பல விளையாட்டு வீரர்களும் படையில் சேர்ந்து தனது நாட்டுக்காகப் போராட ஆரம்பித்துள்ளனர். உக்ரேன் இப்போரினால் உருக்குலைந்துவரும் நிலையில் கடந்த மாதம் சீனாவின் நடைபெற்ற குளிர்கால பராலிம்பிக் தொடரில் அந்நாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தமது நாட்டில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்யப் படைகளின் தாக்குதலில் அல்லோப்படும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீர, வீராங்கனைகளாக அவர்கள் சீனாவில் நடைபெறும் குளிர்கால பராலிம்பிக்கில் கலந்து கொண்டனர். தமது நாட்டில் ரஷ்யப்படையினர் நடத்தப்படும் தாக்குதலால் மனக்கிலேஷத்துக்குள்ளான ஒரு மன நிலையில் கூட உக்ரேன் வீரர்கள் இந்த விளையாட்டு விழாவில் பதக்கப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

“நாம் இங்கு எமது நாட்டுக்காகப் போராடவே வந்துள்ளோம். உக்ரேன் என்ற எங்கள் தாய்நாட்டுக்காக சர்வதேசத்துடன் எமது இறைமைக்காகப் போராடவே இங்கு வந்துள்ளோம்” என குளிர்கால பராலிம்பிக்கில் முச்சறுக்கல் போட்டியில் பதக்கம் வென்ற இர்யானா புர்ஸி தெரிவித்தார்.

“எனது உடல் இங்கு போட்டிகளில் கலந்து கொண்டாலும் எனது எண்ணம், மனநிலை எல்லாம் உக்ரேனில்தான். எனது எல்லா நினைவுகளும் அந்த யுத்த பூமியில்தான். எனது குழந்தைகள், எனது குடும்பத்தைச் சுற்றியே எனது நினைவுகள் வட்டமிடுகின்றன” என பதக்கம் வென்ற உக்ரேன் வீராங்கனை கொனோவா ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

“இவ்விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் போட்டியில் எனது முழுக்கவனத்தையும் செலுத்துவது சிரமமான காரியமாக இருந்தது. ஏனெனில் எமது எண்ணங்கள் குழம்பியுள்ளது. இந்த யுத்த சூழ்நிலையில் போட்டிக்காக மனதை ஒரு நிலைக்குக் கொண்டுவருவது கடினமாகதாகும். நான் பங்குபற்றிய கடினமான பராலிம்பிக் இதுவாகும்” என யுக்ரேன் கார்கிவ்வை வசிப்பிடமாகக்கொண்ட லியாஸ்ஹேன்கோ என்ற வீராங்கனை கூறியிருந்தார்.

“எனது ஊரில் தற்போது மீதமுள்ளது யுத்த அழிவுகள் மட்டுமே எனவே இந்த சூழ்நிலையில் எனக்குப் போட்டிகளில் பங்குகொள்ள முடியாத மனநிலையில் நான் உள்ளேன்” என தனது போட்டியிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய மரதன் வீரர் எனஸ்டேசியா லாலேடினா கூறினார். “எனது தந்தையை ரஷ்யப் படை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். எனவே இப்போட்டியில் கலந்துகொள்ளும் சிறந்த மனிநிலையில் நான் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அவரது தந்தை ஒரு இராணுவ வீரர் நாட்டைக் பாதுகாப்பதற்காக போராடும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் லாலேடினாவை போட்டிகளில் பங்குகொள்ளச் செய்ய முடியாதுள்ளது என உக்ரேன் பராலிம்பிக் குழுவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

வீர, வீராங்கனைகள் மட்டுமல்ல உக்ரேன் விளையாட்டுக் குழுவின் பயிற்றுவிப்பாளர்களும் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியிருந்தனர். பயிற்சியாளர் ஜெவிஸின் வீடு கார்கிவ் அமைந்துள்ளதால் படைகளின் தாக்குதலுக்குள்ளானதாகவும் அவரது குடும்பத்தவர்களும் ஆபத்தில் சிக்கியுள்ளனர் என்றும் தெரிய வந்ததுடன் அவர்கள் இப்போது இங்கு இருக்கிறார்கள். என்று கூட தெரியாது” என அப்பயிற்சியாளர் தெரிவத்துள்ளார்.

இந்நிலையில் குளிர்கால பராலிம்பிக் முடிவடைந்த நிலையிலும் அவ்வீரர்களில் பலர் தமது நாட்டுக்குள் செல்வதற்கு தயங்குகின்றனர். தமது தாய்நாட்டுக்குள் நுழைந்தால் எமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என அவர்கள் அஞ்சுகின்றனர்.

தமது நாட்டுக்காக பதங்கங்களை வென்ற வீர, வீரங்கனைகளான விடேலி லியுயானெக்கோ, கிரிகோரி வொசின்ஸ்யி வென்னவுன், டிராஸ் ரூட் போன்றோரும் இன்னும் சீன பீஜிங் நகரிலேயே தங்கியுள்ளனர்.

“நான் எவ்வேளையிலும் எனது குடும்பத்தினரையும், எனது நண்பர்களையும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறேன். இங்கு நான் ஹோட்டலில் பாதுகாப்பாக இருந்தாலும், எனது நாட்டுக்குள் எனது குடும்பம், நண்பர்கள் படும் அவஸ்தைகளை நினைக்கும் போது கண்கள் பணிகின்றன. அவர்களை நினைக்கும் போது கவலையாகவுள்ளது” என கதிரையில் இருந்துகொண்டு ஐஸ்ஹொக்கிப் போட்டியில் வென்று பதக்கம் பெற்ற டிராஸ் ரூட் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெற்ற குளிர்கால பராலிம்பிக் விழாவில் பங்குகொள்ள ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களைத் தடை செய்வதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்திருந்தது, சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம், பீபா, ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் மட்டுமல்லாது, அமெரிக்க உட்பட ஐரோப்பிய ஒன்றியமும் பல பொருளாதாரத் தடை விதித்திருந்தாலும் உக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா இன்னும் முடிவுக்குக் கொண்டுவரவில்லை.

எம்.எஸ்.எம்.ஹில்மி

Comments