கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு1

கடந்த மாதம் 21லும், 22லும் இருபெரு விருது வைபவங்கள் நடந்து முடிந்து ரொம்ப கசப்பும், கொஞ்சம் இனிப்பும்,  

நமது 'வாரமஞ்சரி' கடந்த ஞாயிறு பொழுதில் முதல் பக்கத்தில் "எங்கள் கருத்"தாகவும், 31ஆம் பக்கத்தில் பத்தி எழுத்திலுமாகவும் வாசக அபிமானிகளுடன் பகிர்ந்து கொண்டது.  

21திங்கள் கிழமை நிகழ்வுற்ற "வானொலி அரச விருது விழா"வில் கௌரவம் பெற்றுக் கொண்ட அரச வானொலியும், தனியார் வானொலிகளும் தங்கள் குதூகலத்தை எப்படியெல்லாம். நேயர்களுடன் பகிர்ந்து கொண்டன என்பதை இந்த மூத்த பேனை காது கொடுத்து ஒலிபரப்பு வழி கேட்டது. அச்சு ஊடக இதழ்களையும் ஒன்று விடாமல் பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்த்ததும்.  

வானொலிகளோ தங்கள் தங்கள் பண்பலைகளில் (7.M) செய்தி அறிக்கைகளில் சொல்லியதுடன் முடித்துக் கொண்டதையே அவதானிக்க முடிந்தது.  

அவர்களது பெயர்கள் காற்றோடு காற்றாகக் கலந்து வானவீதியில் அழிந்தன.  

மற்றபடி, நிரந்தரப் பதிவு என்று எதுவும் அச்சு ஊடகங்களில் இடம் பெறவில்லை.  

இந்தக்காரியத்தைச் செய்திருக்க வேண்டிய 'தகப்பன்' சாமிகள் சம்பந்தப்பட்ட அமைப்பின் நிர்வாகிகளே அவர்களே அதிகாரபூர்வமான உத்தியோக ரீதியான விருதாளர் முழுப்பட்டியலையும் அச்சு ஊடகங்களுக்கு வழங்கி இருக்க வேண்டும்.  

ஆயினும், நாளேடுகளின் மீது அத்தனை "நெருங்கிய நட்பின் காரணமாக" அவர்கள் மௌனம் காத்து ஓய்வில்? அடக் கன்ராவியே...  

எவ்வாறாயினும், "ஒரு தனியார் பண்பலை" (7,M) நிறுவனம், ஒரேயொரு தமிழ் நாளேட்டில் மட்டும் அரைப்பக்க விளம்பரம் கொடுத்து, 'கண்ணே, கலைமானே' என்று தன் நிறுவன சார்பான விருதாளர்களின் நிழற்படங்களைப் போட்டுக் குதூகலித்தது.  

வரவேற்றுப் பாராட்டவேண்டிய இனிப்பான விடயம்! ஆனால் "ஆனால்...? கசப்பு விழுங்க வைக்கப்பட்டுள்ளது அந்த விளம்பரத்தில்!  

இங்கே பிரசுரம் அபிமானிகளும் அவதானியுங்கள்.  

அந்தப் பண்பலை ஒலிபரப்பைப் புகழடைய வைத்த அந்த நூறு பேரும் யார், எவர்? கடவுளே, அந்த நூறு பேருக்கு மட்டுமே தெரியும்!  

என்றாலுங் கூட, பெயர்களை இருட்டடிப்புச் செய்திருந்தாலும், அந்தக் கிழக்கிலங்கை வானொலி 'ஜாம்பவானை' ஒரு நொடியில் நான் அடையாளம் கண்டேன் என்று அந்த அறிவிப்புக் கலைஞன் ஏ. எல். ஜபீர் ஒரு குறிப்பிட்ட வயது காலத்தில் என் வாசக அபிமானி!  

ஆனாலும், ஆனாலும்... ஏனைய மூவரையும், பெயர் குறிக்காமல் படத்தை மட்டும் பிரசுரித்ததால் 'அநாதைக் கலைஞர்களாகி விட்டனரே...!  

அறைப்பக்கம் விளம்பரம் போட்டு ஆனந்தக் கூத்தாடி இருக்கும் நிறுவனம், நால்வர் பெயர்களையும் இருட்டடிப்புச் செய்து ஆனந்தக் கூத்தாடி இருக்கிறதா?  

இது, ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான கேள்வி!  

கசப்பு2

 'உய்குர்' உய்கு' என்றொரு பகுதி ஒரு தேசத்தில் அங்கே வாழ்வது முஸ்லிம் சமுதாயத்தினர்,  

இந்தத் தகவல் ஏற்கனவே இப்பகுதியில் பதிவு. 'ஒரு தேசம்' என்பதை அலசி ஆராய வேண்டியதில்லை அது, நாம் நன்கறிந்த சீனா.  

அந்தத் தேசத்திற்கு அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி ஒன்றில் ஒவ்வாமை. (அலர்ஜி) அது, அந்த உய்கு ஊரின் முஸ்லிம் கலாசாரம் அவர்கள் இஸ்லாமிய அடையாளங்களைக் கைவிட வேண்டும் என்பதில், சீனா 'கயிறு இழுப்புப் போட்டி' ( Tug of war) ஒன்றை எப்பவோ தொடங்கி இப்பவும் நடத்திக் கொண்டிருக்கிறது.  

"அப்படியா?" என்று ஆட்சியாளரிடம் வினவினால் அடித்துச் சொல்வார்கள், "அல்ல, அல்ல" என்று!  

எவ்வாறாயினும், சமீபத்தில் சீன ஜனாதிபதி தேசிய மக்கள் காங்கிரஸில் ஆற்றிய உரையில் பளிச்! பளிச்!  

அவர் பேச்சில் இடம்பெற்றிருக்கும் ஒரு நான்கு வரிக் கருத்து இது   

* முழுச் சீனதேசத்தின் உணர்வுகளும், கலாசார எழுச்சியும் சின்ஜியாங் உய்குர் சுயாட்சிப் பிரதேசத்தில் ஏற்பட வேண்டும்: இந்த இரண்டையும் ஊக்குவிப்பதில் அப்பகுதி அரச ஆதரவுப் பிரஜைகள் ஈடுபடுவர்!  

அவ்வாறாயின் பெரும்பான்மை மக்களாக ஒரு பிராந்தியத்தில் வாழ்கிற முஸ்லிம்கள் சிறுகச்சிறுக தங்கள் தனித்துவத்தையும் கலாசாரத் தொன்மைகளையும் தொலைத்து விட்டு, அல்லது கைகழுவி விட்டு பெரும்பான்மைச் சீனர்களின் நோக்குக்கும் போக்குக்கும் தலைசாய்த்து உணவுப் பழக்கங்களிலிருந்து (ஹராம் ஹலால்) அன்றாட மார்க்க அனுஷ்டானங்கள் வரை மாற்றம் செய்யவேண்டும் என்பதா அர்த்தம்?  

தலையை என்னவோ செய்கிறதே....? அதுவும் மகிமை மிகு ரமழான் நோன்பு நம் வீட்டு வாசலுக்கு வந்து எங்களை மகிழ்வுக்கும் நேரத்தில்...?  

ஒரு முக்கிய அடிக்குறிப்பு  

இது அச்சுக்குப் போகும் சமயம், சீனாவின் ஒரு பெரும் நகரத்தில் முழுநாள் ஊரடங்காம் கிருமியார் மீண்டும் தலைதூக்கித் தடுமாற்றம்! அவரை அழிக்கவே சிந்தித்துச் செயல்பட வேண்டும். வரலாற்றுப் புகழ் கலாசாரத்தை அன்று!  

இனிப்பு1

இந்தக் கசப்பும் இனிப்பும் விளையாட்டுப் போல இரண்டு ஆண்டுகளை நெருங்குகிறது.  

ருசிக்கக் கொடுத்தவை அத்தனையும் கலை - இலக்கியம் சம்பந்தப்பட்டவையே! உள்நாட்டு அரசியலைத் தொட்டதில்லை. தமிழ் பற்றுதலால் தமிழக நிலவரம் கருவேப்பில்லையாக மணம் வீசும்.   இன்று ஒரு மாறுதலுக்கு! ஆன்மிகம்! ஆம்! ஆன்மிக இனிப்பே!  

அதை அளிக்க முன் ஒன்றை விவரித்தல் அவசியம்.  

என்னையும் உங்களையும் சேர்த்து ஆண், பெண் அனைவரும் இருபத்து நான்கு மணி நேரமும் விரும்பி எதிர்பார்ப்பது 'இன்பம்' என்ற ஒன்றையே. 'துன்பம் தா' எனக் கேட்பாருமில்லை விரும்புவாருமில்லை.  

கொஞ்சம் என்னோடு சேர்ந்து இதிகாசப்பக்கங்களைப் புரட்டுங்கள்.  

பஞ்ச பாண்டவர்கள், திரௌபதி, குந்திதேவி, மன்னர் யதிஷ்டிரா இவர்களுடன் கண்ணபிரான் என்கின்ற கிருஷ்ணர்.  

மேலே குறிப்பிட்டவர்களுள் ஒருவர், அதுவும் பெண்ணரசி, துன்பம் ஒன்றையே வேண்டி நின்றாள்! யாரிடம்? மாயக் கண்ணனிடம்!  

'திரௌபதி' என்று அவசரப்பட்டு சொல்லிவிடாதீர்கள் கேட்டவர் குந்திதேவி! அன்னை ஸ்தானத்தில் அந்தக் குந்தி தேவி!  

பின்னணிக் கதையை மிகவும் கொஞ்சமாகப் பிட்டு வைக்கிறேன்.  

தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான குருசேத்திரப் போர் முடிந்து விட்டது. பலம் பொருந்திய பலர் பலியாகி விட்ட போதிலும் தர்மம் வெற்றிபெற்றதில் அனைவருக்கும் மகிழ்ச்சி, யுத்தம் முடிந்த யுதிஷ்டிரர் மன்னனான முடிசூட்டப்பட்டுவிட்டார். எல்லா காரியங்களையும் தன் கண் அசைவிலேயே நடத்தி முடித்து விட்ட கண்ணனும் கூட துவாரகைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.  

புறப்படும் சமயத்தில் அவர், தன்னுடைய அத்தை குந்தியை சந்தித்து ஆசிபெறச்சென்றார். அப்போது குந்திதேவி, "கண்ணா... எங்களை விட்டுச் செல்கிறாயா?. உன்னைத் தினமும் பார்க்கும் பாக்கியம் எனக்கு இனி கிடைக்காதே" என்று வருந்தினாள்.  

இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது கிடையாது. பிரிந்தவர்கள் சேர்வதும், சேர்ந்திருப்பவர்கள் பிரிவதும் கூட அப்படிப்பட்டதுதான். அத்தை, உனக்கு ஒரு வரம் தர தயாராக இருக்கிறேன். என்ன வரம் வேண்டுமானாலும் கேட்டு பெற்றுக்கொள்" என்றான் கண்ணன்.  

ஆனால் குந்திதேவி கேட்ட வரமோ கண்ணனையே திகைக்கச் செய்தது.  

"எனக்கு தினமும் ஒரு துன்பத்தைத் தந்தருள் கண்ணா தந்தருள்"  

"என்ன அத்தை சொல்கிறாய்? எல்லாரும் இன்பமாக வாழ வரம் கேட்பார்கள். நீ என்ன தினம் ஒரு துன்பம் வேண்டும் என்று வரம் கேட்கிறாய்?" என்று ஆச்சரியப்பட்டவாறே கேட்டான் கண்ணன்.  

"கண்ணா... இதுநாள் வரையிலும் என்ககு எப்போது துன்பம் நேர்ந்தாலும், நான் உன்னைத்தான் நினைத்துக் கொள்வேன். யுத்தம் காரணமாக இதுவரை நீ என்னுடன் இருந்தாய். உன்னைப் பார்த்துக் கொண்டிருந்ததிலேயே என் துன்பங்கள் எல்லாம் விலகிவிட்டன. இப்போது நீ என்னை விட்டு நீங்கிச் செல்வதாக சொல்கிறாய். ஆகையால் நான் உன்னை நினைக்காமல் இருந்துவிடக் கூடாதே என்ற எண்ணம் என்னை அச்சுறுத்துகிறது. தினமும் ஏதாவது துன்பம் வந்தால். அதன் வாயிலாக உன்னை நினைத்து ஆறுதல்பட்டுக் கொள்வேன். உன்னை நினைப்பதால், உன் அருட்பார்வை எனக்கு கிடைக்கும் அல்லவா? அதற்காகத்தான் என்குக துன்பத்தையே வரமாக கொடு என்று கேட்கிறேன்" என்று விளக்கம் அளித்தாள் குந்திதேவி.  

மாயக் கண்ணன் மாதரிசியின் மனத்தை மாற்றினானா அல்லது வரம் அளித்தானா என்பதை எல்லாம் அந்த மாபெரும் இதிகாசத்திற்குள்? நுழைந்து தேடும் ஆளுமை வரத்தை மூத்த பேனை பெறவில்லை! எவ்வாறாயினும் ஒன்றை மட்டும் திட்டவட்டமாகப் பதிய முடியும்.  

பொதுவாகவே இன்பத்தில் இருக்கும் எவரும், இறைவனை சுலபமாக மறந்து விடுவதுதான் வாடிக்கை. துன்பம் என்ற ஒன்று இருப்பதால்தான். அவ்வப்போது, இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். தன்னை அனைவரும் நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் துன்பத்தைத் தருகிறான் என்று நினைத்தால், அதுவும் மனிதர்களின் அறியாமைதான். ஏனெனில் அதன் வாயிலாக இறைவன் நமக்கு சொல்லித்தருவது, வாழ்க்கைக்கான ஆன்மாவின் முதிர்ச்சிக்கான பாடம்.  

ஒவ்வொரு துன்பத்தின் போதும், ஒரு அனுபவத்தையும், சோதனைகளை வெற்றி கொள்ளும் சூட்சுமத்தையும் மனிதன் அறிந்து கொள்கிறான். அதோடு இறை வழிபாடும் இணையும்போது அந்த துன்பம், இன்பத்தை அளிப்பதாக மாறுகிறது.

Comments