தமிழ்ப் பத்திரிகைத் துறையில் வரலாறு கண்ட தினகரன் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்ப் பத்திரிகைத் துறையில் வரலாறு கண்ட தினகரன்

தினகரன் வழமையான செய்தித் தாளாக மட்டுமன்றி ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு காலங்காலமாக சிறப்பான பங்களிப்பை செய்துவந்துள்ளது. தினகரன் ஆசிரியர் தே.செந்தில்வேலவர் உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை மட்டுமன்றி இலக்கிய எழுத்துக்களையும் வரவேற்று செம்மைப்படுத்தித் தமிழ் கூறும் நல்லுலகிடம் சமர்ப்பித்து வருகிறார். இன்று அவருடைய தலைமையில் இந்நிகழ்வு நடப்பதும் பொருத்தமானதே என்று பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கூறினார் 

(கொழும்புத் தமிழ்ச் சங்கசங்கரப்பிள்ளை மண்டபத்தில் (19. -03- .2022அன்று)தினகரன் வாரமஞ்சரி ஏற்பாட்டில் அதன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் தலைமையில் இடம்பெற்ற தி. ஞானசேகரனின் யாவரும் கேளிர் நூல் வெளியீட்டு விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்து தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் சோ.சந்திரசேகரன்.ஆற்றிய உரை) 

தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்த ஞானசேகரனின் பத்திஎழுத்துக்கள் இன்று கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபமேடையில் வெளியிடப்படுவது பெருமையைத் தருகின்றது.எண்பதாவது அகவையை எ ட்டியுள்ள மருத்துவரான ஞானசேகரன் தமிழ் இலக்கியத் துறையில் பத்தி எழுத்துக்கள்,ஞானம் மாதாந்த சஞ்சிகை, நாவல், சிறுகதை, பயணக் கட்டுரைகள் எனப் பல துறைகளில் பணியாற்றி வருபவர். அவருடைய பணிக்காகப் பல விருதுகளைப் பெற்றவர்.மருத்துவராக மனிதர்களுக்குச் சிகிச்சை வழங்கிய ஞானசேகரன்,அதில் திருப்திகாணாது, தமது எழுத்துக்களின் மூலம் சமூகத்துக்கு உகந்தசெய்திகளைக் கூறிவருகிறார். அவருடைய யாவரும் கேளிர் நூல் ஒரு தகவல் களஞ்சியம்; இலக்கிய வரலாற்று ஆவணம். நாவல் நூல்கள், தமிழ் நூல்கள் தமிழ் இலக்கியம் இலக்கியஆளுமைகள் இலக்கியக் கருத்தரங்குகள் எனப் பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் நூலில் அடங்கியுள்ளன. 

1950கள் 1960களில் தினகரன் ஆசிரியர்களாக இருந்த க.கைலாசபதியும், எஸ்.தில்லைநாதனும் பின்னர் பல்கலைக்கழக பேராசிரியர்களானவர்கள். அவர்களிடம் பாடம் கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. தினகரனைத் தமிழ் இலக்கிய வளர்ச்சி நோக்கித் திசை திருப்பிய இவர்கள். மண் வாசனையுடன் கூடிய தேசிய இலக்கியம் இலங்கையில் மலர வளர்ச்சி பெறத் தினகரன் ஊடாக வழிசமைத்துக் கொடுத்தவர்கள் இவர்கள். தமிழில் பத்திரிகைகளை செம்மைப்படுத்தும் அவர்கள் ஆசிரியர்கள் என அழைக்கப்படுகின்றனர். பாடசாலைஆசிரியர்கள் மாணவர்கள் போன்றவர்களின் அறிவு, உளப்பாங்கு,திறன் என்பவற்றைச் செம்மைப்படுத்துபவர்கள். இவ்வகையில் இன்றைய தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் போன்ற பத்திரிகை ஆசிரியர்களும் ஆசிரியர்கள் போன்றவர்களே.பாடசாலை ஆசிரியர்களின் களம் மாணவர்களை வழி காட்டுவது மட்டுமே. பத்திரிகை ஆசிரியர்கள் பணியாற்றும் களவும் பரந்து விரிந்தது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து முறையாகத் தினகரனை வாசிப்பவர்களின் உலக அறிவும் தமிழ் இலக்கிய அறிவும் பரந்து காணப்பட்டதை நான் அனுபவ ரீதியாகக் கண்டுள்ளேன்.  21ஆம் நூற்றாண்டில் அறிவுச் சமூகத்தில் பாடசாலைகள் போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாது சமூகத்தில் உள்ளஅனைத்து நிறுவனங்களும் கற்கும் தாபனங்களாக மாறவேண்டும் என்ற கருத்தை யுனெஸ்கோ முன்மொழிந்துள்ளது. கோயில்கள், அலுவலகங்கள் சமுதாய நிலையங்கள், நூல் நிலையங்கள் என இப்பட்டியல் நீண்டு செல்கின்றது. இவற்றில் பத்திரிகைகளும் ஏனைய ஊடகநிறுவனங்களும் அடங்கும். தினகரன் இத்தகைய அறிவுப் பணியை பலதசாப்தங்களாக செய்துவந்துள்ளது. இதற்கு, தற்போது வெளியிடப்படும் ஞானசேகரனின் யாவரும் கேளிர் நூலின் உள்ளடக்கம் ஒருசான்றாக விளங்குகிறது.  நமதுநோக்கில் இத்தகைய இலக்கிய நிகழ்வுகளுக்கு மற்றொரு முக்கியத்துவம் உண்டு. இத்தகைய நிகழ்வுகள் நாட்டில் தேசிய ஐக்கியத்தையும் சமூக இணக்கத்தையும் ஏற்படுத்தவல்லன. இனமதபேதமின்றி சகலரும் கலந்துகொள்ளும் வகையில் இலக்கிய நிகழ்வுகள் இன உறவுப் பாலத்தை அமைக்கின்றன. ஞானம் சஞ்சிகையின் இலக்கியப் போட்டியில் பல முஸ்லிம்,கிறிஸ்தவ எழுத்தாளர்கள் பரிசு பெற்றிருக்கிறார்கள். 

இன ஐக்கியத்தை வளர்ப்பதற்குப் பாடசாலைகளில் பலஏற்பாடுகள் உண்டு.அதற்கும் அப்பால் தினகரன் ஏற்பாட்டில் நிகழும் இந்நூல் வெளியீடும் இத்தேசியப் பணிக்குப் பங்களிப்பை வழங்கியுள்ளது.இலக்கிய வரலாற்று ஆவணம் நாவல்கள் தமிழ் நூல்களின் தமிழ் இலக்கியம் ஆளுமைகள் இலக்கியக் கருத்தரங்கு என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் நூலில் அடங்கி உள்ளன.  

கே.பொன்னுத்துரை

Comments