ரமழான் நோன்பு ஓர் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

ரமழான் நோன்பு ஓர் அறிமுகம்

இலங்கை உட்பட உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் தற்போது இவ்வருடத்திற்கான ரமழான் மாத நோன்பை அடைந்து கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக விளங்கும் இம்மாத நோன்பை முஸ்லிம்கள் நோற்பது கட்டாயக் கடமையாகும்.

நோன்பு என்பது அரபு மொழியில் 'ஸவ்ம்' எனப்படுகிறது. மொழி அடிப்படையில் விட்டுவிடுதல், நிறுத்திக்கொள்ளல், தவிர்ந்து கொள்ளல் போன்ற கருத்துகளை இது தருகின்றது. இன்னொரு வகையில் அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் அனுமதிக்கப்பட்ட சில விடயங்களை தவிர்ந்து கொள்வதைக் குறித்து நிற்கிறது. அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனை நெருங்குவதற்காக பகல் பொழுது முழுமையாக உணவு வகைகளை உண்பது பானங்களை அருந்துவது கணவன், மனைவி உடல் உறவில் ஈடுபடுவது போன்ற விடயங்களை தவிர்ந்து கொள்வதையே நோன்பு என்பது குறித்து நிற்கிறது.

'ஆதமுடைய பிள்ளையின் நோன்பைத் தவிரவுள்ள அனைத்து செயல்பாடுகளும் அவனுக்கானது. நோன்பு எனக்கானது, அதற்கு நானே கூலிகொடுக்கிறேன். உணவையும் இச்சைகளையும் அவன் எனக்காக வேண்டி தவிர்ந்து கொள்கிறான். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

இன்னொரு அறிவிப்பில் 'எனக்காக வேண்டி உணவை தவிர்ந்து கொள்கிறார், எனது திருப்தியை நாடி பானங்களை விட்டு விடுகின்றார். எனது திருப்தியை பெறுவதற்காக உடல் இச்சைகளை தவிர்க்கிறார், எனக்காக வேண்டி மனைவியிடமிருந்து விலகியிருக்கின்றார்' என்றும் வந்துள்ளது (ஆதாரம்: இப்னு குஸைமா)

நோன்பின் நோக்கங்கள்

'நோக்கங்களை விளங்கிக்கொள்வது செயல்பாடுகளின் உயிர்' என்று இமாம் ஷாதிபி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவார்கள். இவ்வகையில் நோன்பின் நோக்கங்கள், அது விதியாக்கப்படுவதற்கான காரணிகளை விளங்கி நோக்கம் நிறைவேறும் விதமாகக் கடமைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எமது நோன்புகள் உயிர்ப்பு மிக்கதாக அமையும். இவ்வகையில் கீழ்வரும் விடயங்களை நோன்பின் நோக்கங்களாக குறிப்பிட முடியும்.

உள்ளங்களை தூய்மைப்படுத்தல்

இறை கட்டளைகளுக்கு கட்டுப்படுவதும் அவன் தடுத்தவைகளை தவிர்ந்து கொள்வதும் உள்ளத்தை தூய்மைப்படுத்துவதற்கான சிறந்த முறைவழியாகும். ஒருவன் யாரும் அறியாத முறையில் சாப்பிடலாம், பானங்களை அருந்தலாம், மனைவியுடன் உறவில் ஈடுபடலாம். ஆனால் அல்லாஹ் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்ற உணர்வின் காரணமாக அவற்றை தவிர்ந்து கொள்கிறான் என்பதும் இதனை தொடராக ஒரு மாத கால அளவு பேணுகின்றான் என்ற விடயமும் உள்ளத்தை தூய்மைப்படுத்தி உளக்கறைகளை போக்கி மனிதனின் சிந்தனையை ஒழுங்குபடுத்துவதற்கான சிறந்த வழியாகும்.

ஆன்மீக மேம்பாடு

உடல், அறிவு, ஆன்மாவின் கூட்டுக்கலவையே மனிதன். இம்மூன்று தேவைகளும் அவனிடம் இயல்பாக அமைந்துள்ளது. இஸ்லாம் இம்மூன்று பகுதிகளுக்கும் தனியான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. இவ்வகையில் ஆன்மாவை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகள் ஆன்மீக விடயங்கள் எனப்படும். எனினும் உடல், அறிவு சார்ந்த பகுதிகளும் ஆன்மாவும் இணைத்தே நோக்கப்படுகின்றது

நோன்பில் உடல் சார்ந்த பயன்கள் பல காணப்படுகின்றன. அதனை மிகைத்ததாக ஆன்மீக பயன்கள் இருக்கின்றன. நோன்பின் ஊடாக சட உலக தேவைகள், உடல் தேவைகளை விட ஆன்மீகத் தேவைகள் முற்படுத்தப்படுகின்றன. அத்துடன் மனோ இச்சையை விட அறிவு முற்படுத்தப்படுகிறது. இதனைத்தான் நபி(ஸல்) அவர்கள் 'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் கணப்படுகின்றன. ஒன்று நோன்பு துறக்கும் போது, மற்றையது அல்லாஹ்வை சந்திக்கும் போது' என்றார்கள் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)

நோன்பு துறக்கும் போது உடல் ரீதியான மகிழ்ச்சியும் இறைவனை சந்திக்கும் போது ஆன்மீக ரீதியான மகிழ்ச்சியும் கிடைக்கிறது

நாட்ட சக்திக்கான பயிற்சி

நோன்பு நாட்ட சக்தியை மேம்படுத்தக்கூடிய உள ரீதியான ஒரு பயிற்சியாகும். அது பொறுமையை ஏற்படுத்துகிறது. பழக்கங்களுக்கு அடிமைப்பட்ட நிலையிலிருந்து மனிதனை விடுவிக்கிறது. நாட்டசக்தியின்றி மனிதன் வாழ முடியாது. நாட்டசக்தியின் உதவியின்றி மனிதனால் நல்லவற்றை செய்யவோ தீயவற்றிலிலுந்து விடுபடவோ முடியாது.

நோன்பை 'பொறுமையின் மாதம்' (ஆதாரம்: பஸ்ஸார், தபரானி) என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நன்மையை செய்யவும் தீமைகளிலிருந்து விடுபடவும் பொறுமை மிக அவசியமானது.

பாலியல் நடத்தைகளை நெறிப்படுத்தல்

நெறிப்படுத்தப்படாத பாலியல் நடத்தைகள் மிக மோசான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதற்கு ஏராளமான உதாரணங்களை நாம் கூற முடியும். நோன்பு இச்சையை நெறிப்படுத்தக்கூடியதாகும். எனவேதான் நபி(ஸல்) அவர்கள் 'இளைஞர்களே! உங்களில் சக்தியுள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள். இது பார்வையை தாழ்த்தும் மர்மஸ்தானத்தை பாதுகாக்கும். திருமணம் செய்ய முடியாதவர்கள் நோன்பு பிடியுங்கள். இது பெண்கள் மீதான இச்சையை குறைத்துவிடும்' என்றார்கள் (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

இறையருளை உணர்ந்து கொள்ளல்

மனிதன் அருள்களோடு வாழும்போது அதனை மறந்து விடுகிறான். இழப்பின் போதுதான் அருளின் சுவையை உணர்கிறான். நிழலின் அருமையை வெயிலில் புரிந்துகொள்கிறான். பசியும் தாகமும் ஏற்படும் போதுதான் வயிறு நிரம்புவதன், தாகம் தீர்வதன் அருமையை உணர்ந்து கொள்கிறான். அவன் மனம் நிறைந்தவனாக 'இறைவா உனக்கே அனைத்து புகழும்' என்று தெரிவிப்பான். இறைவனுக்கு நன்றியுள்ளவனாக தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிப்பான்.

'அல்லாஹ் எனக்கு மதீனாவின் பள்ளத்தாக்குகளை தங்கமாக மாற்றிக்காட்டினான்' அதற்கு நான், 'வேண்டாம் இறைவா!, ஒருநாள் பசியிலும் அடுத்தநாள் வயிறு நிரம்பியும் இருக்கவே நான் விரும்புகிறேன். பசி ஏற்பட்டால் உன்னிடம் மன்றாடி கேட்பேன், உன்னை ஞாபகப்படுத்துவேன். வயிறு நிரம்பினால் உன்னை புகழ்வேன் உனக்கு நன்றி செலுத்துவேன்' என்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)

அடுத்தவர்களின் பசியை உணர்ந்து கொள்ளல்

கடமையான நோன்பின் ஊடாக நிர்ப்பந்தமானதொரு பசி விதிக்கப்படுகின்றது. உணவும் பானங்களும் தாராளமாக இருக்கும் நிலையிலும், அதனை பயன்படுத்துவதற்கான ஆற்றலும் சக்தியும் தாராளமாக காணப்படும் போதும் இவற்றை தவிர்ந்து கொள்வது, இல்லாமையில் நிர்ப்பந்தமானதொரு சமத்துவத்தை தோற்றுவிக்கின்றது. கொடுப்பவர்களது உள்ளத்தில் வறுமையில் உழல்பவர்களின் பிரச்சினைகள் பற்றிய ஒரு உறுத்தலை உருவாக்குகிறது. இத்தகைய் உறுத்தல் ஒரு மாத காலம் தொடரும் போது அது அவனில் அன்பு, சமத்துவம் போன்ற பண்புகளை தோற்றுவிக்கிறது. இதுவே 'ரமழான் சமத்துவத்தின் மாதம்' (ஆதாரம்: இப்னு குஸைமா) என்று அழைக்கப்பட காரணமாகும். மேலும் நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் வீசுகின்ற காற்றை விட வேகமாக தர்மங்கள் செய்துள்ளார்கள் (ஆதாரம்:  அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா)

இறையச்சத்தை ஏற்படுத்தல்

மேலும் நோன்பு இறையச்சத்தை தரக்கூடியதாகும். இறைவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்ற உணர்வின் காரணமாக உணவு, பானங்களை தவிர்க்கும் ஒருவன், இதனை ஒரு மாதகாலம் தொடர்கின்ற போது, ஏனைய மாதங்களில், வாழ்வின் அனைத்து விடயங்களிலும், இறையச்சம் ஏற்பட காரணமாய் அமைகின்றது. இதனை அல்லாஹ் 'முன்பிருந்த சமூகங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் விதியாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக மாறலாம்.

(ஆதாரம்: அல் குர்ஆன் 02:185)

எனவே நோன்பின் நோக்கமறிந்து இலக்குகள் பூரணமாகும் விதமாக நோன்பை அமைத்துக் கொள்வது இன்றியமையாததாகும்.

அஷ் ஷெய்க் 
யூ.கே. ரமீஸ்
எம்.ஏ. (சமூகவியல்)

Comments