மக்கள் தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான புறச்சூழல் உருவாக்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான புறச்சூழல் உருவாக்கப்பட வேண்டும்

பதின்மூன்று மணித்தியால மின்தடை நாட்டின்பொருளாதாரத்தை மட்டுமன்றி ஒவ்வொரு குடிமகனின் அன்றாடவாழ்க்கையையும் வெகுவாகபாதித்திருக்கிறது.

வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் ஒருசில நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டாலும் அது ஒரு முக்கிய பேசுபொருளாக மாறிவிடும். ஓரு நாளின் அரைப்பங்கிற்கு மேல் மின்சாரம் கிடையாதென்பது மிக மோசமான ஒரு நெருக்கடி நிலை என்பதில் சந்தேகமில்லை.  

மின் பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி நிலைமையை சமாளிப்பதாயின் அவற்றுக்குத் தேவையான எரிபொருளும் இல்லை. எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று கடந்த 7நாட்களாக டொலர் செலுத்தாதபடியினால் நாட்டின் துறைமுகத்துக்குள் வர மறுத்து சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்கிறது. இவ்வாறு துறைமுகத்திற்கு அருகாமையில் எரிபொருள் எற்றிய கப்பல்கள் நாட்கணக்கில் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. அவ்வாறு காத்திருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் செலுத்தப்படவேண்டிய தாமதக் கட்டணம் மிகமிக அதிகமாகும். டொலர் கிடைக்காமையினால் கடன் கடிதங்களைத் திறக்க முடியாமல் இவ்வாறு கப்பல்கள் தரித்து நிற்பது பல தடவை நடந்திருக்கிறது.

இதன் காரணமாக எரிபொருள் இறக்குமதிச் செலவினம் தேவையற்ற விதத்தில் அதிகரித்துள்ளது. இச்சுமையினையும் நாட்டு மக்களே சுமக்க வேண்டியுள்ளது. அமைச்சர்களும் அதிகாரிகளும் எரிபொருள் நெருக்கடி சிலவாரங்களில் தீர்ந்து விடும் என உறுதியளித்த போதிலும் இவ்வாறான பலவீனமான முகாமைத்துவக் குறைபாடுகளால் நாட்டில் எரிபொருளுக்கான பற்றாக்குறை தொடர்ந்து செல்கிறது.  

ஒரு புறம் நாட்டுக்குத் தேவையான மின்சார விநியோகத்தைத் தொடர்ச்சியாக வழங்கமுடியாத கையாலாகாத நிலையில் இலங்கை மின்சார சபை உள்ளது. மறுபுறம் மின்சார உற்பத்திக்கும் நாட்டின் ஏனைய தேவைகளுக்கும் அவசியமான எரிபொருளைப் போதியளவு வழங்க முடியாத கையாலாகாத நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளது. இவை இரண்டும் இணைந்து நாட்டின் உற்பத்தித் துறை போக்குவரத்து என்பவற்றை முடக்க நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.  

நாட்டின் பொருள் விநியோகச் சங்கிலி முறிந்துள்ளது. சமையல் எரிவாயுவுக்கு நிலவும் தட்டுப்பாடு நாட்டின் ஹோட்டல் கைத்தொழிலை பெரிதும் பாதித்திருக்கிறது. அத்துடன் வீடுகளில் மக்களின் உணவுப் பாதுகாப்பினை மோசமாகப் பாதித்திருக்கிறது. ஒருபுறம் அத்தியாவசியப் பொருள்கள் சேவைகளின் விலைகள் மிகச் சடுதியாக அதிகரித்துச் சென்றுள்ளன. மறுபுறம் அதிகரித்த விலைகளிலும் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாத பொருட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  

மக்கள் ஒரு நாளின் கணிசமான பகுதியை வரிசைகளில் நிற்பதிலும் பொருள்களைத் தேடித் திரிவதிலும் கழிக்க நேர்ந்துள்ளது. முன்பெல்லாம் பொருள்களின் விலைகள் மிகச்சிறிய அளவிலேயே அதிகரிக்கும் மக்கள் அதற்கு எதிராகப் போராட்டம் நடத்துவார்கள். இப்போது பொருள்விலைகள் எதிர்பாராத அளவு பெரிய தொகைகளில் அதிகரிக்கின்றன. அத்துடன் அவற்றுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது. 

உதாரணமாகப் பால் மாவை எடுத்துக்கொண்டால் ஒரு கிலோ 790ரூபாவாக இருந்து 945ரூபா வரையில் சிறிது சிறிதாக படிப்படியாக அதிகரிக்கப்பட்ட போது மக்களின் வெளிப்படையான அதிருப்தியைக் காணமுடிந்தது. ஆனால் இம்முறை பால்மா என்பதை மக்கள் தேடியலையும் அளவுக்கு கிடைப்பதற்கு அரிதான ஒரு பொருளாக மாற்றினார்கள். பின்னர் விலையை இருமடங்காக அதிகரித்தார்கள். அதன் பின்னரும் அது போதியளவில் சந்தையில் கிடைக்காதவாறு பார்த்துக்கொண்டனர்.  

எனவே மற்றொரு தடவை விலை அதிகரிக்கப்பட்டாலும் அதனால் விற்பனையில் பாதிப்பு எற்படாது. அரசாங்கமோ பால்மா உடல் நலத்திற்கு கேடு ஆகவே திரவப்பாலுக்கு மாறுமாறு ஆலோசனை கூறுகிறது. முன்பெல்லாம் பொருளாதார நெருக்கடிகளும் யுத்த சூழல் காரணமாக ஏற்பட்ட பொருள் தட்டுப்பாடுகளும் மக்களின் வாழ்க்கையை பாதித்த போதிலும் வடக்கு கிழக்குக்கு வெளியே இன்று ஏற்பட்டிருப்பதைப் போன்றதொரு மோசமான நிலையினை மக்கள் அனுபவிக்கவில்லை என்றே கூறலாம்.  

இப்போது ஏற்பட்டுள்ள இந்த நிச்சயமற்ற நிலையைப் பயன்படுத்தி ஒரு சில பதுக்கல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதிக இலாபம் உழைக்க முயல்வதையும் காண முடிகிறது. மறுபுறம் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்ற ஒரு எதிர்பார்க்கையை உருவாக்குவதன் மூலம் உண்மையாகவே பொருள் விலைகளை அதிகரிக்கும் உத்தியை வியாபாரத் தரப்பினர் கையாள்வதைக் காண முடிகிறது.  

இலங்கை ரூபாவை மிதக்க விட்டதன் பின்னர் சந்தை சக்திகளுக்கு அமைய மாற்றுவீதம் தீர்மானிக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டொலருக்கு எதிரான நாணய மாற்று வீதம் 300ரூபா மட்டத்தை விஞ்ச வேண்டிய நிலை ஏற்பட ஏதுக்களில்லை.  

வேண்டுமென்றே டொலருக்கு அதிக விலைகளை வழங்கி அதன்மூலம் நாட்டின் நாணய மாற்றுவீதத்தை உயர்ந்த மட்டத்திற்கு நகர்த்த முனைவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு ஒரு நாணயமாற்று முகவரின் உரிமமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்குள் டொலர் உட்பாய்ச்சல்களை   ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நடவடிக்கையில் உரிய தரப்பினர் ஈடுபடவேண்டும்.  

கடந்த வியாழன் இரவு எற்பட்ட வன்முறைச்  சம்பவங்களும் அதன் பின்விளைவுகளும் நாட்டுக்குள் வரும் டொலர் உட்பாய்ச்சல்களையும் மேலும் மோசமாகப் பாதிக்கும். மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் விரக்தியும் கோபமும் நாட்டுக்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் நல்லசெய்தியாக அமையாது.  

குறைந்த பட்சம் மக்கள் தமது வாழ்வாதாரத்தைத் தொடர்வதற்கு அவசியமான புறச்சூழலை உருவாக்கி பொருள் தட்டுப்பாடுகள் இன்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். அது ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் ஆகும். 

கோவிட் 19நோய்த்தாக்கம் ரஷ்ய உக்ரைன் நெருக்கடி போன்ற எந்த நொண்டிச் சாட்டையும் கூறி அதிலிருந்து அரசாங்கம் விலக முடியாது. ஏனெனில் இலங்கையைப் போலவே இவற்றை எதிர்கொண்ட நாடுகள் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளன.  

அண்மையில் கொழும்பில் இடம் பெற்ற பிம்ஸ்டெக் என்ற பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில் வங்காள தேசத்தின் பிரதமர் ஆற்றிய உரை இதற்கு நல்ல உதாரணம்.

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments