கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அன்னை மகா கும்பாபிஷேக பெருவிழா | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அன்னை மகா கும்பாபிஷேக பெருவிழா

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 168வருடங்களாக அடியார்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னை முத்துமாரியின் திருவருளாலும் தமிழும், சைவமும், தருமமும் பேணி பெரும் இறைபணியாற்றி வரும் திருவிளங்க நகரத்து அறங்காவலர் நிர்வாகசபையினரின் பெருமுயற்சியினாலும் பக்த அடியார்களின் பேராதரவினாலும் பல புதிய திருப்பணிகள் செய்து, அழகுற வர்ணம் தீட்டி, பங்குனி மாதம் 23ஆம் நாள் (06-.04-.2022) புதன்கிழமை காலை 9:30முதல் 10:30மணிவரையுள்ள சுபமுகூர்த்தத்தில் ஸ்ரீ முத்துமாரி அன்னைக்கும் விநாயகப்பெருமான் உட்பட பரிவார மூர்த்திகளுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற திருவருள் பாலித்துள்ளது.

ஆலய அமைப்பு முறையில் புதிய சில மாற்றங்களைக் கொண்டு வருதல் மற்றும் அடியார்களின் வழிபாட்டுக்கு வசதி செய்தல் போன்ற காரணங்களுக்காக தமிழ்நாடு, சீர்காழி, திருவெண்காடு, சிற்பக்கலை ஆசான், கோவிந்தசாமி மதியழகன் ஸ்தபதி தலைமையிலான பத்து சிற்பக்கலைஞர்களின் உதவியோடு, கொவிட்-19வைரஸ் தொற்று காரணமாக நாடே ஸ்தம்பித்திருந்த சூழ்நிலையிலும் ஆலய நிருவாகக்குழு புனருத்தாரண நடவடிக்கைகளில் கடந்த பல வருடங்களாக ஈடுபட்டது.

ஆலய அறங்காவலர் சபையைச் சேர்ந்த ​ெடாக்டர் எம். ராமசுப்பு, எஸ். செல்வரட்ணம், எம். வடிவேல், எஸ்.ரி. சிவகுமார், எஸ். முத்துராமலிங்கம் ஆகியோரின் பெருமுயற்சியினாலும் நீண்ட காலமாகத் தடைப்பட்டிருந்த கும்பாபிஷேகப் பெருவிழாவை நடத்தியே தீர வேண்டும் என்ற உத்வேகத்தாலும் பக்தர்களின் அனுசரணையாலும் பக்தி உணர்வாலும் தெய்வத்திருவருளாலும் சிறப்பாக நிறைவு செய்திருக்கிறார்கள். ஆலய புனருத்தாரண நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் ஏற்கனவே உள்ள அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன் புதிதாகவும் சில பரிவார மூர்த்திகள் அமைக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானத்தில் வழமை போல் அன்னை முத்துமாரி அமர்ந்து அருள் பாலிக்கின்றாள்.

நமது நாட்டின் இன்றைய சூழலில் அன்பையும், இரக்கத்தையும் யாசிப்பது ஓர் தார்மீகக் கடமை என்பதை நன்குணர்ந்த திருவிளங்க நகரத்தார் தமிழகத்தில் மட்டுமன்றி தாம் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தெய்வீகத் திருப்பணிகளைச் செய்து வருகின்றனர்.

தல பெருமைகள்:

காசி என்றதும் விசாலாட்சியும், காஞ்சி என்றதும் காமாட்சியும் மதுரை என்றதும் மீனாட்சியும் நினைவில் எழுவது போல் கொட்டாஞ்​ேசனை என்றதும் முத்துமாரி அம்மைதான் நினைவில் வருகின்றாள். அருளாட்சி நடத்தும் அன்னையாக நந்த்தன சுந்தரியாக, சிறுமை கண்டு பொங்கும் தேவியாக, மகிஷாசுர மர்த்தனியாக, கொடுமையைக் கருவறுக்கும் காளியாக, பசிப்பிணி போக்கும் அன்னை பூரணியாக, அரனுடன் கலந்து அர்த்த நாரியாக, திருக்கோலம் காட்டும் அன்னை முத்துமாரியாக கொட்டாஞ்சேனை பதியில் குடிகொண்டுள்ளார்.

பூஜை கிரியைகள்:

சுன்னாகம் ஸ்ரீ கதிர்மலைச் சிவன்கோவில் 'முத்தமிழ் குருமணி', சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர குருக்கள் தலைமையில் சிவஸ்ரீ மு. ரவிபாஸ்கர குருக்கள், பிரம்மஸ்ரீ பரமானந்த சனாதன சர்மா, சிவாகம பூஷ்ணம் பிரம்மஸ்ரீ விக்னேஷ் சிவாச்சாரியார் ஆகியோர்களுடன்

ஆலய தேவஸ்தான குருமார்களான சிவஸ்ரீ பால கணேஷ் குருக்கள், பிரம்மஸ்ரீ சண்முகானந்தா குருக்கள், பிரம்மஸ்ரீ எஸ். சுரேஸ்குமார் சர்மா, பிரம்மஸ்ரீ வி. ஞானசேகர சர்மா மற்றும்  இளஞ்சுடர்களான கே. துஷாந்தன், ரா. நவின்குமார் ஆகியோரின் மங்கள இசையுடன் திருவருள் பாலிக்கச் செய்கிறார்கள்.

எச்.எச்.விக்ரமசிங்க

Comments