பெரும்பான்மை மக்களுக்கு இனவாத அச்சமூட்டும் தென்னிலங்கை சக்திகள்! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

பெரும்பான்மை மக்களுக்கு இனவாத அச்சமூட்டும் தென்னிலங்கை சக்திகள்!

டொலர் தட்டுப்பாட்டினால் நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு பல்வேறு மாற்று வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்தியா, சீனா போன்ற நட்பு நாடுகளிடம் கடன் பெறப்பட்டிருப்பதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களிடமிருந்து முதலீடுகளைப் பெறுவதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

குறிப்பாக வெளிநாடுகளில் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் (டயஸ்போரா) உதவியை அரசாங்கம் நாடியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், டயஸ்போராவினருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து இரண்டுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜக்‌ஷ, ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்த போது டயஸ்போராவினருடன் இணைந்து செயற்படத் தயார் என்பதை முதன் முதலில் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாட்டிலும் டயஸ்போராவினர் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்ற அழைப்பை ஜனாதிபதி விடுத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதும் இந்த விடயம் குறித்துப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நாடு பாரிய டொலர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உதவி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதும், புலம்பெயர்ந்துவாழ் தமிழர்கள் கடந்த தசாப்தங்களில் பல்வேறு சந்தர்பங்களின் போது நாட்டுக்கும், தாம் சார்ந்த சமூகத்துக்கும் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர். குறிப்பாக 1983ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்குத் தஞ்சம் கோரிச் சென்றனர். அதன் தொடர்ச்சியாக நிலவிய யுத்த சூழலில் நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை பல்மடங்கானது. எனினும், ஆரம்ப காலங்களில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் தற்பொழுது பல சந்ததியினரைக் கண்ட போதும் அன்று ஏற்பட்ட அச்சம் இன்னமும் அவர்களது மனதிலிருந்து நீங்கவில்லை என்பதே உண்மை.

அமெரிக்கா, கனடா, சுவிஸ், லண்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்துவாழும் இலங்கைத் தமிழர்கள் பலர் வசித்து வரும் நிலையில், இவர்களில் பலர் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அந்தந்த நாடுகளில் பலமான நிலைகளில் காணப்படுகின்றனர். உலகளாவிய ரீதியில் பிரபல்யமான பல்தேசிய கம்பனிகளின் உரிமையாளர்களாகவும், பெருநிறுவனங்களின் பங்காளர்களாகவும் பல தமிழர்கள் காணப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் சிலர் இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொண்டிருந்தனர். இருந்தபோதும் யுத்த காலத்தில் அதற்குப் பொருத்தமான சூழல் காணப்படவில்லை. அதன் பின்னர் யுத்தம் முடிவடைந்ததும் தென்பகுதி அரசியலில் யுத்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட அரசியல் நகர்வுகளால் பெரும்பாலான புலம்பெயர்ந்துவாழ் தமிழர்கள் முதலீடுகளில் அக்கறை காண்பிக்கவில்லை.

இவ்வாறான நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் புலம்பெயர்ந்துவாழ் சமூகத்தின் முதலீடுகளை எதிர்பார்த்துள்ளது. வடபகுதியில் மேற்கொள்ளப்படக் கூடிய முதலீடுகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் நாட்டம் தெரிவித்தால் அது குறித்து அரசதரப்புடன் தொடர்பு கொண்டு பேச முடியுமென வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அண்மையில் கூறியிருந்தார். ஜனாதிபதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார்.

புலம்பெயர்ந்துவாழும் சமூகத்தின் முதலீடுகளை அரசாங்கம் கோருகின்ற போதும், தாம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களுக்குத் தொடர்ந்தும் அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருந்தார். 'முதலீடுகளை மேற்கொள்ள வாருங்கள்' என அழைத்தாலும் நாட்டுக்கு வருவதற்குத் தடை தொடர்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார். எனவே இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மறுபக்கத்தில் புலம்பெயர்வாழ் அமைப்புகளின் முதலீடுகளை தொடர்ந்தும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் தரப்பினரும் இருக்கத்தான் செய்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் முதலீடுகளால் நாட்டில் மீண்டும் ஒரு குழப்பநிலை ஏற்பட்டு விடும் என்ற சந்தேகம் நிலவுவதாக சமூக ஊடகங்களில் தகவல்களைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் இலத்திரனியல் ஊடகமொன்றின் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதுபற்றி கேள்வியெழுப்பியிருந்தார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர். இதற்கு ரணில் விக்கிரமசிங்க பதிலடி வழங்கியிருந்தார்.

 

நாடு தற்பொழுது இருக்கும் நிலையிலிருந்து மீண்டு எழுவது அவசியமா அல்லது மீண்டும் மீண்டும் இனவாதக் கருத்துகளைத் தூண்டி விட்டு அதலபாதாளத்துக்குப் பொருளாதாரத்தைக் கொண்டு செல்வது அவசியமா என்பதை நாம் தீர்மானிக்கவேண்டும் என்றார் ரணில். இந்த விடயத்தில் ஊடகங்களும் இனவாதத்தைத் தூண்டும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பது அவருடைய பதிலாக அமைந்தது.

அதேநேரம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உறுதியான தீர்வொன்றை வழங்கும் பட்சத்திலேயே புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் உடனடியாகத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் தீர்வை வழங்க முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையை வைத்து நோக்கும் போது அவர்களின் சந்தேகத்தில் நியாயம் இருப்பதை மறுக்க முடியாது. எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் தனது சாதகமான நிலைப்பாட்டையாவது தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அரசாங்கம் அவ்வாறானதொரு நம்பிக்கையை ஏற்படுத்தும் பட்சத்தில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வருவார்கள். அது மாத்திரமன்றி முதலீடுகளை மேற்கொள்ள வருபவர்கள் தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் சிக்கலான நடைமுறை இலகுபடுத்தப்படுவது பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.

புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களைப் பொறுத்த வரையில் தேசம் விட்டு தேசம் சென்றிருந்தாலும் தாய்நாட்டின் மீதான பற்று என்றும் அவர்கள் மத்தியில் குறைந்ததில்லை என்றே கூற வேண்டும். தாய்நாட்டில் உள்ள தமது உறவுகள் குறித்து என்றென்றும் தேடிப் பார்ப்பவர்களாகவே பெரும்பாலானவர்கள் காணப்படுகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் தாய்நாடு நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதன் ஊடாக நாட்டில் காணப்படும் டொலர் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதற்கு அவர்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

இது இவ்விதமிருக்க, எப்பொழுதும் இனவாதத்தை அல்லது பயங்கரவாதம் என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் விதைத்து குறுகிய அரசியல் செய்யும் தரப்புக்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கத்திற்குள் இருந்து தற்பொழுது முரண்பாடுகளை உருவாக்கியுள்ள சிலர், தமது சொந்த அரசியல் இலாபங்களுக்காக இதுபோன்ற விஷமப் பிரசாரங்களை மக்கள் மத்தியில் விதைத்து வந்தனர். இதுபோன்ற அனுபவங்கள் காணப்படுவதால் புலம்பெயர் சமூகம் முதலீடுகளைக் கொண்டு வரும் நிலையில், தேவையற்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி நிலைமைகளைக் குழப்பாமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

சம்யுக்தன்

Comments